தேசத்தின் வெற்றுப் பெருமிதத்திற்காக ஏவப்படுகிறதா மங்கள்யான்?
[ விண்வெளித்துறையில் இந்தியா ஆளுமை செலுத்துவதில் தவறில்லை. ஆனால், உடனடியாக, தேசத்துக்கு நேரடிப் பயன்தராத மங்கள்யான் போன்ற திட்டங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?
திட்டத்துக்குப் பொறுப்பேற்றுள்ளவர்களும், நாட்டுக்குத் தலைமை ஏற்றுள்ளவர்களுமே இது தேசத்தின் பெருமிதத்துக்கான திட்டம் என்றுதான் சொல்கிறார்கள். அத்துறை விற்பன்னர்கள் இது வீண் செலவு என்கிறார்கள்.]
இந்திய விண்வெளி சகாப்தத்தில் 2013 மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கக்கூடும். செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குத் தன் சொந்த முயற்சியில் மங்கள்யான் செயற்கைக் கோளை ஏவுகிறது இந்தியா. ‘மங்கள்யான்’ ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் நவம்பர் 2 ஆம் தேதி, மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. நவம்பர் 5 ஆம் தேதி, பிற்பகல் 2.36 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து மங்கள்யானைச் சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி புறப்படுகிறது.
யார் ஆசிய ஜாம்பவான்?
இதுவரை செவ்வாய் கிரகத்துக்கான பயணத்தை ரஷியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா விண்வெளிக்கழகம் ஆகியவை மட்டுமே மேற்கொண்டுள்ளன.
1960 ஆம் ஆண்டு முதல் செவ்வாய்க்கிரகம் நோக்கிய 45 பயணங்களில் 2 மட்டுமே வெற்றியடைந்திருக்கின்றன.
ஒரு காலத்தில் ரஷியாவும் அமெரிக்காவும் விண்வெளிப்போட்டியில் இறங்கியதைப் போல, தற்போது ஆசியப் பிராந்தியத்தில் விண்வெளிப்போட்டி நிலவுகிறது. ஜப்பான் இந்தப்போட்டியில் இருந்தபோதும், இது இந்தியாவுக்கும் சீனாவுக்குமான நேரடிப் போட்டியாகவே கருதப்படுகிறது.
அண்மையில் சீனாவின் செவ்வாய் கிரகத் திட்டம் தோல்வியில் முடிந்தது. 1998 ஆம் ஆண்டு ஜப்பானின் நோசோமி திட்டமும் தோல்வியடைந்தது. தற்போது செவ்வாய் திட்டத்தில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ள வாய்ப்புள்ளது.
தேசியப் பெருமிதமா?
ஆசிய விண்வெளிப்போட்டியின் தொடக்கமாக மங்கள்யான் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கு இதில் என்ன பயன் விளையும்; தேசியப் பெருமிதம் என்பதைத் தவிர என்ற கேள்வி எழாமல் இல்லை. இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், “இது தேசியப் பெருமிதம்” என்றே சொல்லியிருக்கிறார். ஆனால், அதன் முன்னாள் தலைவரின் கருத்து வேறு விதமாக இருக்கிறது. “இந்தத் திட்டம் நாட்டுக்கு வீண் செலவு” என்கிறார் ஜி.மாதவன் நாயர்.
ஏராளமான சிக்கல்களை வைத்துள்ள இந்தியா போன்ற நாடுகள், வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட வேண்டிய துறை இதுவல்ல. 70 சதவீதம் நீர் சூழ்ந்த பூமியில் தன் குடிமகனுக்கு சுகாதாரமான தண்ணீரை வழங்க முடியாத தேசமும், அடிப்படைத் தேவையான குடிநீரை பாட்டிலில் அடைத்து அரசாங்கமே விற்பதை அவலமாகக் கருதாத தேசமும், காற்றில் ஈரப்பதம் இருக்கிறதா என்பதைக் கூட உறுதி செய்யமுடியாத ஒரு கிரகத்தில் மனிதனை எப்படி வாழ வைக்க முடியும்? அதற்கான அவசியத் தேவை தற்போது இல்லை.
இந்தியாவில் மின்சார வசதி இல்லாமல் 40 கோடி மக்கள் தவித்து வருகின்றனர்.
கழிவறை இல்லாமல் 70 கோடி மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர்.
மொத்த மக்கள் தொகையில் 47 சதவீத இந்தியர்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் தவிக்கின்றனர்.
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்கிறோம்தான். ஆனால், உணவு தானியங்களைப் பாதுகாக்கும் வசதி நம்மிடத்தில் இல்லை.
ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான உணவுப்பொருள்கள் வீணாகின்றன. போதிய கிடங்கு வசதி, முறையான உள்கட்டமைப்பு இல்லாததால் வேளாண் உற்பத்தில் 40 சதவீதம் வீணாகிறது என்பதை வேளாண்மை மற்றும் உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை இணையமைச்சர் தாரிக் அன்வர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் ஆண்டுக்கு 2.10 கோடி டன் கோதுமை வீணாகிறது. இது 2012- 13 ஆம் ஆண்டின் மொத்த உற்பத்தியில் 24 சதவீதமாகும். ஆஸ்திரேலியாவில் மொத்த வேளாண் உற்பத்தில் 0.75 சதவீதம் மட்டுமே வீணாகிறது.
விண்வெளித்துறையில் இந்தியா ஆளுமை செலுத்துவதில் தவறில்லை. ஆனால், உடனடியாக, தேசத்துக்கு நேரடிப் பயன்தராத மங்கள்யான் போன்ற திட்டங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? என்ற கேள்வி எழாமல் இல்லை.
திட்டத்துக்குப் பொறுப்பேற்றுள்ளவர்களும், நாட்டுக்குத் தலைமை ஏற்றுள்ளவர்களுமே இது தேசத்தின் பெருமிதத்துக்கான திட்டம் என்றுதான் சொல்கிறார்கள். அத்துறை விற்பன்னர்கள் இது வீண் செலவு என்கிறார்கள்.
பட்டுச் சட்டை அணிவது கௌரவமாக இருக்கலாம். ஆனால் பசித்த வயிறுடன் அல்ல என்பதை இவர்களுக்கு யார் சொல்வது?
–சக்திவேல் மயில்சாமி
source: http://tamil.thehindu.com/india/