o பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் முதன்மை எதிரி யார்?
o நீதித்துறையும் மையப் புலனாவுத்துறையும் பெண்களைப் பாதுகாக்குமா?
o பெண்களுக்கு எதிராக நிற்கும் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்புகள்
o ஓட்டுக்கட்சிகளின் யோக்கியதை என்ன?
o பாலியல் வன்முறைக்கு எதிராக ஜனநாயகப் புரட்சி தேவை!
பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்!
பாலியல் வல்லுறவுத் தலைநகரான டெல்லியில், துணை மருத்துவ மாணவி மீதான கும்பல் பாலியல் வல்லுறவுக் கொடூரத்தைத் தொடர்ந்து, உழைக்கும் மக்களும் பெண்களும் இளைஞர்களும் ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க வீதிகளில் திரண்டு போராடினார்கள்.
இப்போராட்டங்களாலும், பொதுக்கருத்தும் பொதுமக்களின் நிர்ப்பந்தங்களும் பெருகியதாலும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தலைநகர் டெல்லியில் பாலியல் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும், டெல்லியில் பாலியல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகும் பெண்கள் இதுபற்றி புகார் கொடுக்க 181 என்ற தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் மைய அரசு அறிவித்துள்ளது.
“பிப்ரவரி 23,1991-இல் காஷ்மீரின் குனான் போஷ்போரா கிராமத்தில் இந்திய இராணுவப் படையினர் 53 பெண்களைக் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடூரத்தை நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை!” என்ற பதாகையுடன் இந்தியாவின் 64-வது ‘குடியரசு’ தினத்தன்று நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.
பாலியல் கொடூரத்துக்கு எதிரான சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் செம்மைப்படுத்தவும் அமைக்கப்பட்ட ஓவு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி, தனது அறிக்கையை அண்மையில் மைய அரசிடம் அளித்துள்ளது. ஆனால், அக்கமிட்டி தனது பரிந்துரைகளைச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அரசாங்கத்தின் உறுப்புகளாக உள்ள – குற்றத்தைத் தடுப்பதற்கான பொறுப்பில் உள்ளவர்கள் இவை எதையுமே ஏற்க மறுக்கின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் முதன்மை எதிரி யார்?
ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சட்டமும் நீதித்துறையும் போலீசும் அதிகார வர்க்கமும் அடங்கிய அரசு எந்திரத்துக்கு வெளியே, கணநேரப் பாலியல் தூண்டுதலால் வெறிகொண்டு வல்லுறவை ஏவும் சிவில் சமுதாயத்திலுள்ள உதிரி கிரிமினல்களால்தான் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராகத்தான் உள்ளது.
வங்கிக்குப் பொறுப்பான காசாளரே, கொள்ளையில் ஈடுபடுவதைப் போலத்தான் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தில் உள்ளவர்களே, ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்டவர்களே அத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர். பெண்கள் மீதான இந்துத்துவ, சாதிய, ஆணாதிக்க அடக்குமுறைகளைப் பாதுகாப்பதாகவே அரசின் உறுப்புகள் உள்ளன. இத்தகைய நிறுவனங்களால் பெண்களுக்கு வரும் ஆபத்துதான் மிகக் கொடியது. வரம்பற்ற அதிகாரம் பெற்றதாக, அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டதாக, சீருடை அணிந்த கிரிமினல்களைக் கொண்டுள்ள இத்தகைய அதிகார அமைப்புகளே முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளன. அவற்றை யாரும் தட்டிக்கேட்கவோ, நீதியைப் பெறவோ முடியாது.
டெல்லி பேருந்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்குக்கூட உள்ளூர ஒருவித அச்சம் இருந்திருக்கும். எந்தத் தடயமும் இல்லாமல் தப்பிவிட வேண்டும் என்ற பதற்றமும் இருந்திருக்கும். ஆனால், போலீசுக்கும் இராணுவத்துக்கும் அப்படி எந்த அச்சமோ, பதற்றமோ இருப்பதேயில்லை. சமுதாயத்திலுள்ள கிரிமினல்களுக்கு இல்லாத இந்தச் சிறப்பு அதிகாரத்தைக் கொண்டுள்ள இந்தச் சீருடை அணிந்த கிரிமினல்கள், எவ்வித அச்சமுமின்றி அட்டூழியங்களில் ஈடுபடுவதோடு, எவனும் எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்ற ஆணவத்தோடு கொட்டமடிக்கின்றன.
