காவி பயங்கரவாதமும் கதர் பயங்கரவாதமும்
ஆர்.எஸ்.எஸ் தன் வரலாறு நெடுகிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராக இருந்து வந்துள்ளது.
அம்பேத்கார் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன் பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்து போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காங்கிரஸ் – பசுத்தோல் போர்த்திய புலி...காங்கிரஸ் – ஆர்.எஸ்.எஸ். உறவு பட்டேலுடன் நிற்கவில்லை. நேருவின் கடைசிக் காலத்திலேயே மத்திய அரசாங்க அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையே சுமுகமான உறவை உருவாக்க முயன்றார். அவரது முயற்சி காரணமாகவே 1963 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு நாள் அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் பங்கேற்கச் செய்யப்பட்டனர்.
1971 தேர்தலின்போது இந்திராகாந்தி தேர்தல் வாக்குறுதி ஒன்றை வழங்கினார். சிறுபான்மை மதத்தினரால் நிறுவப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்திற்குத் திரும்பவும் தந்து விடுவதாக வாக்குறுதி கூறினார். அத்தகைய அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்குமேயானால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 30 (1) இன்படி அப்பல்கலைக்கழகம் தன்னாட்சி பெற்றிருக்கும். ஆனால் 1972 மே மாதம் நாடாளுமன்றத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா ஒன்றைக் கொண்டுவந்தார். தேர்தல் வாக்குறுதிக்கு மாறான முறையில், அப்பல்கலைக் கழகத்தை மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறையாக மாற்றினார்.
இராஜீவ் மறைவுக்குப் பிறகு பிரதமரான நரசிம்மராவ் ஆட்சி, பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படுவதற்கு மறைமுக ஒத்தாசை புரிந்தது.
காவி பயங்கரவாதமும் கதர் பயங்கரவாதமும்
செ.கார்கி
1925 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் நாள் விஜயதசமி தினத்தன்று ராஷ்ட்ரிய சுயம் சேவக்சங்- ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்டது. இதை முன்நின்று நிறுவியவர்கள் மராத்திய சித்பவனப் பார்ப்பனர்கள்: டாக்டர் பி.எஸ்.மூஞ்செ, டாக்டர் எல்.வி.பரஞ்சியே, டாக்டர் தால்கர், டாக்டர் எச்.பி.ஹெகட்கெவர், பாபாராவ் சாவர்க்கர்.
babar_masjid_400இந்த பார்ப்பனர்களின் உண்மையான நோக்கம் இந்து ராஜ்ஜியத்தைக் கட்டியமைப்பது; இஸ்லாமியர்களையும், கிருஸ்துவர்களையும் அந்நியர்களாகவும், வந்தேறிகளாகவும் காட்டி அவர்களுக்கு எதிராக கலவரங்களைத் தூண்டிவிடுவது; இந்தியாவில் புரட்சிகரப் போராட்டங்களும் புரட்சிகரக் கருத்துகளும் பரவாமல் தடுத்து, இந்திய தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் சேவை செய்வதே ஆகும்.
காங்கிரஸ் கட்சிக்கு எந்த வகையிலும் குறையில்லாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கைக்கூலிகளாய் செயல்பட்டவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.
‘வீர’ சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில்,
“எங்களது நேர்மையை மெய்ப்பிக்க அரசாங்கம் எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தரட்டும். இந்தியாவைக் கட்டி வைத்துள்ள சங்கிலிகளை உடைக்க இங்கிலாந்திடம் விருப்பம் இருக்கிறது என்று மக்களை நம்பவைக்க எங்களை விடுதலை செய்யட்டும். ஆப்கானிஸ்தானிய, துருக்கிய படைகள் வடக்கிலிருந்து படையெடுத்து வருவதைத் தடுத்து நிறுத்த இந்திய இராணுவத்தில் எங்களால் இயன்ற அளவுக்கு ஆட்களைச் சேர்க்கவும், எதிரியுடன் சண்டை போட்டு அவனைத் தோற்கடிக்கவும் எந்தப் போர் முனைக்கும் நாங்கள் இராணுவத்தில் சேர்க்கும் ஆட்களை அனுப்பவும் உறுதிமொழியைத் தந்துள்ளோம். இந்தியாவின் பாதுகாப்புக்கும், இங்கிலாந்தின் வெற்றிக்கும் இராணுவத்தில் தொண்டர்களாகப் பணியாற்றவும் நாங்கள் முன்வருகின்றோம். விடுதலை செய்யுங்கள்; இந்தியாவிற்குக் காலனிய சுயாட்சி வழங்குங்கள்; இந்தியாவின் விசுவாசத்தையும், நேசத்தையும் பெறுங்கள்.”
