பாட்னா குண்டு வெடிப்பு : விடை தெரியாத வினாக்கள்
எழில் பிரகாசம்
கடந்த 27 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்ட போது அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் 6 பேர் உயிரிழந்ததோடு எழுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்தியாவில் குண்டு வெடிப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டாலும், தேர்தல் நெருங்கும் சூழலில் நடத்தப்பட்டுள்ள தற்போதைய குண்டுவெடிப்பு, பலதரப்பிலும் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
1) பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி, சமீப நாட்களாகப் பல்வேறு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். குஜராத் முதலமைச்சராகவும் பதவியிலுள்ள நரேந்திர மோடிக்குப் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில், அவருக்கு உயர்மட்டப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளும் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதுடன், நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடம் அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. மத்திய, மாநிலக் காவலர்களின் பாதுகாப்புகள் மட்டுமின்றி, மோடி ஆளும் குஜராத்திலிருந்தும் சிறப்புப் பாதுகாப்புப் படைகள் வரவழைக்கப்பட்டு அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பாட்னாவில் பொதுக்கூட்டம் நடைபெறும் தினத்தன்று காலையில் ரயில் நிலையத்தின் 10 ஆவது நடைமேடை அருகிலுள்ள கழிவறையில் முதல் குண்டு வெடித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அருகிலுள்ள சினிமா தியேட்டரிலும் குண்டு வெடித்துள்ளது. ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி முன்னதாகவே நடந்த இவ்விரண்டு குண்டு வெடிப்புகளுக்குப் பிறகும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ரத்துச் செய்யாமல் தொடர்ந்து நடந்த வேண்டிய அவசியம் என்ன?
2) இலட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியுள்ள மைதானத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் போது, உயிர் பயம் ஏற்பட்டு மக்கள் பீதியில் சிதறி ஓடுவர் .(பிடிபட்டுள்ளவர்களும் இதையே தெரிவித்ததாகக் காவல்துறையால் சொல்லப்படுகிறது) அசாதாராண பீதியும் களேபரமும் ஏற்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குள்ளான நிலையிலும் பாதுகாப்பற்ற மேடையில் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எத்தகைய சலணமும் இன்றி அமர்ந்திருந்ததோடு, குண்டு வெடிக்கும் சப்தத்திற்கிடையே புகையுனூடே மோடி மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறாரே எப்படி?
புதியதலைமுறை தொலைக்காட்சி ‘நேர்படப்பேசு’ நிகழ்ச்சியில், “குண்டு வெடிப்புச் செய்தியை போலிசார் மோடியிடம் தெரிவித்து பாதுகாப்பு காரணங்களுக்காக 45 நிமிடம் தாமதித்து கூட்டத்திற்கு வருமாறு கூறுகின்றனர்.. அதைக் கூடக் கேட்காமல் கூட்டத்திற்கு வந்து 1 மணி நேரம் பேசுகிறார்.. 12.50க் கு பிறகு எந்த குண்டும் வெடிக்காது என்று மோடிக்கு எப்படி தெரியும்..என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் வினவியுள்ளார்.
3) நிகழ்ச்சி நடைபெறும் இடம் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், பொதுக்கூட்ட மேடைக்கு 150 மீட்டர் அருகே குண்டு வெடித்துள்ளது. மைதானத்தில் வெடித்த குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே பாஜகவினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுக்கூட்ட மைதானத்தில் வெளியாட்கள் வந்து குண்டுகளைப் புதைத்து வைப்பது சாத்தியமா?
4) தீவிரக் கண்காணிப்புக்குள்ளான மைதானத்தில் வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததை, சோதனையில் ஈடுபட்டிருந்த மோப்ப நாய்களும் கூடவா கண்டு பிடிக்கவில்லை?
5) வெடிக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் டைம்பாம்களல்ல; சாதாரண நாட்டு வெடிகுண்டுகளே எனும் போது அவை அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. ஆக, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களே இந்த குண்டுகளை வெடிக்கச் செய்திருக்க வேண்டும். அங்கிருந்த தொண்டர்களோ அல்லது பாதுகாப்புப் படையினரோ இதைக் கவனிக்கவில்லையா?
நாட்டுவெடிகுண்டுகளை மைதானத்தின் வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்திருப்பதன் மூலம், அவர்கள் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு பேசியே இதைச் செயல்படுத்தியிருக்க முடியும். அத்தகைய தகவல் பரிமாற்றம் எதுவும் நடந்ததா?
6) குண்டு வெடிப்பு நிகழ்ந்ததுமே விரைந்த மத்திய உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள், வெடிக்கப்பட்டவை சாதாரன நாட்டு வெடிகுண்டுகள் என்பதால், உயிர்சேதம் அதிகம் ஏற்படவில்லை என்று தெரிவித்ததோடு, அதன் பின்னணியில் பயங்கரவாதத் தொடர்பு எதுவுமில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர். எனினும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று விசாரணை அதிகாரிகளால் சொல்லப்படுகிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல்களை உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் பெயரால் ஊடகங்களில் கசியவிட்டது யார்?
7) மோடியின் உயிருக்குக் குறிவைத்தே இந்த குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மோடியை மேடையில் பேச அனுமதித்தது யார்? குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது போல் சேட்டிலைட் தொலைநுட்பத்தைப் பயன்படுத்தி மோடி மேடைக்கு வராமலேயே பேசியிருக்கலாமே!
