மறைக்கப்பட்ட வரலாறு –
சுதந்திரப் போராட்டத் தியாகி
“அஸ்பாக்குல்லாஹ் கான்!
பகத் சிங் போலவே தூக்கு மேடை ஏரிய மாவீரன்!!
எத்துணை துயரங்களுக்கிடையே நமக்கு இந்த சுதந்திரம் கிடைத்தது என்பதையும், இந்து – முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றி நிற்பதாகவும் இருக்கிறது. இந்த தகவல் எல்லாம் பகத் சிங்க் பற்றிய புத்தகங்கள் படிக்கும் போது உள்ள குறிப்புகள் மற்றும் அவருடைய தொகுப்புகளின் அடிப்படையில் எழுதியது. யாரும் தமிழில் அஸ்பாக்குல்லாஹ் கான் பற்றி எழுதவில்லை என்று நினைக்கிறன் அதுவே என்னை எழுத தூண்டியது
முன்பு இன்று ஒரு தகவலில் சந்திரசேகர் அசாத் அவர்களை பற்றியும் தகவல் பதிவு செய்தோம் இவர்கள் அனைவரும் நம் நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்று தூக்கில் ஏறிய மாவீரர்கள் இவர்களை நாம் நினவு கூற வேண்டும் என்பதே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த ஹிந்து மற்றும் முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது
வருத்தத்திற்குரியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தேசத்ததின் மூலை முடுக்களில் எல்லாம் வேரூன்றி இருந்த வெள்ளை சாம்ராஜ்ஜியத்தை விரட்டியடிக்க தங்கள் இன்னுயிரைத் தந்து தியாகங்கள் புரிந்த, பல ஹிந்து இஸ்லாமியத் தியாகிகளின் வரலாற்றை இளைய தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.
சில உயர் சாதி போராட்டகார்களை மட்டும் நாம் படித்து இருக்கிறோம். இந்திய சுதந்திரம் என்றாலே ‘மகாத்மா காந்தி’ மட்டும் தான் என்கிற மாயை மாற்ற முடியாததாகி விட்டது. காந்தி மகானுடைய அளவிலா முயற்சிகளும், யுக்திகளும் மறுப்பதற்கில்லை என்றாலும் கூட, சுதந்திர வேட்கையின் சாரங்களில் எல்லாம் இலட்சோப இலட்ச இஸ்லாமியர்களும் இரத்தம் சிந்தி உள்ளனர் என்பது இன்னும் மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது.
இந்த வரிசையில் சுதந்திரத்திற்காக போராடி தன்னுயிரை ஈந்தவர், இளம் தியாகி அஸ்பாக்குல்லாஹ் கான் (Ashfaqullah Khan). இந்தப் பெயர் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?? இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாற்றுப் பக்கங்களில், நடுநிலை ஒளி பாய்ச்சும் போது, இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்த தியாகியின் வரலாற்றுச் சுவடுகளின் சிறு பகுதி இதோ….
19 டிசம்பர் 1927 அன்று…. உத்திரப் பிரதேச மாநிலம், பைசாபாத் சிறைச் சாலை.. கடும் குளிர் காற்றையும் தாண்டி அதிகாலை நான்கு மணிக்கெலாம் பரபரப்பாக காணப்படுகிறது. ஆங்கிலேய சிறைச் சாலை அதிகாரிகள், அந்த 27 வயதே நிரம்பிய இளம் சிங்கத்தை தூக்கு மேடை நோக்கி கொண்டு செல்கிறார்கள். நிமிர்ந்த நடையுடன், கம்பீரமாக, புன்னகை தவழ தூக்குக் கயிறை முத்தமிட்டவாறு கடைசி ஆசை ஒன்று அவரால் கர்ஜிக்கப்படுகிறது.
“இறைவன் நாடினால், நான் பைசாபாத் சிறையிலிருந்து சுவர்க்கம் செல்கிறேன். விரைவில் நம்மை அடிமையாய் ஆட்டிப் படைக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்திய கொடுங்கோல் நோய் ஒழியட்டும். ஒருவேளை மீண்டும் இந்த பூமியில் பிறக்கும் வாய்ப்பினை இறைவன் எனக்கு தந்தால், அது என் தாய் தேசமாகவே இருக்கட்டும். அப்பொழுதும் இந்திய மண்ணுக்காகவே உயிர் தியாகம் செய்யும் வாய்ப்பையே விரும்புகிறேன். இறைவன் மிகப் பெரியவன்ஸ” என்று முடிப்பதற்குள் தூக்குக் கயிறு குரல் வலையை கூறு போடுகிறது.
