அல்குர்ஆன் கூறும் ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாறு
“ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பியும்; அவ்விருவரும் குர்பானி கொடுத்தபோது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப் படவில்லை; “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார்.
அதற்கு “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
அன்றியும், நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டுவாயானால் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் – ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் ” என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகி விடுவாய். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்.
அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்று விடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் சகோதரரைக் கொலை செய்து விட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராகிவிட்டார்.
பின்னர் தம் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியைத் தோண்டிற்று; அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி கைசேதப்படக் கூடியவராகிவிட்டார்.
இதன் காரணமாகவே, நிச்சயமாகவே எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ்வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயிலின் சந்ததியினருக்கு விதித்தோம்.
மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
அல்லாஹ்வுடனும், அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான் : கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப் படுதல், அல்லது நாடு கடத்தப் படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்ப்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுமுண்டு.
நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5 : 27-34)