பேய்களிடமிருந்து மனதை விடுவியுங்கள்!
நித்திலா பாஸ்கரன்
அது 2001-ம் ஆண்டு. ஆகஸ்ட் 6-ம் தேதி. பொழுது புலரும் நேரம். கடலோரத்திலிருக்கும் சிறிய கிராமமான ஏர்வாடியில் அந்தத் துயரச் சம்பவம் நடந்தேறியது.
தர்கா ஒன்றைச் சார்ந்த மனநோய்க் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுவந்த 28 மனநோயாளிகள் தீ விபத்தொன்றில் கருகி மடிந்தார்கள். அவர்களின் கை, கால்கள் கட்டப்பட்டு சங்கிலிகளால் தூண்களுடன் பிணைக்கப்பட்டிருந்ததால் தீயிடமிருந்து தப்பியோட முடியாமல் கருகி மாண்டார்கள்.
13 ஆண்டுகள் கழித்தும், நீதி கிடைக்கும் என்ற அறிகுறி எதுவுமின்றி இந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சமூகத்தில் ஒரு பகுதியாக, வெவ்வேறு குடும்பங்களில் ஒரு அங்கமாக இருந்த இந்த 28 பேர் வாழ்க்கை எப்படி இந்த கோர நிகழ்வைச் சந்திக்க வேண்டிவந்தது?
இந்தக் கேள்விக்குப் பதில் அறியும் முயற்சியில் நான் இறங்கியபோது, இந்தியாவில் மனநல மருத்துவ வசதிகள் எந்த நிலையில் இருக்கின்றன என்றும் எவ்வாறு அவற்றைச் சமூகச் சூழல் பாதிக்கின்றன என்றும் அறிய முடிந்தது.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளில், 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வசதி கிடைக்கின்றது. மீதிப் பேர், அதாவது, பெருவாரியான மனநோயாளிகள், தங்கள் வீட்டிலேயே அவர்களின் குடும்பத்தாரால் பராமரிக்கப்படுகின்றனர். கிராமப்புற மக்களின் சமூக, பொருளாதார நிலைமையையும் மனநல மருத்துவர்கள் எண்ணிக்கையில் வெகு குறைவாகவே இருக்கிறார்கள் என்பதையும் நாம் மனதில் கொண்டால், குடும்பத்தினரின் அனுசரணை எவ்வளவு முக்கியம் என்பது நமக்குப் புரியும். மனநல மருத்துவத்தின் கவனிப்பும் மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதால், எண்ணற்ற மனநோயாளிகள் எவ்விதப் பேணலும் இன்றி வாடுகிறார்கள்.
மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள இப்போது மக்களுக்குக் கிடைப்பதைவிட, நல்ல மருத்துவக் கவனிப்பும், அரசு ஆதரவும் தேவை என்றாலும் நம் நாட்டின் சமூக, பொருளாதார நிலைமையையும் பெருகிவரும் மக்கள்தொகையையும் கருத்தில்கொண்டால், மனநோயாளிகள் பராமரிப்பில் குடும்பம் இன்றியமையாத பங்காற்றுகிறது.
மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லிசூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரிய நம்பிக்கைகள் பல நிலவுகின்றன.
வேரூன்றியிருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் மக்கள் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள், பேயோட்டிகள் இவர்களின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள்.
உளவியல் நிறுவனமொன்றில் 198 மனநோயாளிகளிடம் செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஒவ்வொருவரும் ஏறக்குறைய 15 முறை சாமியாரிடம் சென்றிருக்கின்றனர். மதம் சார்ந்தவர்களின் உதவியை வேறு வழியின்றி அதிகம் நாடுவது ஏழைகளே என்ற விவரமும் இந்த ஆய்வில் தெரியவந்தது.
மனநல மருத்துவகங்கள் நிலையைப் பற்றி மதிப்பாய்வு செய்த ‘தேசிய மனித உரிமை ஆணையம்’தனது அறிக்கையில் இவ்வாறு கூறுகிறது: “இங்குள்ளவை மருத்துவமனை என்று கூறிக்கொள்ளக்கூட அருகதையற்ற வகைகள். அவர்கள் தங்கியிருக்கும் இடம் சீரழிந்த நிலையில் இருக்கிறது. மனநோயாளிகள் மனிதாபிமானத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதில்லை. மனநல மருத்துவம் எவ்வளவோ முன்னேறிவிட்டபோதிலும், நோயாளிகள் கைதிகள் போலவே வாழ்கின்றனர்.”
நம் நாட்டின் சுகாதார நிதிநிலை அறிக்கையில் 0.006 சதவீதம்தான் மனநலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. மனநல மருத்துவ நிலையங்களின் செலவுபற்றிய புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஒரு லட்சம் மக்களுக்கு 0.036 சதவீதம் என்ற அளவில்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் உயர்கல்வி பெற்ற குடும்பத்தினர், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை இவற்றைக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் என்று தெரியவந்தது. கல்வியறிவற்றவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பேய், பிசாசு இவற்றைக் காரணமாகக் காட்டுகிறார்கள். மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.
மனநோயாளிகள் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஆண்டாண்டு காலமாக நம்முள் பதிந்துள்ள மூட நம்பிக்கைகள், அறியாமை இவையே காரணம். ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் கண்டுபிடித்துத் தரமான சிகிச்சை அளிப்பதைத் தடுப்பதும் இவையே. மனநோய் ஓர் அவமானச் சின்னமாகக் கருதப்படுவதால், பல தருணங்களில் மனநோயாளிகள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றனர். அதிலும் பெண் நோயாளிகள் இருந்தால் குடும்பங்கள் அவமானப்பட்டு அவர்களை மறைத்துவைக்கிறார்கள்.
மனநோய் சிகிச்சையில் முக்கியமான விஷயம்: சில மாதங்கள் கழித்தே பலனை அறிய முடியும் என்பதால், மனநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து தொடர்ந்து வெகுநாட்களுக்கு, நாள் தவறாமல் உட்கொள்ளக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மிக வேகமாக பலனை எதிர்பார்க்கும் பலர், பாதியிலேயே சிகிச்சையைக் கைவிடுகின்றனர்.
குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயிலிருந்து மீட்டெடுக்க முடியும். நாம் எவ்வளவு பொறுமையோடு செயல்படுகிறோம் என்பதில்தான் இந்த அக்கறை இருக்கிறது!
தமிழில்: தியடோர் பாஸ்கரன்
நித்திலா பாஸ்கரன் – தொடர்புக்கு: nithilla.baskaran@gmail.com
source: http://tamil.thehindu.com/general/