8) ஏற்கனவே பிரதமர் பதவியைக் குறி வைத்திருந்த அத்வானியைப் பின்னுக்குத் தள்ளியதால் மோடி மீது கோபம் கொண்ட அத்வானி ஆதரவாளர்களால் ஏன் இந்த குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டிருக்கக்கூடாது?
9) மோடியை பாஜக முன்னிறுத்தியதைத் தொடர்ந்து, பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் தற்போதைய பீகார் முதலமைச்சருமான நிதீஷ் குமார் விலகினார். இதனால் பாஜகவுக்கு தேசிய அளவில் கூட்டணி அமைவதில் பின்னடைவு ஏற்பட்டது. பாஜகவுக்குத் துரோகம் செய்த நிதீஷ் குமாருக்குத் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்றும் மோடி சவால் விட்டிருந்தார்.
பாஜக கூட்டணியிலிருந்து நிதீஷ்குமார் பிரிந்த பிறகு தான் பீகாரில் குண்டுகள் அடிக்கடி வெடிக்கின்றன. மோடி கலந்து கொண்ட கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பே சக்தி குறைந்த குண்டுகள் வெடித்தன. இதே வகை குண்டுகளே முன்பு புத்தகயாவிலும் வெடித்தன. காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் பிரதமர் வேட்பாளராக நிதீஷ் குமார் முன்னிறுத்தப்படும் வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்படுகிறது. இதைச் சீர்குலைக்க பாஜகவினரே கூட ஏன் இந்த குண்டுவெடிப்பை நடத்தியிருக்க முடியாது?
10) உத்திரப்பிரதேசம் முஸாப்பர்பூர் கலவரத்திற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாகவும் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் எனும் போது, இத்தகைய பரப்புரைகள் மூலம் குண்டுவெடிப்பை வழக்கம் போல் உ.பி முஸ்லிம்கள் தலையில் கட்டி விடும் சதியாகவே தெரிகிறது. பழிவாங்கும் நடவடிக்கை என்று ஒரு தியரி சொல்லப்படுவதால் முஸாப்பர்பூர் கலவரத்தை நடத்தியது பாஜகவினரே என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக ஆகாதா?
11) முஸாப்பர்பூர் கலவரத்திற்குப் பழிவாங்குவதாக இருந்தால் அதைத் திருச்சியில் நடந்த மாநாட்டிலோ அல்லது அல்லது பிறமாநிலங்களில் மோடி கலந்து கொண்ட கூட்டங்களிலோ நடத்தியிருக்கலாமே?
12) ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமது பாட்டி, தந்தை ஆகியோர் கொல்லப்பட்டது போல் தாமும் கொல்லப்படக் கூடும் என்று பேசியது அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. இதனால் காங்கிரஸ் பலனடைந்து விடக் கூடாது என்பதற்காகவும்,அத்தகைய அச்சுறுத்தல்கள் மோடிக்கும் இருப்பதாகக் காட்டுவதற்காகவும் வெடிகுண்டு வைப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
13) ஒவ்வொரு குண்டு வெடிப்புக்குப் பின்னரும் ஏதேனும் ஒரு தீவிரவாத அமைப்பு ஈமெயில் அனுப்பிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படும். பாட்னா குண்டு வெடிப்புக்கு இது வரை அது போல் யாரும் பொறுப்பேற்றதாகவும் தெரியவிலை. காவல்துறை அறிக்கையின்படி பிடிபட்டவர்கள் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட பிறகும் கூட, இந்தியன் முஜாஹிதீன் தரப்பிலிருந்து யாரும் பொறுப்பேற்கவில்லையே! ஏன்?
14) மோடியின் பேரணிகளில் இந்துத்துவ சக்திகள் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டுள்ளதாக 5 மாதங்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளதோடு, அதை இந்துத்துவ சக்திகள் தாம் திட்டமிட்டுள்ளனர் என்று குஜராத் போலீசுக்கும் மத்திய அரசுக்கும் அளித்த அறிக்கையில் மத்திய உளவுத்துறை குறிப்பிட்டிருந்தும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை?
15) குண்டு வெடிப்புகள் மூலம் ஏற்படும் களேபரத்தில் நெரிசல் ஏற்படுத்தி அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்துவதே நோக்கமாக இருந்ததாக ,பிடிபட்டவர்கள் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இது தான் அவர்களது நோக்கம் எனில் மக்கள் கூடும் கோவில்களிலோ அல்லது அதை விட இந்து பக்தர்கள் கூடும் கும்பமேளாவிலோ வைத்திருக்காமல் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணும் வகையில் தகுந்த புலனாய்வு நடத்தப்பட்டால் ஒழிய உண்மையான காரணங்கள் தெரியப் போவதில்லை. ஊடகங்களில் பரப்பப்படும் யூகத்தின் அடிப்படையிலான பரபரப்புச் செய்திகளால் பாட்னா குண்டு வெடிப்புகளும் பத்தோடு பதினொன்று என்று மறக்கப்படுவதுடன், குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி மத மோதல்களும், சிறுபான்மை – பெரும்பான்மை வெறுப்புணர்வுமே விதைக்கப்படும்.