இந்தியப் பெண்களின் முதல் எதிரி யார் என்பதை உலகுக்கு உணர்த்திய போராட்டம்: “ஐ.நா. மன்றமே, இந்திய இராணுவப் படைகளின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ள காஷ்மீரின் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!” என்ற பதாகையுடன் காஷ்மீர் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
கடந்த 2006 மார்ச் மாதத்தில், காஷ்மீர் மாநிலத்தில் சிறீநகர் புறநகரப் பகுதியின் 15 வயதான பள்ளி மாணவி யாஸ்மினா, வேலை வாங்கித் தருவதாகக் கூறித் தன்னை அழைத்துச் சென்று, போதை மருந்து கொடுத்து நிர்வாணப்படுத்திப் படம் எடுத்து, அதைக் காட்டி மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சபீனா பேகம் என்ற பெண் மீது குற்றம் சாட்டியதோடு, போலீசு -இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தான் இரையாக்கப்பட்டதையும், தன்னைப் போலவே 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பயங்கரவாதக் கும்பலிடம் சிக்கித் தவிப்பதாகவும் சாட்சியமளித்தார்.
அதைத் தொடர்ந்து விபச்சார தாதாவான சபீனா பேகத்தைக் கைது செய்து, அவளது விபச்சார விடுதியிலிருந்து இளம்பெண்களை மீட்டுச் சூரத்தனம் காட்டிய போலீசார், இந்த விவகாரத்தை மூடிமறைத்து போலீசு மற்றும் இராணுவ அதிகாரிகளைத் தப்புவிக்க முயற்சித்தபோது, சிறீநகர் மக்கள் ஆவேசமாகி சபீனாவின் விபச்சார விடுதியையும் போலீசு நிலையங்களையும் தாக்கினர். இது காஷ்மீர் மாநிலம் முழுவதுமான போராட்டமாகப் பற்றிப் படரத் தொடங்கியதும், மாநில உயர்நீதி மன்றம் இந்த வழக்கை மையப் புலனாவுத் துறையிடம் ஒப்படைத்தது.
விபச்சார குற்றக் கும்பல்களின் அட்டூழியங்கள் அடுத்தடுத்து வெளிவந்த போதிலும், இவை எல்லாவற்றிலுமே அரசு உயர் அதிகாரிகள், போலீசு -இராணுவ அதிகாரிகள், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள், நீதித்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ள போதிலும், அவர்கள் தண்டிக்கப்படவில்லை. துறைசார்ந்த விசாரணை, இடமாற்றம், தற்காலிகப் பணிநீக்கம் என்பதுதான் நடந்தது.
காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மீது பொதுமக்கள் எவரும் அச்சீருடை அணிந்த கிரிமினல் கும்பல்கள் நடத்திவரும் பாலியல் வன்கொடுமைகளை, மனித உரிமை மீறல்களைப் பற்றி வாய்திறக்கக் கூடாது என்பதற்காகவே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமும், கலவரப்பகுதி தடைச் சட்டமும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களும் போடப்பட்டுள்ளன.
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முறியடிப்பது என்ற பெயரில் இம்மாநிலங்களில் போலீசும் இராணுவமும் நடத்திவரும் காமவெறி – கொலைவெறியாட்டங்கள் தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றன. போலீசின் வன்முறை ஆயுதங்களில் ஒன்றாகக் கேள்விமுறையின்றி பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் தொடர்கின்றன. இக்கொடுமையை எதிர்த்து மணிப்பூர் தாய்மார்கள் இராணுவத் தலைமையகம் அருகே நடத்திய நிர்வாணப் போராட்டத்தைப் போல, இவற்றில் ஒரு சில விவகாரங்கள் மெதுவாகக் கசிந்து அம்பலமானாலும், இக்காமவெறி பயங்கரவாதக் கும்பல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதியன்று இரவில் பேருந்துக்காகக் காத்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான வசந்தி என்ற பெண்ணை, கடமலைக்குண்டு போலீசு நிலையத்துக்கு இழுத்துச் சென்று, போலீசு ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமாரும் சிறப்புத் துணை ஆய்வாளரான அமுதனும் அப்பெண்ணிடம் தமது காமவெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
பின்னர், அவரிடமிருந்த 6,700 ரூபாயையும் பறித்துக் கொண்டு, வசந்தியின் மீது திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த வசந்தி நடந்த உண்மைகளை வெளியே சொல்லி விடக்கூடாது என்பதற்காக போலீசாரால் தொடர்ந்து மிரட்டப்பட்டதால், விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து, பின்னர் காப்பாற்றப்பட்டார். இந்த உண்மைகள் மெதுவாகக் கசிந்து, ஜூனியர் விகடன் இதழ் இக்கொடுமையை அம்பலப்படுத்தியது. ஆனால், அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளரான பிரவீன் குமார் அபினயு, திருட்டு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே வசந்தி பொய் சொல்கிறார் என்று கிரிமினல் போலீசாருக்கு நற்சான்றிதழ் அளித்தார்.