1931 இல் இத்தாலிக்குச் சென்று பாசிஸ்ட் முசோலினியை நேரில் சந்தித்த பி.எஸ்.மூஞ்செ பாசிசப் படைகளின் பயிற்சிக் கல்லூரிகளையும் பார்வையிட்டு வந்தார். அதன் விளைவாக 1934 இல் போன்ஸ்லா இராணுவக் கல்லூரியைத் தொடங்கினார் மூஞ்செ. சனாதன தர்மத்தைக் கற்பிக்க மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்தையும் நிறுவினார்.
இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் கோல்வால்கர் எச்சரிக்கை விடுக்கிறார்:
“இரண்டே இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அவர்கள் தேசிய மரபினத்துடன் ஒன்றிணைந்து, அதன் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது இந்த தேசிய மரபினம் எத்தனை காலம் அனுமதிக்கிறதோ அத்தனை காலம் அவர்கள் இங்கு வாழ்ந்து விட்டு பிறகு இத்தேசிய இனத்தின் சித்தத்தின் படி நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். சிறுபான்மையினர் பிரச்சனை பற்றிய ஆரோக்கியமான பார்வை இது ஒன்றுதான்.”
மேலும் தன்னுடைய முதலாளித்துவ அடிவருடித்தனத்தை மெய்பிக்க பாரதிய மஸ்தூர் சபா (பி.எம்.எஸ்) என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கியது. முதலாளிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் எதிராக தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களை முறியடிப்பது, காட்டிக் கொடுப்பது போன்ற செயல்களை இவை உற்சாகத்துடன் செய்து வந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தன் வரலாறு நெடுகிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராக இருந்து வந்துள்ளது.
மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டியதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., சிவசேனைக் கும்பல் வெறியாட்டம் நடத்தி பல தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்றனர். பல சேரிப்பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டன.
அம்பேத்கார் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன் பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்து போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நர்மதை அணைக்கட்டுத் திட்டத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிவாரணத்தைக் கூடத் தராமல் 2 இலட்சம் பழங்குடி மக்களை அவர்களுடைய வீடுகள், கோவில்கள், நிலங்களுடன் தண்ணீரில் அமிழ்த்தினார், ‘மரண வியாபாரி’ நரேந்திர மோடி.
1990-ல் அத்வானி ரதயாத்திரை தொடங்கிய போது பஜ்ரங்தள் ஆட்கள் அவருக்குப் பரிசாகத் தங்கள் ரத்தத்தை ஒரு கோப்பையில் வழங்கினர். அதற்குப் பின்னர், 30-10-1990-இல் பாபர் மசூதி மீது தாக்குதல் தொடுப்பதிலும். 06-12-1992-இல் அதைக் தரைமட்டமாக்குவதிலும் முன்னனிப் படையாகச் செயல்பட்டது பஜ்ரங்தளம். 1985 இல் நாடாளுமன்றத்தில் இரண்டே இரண்டு உறுப்பினர்கள் கொண்டிருந்த பா.ஜ.க மிகப் பெரிய வளர்ச்சியடைய ராமஜன்ம பூமி இயக்கமே காரணம்.
24-01-1999 அன்று ஒரிஸ்ஸாவில் ஆஸ்திரேலியக் கிறிஸ்தவ சமயப் பணியாளர் கிரகாம் ஸ்டெய்னும் அவரது இரு மகன்களும் எரித்துக் கொல்லப்பட்டனர். அவர்களைக் கொன்ற கொலை வெறிக் கூட்டம் ‘பஜ்ரங் தளம் வாழ்க, தாராசிங் வாழ்க’ என முழக்கமிட்டதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
2002 -இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது. உயிருடன் ஆட்கள் கொளுத்தப்பட்டனர்; கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து சிசுவொன்று வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்து எரிக்கப்பட்டது. முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
ஒரிசா கந்தமால் பகுதியில் 2007 டிசம்பர் தொடங்கி 2008-இறுதி வரை கிறித்தவர்கள் மீது இந்து வெறியர்கள் நடத்திய பாசிச பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிக் கிறித்துவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர். வீடுகள், கிராமங்கள் சூறையாடப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
மகாராஷ்டிராவில் மாலோகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மையை அம்பலமாக்கி இருக்கின்றது, ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம். இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி ஒளிபரப்பியிருக்கிறது.
