கருங்கடலையும் மர்மராக் கடலையும் இணைக்கும் புகையிரத சுரங்கப் பாதை
உஸ்மானியப் கலீஃபா சுல்தான் அப்துல் மஜீதின் கனவை நனவாக்கினார் துருக்கியப் பிரதமர் அர்துகான்
போஸ்பொரஸ் நீரிணையின் கீழால் அமைக்கப்பட்டிருக்கும் புகையிரத சுரங்கப் பாதையை துருக்கியப் பிரதமர் ரஜப் தைய்யிப் அர்துகான் திறந்து வைக்கிறார். இதன் மூலம் உஸ்மானிய சாம்ராஜ்ய சுல்தான் அப்துல் மஜீதின் கனவு 150 வருடங்களுக்குப் பின் நனவாகிறது.
கருங்கடலையும் மர்மராக் கடலையும் இணைக்கும் இந் நீரிணையானது துருக்கியை ஆசியாக் கண்டத்துடனும் ஐரோப்பாக் கண்டத்துடனும் இணைக்கிறது.
துருக்கியின் சனநெருசல் மிக்க இருபெரும் நகரங்களை இணைக்கும் 1.4 கிலோமீற்றர் நீளமான இந்நீரிணையின் கீழால் மெத்ரோ ரயில் பாதையை அமைக்க ஒன்பது வருடங்கள் எடுத்திருக்கிறது. இப்பாதை அமைக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்துடன் தொடர்புடைய பெரும்பாலான பிரச்சினைகள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1923 இல் துருக்கிய குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் தினத்தில் இப்புகையிரதப் பாதை திறந்து வைக்கப்படுகிறது. திறப்பு விழாவில் சீன அதிபர் கூ சிங்தாவ் கலந்து கொள்கிறார்.
இத்திட்டம் குறித்து முன்பொருமுறை கருத்து வெளியிட்டிருந்தத துருக்கியப் பிரதமர், தனது எதிரிகள் 150 வருடக் கனவான இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்காக தன்னை ”புதிய சுல்தான்” என்றழைப்பதாக கூறியிருந்தார். ”தமது மூதாதையர்கள் இது குறித்து சிந்தித்தார்கள். நாம் அதை நடைமுறைப்படுத்தினோம்” என்றார் அர்துகான்.
1860 ஆம் ஆண்டு போஸ்பொரஸ் நீரிணையின் கீழால் சுரங்கப்பாதை அமைக்கும் சிந்தனையை முதன் முதலாக உஸ்மானிய கலீஃபா சுல்தான் அப்துல் மஜீத் முன்வைத்திருந்தார். ஆயினும், தொழிநுட்ப வசதியின்மையும் நிதிப்பற்றாக்குறையும் இச்சிந்தனையை நடைமுறைக்கு வராமல் தடுத்தது.
இத்திட்டத்திற்கு ஜப்பான் ஒத்துழைப்பு வங்கி 735 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது. ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உதவியும் இதற்காக பெறப்பட்டுள்ளது.
2004 மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை துருக்கி – ஜப்பான் நிறுவனங்கள் இணைத்து செயற்படுத்தியுள்ளன. இத்திட்டத்திற்கான மொத்த செலவு 3 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்படுகிறது.
4 வருடங்களில் முடிக்கத் திட்டமிடப் பட்டிருந்த இத்திட்டம் பல அரிய புராதன சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 40 ஆயிரத்திற்கு அதிகமான அரிய புராதனப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் துருக்கிய அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு இத்திட்டமும் ஒரு காரணம் என்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
-Meelparvai Media Centre