ரூ.1.5 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டு நண்பரிடம் விற்ற மனைவியை, குடும்பம் நடத்த அழைத்தவர் படுகொலை!!!
மதுரை, நவ.6. ரூ.1.5 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டு நண்பருக்கு விற்ற மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்ததால் கொத்தனார் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அழகப்பன்நகர் முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது27), கொத்தனார். நேற்று முன்தினம் இரவு இவர் முத்து பாலத்திற்கு கீழ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் திடீரென்று நாகலிங்கத்தை அரிவாளால் வெட்டியும், கத்தியால் மார்பில் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
இதுகுறித்து ஜெய்ந்துபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
நாகலிங்கத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த சத்தியாவிற்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாகலிங்கத்தின் நண்பர் ஜாகிர் உசேன் அடிக்கடி நாகலிங்கத்தின் வீட்டிற்கு வருவார். அப்போது, நாகலிங்கத்தின் மனைவி சத்தியாவுடன் ஜாகிர் உசேனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் நாகலிங்கத்திற்கும் தெரியவந்தது.
நாகலிங்கம், தன் மனைவி மற்றும் ஜாகிர்உசேன் ஆகிய இருவரிடமும் இதுகுறித்து விசாரித்தார். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால் நாகலிங்கம் தனது மனைவியை ஜாகிர் உசேனுக்கு விற்க முடிவு செய்தார்.
ரூ.1.5 லட்சம் பணம் கொடுத்தால், மனைவியை ஜாகிர் உசேனுக்கு தந்து விடுவதாகவும், அதற்காக பத்திரத்தில் எழுதிக் கொடுப்பதாகவும் நாகலிங்கம் தெரிவித்தார். இதற்கு சம்மதித்து ஜாகிர் உசேனும் ரூ.1.5 லட்சம் கொடுத்து சத்தியாவை விலைக்கு வாங்கிக்கொண்டு தென்காசிக்கு அழைத்துச்சென்றுவிட்டார். குழந்தைகளும் சத்தியாவுடன் சென்றுவிட்டன.
இதனால் கடந்த ஓராண்டாக நாகலிங்கம் தனியாக வாழ்க்கை நடத்தி வந்தார். தீபாவளிக்கு மனைவியை பார்க்க தென்காசிக்கு சென்றார். அங்கு சத்தியாவை சந்தித்த அவர், “தெரியாமல் உன்னை விற்றுவிட்டேன், இனி மேல் நாம் சேர்ந்து குடும்பம் நடத்துவோம்” என்று கூறி அழைத்தார்.
அதற்கு அவர், நீங்கள் தான் என்னை விற்று விட்டீர்களே, இப்போது ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டார். அப்போது அங்கு வந்த ஜாகீர் உசேன், நாகலிங்கத்திடம் சண்டை போட்டு, இனிமேல் சத்தியாவை தேடி இங்கு வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.
அதன்பின்னர் நாகலிங்கம் சோகத்துடன் மதுரை திரும்பிவிட்டார். அடிக்கடி நாகலிங்கம் வந்து தங்களை தொந்தரவு செய்வார் என்று நினைத்த ஜாகிர் உசேன் நாகலிங்கத்தை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, சம்பவத்தன்று இரவு ஜாகிர் உசேனும், அவருடைய தம்பி முகைதீனும் காரில் வந்து இந்த கொலையை செய்துவிட்டு தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் ஜாகிர் உசேனையும், கொலைக்கு உதவியதாக சாத்தையா என்பவரையும் கைது செய்தனர். முகைதீனையும், மேலும் ஒருவரையும் தேடி வருகின்றனர். (தினதந்தி)