நிலைமை இவ்வாறு இருக்க பார்ப்பனரல்லாத பெரும்பான்மை இந்து மக்கள் குறிப்பாக தலித் மற்றும் பழங்குடியின மக்கள் இந்த மதவாத சத்திகளின் பின்னால் அணிதிரள்வது முற்போக்கு சக்திகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மதவெறி அமைப்புகளுக்கு உண்மையிலேயே இந்துக்கள் மீது பற்றும் பாசமும் இருக்குமானால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை அமுல்படுத்தப் போராடுவார்களா?
கொலை வழக்கில் மாட்டிய ‘காம கேடி’ ஜெயேந்திரனை சங்கரமடப் பொறுப்பில் இருந்து இறக்கி விட்டு அந்த இடத்தில் ஒரு தலித்தை உட்கார வைக்க சம்மதமா?
இது போன்ற கேள்விகளை நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். கேட்டால் ஆர்.எஸ்.எஸ்.இன் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறிநாய் வெளியே வந்து ‘லொள்’ என்று குரைக்கும். அவர்களின் வேசம் கலையும்.
காங்கிரஸ் – பசுத்தோல் போர்த்திய புலி
காந்தி கொலையுண்டு இரண்டாண்டுகள் கூட முடியாத நிலையில் 07.10.1949 இல் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர்களாகச் சேரலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. மேலும் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையும் நீக்கப்பட்டது. இதில் முக்கிய பங்காற்றியவர் வல்லபாய் பட்டேல் ஆவர்.
காங்கிரஸ் – ஆர்.எஸ்.எஸ். உறவு பட்டேலுடன் நிற்கவில்லை. நேருவின் கடைசிக் காலத்திலேயே மத்திய அரசாங்க அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையே சுமுகமான உறவை உருவாக்க முயன்றார். அவரது முயற்சி காரணமாகவே 1963 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு நாள் அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் பங்கேற்கச் செய்யப்பட்டனர்.
காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே, மதன்லால் பாஹவா, விஷ்ணு கர்கரே ஆகியோர் 12.1.01964 அன்று மத்திய அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று மகாராஷ்டிர அரசாங்கம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றைக்கு பிரதமராக இருந்தவர் லால்பகதூர் சாஸ்திரி.
1971 தேர்தலின்போது இந்திராகாந்தி தேர்தல் வாக்குறுதி ஒன்றை வழங்கினார். சிறுபான்மை மதத்தினரால் நிறுவப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்திற்குத் திரும்பவும் தந்து விடுவதாக வாக்குறுதி கூறினார். அத்தகைய அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்குமேயானால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 30 (1) இன்படி அப்பல்கலைக்கழகம் தன்னாட்சி பெற்றிருக்கும். ஆனால் 1972 மே மாதம் நாடாளுமன்றத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக (திருத்தம்) மசோதா ஒன்றைக் கொண்டுவந்தார். தேர்தல் வாக்குறுதிக்கு மாறான முறையில், அப்பல்கலைக் கழகத்தை மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறையாக மாற்றினார். அதனை எதிர்த்து அலிகாரிலும் உ.பி.யின் பிற பகுதிகளிலும் 1972 ஜூன் 5 இல் முஸ்லீம்கள் நடத்திய போராட்டம் ஆயுதமேந்திய போலீசால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன. ஏராளமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர்.
1984_riots_450அவசரநிலைக் காலத்தில் 1976-இல் இந்திராவின் மகன் சஞ்சய் காந்தியின் தலையீட்டின் கீழ் டெல்லியில் ஜூம்மா மசூதி தூர்குமன் வாயில் ஆகியவற்றுக்கு அருகே இருந்த குடிசை வாழ் மக்களை அகற்றுதல், கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை போன்றவை செய்யப்பட்டன.