சட்டபூர்வ கிரிமினல்களான போலீசின் காமவெறியாட்டத்துக்கு, பாதிக்கப்பட்ட வசந்தி மீதான பாலியல் வல்லுறவுக் கொடூரமே சான்று கூறப் போதுமானது. போலீசு உயரதிகாரிகள், தமது துறைசார்ந்த கீழ்நிலை போலீசாரைக் காப்பதற்காகவே இப்படி செய்துள்ளார்கள் என்று இந்த விவகாரத்தை குறுக்கிச் சுருக்கிப் பார்க்க முடியுமா? கீழ்நிலைப் போலீசுதான் ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாதவர்கள்; ஆனால், போலீசு உயரதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.பி.எஸ். படித்தவர்கள், கண்ணியமான மேட்டுக்குடியினர், அவர்கள் நேர்மையுடன் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்பத்தான் முடியுமா?
அரியானா மாநிலத்தின் ஐ.ஜி.யான எஸ்.பி.எஸ்.ரத்தோர், 14 வயது சிறுமியான ருச்சிகாவை 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதியன்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, அவனிடமிருந்து தப்பிய அச்சிறுமி போலீசில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ருச்சிகா, தான் படித்து வந்த பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவரது தம்பி மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் ரத்தோரின் போலீசாரால் அச்சுறுத்தப்பட்டுத் தொல்லைக்குள்ளாக்குள்ளாக்கப்பட்டனர்.
இக்கொடுமைகளைக் கண்டு மனமுடைந்த ருச்சிகா,1993-இல் தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோனாள். அதேசமயம், காமவெறியன் ரத்தோருக்கு அரியானா அரசு பதவி உயர்வு அளித்தது. 1999-இல் அவன் மாநிலத்தின் போலீசு தலைமை இயக்குனராக்கப்பட்டு, சிறந்த சேவைக்கான அரசுத் தலைவர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டான். 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 2009-இல் ரத்தோர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, பிணை வழங்கவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து சி.பி.ஐ. கோர்ட் தடை விதித்த போதிலும், 2010-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அவனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கியது.
நாங்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் என்ற திமிரோடு தனிவகை சாதியாக இருந்து கொண்டு சமூகத்தையே போலீசும் இராணுவமும் அச்சுறுத்துவதை இந்த விவகாரமும், போலீசு பாதுகாப்புடன் நடந்து வந்த திண்டிவனம் விபச்சார சந்தையில் தள்ளப்பட்டு, தப்ப முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் செஞ்சி சிறைக்காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ரீடாமேரி விவகாரமும் நிரூபித்துக் காட்டுகின்றன. சிதம்பரம் பத்மினி மற்றும் சின்னாம்பதி பாலியல் கொடூர வழக்குகளை விசாரித்த விசாரணைக் கமிசன்கள், இந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யவும் பாலியல் குற்றங்களை மூடிமறைக்கவும் போலீசு அதிகாரிகள் செய்துள்ள தகிடுதத்தங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. இத்தனைக்குப் பின்னரும் போலீசும் அதிகாரவர்க்கமும் சட்டங்களை முறைப்படி செயல்படுத்தி, குற்றவாளிகளைத் தண்டித்து, பெண்களைப் பாதுகாக்கும் என்று நம்பத்தான் முடியுமா?
நீதித்துறையும் மையப் புலனாவுத்துறையும் பெண்களைப் பாதுகாக்குமா?
