மறுமணத்திற்கான அவகாசம் –
இத்தா (சட்ட விளக்கம்)
திருமணமான ஒரு முஸ்லிம் பெண் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டாலோ அல்லது கணவன் இறந்து விட்டாலோ குறிப்பிட்ட நாட்களுக்கு சில காரியங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரபு மொழி வழக்கில் இதை ‘இத்தா’ என்று குறிப்பிடுவர். காத்திருத்தல் என்ற பொருளில் இது பயன்படுத்தப் படுகிறது.
1) கணவனால் விவாகரத்து செய்யப்பட்டப் பெண் விவாகரத்து செய்த கணவனுக்காக மூன்று மாதவிலக்கிலிருந்து தூய்மை அடையும்வரை காத்திருக்க வேண்டும். இதுப்பற்றிய விரிவான விளக்கம் நமது இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ள ‘தலாக் சட்டமும் தவறான புரிதல்களும்’ என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.
2) கணவன் இறந்துப் போன பெண்ணுக்குரிய இத்தா.
“உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும். காத்திருக்கும் தவணை முடிந்ததும் அவர்கள் தங்கள் காரியத்தில் ஒழுங்காக எதையும் செய்துக் கொள்ளலாம்” (அல் குர்ஆன் 2:234)
‘இத்தா இருக்கும் பெண்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்கள் கர்ப்பத்தில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைக்கக் கூடாது’ (அல் குர்ஆன் 2;:228)
‘கர்ப்பிணி பெண்களின் காத்திருக்கும் (இத்தா) தவணை பிரசவிக்கும் வரையிலாகும்’ (அல் குர்ஆன் 65:4)
இந்த மூன்று வசனங்களிலிருந்து இத்தாவின் நோக்கம் என்ன என்பதை புரிந்துக் கொள்ளலாம். கணவனை இழந்தப் பெண் இத்தா இருக்க வேண்டிய நோக்கத்தில் முதல்மையானது அவள் கருவுற்றிருக்கிறாளா.. என்பதை வெளிப்படுத்துவதேயாகும்.
கருவுற்றிருப்பது இந்த காலகட்டத்தில் உறுதியானால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவளது இத்தா தவணை நீள்கிறது. சில நாட்களில் பிரசவிக்க இருக்கும் நிறைமாத கர்ப்பிணியின் கணவன் இறந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இறந்த ஓரிரு நாட்களில் இவள் பிரவசித்து விட்டால் அதன் பிறகு இவள் கடைப்பிடிக்க வேண்டிய இத்தா தவணை எதுவும் இல்லை. இதை 65:4 வது வசனம் தெளிவாகவே அறிவித்து விடுகிறது.
இறைத்தூதர் அவர்களும் இப்படித்தான் விளக்கியுள்ளார்கள்.
சுபையா ரளியல்லாஹு அன்ஹா என்ற பெண்மணி தம் கணவர் மரணித்த 23 அல்லது 25 வது நாளில் பிரசவித்தார். பிரசவத் தீட்டிலிருந்து தூய்மையானவுடன் மறுமணத்திற்காக அவர் தம்மை அலங்கரித்துக் கொண்டார். இது சிலரால் ஆட்சேபிக்கப் பட்டது. இதுபற்றி அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அந்த பெண் அவ்வாறு செய்தால் அது சரிதான் ஏனெனில் அந்தப் பெண்ணின் இத்தா முடிந்து விட்டது’ என்றுக் கூறினார்கள். (உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, அபூ ஸனாபில் ரளியல்லாஹு அன்ஹா, -புகாரி 4523, முஸ்லிம் 2728, திர்மிதி 1205,1207)
பிரசவிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பதிலிருந்து கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இத்தாவின் நாட்கள் மாறுபடும் என்பதை விளங்கலாம்.
