ஹஜ்ஜுக்காக பசுக்களை விற்ற மூதாட்டி!
‘கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹஜ்ஜூக்கு வர முயற்சி செய்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜூக்கு செல்வதற்கான பணம் என்னிடம் முழுமையடையாமல் போகும். உடன் எனது ஹஜ்ஜு செய்ய வேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொள்வேன். ஆனால் இந்த வருடம் இறைவன் எனது ஆவலை பூர்த்தி செய்துள்ளான். இந்த வருடமும் போதிய பணம் சேரவில்லை. முடிவில் எங்களது வீட்டில் இருந்த இரண்டு பசுக்களை விற்று ஹஜ்ஜுக்கான பணத்தை பூர்த்தியாக்கினேன்’ என்று ஆவலோடு சொல்கிறார் 80 வயதைக் கடந்த ஜைனப். இவர் நமது நாடான இந்தியாவிலிருந்து ஹஜ்ஜு செய்ய வந்தவர்.
‘இரண்டு பசுக்கள் போனதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் எனது 25 வருட கனவு இன்று பூர்த்தியானது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உலக முஸ்லிம்கள் அனைவரோடும் ‘எல்லோரும் ஒரு தாய் மக்கள்’ என்ற உணர்வோடு நான் செய்த இந்த ஹஜ்ஜை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவு சந்தோஷத்தோடு உள்ளேன்.
மக்கா நகரம் என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. எனக்கு மிகுந்த திருப்தியையும் மன நிம்மதியையும் தந்தது இந்த அழகிய ஊர். எனக்கு அனுமதி கிடைத்தால் இறக்கும் வரை இந்த ஊரிலேயே தங்கி விடலாம் என்று கூட எண்ணுகிறேன். இன்று எனது குடும்பத்தை காண எனது நாட்டுக்கு செல்கிறேன். என் வாழ்நாளில் இந்த ஊரையும் இங்கு நான் பெற்ற படிப்பினைகளையும் மறக்க இயலாது. இந்த வாய்ப்புகளை அளித்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.’ என்கிறார் ஜைனப்.
ஹஜ்ஜுக்கு பல லட்சங்களை செலவு செய்து வருபவர்களின் சந்தோஷ பகிர்வுகளை வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவு ஒவ்வொரு வருடமும் பல நாட்டவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
அதே சமயம் தனது வாழ்வாதாரமாண பசுக்களை விற்று விட்டு ஹஜ் செய்யுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் பூரணமாகி எந்த கடன்களும இல்லாத செல்வந்தர்களையே வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் செய்யுமாறு பணிக்கிறது இஸ்லாம்.
இந்த மூதாட்டி மக்காவையும மதினாவையும் பார்க்க வேண்டும்: தனது வாழ்நாளில் காஃபாவிலும் தொழுது விட வேண்டும் என்ற அதீத ஆசையினால் இன்று ஹஜ்ஜை நிறைவு செய்துள்ளார். இவரது ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொள்வானாக!
ஆனால் முழுமையான வசதிகள் இருந்தும் உடல் ஆரோக்கியம் இருந்தும் இப்படி ஒரு கடமை இருப்பதை அலட்சியப்படுத்திக் கொண்டு நம்மில் பல செல்வந்தர்கள் தங்கள் காலங்களை வீணிலே கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு அனுபவம், உலக முஸ்லிம்களோடு பழகும் பாக்கியம் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் கிடைக்காது. ஒரு முறை ஹஜ் செய்து விட்டால் அவரது வாழ்வே முற்றிலுமாக மாறி விடுவதை நான் கண் கூடாக பார்த்துள்ளேன். எனவே வசதி படைத்த செல்வந்தர்கள் தங்களுக்கு உள்ள கடமையை உணர்ந்து வரும் காலங்களிலாவது ஹஜ்ஜு செய்வதற்கு உறுதி மொழி எடுப்பார்களாக!
தகவல உதவி: சவுதி கெஜட்.