காவல் நிலையத்தில் பெண்இந்தியாவின் முதலாவது நீதிபதியாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட நீதிபதி முத்துசாமி அய்யர், கணவன் தனது மனைவியை அடிப்பது தவறல்ல என்று கடந்த நூற்றாண்டில் தீர்ப்பு கூறினார். ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமை மாறிவிட்டதா? மாமியார் தனது மருமகளை அடித்தாலோ, அல்லது தனது மகன் அவளை விவாகரத்து செய்துவிடுவான் என்று மிரட்டினாலோ அது சட்டப்படி குற்றமல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.பி.சின்காவும் சிரியாக் ஜோசப்பும் கடந்த 2009-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்துள்ளனர்.
நீதிபதிகள் மட்டுமல்ல, நீதிக்காக வாதிடும் வழக்குரைஞர்களும் இத்தகைய ஆணாதிக்க அணுகுமுறையைக் கொண்டவர்களாகவே உள்ளனர். ஜெசிகாலால் கொலை வழக்கில், அவரை நடத்தை கெட்டவராகக் காட்டும் கோணத்தில் வாதாடி குற்றவாளியைத் தப்புவிக்க பிரபல வழக்குரைஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.க. தலைவர்களுள் ஒருவருமான ராம் ஜெத்மலானி எத்தனித்தார்.
டெல்லியில் தனது இச்சைக்கு இணங்க மறுத்த சட்டக் கல்லூரி மாணவி பிரியதர்சினி மட்டூவை, அதே கல்லூரியின் மாணவனும் மாநில இணை போலீசு ஆணையரின் மகனுமாகிய சந்தோஷ்குமார் சிங் என்பவன் அம்மாணவியின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்முறையை ஏவிய பின்னர் கோரமாகக் கொன்றான். அதே டெல்லியில், சாராய விடுதியில் விற்பனை முடிந்த பிறகு சாராயம் பரிமாற மறுத்த மாடல் பெண் ஜெசிகாலால் என்பவரை அரியானா மாநில அமைச்சரின் தறுதலைப் பிள்ளையான மனு சர்மா சுட்டுக் கொன்றான்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விரு வழக்குகளில் சாட்சியங்களை போலீசும் மையப் புலனாவுத்துறையும் மூடிமறைத்து வழக்கை நீர்த்துப் போக வைத்தன. இதை அறிந்திருந்த போதிலும், டெல்லி அமர்வு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்தது. செய்தி ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இந்த அநீதியை எதிர்த்துக் கூச்சலிட்ட பிறகு, டெல்லி உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளிகள் பின்னர் தண்டிக்கப்பட்டனர். நாடே அதிர்ச்சிக்குள்ளான பிரபல வழக்குகளுக்கே இதுதான் நிலைமை.
1972-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மதுரா என்ற 16 வயதான விவசாயக் கூலிப் பெண், தேசா கஞ்ச் போலீசு நிலையத்தில் இரு போலீசுக்காரன்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 1974-இல் மகாராஷ்டிர உயர் நீதிமன்றம் அளித்த ஐந்தாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து, காமவெறி போலீசாரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. மதுரா ஒரு கன்னிப் பெண் அல்ல, அவள் பாலியல் வல்லுறவை எதிர்த்ததற்கான காயங்கள் எதுவும் அவளது உடலில் இல்லை – என்றெல்லாம் காரணங்களைக் காட்டி விடுதலையை நியாயப்படுத்தியது உச்ச நீதிமன்றம்.
1992-இல் ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரிதேவி என்ற மிகவும் பிற்பட்ட சாதிப் பெண், குஜ்ஜார் ஆதிக்க சாதிவெறியர்கள் 5 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 1995-இல் தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்றம், தாழ்த்தப்பட்டவரை மேல்சாதியினர் தீண்டவே மாட்டார்கள் என்பதால் பாலியல் வல்லுறவு நடந்ததாகக் கூறுவது பொய்யானது என்று தீர்ப்பு கூறி ஆதிக்க சாதிவெறியர்களான காமவெறி பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.