இதே நாளில், இதே நேரத்தில், இதே குற்றத்திற்காக, உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் சிறைச் சாலையில் அஸ்பாக்குல்லாஹ் கானின் இணை பிரியா நண்பன் ‘ராம் பிரசாத் பிஸ்மலும்’ தூக்கிலிடப்படுகிறார். சுதந்திர இந்தியாவுக்காக, தங்கள் வாழ்விலும் ஒன்றாகவே வீர நடை போட்டு வாழ்ந்த, இந்த இளம் சிங்கங்கள், இறப்பிலும் கூட ஒன்றாகவே கை கோர்த்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து அஸ்பாக்குல்லாஹ் கானின் நண்பர்கள் ரோசன் லால் அலகாபாத் சிறையிலும், ராஜேந்திர லகிரி இரண்டு நாள் முன்னதாக, கோண்டு சிறையிலும் தூக்கிலிடப்பட்டார்கள். ஆங்கிலேய அரசின் இந்த அராஜக தண்டனையை எதிர்த்து நாடெங்கிலும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடித்தது. இந்த வழக்கில் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, ஸ்ரீ பிரகாசா, ஆச்சாரியா நரேந்திர தேவ் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் குழு இவர்களின் விடுதலைக்காக போராடியது குறிப்பிடத்தக்கது.
அஸ்பாக்குல்லாஹ் கான் உத்திரப் பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் மாவாட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 22 அக்டோபர், 1900 அன்று சபியுர் ரஹ்மான், மெஹருன்னிசா ஆகியோர்களுக்கு இளைய மகனாக பிறந்தார். இளம் வயதிலேயே சுதந்திர தாகத்துடன் வளந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய இணை பிரியா உயிர் நண்பன் ராம் பிரசாத் பிஸ்மல் (Ramparsad Bismil) அவர்களுடன் இணைந்து சுதந்திர இந்தியா குறித்த கனவுகளை உயிரூட்ட நண்பர்களை திரட்டினார்.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், தங்கள் பகுதியில் வெற்றியடைய நண்பர்களுடன் இணைந்து போராடினார். ஆனால் இந்த அறப்போரை காந்தியடிகள் திடீரென பிப்ரவரி 1922 ல் கை விட்டதால் மன வேதனையடைந்தார். ஆங்கிலேயர்களை விரட்ட காந்தியடிகளின் அறப்போர் மட்டுமே தீர்வாகாது. “மயிலே மயிலே என்றால் இறகு போடாது; நாம் தாம் பிடுங்க வேண்டும்” என்று உணர்ந்தவராக ஆயுதம் தாங்கிய புரட்சிக் குழுவில் தன நண்பர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டார்.
இந்த புரட்சிக் குழுவின் தலைமையிடமாக வாரணாசி இருந்தது. மேலும் தங்கள் பகுதியில் ‘Hindustan Republican Association’ என்ற பெயரில் ஒரு புரட்சி அமைப்பினையும் நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார். இந்த ஆயுதம் தாங்கிப் போராட புறப்பட்டிருந்த புதிய அமைப்பினரால் 1925 ஆம் ஆண்டு கல்கத்தாவிலும், லாகூரிலும் ‘Krantikari’ என்கிற கொள்கை விளக்க கையேடு வெளியிடப்பட்டிருந்தது. இது ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நெஞ்சங்களில் பயத்தை ஏற்படுத்தியது. கையேடுகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் உண்மையாக நடந்து விடுமோ? என்று வெள்ளையர்களின் வயிற்றில் புளியை கரைத்தது.
ஏனெனில் இந்த கையேட்டில் பொதிந்திருந்த ஆயுதம் தாங்கிய புரட்சிக் குழுவினரின் நெருப்பை கக்கும் வாசகங்களும், வெள்ளையர்களை விரட்டி அடித்து, சுதந்திர இந்தியாவை மீட்டெடுக்கும் சூளுரைகளும், அதற்காக வகுக்கப்பட்ட நோக்கங்களும் ஆங்கிலேயர்களை அச்சத்தில் ஆழ்த்தாமல் என்ன செய்யும்?? ஆம்ஸ அதில் எழுதப்பட்டிருந்த வீரியமிக்க வாசகங்கள் அனைத்தும் அஸ்பாக்குல்லாஹ் கான் மற்றும் தோழர் ராம் பிரசாத் பிஸ்மல் ஆகியோருடையது அல்லவாஸ இவர்கள் இருவருமே உருது மொழியிலும், ஹிந்தி மொழியிலும் சுதந்திர வேட்கையுள்ள கவிதைகளை எழுதும் புரட்சிக் கவிகளாகவும் திகழ்ந்தனர்.
