பிரித்தானியா செல்ல முயற்சிக்கும் உங்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!
ஆறு ஆபத்தான நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் செய்வோர் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டம் ரத்துச் செய்யப்படுவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு ஆறு மாத கால விசாவை வழங்க பணத்தை வைப்புச் செய்யும் திட்டம் ஒன்றை அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் முன்வைத்திருந்ததுடன் அதனை நவம்பர் மாதம் அமுல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் தெரேசா தெரிவித்திருந்தார்.
6 மாத கால விசா வழங்கப்படும் நபர்கள் அந்த அனுமதி காலத்தையும் தாண்டி பிரித்தானியாவில் தங்கியிருந்தால் வைப்புச் செய்த அந்த பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யும் என அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
o யாரை ஆட்சியில் அமர்த்துவது? முடிவு செய்பவர்கள் முஸ்லிம்கள் தான் : மணிசங்கர் அய்யர்!
முஸ்லிம்களின் ஆதரவில்லாமல், இந்தியாவில் எந்தக் கட்சிகளாலும் அரசை நிர்ணயிக்க முடியாது, கூட்டணி அரசில் பங்கேற்கவும் முடியாது. எனவே தான், எல்லாக் கட்சிகளும் முஸ்லிம்களின் ஆதரவைக் கோருகின்றன, பாஜகவும் அதற்கு விதிவிலக்கில்லை என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர். மோடியின் கூட்டங்களுக்கு ‘புர்கா’ அணிந்த பெண்களை அதிகளவில் அழைத்து வருவதே இதற்கான ஆதாரம் என்றார், அய்யர். ஷார்ஜாவில், அலிகர் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் ‘சர் செய்து அஹ்மது கான்’ அவர்களின் 196வது நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
o ஒரு அல்கைதா கூட இல்லாத குடியரசின் பிரதமர் இவர்
”பதினைந்து கோடி இஸ்லாமியர்கள் உள்ள, ஆனால் ஒரு அல்கைதா கூட இல்லாத குடியரசின் பிரதமர் இவர்” மன்மோகன் சிங்கை தனது மனைவி லாராவிற்கு ஜனாதிபதியாக இருந்த போது புஷ் இப்படித்தான் அறிமுகப்படுத்தி வைத்தார் என்று சொல்வார்கள். இந்திய முஸ்லீம்களின் நாட்டுப் பற்றுக்குக் கிடைத்த சமீபகாலச் சான்று இது.
வரலாறு இதைப் போல பலசான்றுகளை வழிநெடுக சேமித்து வைத்திருக்கிறது. பாகிஸ்தான் உருவாவதற்குக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் மகள் டினா, பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து போகவில்லை.
அமெரிக்க தூதர் தனது அரசுக்கு அனுப்பிய குறிப்புகளை விக்கிலீகஸ் வெளியிட்டது.”அதிகம் பேசப்படாத, அல்லது ஊடகங்களில் வெளியாகாத குறிப்புகளில் சில இந்திய முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் மதத் தீவிரவாதத்தில் ஆர்வம் காட்டவில்லை. இளைஞர்களை அதற்குள் இழுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அவர்களது குடும்பத்தினர் தடுத்து நிறுத்துகிறார்கள். அவர்களில் பலர் ஏழைகள் என்ற போதும் அமைதியான வாழ்வையே விரும்புகிறார்கள்.” என்று அந்தக் குறிப்புக்கள் கூறுகின்றன.” (புதிய தலைமுறை இதழ் தலையங்கத்திலிருந்து)
o பிரித்தானியாவின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றைக் கொண்ட தொகுதியொன்று சேர்க்கப்பட்டுள்ளது
பிரித்தானியாவின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றைக் கொண்ட தொகுதியொன்று சேர்க்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கல்வி அமைச்சின் செயலாளர் மிச்சல் கோவ் தெரிவித்துள்ளார். பாடசாலை புதிய பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட ஆரம்ப வரைவு குறித்து பிரித்தானியாவின் பெரும்பாலான ஆசிரியர்கள் அதிருப்தியை வெளியிட்டதை அடுத்தே புதிய பாடத்திட்டத்தில் ஆரம்பகால இஸ்லாமிய வரலாறு, பண்டை சீனா வரலாறு போன்ற பாடங்கள் சேரக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப வரைவு குறித்து பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்ஸில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை எனக்கூறி தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்தது.
500 இஸ்லாமிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸில் ஆரம்ப வரைவை எதிர்த்து, பிரித்தானியாவின் எல்லா பாடசாலை மாணவர்கள் மீதும் கவனமெடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் கல்வி அமைச்சுக்கு அழைப்புவிடுத்தது.
இதன்விளைவாக, பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கெமரூனினால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.புதிய பாடத்திட்டம் 2014ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் அரசபாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.