இந்த மண்ணில் கால் பதித்ததிலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன்!
இந்த ஆண்டு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஹோலன்ட் நாட்டைச் சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
இவர் நபிகள் நாயகத்தை வசைபாடும் விதமாகத் திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிற்கும் கோபத்திரற்கும் உள்ளானவர்.
முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்ட பிறகு அவர் சிந்திக்கத் தொடங்கினார்.
முஹம்மது நபியைப் பார்க்காத நிலையிலும் அவர் இறைவனடி சேர்ந்து 1400 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவரின் மீது அளவற்ற அன்போடு இன்னமும் முஸ்லிம் சமுதாயம் உள்ளதே அஃது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடி நபிகள் நாயகத்தைப் பற்றிப் படிக்கத் தொடங்கினார்.
படித்து முடித்த பிறகு அவர் செய்தத் தவற்றை உணர்ந்துத் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார் அவர் மக்கமா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பின் வருமாறு கூறினார்;
”இந்த மண்ணில் கால் பதித்த திலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன். அழுதுப் புலம்பி எனது இறைவனிடம் நான் செய்தத் தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன் நபிகள் நாயகத்தை வசைபாடித் திரைபடம் எடுத்த குற்றத்திற்கு மன்னிப்புக் கோரியே நான் இங்கு வந்துள்ளேன்.”
இப்படிக் கூறிய அவர் எந்த நபியை வசைபாடிப் படம் எடுத்தாரோ அந்த நபியின் மஸ்ஜிதிலும் அமர்ந்துத் தனது தவறை நினைத்து வருந்தித் தேம்பி தேம்பி அழுததாக அல் உகாள் பத்திரைகையின் செய்திக் கூறுகிறது.
இந்த மார்கத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்கத் தொடங்கும் போது இந்த மார்க்கம் தான் அவர்களுக்குப் புகலிடமாக மாறுகிறது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டாக ஹோலன்ட் நாட்டைச் சார்ந்த அர்னோல்ட் திகழ்கிறார்!
A FLASH BACK….
நபியவர்களை அவமதிக்கும் திரைப்படத்தை தயாரித்த நெதர்லாந்து அரசியல்வாதி இஸ்லாத்தை தழுவினார்
”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அவனது தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன்”
இவ்வாறு புனித கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர் வேறு யாருமல்லஸ.
முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக நேசிக்கும் இறைதூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அவமதிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பித்னா எனும் திரைப்படத்தை தயாரிப்பதில் பெரும் பங்கு வகித்த நெதர்லாந்தின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான ஆர்னோட் வான் டூர்ன் என்பவர்தான்.
கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி திருக்கலிமாவை மொழிந்து புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இவர் கடந்த வாரம் மஸ்ஜிதுந் நபவிக்கு விஜயம் செய்த போதே தான் செய்த பாவத்திற்காக ரசூலுல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினார்.
மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்துக்கு விஜயம் செய்த அவர் ”யாரசூலுல்லாஹ்ஸ திரைப்படமெடுத்து உங்களைக் கேவலப்படுத்த முனைந்தமைக்காக என்னை மன்னித்துவிடுங்கள். எனது பாவக் கறையைப் போக்க உங்கள் அழகிய வாழ்க்கை நெறியை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் திரைப்படத்தை தயாரிக்கப் போகின்றேன் ” என்று மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டதாக சவூதி கெஸட் உள்ளிட்ட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யார் இந்த ஆர்னோட் வான் டூர்ன்?
நெதர்லாந்து நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அந்நாட்டின் தீவிர வலதுசாரிக் கட்சியான பீ.வி.வி. கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவராவார். நமது நாட்டில் பொது பல சேனா எவ்வாறு முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்துவதை தனது பிரதான வேலைத்திட்டமாகக் கொண்டுள்ளதோ அதேபோன்றே நெதர்லாந்தில் இவரது கட்சியும் இஸ்லாத்தை தனது பிரதான எதிரியாகக் கருதி பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தான் இக் கட்சியின் முக்கிய உறுப்பினரான கீர்ட் வில்டர்ஸ் சில வருடங்களுக்கு முன்னர் ரசூலுல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் பித்னா எனும் திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார். இத் திரைப்படம் மேற்குலகில் கடும் சர்ச்சையைக் கிளப்பியதுடன் முஸ்லிம்களின் பலத்த எதிர்ப்பையும் சம்பாதித்தது. இத் திரைப்படத் தயாரிப்புக் குழுவில் ஆர்னோட் வான் டூர்னும் முக்கிய அங்கத்தவராக விளங்கினார்.
