[ நேர்மை, நாணயம், சுயமுன்னேற்றம் என்றெல்லாம் போற்றிப் புகழப்பட்ட இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் நேர்மை கடைசியில் ‘யோக்யன் வர்றான், சொம்ப எடுத்து உள்ளே வை’ என்ற கதையாகி அமெரிக்காவிலேயே சந்தி சிரிக்கிறது.
இன்போசிஸ் நாராயணமூர்த்தி புதிய தொழில்முனைவோருக்கு மாத்திரம் எடுத்துக்காட்டு என நினைத்து விடாதீர்கள், வியாபார மோசடிகளுக்கும் தான். அவரைப் பொறுத்த வரை நரேந்திர மோடி தான் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகியாம். பொருத்தமான ஜோடிதான்.
அரசுத் துறையில் மட்டும் தான் ஊழலும் லஞ்சமும் நிலவுகிறது என்றும், ஆனால் முதலாளித்துவம் நல்லது, யோக்கியமானது என்றும், தனியார்மயம் நல்லது என்றும் கூறுகின்றவர்கள் அவசியம் இன்போசிஸ் நடத்திய இந்த உலகளாவிய பித்தலாட்ட மோசடியை பார்த்த பிறகாவது தங்களது முடிவை மறுபரிசீலனை செய்வதுதான் நியாயமானது. நேர்மையானவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.]
பேஷ், பேஷ்…. மோசடின்னா அது இன்போசிஸ் நாராயணமூர்த்திதான்!
அரசுத் துறையில் மட்டும் தான் ஊழலும் லஞ்சமும் நிலவுகிறது என்று கூறுகின்றவர்கள் இன்போசிஸ் நடத்திய உலகளாவிய பித்தலாட்ட மோசடியை என்ன சொல்வார்கள்?
இன்போசிஸ் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெறுவதில் செய்த மோசடிகளுக்காக 35 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த நேரும் என்று அமெரிக்க நீதித்துறையின் சார்பில் கடந்த புதன்கிழமை கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை வரலாற்றிலேயே விதிமுறை மோசடிக்காக இவ்வளவு பெரிய தொகையை ஒரு நிறுவனம் செலுத்துவது இதுதான் முதன்முறை. ஊழியர்களுக்கான விசாவுக்கு பதிலாக வருகையாளர்களுக்கான விசாவைப் பெற்று இன்போசிஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகவும், கட்டணம் குறைவாக இருக்கும், வரி கட்ட தேவையில்லை என்பதுவே அதற்கு காரணம் என்றும் இதுபற்றி எழுதியுள்ள வால்ஸ்டிரீட் ஜர்னல் கூறியுள்ளது.
நாராயணமூர்த்தி – நேர்மை, நாணயம், சுயமுன்னேற்றம்
நேர்மை, நாணயம், சுயமுன்னேற்றம் என்றெல்லாம் போற்றிப் புகழப்பட்ட இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் நேர்மை கடைசியில் ‘யோக்யன் வர்றான், சொம்ப எடுத்து உள்ளே வை’ என்ற கதையாகி அமெரிக்காவிலேயே சந்தி சிரிக்கிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி புதிய தொழில்முனைவோருக்கு மாத்திரம் எடுத்துக்காட்டு என நினைத்து விடாதீர்கள், வியாபார மோசடிகளுக்கும் தான். அவரைப் பொறுத்த வரை நரேந்திர மோடி தான் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகியாம். பொருத்தமான ஜோடிதான்.
எளிதில் கிடைக்க கூடியதும், கட்டணம் குறைவானதுமான B1 விசாக்களை கணக்கு வழக்கில்லாமல் வாங்கிய இன்போசிஸ் அதன் மூலமாக அமெரிக்கர்கள் அல்லாத பிற நாட்டு பணியாளர்களை குறிப்பாக இந்திய பொறியாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்துள்ளது. இதன் மூலம் வருபவர்கள் குறுகிய காலமே அங்கு இருக்க முடியும் என்ற அரசின் குடியேற்ற விதிமுறையை மீறி பல ஆண்டுகள் அவர்களை தங்க வைத்து நிறுவனத்திற்காக வேலை செய்ய வைத்திருக்கிறார்கள்.
அக்குறுகிய காலத்தில் கூட இலாபமீட்டும் வகையில் எந்த வேலையையும் அங்கு அவர்கள் செய்யக் கூடாது என்பது அமெரிக்க குடியுரிமைச் சட்டம். அதாவது B1 விசா என்பது நிறுவனங்கள் சார்பில் குறுகிய காலத்திற்கு மட்டும் தங்கி வணிக ஆலோசனை மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்கானது. இதன் மூலமாகத்தான் இந்தியாவில் உள்ள அயலகப்பணிகளை எடுத்து செய்யும் நிறுவனங்களின் முதலாளிகளும், மேலாளர்களும் அமெரிக்கா சென்று வேலைகளை பேரம் பேசி முடித்து வருகின்றனர்.
