இரு பெருநாட்களிலும் நோன்பு வைக்கக் கூடாது, அது போல் ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்களான துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய தினங்களிலும் நோன்பு வைக்கக் கூடாது.
o “அய்யாமுத் தஷ்ரீக்” (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று நாட்களான துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2099)
o “(மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா), (மதீனாவிலுள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (ஜெரூசலேமிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1189)
o “மஸ்ஜிதுல் ஹராமில் தொழும் ஒரு தொழுகையானது மற்ற பள்ளிகளில் தொழும் இலட்சம் தொழுகைகளுக்கு ஈடான நன்மையுடையது, எனது பள்ளியில் (மஸ்ஜிதுந் நபவீ) தொழும் ஒரு தொழுகையானது (மற்ற பள்ளிகளில் தொழும்) ஆயிரம் தொழுகைகளுக்கு ஈடான நன்மையுடையது, மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழும் ஒரு தொழுகையானது (மற்ற பள்ளிகளில் தொழும்) ஐநூறு தொழுகைகளுக்கு ஈடான நன்மையுடையது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ 1821)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,
“எங்கள் உள்ளத்தில் சில (குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)” என்று கேட்டனர்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 209)
o “தூங்குபவர் விழிக்கின்ற வரையிலும், சிறுவன் பெரியவராகும் வரையிலும், பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரையிலுமாகிய மூன்று பிரிவினரை விட்டும் எழுதுகோல் (பாவங்களை பதிவு செய்யாதபடிக்கு) உயர்த்தப்பட்டு விட்டது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 4682)