கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்
ஷரஹ் அலி, உடன்குடி
இன்றைய நாட்களில் பெரும்பாலான இறை இல்லங்களில் சுன்னத்தான, நஃபிலான தொழுகைகள், (ஜமாஅத்தாக) கூட்டு முறையில் நிறை வேற்றப்படுகின்றன. ஆனால் அவ்வாறு தொழலாமா? இஸ்லாமிய மார்க்கம் அதுபற்றி என்ன விளக்கம் தருகிறது என்பதை பலரும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
நமது அமல்களை அல்லாஹ்வின் கட்டளைப்படியும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களின் கட்டளைப்படியும் அமைந்து மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறதே தவிர யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல!
சுன்னத்தான தொழுகைளும்; இன்னும் பிற நஃபிலான தொழுகைகளும் மார்க்கத்தில் உள்ளன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி ஃபர்ளான தொழு கைகள் நம்மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளாகும். அவற்றை நிறைவேற்றுவதன் மூலம் நமது கடமைகள் நீங்கிவிடும். கடமையான தொழுகையில் ஏற்பட்டுள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதும், மேலதிகமான நன்மைகள் கிடைப்பதும் முன், பின் சுன்னத்துகள் நஃபில் உபரியான தொழுகைகளை நிறை வேற்றுவதின் மூலமே பெறமுடியும்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘மறுமை நாளில் அடியானின் நற்செயல்கள் பற்றி விசாரணை செய்யப்படுவதில் முதன்மையானது அவனது தொழுகையைப் பற்றித் தான். அது சரியாக இருந்தால் அவன் வெற்றி பெற்று விடுவான். அது சரியாக இல்லையெனில் அவன் நஷ்டம் அடைந்து விடுவான். கைசேதப்படுவான். அவனது கடமையான ஃபர்ளு தொழுகையில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அப்போது அல்லாஹ் மலக்குகளிடம் இந்த அடியானிடம் ஏதேனும் உபரியான நஃபிலான தொழுகைகள் இருக்கின்றனவா? பாருங்கள் என்று கூறுவான். அவ்வாறே கடமையான தொழுகையில் ஏற்பட்டு உள்ள குறைகளை அதன் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டுள்ளேன். (நூல்: அபூதாவூது)
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பனூஅப்தில் அஷ்வரல் எனும் குலத்தாரின் பள்ளிக்கு வந்தார்கள். அதில் மஃரிப் தொழுகையை நிறைவேற்றினார்கள். மக்கள் ஃபர்ளு தொழுது முடித்த பின் சுன்னத், நஃபில் தொழு வதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அவை வீடுகளில் நிறை வேற்றப்படும் தொழுகைகளாகும்’ என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூது, நஸயீ.)
ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றித் தொழ லானார்கள். இதைப் பற்றி அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து,
‘உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்! கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1ஃ731)
அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ”ஒரு அடியான் தொழக்கூடிய உபரியான இரண்டு ரக்அத்களை விட மிகச் சிறந்ததாக அவனிடம் எதையும் அல்லாஹ் எதிர் நோக்குவதில்லை. உபரியான தொழுகைகளில் ஈடுபட்டிருக்கும் வரை அந்த அடியானின் தலையில் அல்லாஹ்வின் அருள் இறங்கிக் கொண்டே இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.” (நூல் திர்மிதி)
இதுபோன்று பல நபி மொழிகளில் உபரியான (நஃபிலான) சுன்னத்தான தொழு கைகளைப் பற்றி சிறப்பித்தும் ஆர்வமூட்டியும் கூறப்பட்டுள்ளது. ஃபர்ளு தொழு கையை மட்டுமே தொழுதுவிட்டு, அதன் பின்னர் செய்யக் கூடிய தஸ்பியாத், பிரார்த்தனைகளைக் கூட கேட்பதற்கு நம்மில் அதிகமானோருக்கு நேரமில்லை என்பர். பலர் எழுந்து சென்றுவிடும் இந்த காலத்தில், சுன்னத்தான, உபரியான தொழுகை தொழுவது உன்னதமான செயல்தான். எனினும் கடமையான தொழுகைகள் உள்பட மற்ற எல்லா தொழுகைகளையும் நமது விருப்பத்திற் கேற்றவாறு நாம் செய்திட இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை. காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு தொழ வேண்டும் என்றுகற்றுக் கொடுத்திருக்கிறார்களோ அவ்வாறு தான் நிறைவேற்ற வேண்டும். என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் எனக் கூறியுள்ளார்கள்.