அங்கு நீண்ட காலம் (குறைந்த பட்சம்) தங்கி வேலை செய்ய H1B விசாவை பெற வேண்டும். ஆண்டுக்கு 65 ஆயிரம் விசாக்களை மட்டுமே அமெரிக்கா வழங்குகிறது. பொருளாதார நெருக்கடி 2008-ல் துவங்கிய பிறகு இதனை மேலும் குறைக்க அந்நாட்டு அரசு முயன்று வருகிறது. H1B விசாக்களை பெறும் வழிமுறைகள் கடினமாகவும், செலவு அதிகமும் பிடிப்பதாலும் அதனை தவிர்த்து விட்டு மோசடியாக B1 விசா மூலம் வேலையாட்களை பெங்களூருவில் இருந்து வரவழைத்திருக்கிறது இன்போசிஸ் நிறுவனம்.
அமெரிக்காவில் B1 விசா பெறுவதற்கான கட்டணத் தொகை 160 டாலர்கள் என்றும், H1B விசா பெறுவதற்கான கட்டணம் 5000 டாலர்கள் என்றும் தெரிகிறது. மேலும் பி1 விசா வைத்து வேலை செய்பவர்களுக்கு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு பணத்தில் ஊதியத் தர முடியும். இந்திய ஊழியருக்கு ரூபாயிலேயே வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விடுவதால் அமெரிக்காவில் வரி மற்றும் சமூக பாதுகாப்புக்காக எச்1பி விசா பெற்றுள்ளவர்கள் செலுத்தும் தொகையையும் செலுத்த வேண்டிய தேவை நிறுவனங்களுக்கு ஏற்படுவது இல்லை. இன்போசிஸ் நிறுவனம் இதன் மூலம் அமெரிக்க அரசை ஏமாற்றி உள்ளது.
இம்மோசடி குறித்து விசாரித்த அமெரிக்க தாயக பாதுகாப்பு துறை கடந்த புதன்கிழமை இந்த அபராத தொகையை இன்போசிஸ் நிறுவனத்துக்கு விதித்துள்ளது. கோல்டுமேன் சாக்ஸ், சிஸ்கோ, வால்மார்ட் ஸ்டோர் போன்றவற்றுக்காக அயலகப் பணிகளை எடுத்து செய்து வருகிறது இன்போசிஸ் நிறுவனம். இத்துடன் சில்லறை வர்த்தகத் துறை மற்றும் உற்பத்தித் துறையிலும் இன்போசிஸ் தனது மென்பொருட்கள் மூலமாக தடம் பதித்து வருகிறது. அயலகப் பணிகளை எடுத்து செய்யும் இந்திய நிறுவனங்களில் இரண்டாவது பெரிய நிறுவனம் இது.
தற்போது வெளியிட்டுள்ள அதன் காலாண்டு அறிக்கையில் அதிக லாபமீட்டிய ஐடி துறை நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் இருப்பதன் குட்டுகள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியுள்ளது. இரண்டாவது காலாண்டு அறிக்கையில் விசா மோசடிக்காக நடக்கும் வழக்கிற்காக 35 மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக அந்நிறுவனம் கூறியிருந்தது. தற்போதைய குற்றச்சாட்டிலேயே அந்நிறுவனத்தில் I-9 டாக்குமெண்டுகளில் கூட தவறுகள் நிறைந்திருப்பதையும், பல தொழிலாளர்கள் தங்களது விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சட்டவிரோதமாக வேலை பார்ப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்போசிஸ்
ஏறக்குறைய 1.5 லட்சம் பேர் வேலை பார்க்கும் இந்நிறுவனத்தில் 10% பேர் அமெரிக்காவில் வேலை செய்கின்றனர். 2011-ல் ஜேக் பி. பால்மர் என்ற அந்நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர் ஒருவர் நிறுவனத்தில் பணியிடத்தில் தன்மீதான நிர்வாகத்தின் அத்துமீறல்கள் அதிகமிருப்பதாகவும், விசா மோசடிக்கு உடன்படாத பட்சத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என நிர்வாகம் தன்னை மிரட்டுவதாகவும் கூறி இன்போசிஸ் நிறுவனம் மீது அலபாமா பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அலபாமா மாநில நீதிமன்றத்திற்கு பொருந்திய சட்டங்கள் பெடரல் நீதிமன்றத்திற்கு பொருந்தாத காரணத்தால் இன்போசிஸுக்கு எதிரான அவரது வழக்கை கடந்த ஆகஸ்டில் நீதிபதி மைரோன் எச். தாம்சன் தள்ளுபடி செய்தார். தற்போது டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. அபராதத் தொகையை பால்மரின் வழக்கறிஞர் கென்னத் மெண்டல்சனோ, நீதிமன்றமோ தெரிவிக்காத போதிலும், சட்டத்துறை சார்ந்த அறிஞர்களின் கருத்துப்படி 35 மில்லியன் டாலர் தொகை அபராதமாகவும், நீதிமன்ற கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என்றுதான் தெரிகிறது.
