பா.ம.க-வை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்
அ. மார்க்ஸ்
சாதி இருக்கும் வரை சாதி இயக்கம் இருந்துதான் ஆகும் என்கிறார் ராமதாஸ். 45 சாதி இயக்கங்களின் தலை வர்களைத் திரட்டித் தொகுத்த மகிழ்ச்சியில், என் உடம்பில் தெம்பு வந்துவிட்டது என்கிறார். சாதி ரீதியாகப் பிரச்சினைகளைத் தொகுத்து மத்திய – மாநில அரசுகளிடம் சமர்ப்பிப்போம் என்கிறார். ஆக, தமிழக மக்கள், மக்களின் ஒட்டு மொத்தமான பிரச்சினைகள் என்பதைக் காட்டிலும், தனித்தனிச் சாதிகளின் பிரச்சினை என்கிற அளவில்தான் இனி பேச முடியும் என்பதுதான் அவரது ‘அனைத்து சமுதாயப் பேரியக்கம்’ முன்வைக்கும் செய்தி.
தலித் மக்கள் மட்டும் தவிர்க்கப்பட்ட இந்த ‘அனைத்துச் சாதி’க் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தலித் மக்களுக்கு எதிராகக் கடுஞ்சொற்களைப் பெய்துள்ளனர். வழக்கம்போல இரண்டு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ராமதாஸின் மொழியில் சொல்வ தானால் ‘நாடகக் காதல்’. மற்றது, வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது.
முதல் பிரச்சினைக்குத் தீர்வு, திரு மணத்துக்குப் பெண்களது பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டுமாம். இரண்டாவது பிரச்சினைக்குத் தீர்வு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்தமட்டில், இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர்களின் வீதம் குறைவாக உள்ளது என்பதையும், அதிகார மட்டங்களில் நிலவும் தலித் விரோதப் போக்குகளின் விளைவாக இந்தச் சட்டத்தின் ஓட்டைகள், தலித் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன எனவும் ஆய்வுகள் நிறுவியுள்ளன.
‘இந்தச் சட்டத்தில் காணப்படும் ஓட்டைகள் தொகுக்கப்பட்டு, உரிய சட்டத் திருத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ என்கிற குரல், இன்று தேசிய அளவில் உருவாகியுள்ளது. திருமண நிகழ்வில் பெண்களுக்கு மட்டும் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பது அடிப்படைப் பாலியல் சமத்துவ அறங்களுக்கு மட்டுமின்றி, நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளுக்கும் எதி ரானது. தவிரவும் தலித் மக்களுடனான சாதி மறுப்புத் திருமணங்கள் என்பன தமிழகத்தில்தான் அகில இந்திய அளவில் குறைவாக உள்ளன.
இத்தகைய பலவீனமான கோரிக்கை களுடன் தன் பயணத்தைத் தொடங்கி யுள்ளது ராமதாஸின் அனைத்து சாதிக் கப்பல். ‘சாதி’ என்கிற அடையாளத்தின் கீழ் ஒரு அரசியலைக் கட்டமைக்கும்போது, தவிர்க்க இயலாமல் நமது தேர்தல் அரசியலில் ஒரு கூட்டணியை அமைத்து ஆதரவுத் தொகுதியைப் பெருக்கிக்கொள்ள வேண்டியதாகிறது. காலங்காலமாகத் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்ட தலித் மக்கள் சாதி அடையாளத்தில் தம்மைத் திரட்டிக்கொள்வதை யாரும் குறை சொல்ல இயலாது.
அம்பேத்கர் அவர்கள் இவ்வாறு அரசியல் இயக்கங்களைக் கட்டியபோது இடதுசாரிகளுடனும் சோஷலிஸ்ட்டுகளுடனும்தான் கூட்டணி அமைத்தார். ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’, ‘குடியரசுக் கட்சி’ என்கிற பெயர்களைத்தான் தேர்வுசெய்தார். புத்தரின் வழி நின்று ‘பகுஜன்’ என்கிற அடையாளத்தை முன்நிறுத்தினார் கன்ஷிராம். அவர் விலக்கியது பிராமணர்களையும் சத்திரியர்களையும் மட்டுமே. குர்மி, சமர் முதலான தலித் பிரிவுகளை அடிப்படையாகக்கொண்டு, இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள், சிறுபான்மை யோர் என்பதாக அந்தக் கூட்டணி அமைந்தது.
வட மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஒரு வேறுபாடு குறிப்பிடத் தக்கது… அங்கே பிராமணர்கள் கிட்டத்தட்ட 10 சதவீதம் வரை உள்ளனர். இங்கே மூன்று சதவீதத்துக்கும் குறைவு. அங்கே சத்திரியர் எண்ணிக்கையில் மட்டுமல்ல… அரசியலிலும் பலமான சக்திகள். இங்கே அப்படி ஒரு வருணமோ சாதியோ கிடையாது. தென்னகம் போல இடஒதுக்கீடு என்கிற கருத்தாக்கம் 70-களுக்கு முன்பு வரை வடக்கில் வலுப்பெற்று இருந்த தில்லை. எனவே, அரசுப் பணிகளில் தலித் மக்களைக் காட்டிலும்கூட இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் பின்தங்கி இருந்தனர்.