இத்தாவை நம் மக்கள் இருட்டறை சடங்காக்கி விட்டார்கள். கணவன் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் மனைவியின் கை வலையல்களை உடைப்பது, கருகமணியை அறுத்தெறிவது, கடைசி காலம் வரையில் தலையில் ‘பூ’ கூட வைக்க விடாமல் தடுத்து அவளை வெள்ளைப் புடவையின் உள்ளே புதைப்பது என்று அந்தப் பெண்ணுக்கு எதிராக நடக்கும் எந்த கொடுமைக்கும் இஸ்லாம் பொறுப்பேற்காது ஏனெனில் இஸ்லாம் இவ்வாறெல்லாம் சொல்லிக் கொடுக்க வில்லை.
இத்தா இருக்க வேண்டிய அந்த நான்கு மாதம் பத்து நாட்கள் மட்டும் தன்னை அழகு படுத்திக் கொள்வதிலிருந்து பெண்கள் தவிர்ந்திருக்க வேண்டும்.
கணவனை இழந்தப் பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் சாயமேற்றப்பட்ட வண்ண உடைகள் அணியக்கூடாது, சுருமா இடக்கூடாது, நகைகள் அணியக் கூடாது, நறுமணம் பூசக் கூடாது, மருதாணி இடக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா இருவரும் அறிவிக்கும் இச்செய்தி புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், அஹ்மத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)
மனைவி கருவுற்றிருக்கிறாளா.. என்று அறிய வேண்டிய காலகட்டத்தில் அவள் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் சில காரியங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சொல்லப்பட்டுள்ளது என்பதை சிந்திக்கும்போது விளங்கலாம்.
மற்றபடி இத்தாவிற்கென்று எந்த சடங்கும் இல்லை. வெள்ளைப்புடவை உடுத்த வேண்டும் என்பதோ, இருண்ட அறையில் முடங்கி கிடக்க வேண்டும் என்பதோ, பிற பெண்களின் முகத்தைப் பார்க்கக் கூடாது என்பதோ, நல்லக்காரியங்களில் பங்கெடுக்கக் கூடாது என்பதோ இஸ்லாத்தில் இல்லை. இவை பெண்களுக்கு எதிராக வேறு சில மதங்கள் உருவாக்கி வைத்துள்ள சட்டங்களாகும்.
கணவன் உயிருடன் இருக்கும் போது ஒரு பெண் யாரையெல்லாம் பார்க்க அனுமதி உள்ளதோ அவர்களை இத்தாவின் போதும் பார்க்கலாம், பேசலாம், பழகலாம் இதற்கு எந்தத் தடையுமில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பெண்களிடம் ஆண்கள் சாடையாக திருமணப் பேச்சைக் கூட பேசலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான்.
‘(இத்தாவிலிருக்கும்) பெண்ணை திருமணம் செய்ய நினைத்து குறிப்பாக அறிவிப்பதிலோ அல்லது மறைவாக மனதில் வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் என்பதை இறைவன் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களுடன் (திருமண) வாக்குறுதி செய்துக் கொள்ளாதீர்கள். மாறாக நடைமுறைக்கு ஒத்த கருத்தை நிங்கள் வெளியிடலாம். மேலும் (இத்தாவின்) தவணை முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றி தீர்மானித்து விடாதீர்கள்.’ (அல்குர்ஆன் 2:235)
அழுத்தமாக ஒப்பந்தம் செய்துக் கொள்ளாமல் திருமணம் பற்றி நடைமுறையில் இருக்கக் கூடிய நல்ல வார்த்தைகளை இத்தாவிலிருக்கும் பெண்களிடம் கூறலாம் என்ற இறைவனின் வார்த்தையிலிருந்து இத்தா எத்துனை இலகுவானது என்பதையும் அது நம்மவர்களால் எவ்வளவு கடினப்படுத்தப்பட்டுவிட்டது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்தப் பெண்கள் பகல் நேரங்களில் தேவையின் நிமித்தம் வெளியில் கூட சென்று வரலாம்.