1980 -இல் இந்திரா மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று, பதவிக்கு வந்தவுடன் ஆகஸ்ட் 13ம் தேதி (ரம்ஜான் தினம்) மொராதாபாத் நகரில் வெடித்த கலவரத்தில் 130 முஸ்லீம்கள் உ.பி. ஆயுதப் போலீசாரால் கொல்லப்பட்டனர்.
1983-இல் அலிகார், அலகாபாத், கோத்ரா, பீகார், ஷரிப், நாளந்தா, ஹைதராபாத், பரோடா, புனே, புல்வாரி, டெல்லி, மீரத், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் நடந்த வகுப்புக் கலவரங்களில் பல முஸ்லிம்கள் உயிரை இழந்தனர். அஸ்ஸாமில் மட்டும் 2000 பேர் இறந்தனர் என்றும் 1500 பேர் காணாமல் போய்விட்டனர் என்றும் அதிகாரப் பூர்வமான தகவல்கள் கூறின.
ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில்தான் பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதியின் கதவுகள் திறக்கப்பட்டு, இராமன் சிலையை வழிபடுவதற்கான இசைவு தரப்பட்டது. 1989 நவம்பர் 9 ஆம் நாள் இராமன் கோயில் கட்ட செங்கல் பூசை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியின் பிரச்சாரத்தைத் தொடங்க அயோத்தியைத் தேர்ந்தெடுத்த ராஜீவ், இந்தியாவில் இராமராஜ்ஜியத்தை உருவாக்குவதுதான் தனது கட்சியின் குறிக்கோள் என்றார்.
1984-இல் இந்திரா காந்தி கொலையுண்டதையடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொலைவெறியாட்டத்தையும், குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிப்பதில் காங்கிரஸ் அரசாங்கம் காட்டிய அக்கறையின்மையையும் குறிப்பிடலாம். சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, உடைமைகள் அழிக்கப்பட்டபோது ராஜீவ் கூறிய வாசகம் “ஆலமரம் (இந்திரா) சாயும் போது நிலத்தில் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்குமா?”.
சீக்கியர் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து 1984 நவம்பர் 17இல் டெல்லியிலுள்ள மனித உரிமை அமைப்புகளான பி.யு.சி.எல், பி.யு.டி.ஆர் ஆகிய இரண்டும் சேர்ந்து நடத்திய ஆய்வினடிப்படையில் குற்றவாளிகள் யார் என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. வன்முறையில் தொடர்புள்ளவர்களென அது குற்றம் சாட்டியவர்களில் 198 பேர் காங்கிரஸ் ஊழியர்கள்; 15 பேர் காங்கிரஸ் தலைவர்கள்; 143 பேர் போலிஸ் அதிகாரிகள் ஆவார்கள்.
இராஜீவ் மறைவுக்குப் பிறகு பிரதமரான நரசிம்மராவ் ஆட்சி, பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படுவதற்கு மறைமுக ஒத்தாசை புரிந்தது.
குஜராத் படுகொலைக்குப் பின்பு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இந்து மத சம்பிரதாயப்படியே தொடங்கியது காங்கிரஸ். இப்படிப்பட்ட கீழ்த்தரமான வரலாறு கொண்ட காங்கிரஸ் தன்னை மதச்சாற்பற்ற கட்சி என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்து மதவெறியைக் கடைபிடிப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும், காங்கிரசுக்கும் இடையே பெரிய வேறுபாடு கிடையாது.
கோடிக்கணக்கான இந்திய மக்களின் வருமானத்தை அட்டைபோல உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கும் கோயில்களும், மடங்களும் அதனுள் ஆன்மீக வேடமணிந்து ஒளிந்து கொண்டிருக்கும் இந்து மத வெறியர்களும் அரசியல் அரங்கிலிருந்து, சமூக தளத்திலிருந்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மக்களை வர்க்க உணர்வுடன் ஒன்றுபடுத்த வேண்டும். இதுவே புரட்சிகர சத்திகளின் முன் உள்ள மிகப்பெரிய கடமையாகும்.
– செ.கார்கி
source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22818%3A2013-01-31-05-37-49&catid=1%3Aarticles&Itemid=264#.UmM_a6rcGKk.facebook