ஒரிசாவின் போலீசு தலைமை இயக்குனர்களில் ஒருவரான வித்யபூஷண் மொகந்தியின் மகனாகிய பிட்டி மொகந்தி என்பவன், 2005-ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் ஒரு ஜெர்மானியச் சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமையை ஏவிய குற்றத்துக்காக 2006-இல் கைது செய்யப்பட்டான். பின்னர், அந்த போலீசு உயரதிகாரி தனது தாயார் மரணப்படுக்கையில் கிடப்பதால் அவரைத் தனது மகன் ஒருமுறை பார்க்க அனுமதி கேட்டு, பரோலில் வந்த பின்னர் அவன் தலைமறைவாகிவிட்டதாகப் பசப்பி, தனது அதிகாரத்தைக் கொண்டு குற்றவாளியான தனது மகனை தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டு பாதுகாத்ததோடு, போலீசையும் அதற்காகப் பயன்படுத்தியுள்ளான்.
ராஜஸ்தான் போலீசு, ஒரிசா மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்ட போதிலும், 7 ஆண்டுகளாகியும் அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை என்கிறது ஒரிசா போலீசு. பின்னர் குற்றவாளியைப் பாதுகாத்து வைத்திருந்த போலீசு இயக்கு னர் 2008-இல் கைது செய்யப்பட்ட போதி லும், அவரது மகன் இன்னமும் தலைமறைவாகத்தான் இருந்து வருகிறான்.
தமிழ்நாட்டை உலுக்கிய சிதம்பரம் பத்மினி கற்பழிப்பு வழக்கை விசாரித்த பழனியப்பன் விசாரணைக் கமிசன், பத்மினி மானபங்கப்படுத்தப்பட்டாரே தவிர, வல்லுறவு நடக்கவேயில்லை என்று அபாண்டமாகத் தீர்ப்பு எழுதியது.
இப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் வழக்குகளையும் அரசாங்கத்தின் உறுப்புகளே குற்றவாளிகளைப் பாதுகாப்பதையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் கடந்து ஒரு பெண் துணிவுடன் சட்டம், போலீசு, நீதித்துறையை அணுகினால், விட்டால் போதும் என்று தாங்களே வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும் வகையில் இந்த நிறுவனங்கள் பெண்களை மேலும் தொல்லைக்குள்ளாக்கி இழிவுபடுத்துகின்றன. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் அருவருப்பான வக்கிரமான பல்வேறு சோதனைகளையும் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்பெண்களின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நீதிமன்றங்களில் அவர்கள் படும் துன்பமும் மனவேதனையும், பாலியல் வல்லுறவுக்கு ஆளான பொழுதில் ஏற்பட்ட துயரைவிட மோசமானதாக இருக்கிறது.
பெண்களுக்கு எதிராக நிற்கும் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்புகள்
போலீஸ், ஜெயலலிதா கார்ட்டூன்ஒரு பெண் எந்தக் குற்றமும் செய்ய வேண்டியதில்லை. அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள் என்பதற்காகவே வன்முறை – கிரிமினல் குற்றங்கள் ஏவிவிடப்படுகின்றன. ஒரிசாவில் கணவனின் கொடுமைக்கும் சித்திரவதைக்கும் ஆளான அஞ்சனா மிஸ்ரா என்ற மேட்டுக்குடி பெண், அவனிடமிருந்து தப்பி பெண்கள் காப்பகத்தில் குழந்தைகளுடன் தங்கியிருந்து, அவரது கணவனாகிய வனத்துறை அதிகாரி மீது புகார் கொடுத்தார். 1997 ஜூலையில் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞரிடம் இவ்வழக்கு தொடர்பாக சந்தித்த போது, அவன் அஞ்சனா மீது பாலியல் வல்லுறவுக் கொடூரத்தை ஏவ முயற்சித்தான்.
ஆடைகள் கிழிக்கப்பட்டு உடலெங்கும் காயங்களுடன் அவனிடமிருந்து தப்பிய அவர், போலீசில் புகார் செய்தார். ஆனால் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் அஞ்சனாவுக்கு எதிராகச் செயல்பட்டன. பின்னர் மையப் புலனாவுத்துறை விசாரணை நடந்து, அரசுத் தலைமை வழக்குரைஞர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அன்றைய காங்கிரசு முதல்வர் பட்நாயக் தலைமையிலான அரசு, அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு வாடகைக் காரில் சென்று கொண்டிருந்த அஞ்சனாவை துப்பாக்கி ஏந்திய கும்பல் வழிமறித்து, புகார் கொடுத்ததற்கு இதுதான் தண்டனை என்று பாலியல் வன்கொடுமையை ஏவியது. வரம்பற்ற அதிகாரத்தைக் கொண்டு ஆட்டம் போடும் அரசாங்கத்தின் உறுப்புகளுக்கு எதிராக யார் நின்றாலும், அவர்களுக்கு இந்தக் கதிதான் ஏற்படும்என்று மிரட்டி எச்சரிக்கும் வகையில் நடந்துள்ள இந்த அட்டூழியம், ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பே பெண்களுக்கு எதிராக நிற்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியது.