‘என் கணவரின் மரண செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று ‘என் கணவர் செலவுக்கு எதையும் விட்டு செல்லவில்லை நான் என் குடும்பத்தாரிடமும் சகோதரிகளிடமும் சென்றால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘சரி, அப்படியே செய்’ என்றார்கள். நான் திரும்பிய போது என்னை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூப்பிட்டு ‘எந்த வீட்டில் இருக்கும் போது உனக்கு அந்த செய்தி கிடைத்ததோ அந்த வீட்டில் இத்தா முடியும் வரை இருந்துக் கொள்’ என்றார்கள். (இதை அபூஸயீத் அல்குத்ரி அவர்களின் சகோதரி புரைஆ பின்த் மாலிக் அறிவிக்கிறார். திர்மிதி 1216, 1217 மற்றும் நஸயி, அபூதாவூத்)
கணவரின் மரண செய்திக்கு பிறகு அந்தப் பெண் வெளியேறி நபியை சந்தித்ததிலிருந்தும், அதை நபியவர்கள் ஆட்சேபிக்க வில்லை என்பதிலிருந்தும் தேவையின் நிமித்தம் வெளியில் செல்லலாம் என்று உமர், ஜைத் பின் ஸாபித் ஆகிய நபித்தோழர்கள் கூறியுள்ளார்கள் (இப்னு அபீ ஷைபா)
இத்தாவிலிருக்கும் இப்னு உமர் அவர்களின் மகள் பகல் பொழுதில் தம் தந்தையை சந்திக்க வந்து அங்கேயே பேசிக் கொண்டிருப்பார். இரவானதும் கணவர் வீட்டுக்கு செல்லுமாறு தம் மகளிடம் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறுவார்கள் (முஸ்னது அப்துல் ரஸ்ஸாக்)
டாக்டரிடம் செல்வது, மரணம் போன்ற அவசியத் தேவைகளுக்கு வெளியில் செல்வது உட்பட இத்தகைய பெண்களுக்கு அனுமதியுண்டு. இத்தா காலம் முடிந்தப் பிறகு அந்தப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் மறுமணத்திற்கு தயாராவதில் எவ்வித குற்றமுமில்லை. 2;:234 வது வசனம் இதைத் தெளிவாகவே அறிவித்துள்ளது. சுபையா என்ற பெண்மணி கணவர் இறந்த அறுபத்தைந்து நாட்களில் (25 நாட்களில் பிரசவிக்கிறார் பிறகு நாற்பது நாட்கள் பிரசவத்தீட்டு) மறுமணத்திற்கு தயாராகி தன்னை அலங்கரித்துக் கொள்கிறார். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்துள்ளார்கள்.
கணவன் பற்றிய தேட்டமுள்ள இளம் விதவைப் பெண்கள் கூட ஓராண்டு வரை மறுமணம் செய்யக்கூடாது, அதைப்பற்றி நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று எழுதப்படாத சட்டம் நம் சமூகத்தில் இருந்து வருகிறது. விதிவிலக்காக ஓரிருவர் ஓராண்டுக்கு முன் திருமணத்திற்கு தயாரானால் அந்தப் பெண் பற்றிய கேவலமான பேச்சுக்கள் எல்லாம் வெளியில் உலவ துவங்கி விடுகின்றன. இப்படிப் பேசித் திரிவோர் மேற்கண்ட குர்ஆன் வசனம், நபிமொழியிலிருந்துப் பாடம் கற்க வேண்டும்.
இதற்கு நேர் மாற்றமாக சில இடங்களில் ‘இத்தா’ கேலி கூத்தாக்கப் படுவதையும் காண்கிறோம்.
அதாவது இளம் வயதில் கணவனை இழந்தப் பெண்ணை அந்தப் பெண்ணின் வீட்டார் மூன்று நாள் அல்லது ஐந்து நாள் மட்டும் இத்தாவில் வைத்து அவசரமாக வெளியேற்றி மறுமணம் செய்துக் கொடுத்து விடுகிறார்கள். இது இத்தாவின் நோக்கத்தையே முழுக்க முழுக்க பாழ்படுத்தக் கூடியதாகும்.
