மரணம் வரை ஏமாறும் பரிதாபம்!
இன்று மக்களின் சகல விதமான சீர்கேடுகளுக்கும் மார்க்கப்பணியை சில மார்க்க அறிஞர்கள் வருமானத்திற்குரிய வழியாக ஆக்கிக்கொண்டதே.
எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒரு போதும் நேர்வழியை – குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது. கோணல் வழிகளை மட்டுமே நேர்வழியாகப் போதிக்கவே முடியும்.
மண்ணறையை சந்திக்கும்வரை மனிதனுக்கிருக்கும் பொருளாசை, அந்தப் பொருளை அடைவதற்காக எல்லா பாதகங்களையும் செய்ய வைத்து விடுகிறது.
பொருளாசையின் விபரீதங்கள்:
பொருளாசை காரணமாக வியாபாரிகள் கலப்படங்கள் செய்கிறார்கள். டாக்டர்களை எடுத்துக்கொள்ளுங்கள் பொருளாசையால் மனித உயிருடன் விளையாடுகிறார்கள். சாதாரண சளி காய்ச்சலுக்குச் சென்றாலும் பயமுறுத்தி பல சோதனைகளை செய்து காசை பிடுங்கி விடுவார்கள். பெரும்பாலான சுகப்பிரசவங்கள் இந்த டாக்டர்களினால் அறுவை சிகிச்சையாக ஆக்கப்படுகின்றன. மருந்தினால் குணப்படுத்த முடிந்த நோய்களும் இன்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன. எந்தத் துறையை தொழிலாக கொண்டர்வகளும் பொருளாசை காரணமாக தில்லுமுல்லுகள் செய்யாமலில்லை.
புரோகிதரர்களின் பேராசை:
இப்படிப்பட்ட நிலையில் மார்க்கப் பணியை தங்களின் பிழைப்பாகக் கொண்டவர்கள் அதில் தில்லுமுல்லுகள் பித்தலாட்டங்கள் செய்யமாட்டார்கள் என்று எண்ணுவது நம்புவது அதிசயமாகும். இந்த மதவாதிகளிடம் காணப்படும் தில்லுமுல்லுகள் பொய்பித்தலாட்டங்கள் ஏமாற்று வித்தைகள் செய்யும் இவர்களை மிஞ்ச முடியாது.
உலகியல் துறைகளில் காணப்படும் ஏமாற்றுப் பித்தலாட்டங்களை மக்கள் எளிதில் இணங்காண முடியும். அதனால் மக்கள் அவற்றில் எச்சரிக்கயாக இருக்க பெரிதும் வாய்ப்புள்ளது. மதவாதிகள் செய்யும் ஏமாற்று பித்தலாட்டங்களை மக்கள் எளிதாய் இனங்காண முடிவதில்லை. அதனால் மக்கள் அதிலிருந்து தப்பவும் வழியில்லை. அனைத்து மதப்புரோகிதரர்களும் பேராசை பித்து பிடித்து அழைகிறார்கள். இந்த உண்மையை இன்று மடாலயங்களிலும், மிஷனரிகளிலும், தர்காக்களிலும் இந்த புரோகிதர்கள் செய்யும் பித்தலாட்டங்களின் மூலம் அவர்களின் உண்மையான சொரூபத்தை மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
காலமெல்லாம் ஏமாறுவதில்லை:
ஒரு டாக்டர் வைத்தியம் செய்கிறார். சுகம் கிடைக்கவில்லை. இரண்டாம் மூன்றாம் முறையும் வைத்தியம் செய்தும் சுகம் கிடைக்கவில்லை; இப்போது அந்த நோயாளி வேறு திறமை மிக்க டாக்டரைப் பார்த்து போய்விடுவார். ஒரு வக்கீல், ஒரு ஆடிட்டர் போன்றோரின் உண்மை நிலையும் இதுவே.
இதுபோல் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் எத்தனை பட்டங்கள் பெற்றவராக இருந்தாலும் காலமெல்லாம் ஒருவரையே நம்பியிருக்கும் பரிதாப நிலை உலகியல் துறையை பொருத்த மட்டிலும் இல்லவே இல்லை.