அரசு வழக்குரைஞர், போலீசு, நீதிபதி – ஆகிய இம்மூவரில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாக நடந்து கொண்டால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் நாகஷைலா. இதனாலேயே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், வரதட்சிணைக் கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் வாழ்வுரிமைக்கான சட்டங்கள், பெண்களின் பணியிடப் பாதுகாப்புச் சட்டங்கள் என பெண்களுக்காகவே பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் பெண்களின் நிலை இன்னமும் அதல பாதாளத்தில்தான் இருக்கிறது.
ஓட்டுக்கட்சிகளின் யோக்கியதை என்ன?
ஆணாதிக்க குடும்ப – சமூக அமைப்பு முறையும், அதற்கேற்ற சட்டம், நீதி மற்றும் அமலாக்கத்துறையும் நீடிக்கும் போது, பெண்களைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்கான இப்படிப்பட்ட சீர்திருத்தச் சட்டங்களால் மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியாது. இருப்பினும் பெயரளவிலான சில சீர்திருத்தச் சட்டங்களைக்கூட ஏற்க மறுத்து, இதனால் இந்தியாவின் பாரம்பரியமும், குடும்ப உறவுகளும் பாதிக்கப்பட்டு சிதைந்துவிடும் என்று ஆர்.எஸ்.எஸ். முதலான இந்துத்துவ பிற்போக்கு அமைப்புகள் வாதிட்டுத் தடுக்கின்றன.
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்துத்துவ ஆணாதிக்க சிவில் சட்டத்தைத் திணிக்கவே எப்போதும் இந்துத்துவ பரிவாரங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது நிலவும் மத ரீதியான திருமணச் சட்டத்தில் சிறிய சீர்திருத்தங்களைச் செய்வதைக்கூட கிறித்துவமயமாக்கும் முயற்சி என்று இக்கும்பல் எதிர்க்கிறது. குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களும் சீர்திருத்தங்களும் செய்தால், இவற்றைப் பெண்கள் தங்களது கணவருக்கும் குடும்பத்திலுள்ள ஆண்களுக்கும் எதிராகப் பயன்படுத்திக் குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடுவார்கள் என்று இந்து சனாதன ஆணாதிக்க வெறியுடன் துக்ளக் சோ, குருமூர்த்தி வகையறாக்கள் கூப்பாடு போடுகின்றனர்.
இந்துத்துவ பரிவாரங்கள் பார்ப்பனிய ஆணாதிக்கத்துக்காக நிற்கின்றன என்றால், பிற்படுத்தப்பட்டோராகக் காட்டிக் கொள்ளும் நிலப்பிரபுக்களான ஜாட், யாதவ் சாதிய அரசியல்வாதிகள் அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு ஆணாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்றனர்.
ஜனநாயகத்தின் அறிவார்ந்த பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்படும் ஓட்டுக்கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலோர் ஆணாதிக்கவாதிகளாகவே உள்ளனர். இவர்களின் காமவெறிக் களியாட்டங்களும் சின்னவீடு சமாச்சாரங்களும் பாலியல் குற்றவழக்குகளில் சிக்கியுள்ள சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலும் ஏற்கெனவே வெளிவந்து நாடெங்கும் நாறிப் போயுள்ளன.
மே.வங்கத்தில், ஒரு பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் ஒரு பூங்காவில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய விவகாரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த போது, அந்தப் பெண்ணுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பணப்பட்டுவாடாவில் தகராறு வந்ததால், அவர்கள் தன்னை வல்லுறவு கொண்டதாக அப்பெண் பொய்ப்புகார் கொடுத்துள்ளார்” என்று கூச்சநாச்சமின்றி பேசியுள்ளார், திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் நாடாளுமன்ற பெண் உறுப்பினருமான டாக்டர் கோகோலி கோஷ். இந்த விவகாரம், தனது அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்டுள்ளது என்றார், அம்மாநிலத்தின் பெண் முதல்வரான மமதா பானர்ஜி.