இருப்பினும் குறித்த கட்சியின் கடும் போக்கு கொள்கையில் அதிருப்தி கொண்ட இவர் அதிலிருந்து விலகி ஹேக் சுதந்திரக் கட்சியை தாபித்தார். அதன் தலைவராகவும் இவர் விளங்குகிறார். அத்துடன் ஹேக் நகர கவுன்சிலின் உறுப்பினராகவும் குடும்ப மற்றும் இளைஞர் வழிகாட்டல் ஆலோசகராகவும் கடமையாற்றுகிறார். 46 வயதான இவர் மூன்று பிள்ளைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இஸ்லாத்தை தழுவியது எப்படி?
பித்னா எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டதைத் தொடர்ந்து உலகளவில் மேற்கிளம்பிய எதிர்ப்புகள் ஆர்னோட் வான் டூர்னை சிந்திக்க வைத்தன. முஹம்மத் என்ற மனிதரைப் பற்றி படமெடுத்தால் முஸ்லிம்கள் ஏன் இப்படிக் கொதித்தெழ வேண்டும்? முஹம்மத் அப்படி என்னதான் சாதித்துவிட்டார்? எனும் கேள்விகள் ஆர்னோடுக்குள் பிறந்தன. இந்தக் கேள்விகளுக்கு விடைகளைக் கண்டபோதுதான் அவர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்தார்.
சுமார் ஒரு வருடங்களுக்கும் மேலாக ஆர்னோட் குர்ஆன், ஹதீஸ் உட்பட இஸ்லாம் பற்றிய பல்வேறு வெளியீடுகளையும் தொடர்ச்சியாக ஆராய்ந்துவந்தார். அத்துடன் முஸ்லிம்களைச் சந்தித்து இஸ்லாம் பற்றிய தனது சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவினைப் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தான் புனித இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்தார். தனது டுவிட்டர் கணக்கு மூலமே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அறபு மொழியில் அச்சிடப்பட்ட புனித கலிமா வாசகங்களை அவர் தனது டுவிட்டர் கணக்கு மூலம் பகிர்ந்து கொண்டார்.
ஆர்னோட் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமை பற்றி இப்படிக் கூறுகிறார். ” நான் ஒருபோதும் அடுத்தவர்களின் கதையின் பின்னால் செல்வதில்லை. எதையும் ஆழ அறியக் கற்ற பின்னரே குறித்த விடயம் பற்றி முடிவுக்கு வருவேன். இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அப்படித்தான்.
இஸ்லாம் பற்றி அடுத்தவர்கள் கூறியவற்றை நான் கேட்கவில்லை. நானாகவே தேடிப் படித்தேன். ஹேக் நகர கவுன்சிலில் என்னுடன் பணி புரியும் சகோதரர் அபூ கௌலானி எனக்கு இது விடயத்தில் உதவியாகவிருந்தார். ஹேக் நகரிலுள்ள அல் யகீன் பள்ளிவாசலுடன் அவர் என்னை தொடர்புபடுத்திவிட்டார். அப் பள்ளிவாசலே எனக்கு மேலதிக வழிகாட்டல்களை வழங்கியது”
இதேவேளை ஆர்னோட் இஸ்லாத்தை தழுவியமை தொடர்பில் அல் யகீன் பள்ளிவாசலின் உத்தியோகபூர்வ இணையத்தில் ”சகோதரர் ஆர்னோட் முஸ்லிம் என்ற வகையில் அவரது புதியதும் சிறந்ததுமான வாழ்க்கைக்காக நாம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்ப மறுத்த நெதர்லாந்துவாசிகள்
ஆர்னோட் தான் இஸ்லாத்தை ஏற்றுவிட்டதாக அறிவித்தபோதிலும் அதனை அவரது ஆதரவாளர்களோ நண்பர்களோ நம்பவில்லை. இதனை ஒரு நகைச்சுவையாகவே அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இருப்பினும் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டார்.