இன்னொரு அரிய வாய்ப்பும் உலகியல் துறைகளுக்கு உண்டு. படித்து பட்டம் பெற்றவர்கள் அனுபவ வாயிலாக நிறைந்த அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த இரண்டு வாய்ப்புகளும் மதத்துறையில் இல்லவே இல்லை. உதாரணமாக ஒரு மடாதிபதி மனிதக்கரங்களால் செதுக்கிய சிலைகளை வணங்குவதன் மூலம் மோட்சம் பெறலாம் என உபதேசிக்கிறார். அவர் உபதேசத்தை நம்பி நடப்பவர் அவர் வாழ்நாள் முழுதும் அந்த சிலைகளை வணங்கினாலும் அதன் பலனை இவ்வுலகில் பார்க்கபோவதில்லை. அதே முக்கடவுள் கொள்கையை போதிக்கும் பாதிரியாரின் போதனையை நம்பி அதில் உறுதியாக நின்று வணங்கியவரும் அதன் பலனை இவ்வுலகில் பார்க்கப்போவதில்லை.
அதே போல் தாயத்து தட்டு தர்கா சடங்குகளை போதிக்கும் முஸ்லிம் புரோகிதரை முழுமையாக நம்பி அவரின் போதனைப்படி வாழ்நாள் முழுதும் செயல்பட்டு வரும் ஒருவர் தனது மரணத்திற்கு முன்னர் அதன் பலாபலனை கண்டு கொள்ளப்போவதில்லை.
இப்படியே தக்லீதை, மத்ஹபுகளை, தரீக்காக்களை, பிரிவுகளை, அமைப்புகளை, கழகங்களை போதிக்கும் புரோகித மவ்லவிகளின் போதனைகளை அப்படியே நம்பி அவற்றின்படி தமது வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு வருபவர்கள் தங்களின் மரணத்திற்கு முன்பு அதன் பலாபலன்களை கண்டு கொள்ளப்போவதில்லை.
காலம் கடந்த ஞானம்:
உலகியல் துறைகளில் தங்களின் சொந்த அனுபவத்தில் அவர்களின் திறமையற்ற நிலையை அறிந்து எச்சரிக்கையாய் குறிப்பிட்ட டாக்டரிடமிருந்து, வக்கீலிடமிருந்து, எஞ்ஜினியர்களிடமிருந்து விடுபட்டு சரியானவர்களை தேர்வு செய்வதுபோல் மதத்துறையில் பல புரோகிதரர்களின் திறமையற்ற நிலையை அறிந்து அவர்களிடமிருந்து விடுபட முடியவில்லை. நாளை மறுமையில்தான் தாங்கள் தகுதியற்ற இந்த புரோகிதரர்களை நம்பி மோசம் போனதை அறிய முடியும். நரகில் வீழ்ந்த பின்னர் அவர்களைத் திட்டியும் சபித்தும் இப்படி கூறுவார்கள்.
33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்”
33:68. “எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்றும் அவர்கள் கூறுவார்கள்).
கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று குர்ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க ஹதீஸ்கள் இதுபற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.
“குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ முற்படாதீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)
“எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)
மார்க்க பிரச்சாரத்தை பிழைப்பாகக் கொண்டவர்கள் ஒருபோதும் சத்தியத்தை போதிக்க மாட்டார்கள். மார்க்கப் பணிக்கு கூலி வாங்கக்கூடாது என்பதை குர்ஆன் வசனங்கள் தெளிவாக கூறிக்கொண்டிருக்க, அவற்றை புறக்கணித்து விட்டு மார்க்கத்தை பிழைப்பாக்கி கொண்டிருக்கிறார்கள்.
பகலில் பசுமாடு தெரியாத குருடனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா? என்று சொல்வதற்கொப்ப கூலிக்கு பிரச்சாரம் புரியும் மவ்லவிகள் ஒரு போதும் மக்களுக்கு நேர்வழியைக் காட்ட மாட்டார்கள். அவர்கள் மார்க்கத்தில் செய்த கலப்படத்தை வழிகேட்டையே நேர்வழியாக எடுத்துக் காட்டி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவார்கள்.
எனவே முஸ்லிம் சமுதாயத்திற்கு மாபெரும் கேட்டை விளைவிப்பவர்களே இந்த மவ்லவிகள். இவர்களிடமிருந்து முஸ்லிம் சமுதாயம் விடுபட்டு ஆரம்ப காலங்களில் எப்படி குர்ஆன், ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக விளங்கிச் செயல்பட்டார்களோ அதுபோல் செயல்பட முன்வர வேண்டும். இந்தப் மவ்லவிகளின் வார்த்தைகளில் மயங்கி அவர்கள் பின்னால் செல்வதை கைவிட்டு குர்ஆன் ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை நேரடியாக முனைப்புடன் பார்த்து சிந்திக்க முன்வரவேண்டும். முஸ்லிம்கள் புரோகிதத்தின் பிடியிலிருந்து விடுபட துஆ செய்வோம்.
-K.M.H
source: http://www.readislam.net/portal/archives/5863