டாக்டர் ராணி என்பவரை இரண்டாம் திருமணம் செய்தவரான பரஞ்சோதி, அப்படியொரு திருமணமே நடக்கவில்லை என்று புளுகியதை ஏற்றுக் கொண்டு அ.தி.மு.க. தலைவியான ஜெயலலிதா அவரைத் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட வைத்து அமைச்சராக்கினார்.
தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக டாக்டர் ராணி போலீசில் புகார் கொடுத்ததால், வேறுவழியின்றி பரஞ்சோதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும், அவர் போலீசைக் கொண்டு டாக்டர் ராணியைத் தொடர்ந்து மிரட்டிய விவகாரம் வெளிவந்துள்ள போதிலும், தனது கட்சியின் எம்.எல்.ஏ.வான பரஞ்சோதி மீது பெண் முதல்வரான ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த லட்சணத்தில் அவர், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதி மன்றங்களை அமைப்பது, இத்தகைய வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பது என்பது உள்ளிட்ட 13 அம்சத் திட்டத்தை அறிவித்து சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்.
பாலியல் வன்முறைக்கு எதிராக ஜனநாயகப் புரட்சி தேவை!
ஆணாதிக்க சமூகத்தின் இழிவைச் சாடி, “வல்லுறவை ஏவாதே என்று ஆண்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகாதே என்று பெண்களுக்குத்தான் சமூகம் பாடம் நடத்துகிறது” என்ற முழக்க அட்டையுடன் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம்.
இவையனைத்தும் இது ஜனநாயக அரசு அல்ல, பெண்களைச் சமத்துவமாக நடத்தும் அரசியலமைப்பு முறையுமல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. இருப்பினும், இந்த அரசு நடுநிலையானதாகவும் ஜனநாயகமாகவும் நடப்பதாகக் கருதிக் கொண்டு சட்டங்களைக் கடுமையாக்கி, போலீசுத் துறையிலும் நீதித்துறையிலும் சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுத்துவிடலாம் என்று சிலர் நம்பச் சொல்கின்றனர். போலீசாருக்குப் போதனைகளை நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க வந்தால், அவரை மரியாதையோடும் பரிவோடும் போலீசார் நடத்த வேண்டும் என்றெல்லாம் ஆலோசனைகளைக் கூறுகின்றனர்.
ஆனால், மனித உரிமைகள் பற்றி போலீசாருக்குப் பல ஆண்டுகளாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்குப் பின்னரும் போலீசாரின் அணுகுமுறையில், அவர்களது சிந்தனையில் மயிரளவுகூட மாற்றம் ஏற்படவில்லை என்பதை அன்றாடம் போலீசை எதிர்கொள்ளும் சாமானிய மக்கள் நன்கறிவார்கள்.
ஆண்களாகிய உயர் அதிகாரிகளால் பெண் போலீசாரே பாலியல் வன்கொடுமைக்குள்ளாவதும், அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி அவர்களைப் பாலியல் இச்சைக்கு ஆண் அதிகாரிகள் பயன்படுத்துவதும் பற்றி நக்கீரன் இதழில் பலமுறை அம்பலமாகியிருக்கும்போது, பெண் போலீசாரை அதிகமாக நியமித்தால், பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்களைத் தடுத்துவிட முடியுமா? வேலைவாப்பிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குக் கூடுதல் இட ஒதுக்கீடு, பெண் போலீசு, பெண் நீதிபதிகள், மகளிர் போலீசு நிலையம் – முதலானவற்றால் இன்றைய அரசியலமைப்பு முறையின் கீழ் தொடரும் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்துவிடத்தான் முடியுமா?
இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிரானதாக உள்ளது. அது பெயரளவிலான ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும்கூடச் செயல்படுத்த வக்கற்று தோல்வியடைந்து செல்லரித்துப் போக் கிடக்கிறது. இன்றைய தந்தை வழி ஆணாதிக்க – இந்துத்துவ சாதியாதிக்க அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு, புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதே இன்றைய அவசர-அவசியத் தேவையாக உள்ளது. மாறாக, போலீசுக்கு இன்னும் அதிகாரங்களைத் தருவதும், தண்டனைகளைக் கடுமையாக்குவதும் பாம்புக்குப் பால்வார்த்த கதையாகவே முடியும்.
– பாலன்
source: http://www.tamilcircle.net/i