முதல் கணவன் மூலம் கருவுற்றிருக்கிறாளா.. என்று பார்ப்பதே இத்தாவின் முக்கிய நோக்கம் என்று மேலே சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளோம். தன் மூலம் தன் மனைவி கர்ப்பம் தரித்தால் தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் குழந்தையை தன் மனைவி ஒழுங்காக பெற்றெடுப்பாள் என்று அந்த கணவன் நம்புகிறான். இதை எழுதி கையெழுத்துப் போடாவிட்டாலும் திருமண ஒப்பந்தத்தில் இது அடங்கி நிற்கிறது. இந் நிலையில் முந்தய கணவனால் கர்ப்பம் தரித்த ஒருப் பெண் மூன்று நாள், ஐந்து நாள் இத்தாவில் இருந்து விட்டு வெளியேறி மறுமணம் செய்துக் கொள்கிறாள் என்றால் இவள் இரண்டு கணவர்களுக்குமே துரோகம் செய்தவளாகிறாள்.
முதல் கணவனின் குழந்தைக்கு இரண்டாம் கணவன் தந்தையாகும் நிலை உருவாகிறது. முதல் கணவன் ஏழ்மையிலிருந்து இரண்டாம் கணவன் பணக்காரனாய் இருந்தால் முறையற்ற சொத்துக்கு இந்த குழந்தை வாரிசாகிறது. இதற்கு மாற்றமாக முதல் கணவன் பணக்காரனாய் இருந்து இரண்டாம் கணவன் ஏழ்மையிலிருந்தால் தந்தையின் சொத்திருந்தும் அதைப் பெற முடியாமல் பஞ்சத்திலும் ஏழ்மையிலும் இந்தக் குழந்தைத் தள்ளப்படுகிறது. இன்னும் ஆழமாக சிந்தித்தால் வேறு விபரீதங்களும் இதில் தென்படும். இந்தக் குற்றங்கள் அனைத்திற்கும் அந்தப் பெண்ணே பொறுப்புதாரியாகிறாள் என்பதால் இந்த மடத்தனமான இத்தா முறைக்கு சம்மந்தப்பட்டப் பெண்கள் ஒத்துழைக்கவேக் கூடாது. குடும்பத்தார் என்னதான் வர்புறுத்தினாலும் முதல் கணவனுக்கு செய்யும் துரோகத்திற்கும், நாளை இறைவனின் கேள்விகளுக்கும் அஞ்சி கட்டாயம் இதை மறுத்தே ஆக வேண்டும்.
அடுத்து இத்தா சட்டம் பற்றி எழுந்துள்ள சில ஐயங்களைப் பார்ப்போம்.
மனைவி கருவுற்றிருக்கிறாளா.. என்று பார்ப்பதுதான் இத்தாவின் நோக்கம் என்றால் வயதான பெண்களுக்கு இத்தா அவசியமா..? நீண்ட காலம் மனைவியை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வாழும் கணவன் இறந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு இத்தாவின் சட்டம் பொருந்துமா..?
வயதான பெண்கள் மீண்டும் திருமணம் செய்யப் போவதில்லை என்பதால் இத்தா அவசியமா.. என்றக் கேள்வியே அங்கு எழாது. ஏனெனில் அவர்கள் இனி இருக்கப் போகும் காலத்தை இத்தாவில் இருப்பதுப் போன்று தான் கழிக்கப் போகிறார்கள். முதிர்ந்த வயதிலும் இல்லற உணர்விற்கு ஆட்பட்டு ஒரு பெண் திருமணத்தை விரும்பினால் அந்தப் பெண்ணால் கருவுற முடியும் என்ற எதிர்பார்ப்பு குடும்பத்தில் எழ வாய்ப்புள்ளது இந்நிலையில் அவள் இத்தா இருக்கத்தான் வேண்டும்.