தான் பணிபுரியும் ஹேக் நகர கவுன்சிலின் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதிய ஆர்னோட், தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கடமை நேரத்தில் தொழுகையில் ஈடுபட அனுமதி வழங்குமாறும் கோரி கடிதம் ஒன்றை அனுப்பினார். இக் கடிதம் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை மேலும் உறுதிப்படுத்தும் ஆவணமாக அமைந்தது.
சவூதி விஜயம்
ஆர்னோட் பெப்ரவரி மாதத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதையடுத்து இம் மாத முற்பகுதியில் சவூதிக்கு விஜயம் செய்து உம்றா கடமையை நிறைவேற்றினார். அத்துடன் மஸ்ஜிதுந் நபவியின் தலைமை இமாம்களான ஷெய்க் அலி அல் ஹுதைபி மற்றும் ஷெய்க் சலாஹ் அல் பதர் ஆகியோரைச் சந்தித்து தனது வாழ்வுக்கு வளமூட்டும் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொண்டார்.
ஆர்னோட் என்ன சொல்கிறார்?
தான் இஸ்லாத்தைத் தழுவியமை தொடர்பில் ஆர்னோட் அல்ஜஸீரா உட்பட பல ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:
“இது ஒரு பெரிய முடிவாகும், இந்த முடிவு இலகுவாக எட்டப்படவில்லை. கடந்த ஒரு வருட காலமாக நான் குர்ஆன், ஹதீஸ், சுன்னா மற்றும் ஏனைய விடயங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தேன் என்பதை எனக்கு நெருக்கமானவர்கள் அறிவார்கள்.
நான் அங்கம் வகித்த கட்சியின் இஸ்லாமிய விரோத போக்கே இஸ்லாம் பற்றி ஆராய என்னைத் தூண்டியது. இஸ்லாம் பற்றி எதிர்மறையான பல விடயங்களை நான் கேட்டுள்ளேன். எனினும் என்னைப்பொறுத்த வரை அடுத்தவர்களின் கூற்றுக்களை எனது சொந்த ஆராய்ச்சி இன்றி நான் நம்புவதில்லை. எனவே நான் இஸ்லாம் பற்றிய எனது அறிவை ஆழமாக்க ஆரம்பித்தேன்.
“சில நபர்களை பொறுத்த வரை நான் ஒரு துரோகி, எனினும் அநேகமான .மனிதர்களின் கருத்துப்படி நான் மிகச் சிறந்த முடிவு ஒன்றையே எடுத்துள்ளேன். என்னுடன் நேரடி அறிமுகம் இல்லாதவர்களும் எனது சூழ்நிலையை விளங்கி எனது தெரிவை ஆதரிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
“வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு நோக்கத்தை அடிப்படையாக கொண்டது. எனினும் எனக்கு தற்போது உள்ள அறிவு அக்கால கட்டத்தில் எனக்கு இருந்திருப்பின் நிச்சயமாக நான் வேறொரு தெரிவை மேற்கொண்டிருப்பேன்”
“நான் ஏனையவர்களைப்போல் வாழ்வில் அதிக தவறுகள் செய்துள்ளேன், எனினும் இந்த தவறுகளின் ஊடாக அதிக பாடங்களையும் கற்றுள்ளேன். இந்த மாற்றத்தின் மூலம் எனது பாதையை நான் கண்டுவிட்டதாக உணர்கிறேன். இதை ஒரு புதிய ஆரம்பமாக உணர்வதோடு நான் இன்னும் இது பற்றி அதிகம் கற்க வேண்டியுள்ளது என உணர்கிறேன்”
”சில அரசாங்க நிறுவனங்களால் நான் புறக்கணிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறேன். இருப்பினும் நான் அல்லாஹ் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த இக்கட்டான தருணங்களில் எனக்கு வழிகாட்டுமாறு அல்லாஹ்விடமே வேண்டுகிறேன்.”
”நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் எனக்கு ஆதரவாக விளங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் ” என்கிறார்.
source: http://vidivelli.lk/morecontent.php?id=2250