இந்திய தேசத்தில் அசைக்க முடியாத ஆங்கில சாம்ராஜ்ஜியத்திற்கு முழு முதற்காரணமாக, அவர்களின் பண பலமும், படை பலமும், இராணுவமும், நவீன போர்க் கருவிகளும் பக்க பலாமாக துணை நின்று கொண்டிருந்தது. அவர்களை வேரோடு சாய்க்க, அதற்கு ஈடாக சிறிதளவேனும் ‘பொருளாதாரம் தேவை’ என்பதனை அஸ்பாக்குல்லாஹ் கான் மற்றும் அவரின் தோழர்கள் கருதினர்.
இதற்காக நடந்த கலந்தாய்வு சந்திப்பு 8 ஆகஸ்டு 1925 ல் இரகசியமாக நடைபெற்றது. இதில் காசி, கான்பூர், லக்னோ, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புரட்சிக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் இறுதி தீர்மானமாக, சுதந்திரத்திற்காக போராடுவதற்கு தேவையான பொருளாதாரத்தை திரட்ட, இரயிலில் வரும் ஆங்கிலேய அரசுக் கருவூலத்தை கொள்ளையடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
அதன் படி, 9 ஆகஸ்டு 1925 அன்று, சாஜஹான்பூரில் இருந்து லாகூர் செல்லும் இரயிலை காகோரி ( Kakori ) என்னுமிடத்தில் நிறுத்தி, அதில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேய அரசின் கருவூலம், ராம் பிரசாத் பிஸ்மல் தலைமையில் முழுவதுமாக கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மூளையாக செயல்பட்ட அஸ்பாக்குல்லாஹ் கான், ரோசன் லால், ரபி அஹமது கின்வால், ராஜேந்திர லகிரி போன்றோரை உடனடியாக கைது செய்ய வெள்ளை அரசாங்கம் காவல் படையை முடுக்கி விட்டது.
இதனால் சிறிது காலம் காசியிலும், பனாரசிலும், டெல்லியிலும் தலைமறைவாக இருந்து நண்பர்கள் மூலம் தங்கள் திட்டங்களை படிப் படியாக செயல்படுத்தி வந்தனர். மேலும் ஒரு பக்கம் அஸ்பாக்குல்லாஹ் கானும், மறு பக்கம் ராம் பிரசாத் பிஸ்மலும் தொடர்ந்து வெள்ளை அரசுக்கு எதிராக கவிதை புனைந்து வெளியிட்டு வந்தனர். அஸ்பாக்குல்லாஹ் கான் ‘ஹசரத்’ என்கிற புனைப் பெயரில் மறைமுகமாக கவிதைகள் எழுதினார். இதனால் கடும் எரிச்சலடைந்த ஆங்கிலேய அதிகாரிகள், இவர்களை விரைந்து கைது செய்ய பல்வேறு திட்டம் வகுத்தனர்.
பத்து மாத தலை மறைவுக்கு பின் கைது செய்யப்பட்ட பைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். மிக விரைவாக அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசு கருவூலம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு மட்டுமின்றி மீது கொலை குற்றமும் வேண்டுமென்றே புனையப்பட்டது. ஏறக்குறைய 18 மாதங்கள் நடை பெற்ற இந்த வழக்கில் அஸ்பாக்குல்லாஹ் கானுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது. இவரின் தாய் தேசம் மீது கொண்ட காதல், நெஞ்சுரம், தெளிவான நோக்கு, விடுதலை வேட்கை வெள்ளையர்களை மிரள வைத்தது.
ஆரிய சமாஜத்தை சேர்ந்த இந்துவாகிய ராம் பிரசாத் பிஸ்மலும், இஸ்லாம் சமயத்தை சேர்ந்த அஸ்பாக்குல்லாஹ் கானும், நட்புக்கு இலக்கணமாக பால்ய வயதிலிருந்தே நண்பர்களாக பழகி, மத பேதங்களின்றி விடுதலைக்காக போராடி, மிகச் சிறு வயதிலேயே தூக்குக் கயிறை முத்தமிட்ட வரலாற்றுச் சுவடுகள் நம்மை கண் கலங்க வைப்பதாகவும், எத்துணை துயரங்களுக்கிடையே நமக்கு இந்த சுதந்திரம் கிடைத்தது என்பதையும், இந்து – முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றி நிற்பதாகவும் இருக்கிறது.
( தி இந்து தமிழ் நாளிதழில் இவரைப்பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது!)