நீண்ட காலம் கணவனுடன் இல்லற உறவு இல்லாத பெண்களை எடுத்துக் கொள்வோம். கணவன் இல்லாத சந்தர்பத்தில் இல்லற வேட்கையில் ஆர்வம் உள்ளப் பெண்கள் தவற வாய்ப்புள்ளது. இங்கும் அங்குமாக இந்தத் தவறு நடக்காமல் இல்லை. இந்நிலையில் இத்தா புறக்கணிக்கப்பட்டு மறுமணத்திற்கு அவள் தயாரானால் அவள் தவறை நிரூபிக்க முடியாமல் போய்விடும். எல்லாப் பெண்களும் தவறு செய்பவர்கள்தானா.. என்ற கண்ணோட்டத்தில் இதைப் பார்க்கக் கூடாது. இந்த விஷயத்தில் நல்லப் பெண்கள் யார்? தவறுவது யார்? என்று பிரித்தறிவது கடினம் என்பதால் தவறை மறைக்க முடியாத ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் அனைவரையும் கொண்டு வருவது அவசியமாகி விடுகின்றது. அந்த அடிப்படையில் நீண்ட காலம் கணவனை பிரிந்து கணவன் இறந்து விட்டப் பெண்களும் இத்தா இருக்கத்தான் வேண்டும்.
கருவை கண்டறிவது தான் இத்தாவின் நோக்கம் என்றால் கருப்பை அகற்றப்பட்ட, கருப்பையுடன் சினைப்பைகள் சேர்த்து அகற்றப்பட்ட பெண்கள் கருவுற வாய்ப்பில்லையே அத்தகையப் பெண்கள் இந்த இத்தா சட்டத்திலிருந்து விடுப்பட முடியுமா.. என்ற சந்தேகம் அடுத்து எழலாம்.
நான்கு மாதம் பத்து நாள் என்ற சட்டம் கருவை கண்டறிந்து வெளிப்படுத்துதல் என்பதற்காகத்தான் என்று தெளிவான சான்றுகள் இருப்பதால் கருவுறவே முடியாத பெண்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது தான். ஆனாலும் இந்தப் பெண்களும் இத்தாவிலிருந்து விடுப்பட முடியாது. நாட்களை குறைத்து இவர்களுக்குறிய இத்தாவை இறைவன் அறிவித்துள்ளான்.
‘உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (இனி கருவுறுவாளா) என்று சந்தேகப்பட்டால் அப் பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் ‘இத்தா’ காத்திருக்கும் தவணை மூன்று மாதங்களாகும். (அல்குர்ஆன் 65:4)
கருப்பை, சினைப்பைகள் அகற்றப்பட்டப் பெண்களாக இருந்தாலும் சரி உடல் கோளாறுகளினால் மாதவிடாயே ஏற்படாத பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் மூன்று மாதவிடாய் காலம் இத்தா இருக்கவேண்டும் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவாகிறது.
இவர்களால் கருவுற முடியாவிட்டாலும் இல்லற வேட்கையிலிருந்து விடுபட்டவர்களல்ல. முதல்கணவன் இறந்தப் பிறகு அவனுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட சாதக பாதகங்களின் தாக்கங்கள் குறைய அல்லது மறைய சில காலங்கள் தேவைப்படும். முதல் கணவனால் அதிகம் நேசிக்கப்பட்ட மனைவியாக இருந்தால் அவளால் உடனடியாக அடுத்த திருமணத்திற்கு தயாராக முடியாது. முதல் கணவனின் தாக்கம் குறைந்து மன ரீதியாக அவள் தயாராக இந்த இடைவெளி அவசியம். முதல் கணவனின் கொடுமையிலிருந்து விடுபட்ட பெண்ணாக இருந்தால் பயமும் வடுக்களும் அவளை அழுத்தி நிற்கும். கொஞ்சம் கொஞ்சமாக அவள் தயாராவதற்கும் இந்த காலகட்டம் தேவைப்படும். இது நம் அறிவுக்கு உதித்ததுதான். இந்த விளக்கம் சரியில்லை என்றால் கூட நம் அறிவுக்கு புலப்படாத வேறு ஏதோ நோக்கம் அதில் புதைந்திருக்கலாம். அந்த நம்பிக்கையில் இறை ஆணையை ஏற்று அந்தப் பெண்களும் இத்தா இருக்கத்தான் வேண்டும்.
எனவே வயது வரம்பையோ கால வரம்பையோ பார்க்காமல் கணவனை இழந்தப் பெண்கள் அனைவரும் கட்டாயம் இத்தாவில் இருப்பது கடமையாகும். (இறைவன் மிக்க அறிந்தவன்)