எனவே சுன்னத்தான உபரியான தொழுகையின் நோக்கத்தையும் அதை நிறைவேற்றும் விதத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உபரியான அதாவது நஃபில் என்பது மேலதிகமான நன்மைகளுக்காக செய்யப்படக்கூடியது. எனவே இதை பகிரங் கப் படுத்தாமல் ரகசியமாக செய்வதுதான் முறையாகும். அவற்றை வீடுகளில் நிறை வேற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதிலிருந்தே அதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இறை நம்பிக்கையாளர்களின் அன்னை யான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மூலம் நாம் தெரிந்துகொண்டு செயல்படவேண்டிய செய்தி முஸ்லிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தான உபரியான வணக்க முறைகள் இதோ – ”அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ளுஹருக்கு முன் 4 ரகாஅத்துகள் எனது வீட்டில் தொழுவார்கள். பிறகு பள்ளிக்குச் சென்று மக்களுக்கு தொழவைப்பார்கள். பிறகு வீட்டிற்கு வந்து இரண்டு ரகாஅத்துகள் தொழுவார்கள். மக்களுக்கு மஃரிப் தொழ வைத்த பின் வீட்டிற்கு வந்து இரண்டு ரகா அத்துகள் தொழுவார்கள். பிறகு பள்ளிக்குச் சென்று மக்களுக்கு இஷா தொழ வைப்பார்கள். பின்பு எனது வீட்டிற்கு வந்து இரண்டு ரகாஅத்துகள் தொழுவார்கள். இரவு நடுநிசியில் வித்ருவுடன் சேர்த்து ஒன்பது ரக்அத்துகள் தொழுவார்கள்” என்று தெரியப்படுத்துகிறார்கள்.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜும்ஆ தொழுது முடித்தபின் வீட்டிற்குச் சென்று இரண்டு ரகாஅத்துகள் தொழுதார்கள். பள்ளியில் தொழவில்லை. அவர்களிடம் அதுபற்றிக் கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறுதான் செய்வார்கள் என்று பதிலுரைத்தார்கள். (நூல்: அபூதாவூத்)
கடமையான தொழுகைகளை பள்ளியில் தொழுதுவிட்டு சுன்னத்தான உபரியான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுவதைத் தான் இஸ்லாமிய மார்க்கம் விரும்புகிறது. எனவே தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபிதோழர்களும் கூட கூட்டாக (ஜமாஅத்தாக) சேர்ந்து நிறைவேற்றியதில்லை. அதிகமாக வலியுறுத்தப்பட்ட முன், பின் சுன்னத் தொழுகைகள், தஹஜ்ஜத் போன்ற தொழுகைகளைக் கூட கூட்டாக தொழக் கூடாது என்பதற்கான ஆதாரங்களைத்தான் குர்ஆன், நபிமொழிகளில் காண முடிகிறது.
ரமழானின் இரவுத் தொழுகை கூட பள்ளியில் கூட்டாக தொழ அனுமதி இல்லை என்பதை புகாரி 2ஃ2009 என்ற நபிமொழியில் காணமுடிகிறது. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும், ஸஹாபாக்கள், தாபி ஈன்கள் காலத்திலும் தஹஜ்ஜத் தொழுகை ஜமாஅத்தாக நடந்ததாக எங்கும் கூறப்பட வில்லை. ஏனெனில் நன்மையை அடைந்து கொள்வதில் நம்மை விட அவர்களே (சஹாபாக்கள்) முந்திச் செல்பவர்கள்.
கடமையான தொழுகைகளைத் தவிர பள்ளியில் தொழ வேண்டியவை:
1. தஹிய்யதுல் மஸ்ஜித் (பள்ளிக்கான காணிக்கை தொழுகை)
2. இஃதிகாஃப் இருப்பவர் சுன்னத் நஃபில் தொழுகைளை பள்ளியில் தொழுது கொள்ளலாம்.
3. பிரயாணத்தில் இருந்து ஊர் திரும்பி வந்தவுடன் பள்ளிக்கு சென்று 2 ரகாஅத்து களை நஃபில் தொழுகை தொழுதுவிட்டு வீட்டிற்கு பிறகு செல்லலாம்.
4. மக்காவில் ஹரமில் தவாஃபுக்கு பின் 2 ரகா அத்களை மக்காமே இப்ராஹிம் என்ற இடத்தில் தொழ வேண்டும்.
கடமையான தொழுகையை தவிர கிரகணத் தொழுகையை பள்ளியில் ஜமாஅத்தாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள். (புகாரி 1ஃ1040)
இவைகளைத் தவிர மற்ற சுன்னத்தான, உபரியான தொழுகைகளை ஜமாஅத்தாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழவில்லை என்பதை குர்ஆன், நபிமொழியில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. நன்மையான ஒரு அமலை செய்யும்போது அது மார்க்க கண்ணோட்டத்தில் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டி தந்த வழிமுறையா என சுயமாக சிந்தித்து செயல்படுவோமாக! ஈறுலக வெற்றியையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.
‘அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)