கடந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்கவாழ் இந்தியரான முன்னாள் ஊழியர் சத்யதேவ் திருபரேனணியும் நிறுவனம் மீது இத்தகைய விசா முறைகேடு தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் கலிபோர்னியாவில் இருந்த சிலிகான் வேலி அலுவலகத்தில் முன்னர் நிதித்துறை மேலாளராக இருந்தவர். குற்றம் நிரூபிக்கப்படும் எனத் தெரியவே அவரிடம் நீதிமன்றத்துக்கு வெளியே நிறுவனம் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொண்டது
கடந்த புதன்கிழமை இந்த வழக்குகள் எல்லாம் சுமுகமாக தீர்க்கப்பட்டதாக டெக்சாஸ் கிழக்கு மாவட்ட அட்டர்னி ஜெனரல் ஜான் எம். பேல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்த போதிலும், சட்ட நிபுணர்கள் இந்த அபராதம் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளனர். இன்போசிஸ் நிறுவனம் தாங்கள் விதிமுறைகளை மீறவில்லை என்று இப்போதும் அடித்துப் பேசி வருகிறார்கள். எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்றும், நீதிமன்றங்கள் மூலமாக முறையான அபராதம் செலுத்த உத்திரவிட்ட தாக்கீதுகள் ஏதும் தங்களுக்கு வரவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
தற்போது அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கான புதிய குடியேற்ற சட்ட மசோதா விவாதங்களுக்குள்ளாகியுள்ள நிலைமையில் குடியேற்ற விதிமுறைகளை தளர்த்தக் கூடாது என்று கூறுபவர்களின் வாதங்களுக்கு வலுச் சேர்ப்பதாகவே இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் இருப்பதாக முதலாளித்துவ சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய நிறுவனங்கள்தான் வட அமெரிக்காவின் தகவல்தொழில்நுட்பத் துறையின் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் சந்தையை கையில் வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இம்மோசடியை தெரிந்தே தான் அமெரிக்க அரசு அனுமதித்துள்ளது. குறைந்த கூலிக்கு ஆள் கிடைப்பதால் அமெரிக்காவுக்கு லாபம் தான். ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடி, உள்ளூர் ஆட்களுக்கு வேலை கிடைக்காமல் போவது போன்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட அமெரிக்கா அவர்களது வாயை அடைக்க ஒரு பேருக்கு இன்போசிஸை பிடித்து விட்டதாக கணக்கு காட்டுகிறது. உரிய அனுமதியில்லாமல் தங்கியிருந்து அடிமாட்டு கூலிக்கு வேலை பார்க்கும் அகதிகள் பெருகும்பட்சத்தில் அது அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியில் நன்மைதான் என்பதால் தெரிந்தே அரசு அவர்களை அனுமதிக்கிறது. மெக்சிகோ அகதிகள் இப்படித்தான் திருட்டுத்தனமாக அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்படுகிறது.
புதிய குடியேற்ற சட்டம் அமலாகும் பட்சத்தில் அங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூரில் வேலைக்கு ஆள் எடுப்பதில் கவனம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், அவர்களுக்கு அந்நாட்டு தொழிலாளர் சட்டத்தின்படி அதிக சம்பளம் தர வேண்டியிருக்கும் என்றும் தெரிகிறது. புதிய விசா நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்த ஆண்டு இதே மாதங்களில் ஒரு விசாவுக்கு கட்டணமாக மாத்திரம் 5000 டாலர்களுக்கும் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அதற்கேற்ப உயர்ந்த சம்பள விகிதங்களையும் வகுத்தளிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிகிறது. மைக்ரோசாஃப்ட் என்ற இது போன்ற மோசடி விசயங்களுக்கு முன்னோடியான நிறுவனமும் கூட்டத்தோடு கூட்டமாக நாராயணமூர்த்தியை விமர்சித்ததுடன், இந்திய நிறுவனங்கள் பலவும் இப்படி விசாவை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருப்பதுதான் நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை.
அரசுத் துறையில் மட்டும் தான் ஊழலும் லஞ்சமும் நிலவுகிறது என்றும், ஆனால் முதலாளித்துவம் நல்லது, யோக்கியமானது என்றும், தனியார்மயம் நல்லது என்றும் கூறுகின்றவர்கள் அவசியம் இன்போசிஸ் நடத்திய இந்த உலகளாவிய பித்தலாட்ட மோசடியை பார்த்த பிறகாவது தங்களது முடிவை மறுபரிசீலனை செய்வதுதான் நியாயமானது. நேர்மையானவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.
முதலாளித்துவம் என்றால் இப்படித்தான் என்பதற்கு எண்பதுகளில் வளரத் துவங்கி இப்போது முன்விட்டையாய் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கும் இன்போசிஸ் நாராயண மூர்த்திதான் நல்லதொரு உதாரணம். இதில் பின் விட்டை யார் என்று கேட்கிறீர்களா? வேறு யார் வளைகுடாவில் வெள்ளி நாணயங்களை உருக்கி வெள்ளியை விற்றுக் காசாக்கிய சாட்சாத் திரு(ட்டு)பாய் அம்பானி தான்.
– வசந்தன்
source: http://www.vinavu.com/2013/10/31/infosys-us-visa-fraud-cases/