கன்ஷிராம் இந்த முற்படுத்தப்பட்ட சாதிகளை விலக்கி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஒற்றுமையை உருவாக்கினார். அவரது அரசியல் முழக்கங்கள் பிற்படுத்தப்பட்டோரின் பின்தங்கிய நிலையை முன்வைத்து அமைந்தன. அதே நேரத்தில் தலித் மக்கள் மத்தியில் உட்சாதி ஒற்றுமையும் வலுவானது. இதெல்லாம்கூடப் போதாது என்றுதான் முற்படுத்தப்பட்ட சாதிகளையும் இணைத்து மாயாவதி ‘சர்வஜன்’ என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அந்த வகையில், பிராமணர்கள் போன் றோரும்கூட இந்த வலுவான கூட்டணியில் தம்மை இணைத்துக்கொண்டால் பலனுண்டு என்கிற அடிப்படையில் சர்வஜன் கூட்டணியில் இணைந்தனர். எனினும், இந்தப் புதிய இணைவு வலுவானதாக இல்லாததாலும், இதனாலேயே கன்ஷிராம் அமைத்த வலுவான கூட்டணியில் சில பிளவுகள் நேர்ந்ததாலும் மாயாவதி சென்ற தேர்தலில் ஆட்சியை இழக்க நேரிட்டது.
தவிரவும் இன்று மாநில அரசியலில் ‘வளர்ச்சி’, ‘ஊழலின்மை’ முதலான கருத்தாக்கங்கள் முதன்மை பெறுவதும் கவனத்துக்குரியது. ராமதாஸின் அனைத்துச் சாதி அரசியல், இந்த வேறுபாடுகளைக் கணக்கில்கொள் ளாமல் மாயாவதியின் ‘சமூகப் பொறியியல்’ என்னும் சொல்லாடலைத் தமிழகத்தில் பயன்படுத்தப்பார்க்கிறார். இடஒதுக்கீட்டுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகத்தில், வட மாநிலங்க ளைப்போல அரசுப் பணிகளிலோ மற்ற வற்றிலோ பிற்படுத்தப்பட்டவர்கள் தலித் மக்களைக் காட்டிலும் பின்தங்கி இல்லை.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் ஆகக் கீழாக இருந்த வன்னியர் முதலான சாதியினருக்கு மிகப் பிற்படுத்தப்பட்ட நிலையை ராமதாஸின் அரசியல் ஈட்டித் தந்ததன் விளைவாக, இன்று அவர்களுக்கும் அதிகாரங்களில் உரிய இடம் கிடைக்கிறது. இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட சாதி கள் பின்தங்கியுள்ளதாகச் சொல்லி ஒரு அரசியலைக் கட்டமைக்கும் முயற்சி இங்கு எப்படி வெற்றி பெற இயலும்? ராமதாஸ் கடந்த கால் நூற்றாண்டில் வன்னியர்களை வெறும் சாதி அமைப்பாக மட்டுமின்றி ஒரு அரசியல் இயக்கமாகவும் உருவாக்கியுள்ளார். ஆனால், இன்று ராமதாஸ் உருவாக்கியுள்ள கூட்டணியில் உள்ள பிற 44 சாதிகளும் வெறும் சாதி அமைப்புகளாக மட்டுமே உள்ளன.
முக்குலத்தோர் மத்தியில் அத்தகைய முயற்சி முத்துராமலிங்கர் காலத்தில் ஓரளவு மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவருக்குப் பின் அவ்வமைப்புகள் வெறும் சாதி அமைப்புகளாகவே குறுகின. இன்று அவர்கள் சாதி அமைப்புகளில் இருந்தபோதும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் பிரிந்துள்ளனர். சாதி மாநாடுகளுக்கு வேண்டுமானால், இவர்கள் தலைமையின் குரலை ஏற்று வந்து குவிந்து வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால், வன்னியர்கள் தவிர்த்த பிற சாதியினர் தேர்தல் என வரும்போது சாதித் தலைமைகளின் அழைப்பை ஏற்கப்போவதில்லை.
அது மாத்திரமல்ல, முத்துராமலிங்க ருக்குப் பின் அவரது ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி பெயரளவுக்கும்கூட இல்லாமல் சிதைந்ததற்குக் காரணம், அது முன்னிலைப்படுத்திய தலித் வெறுப்புதான். ராமதாஸுக்குப் பின் அன்புமணியாரின் தலைமையில் பா.ம.க-வுக்கும் அதுதான் நிகழப்போகிறது. தனது சாதி அரசியலை மறைக்க அவ்வப்போது ராமதாஸ் முழங்கும் தமிழ்த் தேசிய வீர உரைகள் அவரது அனைத்து சாதிக் கப்பலைக் கரை சேர்க்க உதவாது.
தமிழ்த் தேசியர்கள் வேண்டுமானால், ராமதாஸின் சாதி வெறி அரசியலைக் கண்டுகொள்ளாமல் அவரை அணைத்துக்கொள்ளலாம். ஆனால், மக்கள் ராமதாஸை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராகவே காண்பர். இவர்களின் அரசியல் தேர்தலில் எடுபடாது.
ஆனானப்பட்ட பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியே என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ஆதரவு திரட்ட முடிந்ததில்லை. சாதி அடிப்படையில் தமிழர்களைப் பிளவுபடுத்தும் பா.ம.க-வுடன் கூட்டணி கிடையாது எனப் பிற கட்சிகள் அறிவிக்க வேண்டும்.
அ.மார்க்ஸ் – எழுத்தாளர், மனித உரிமை செயல்பாட்டாளர். தொடர்புக்கு: professormarx@gmail.com
source: http://tamil.thehindu.com/