உலகமயமாக்கல் என்றால் என்ன? உலகமயமாக்கலின் உண்மை முகம்!
“ஊருக்கு போறேன்! 32 இன்ஞ் சோனி LED டிவி வாங்கலாம் என்று இருக்கிறேன்” என்று நண்பர் சொன்னபோது அருகிலிருந்த இன்னொரு நண்பர் “அட ஒலகமயமாக்கல் வந்ததிலிருந்து இப்ப எல்லாமே ஊர்லேயே கெடைக்கிது. இங்கே இருந்து எதுக்கு சுமந்துக்கிட்டு போற?? ஊருலேயே வாங்கிவிடலாம். ஒலகமயம் வந்தது எவ்வளவு வசதியாக இருக்கு?” என்றார்.
நண்பரை பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது பயணச்சுமையை குறைத்து ஊரிலேயே அனைத்து பன்னாட்டு கம்பெனிகளின் தரமான(!?) பொருட்களை வாரி வாரி வழங்கக்கூடிய அமிர்த சுரபி. நண்பர் சொல்வது போல உலகமயமாக்கல் என்பது அவ்வளவு நல்ல விடயமா?
உலகமயமாக்கல் என்றால் என்ன?
தகவல் தொழில்நுட்ப புரட்சியும் இணைய புரட்சியும் போட்டி போடும் யுகம் இது. அமெரிக்க அதிபர் தேர்தலை ஆண்டிப்பட்டியில் அமர்ந்து கொண்டு அலச முடிகின்ற அசாத்திய யுகம். உலகில் எந்தவோரு மூலையில் நடக்கின்ற எந்தவோரு முக்கிய நிகழ்வும் விரல் சொடுக்கில் காட்டுத்தீயாக உலகமெங்கும் பரவிவிடுவதை அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
உலகமயமாக்கலின் இந்தப் பரிமாணம், தகவல் தொழில்நுட்பப் புரட்சியோடு தொடர்புடையதாகும். ஆனால் அரசியலையும், சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவதென்பது முற்றிலும் மாறுபட்ட பொருளையும் பரிமாணத்தையும் கொண்டதாகும்.
அதென்ன அரசியலையும் சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவது?
பொருளதாரம், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு உறவுகள், தேசப் பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளை உலகமயமாக்குவது தான் உலகமயமாக்கலின் உண்மையான இலக்காகும். இந்த நான்கும் மக்கள் நல அரசின் ஆளுகைக்குக் கீழ் வருகின்ற மிக மிக முக்கியமான துறைகளாகும்.
உலகமயமாக்கல் என்கிற போர்வையில் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் இந்த நான்கு முக்கியமான துறைகளை மூன்றாம் நாடுகளின் அரசாங்களிடமிருந்து பிடுங்கி, அவற்றைத் தம்முடைய ஆளுகையின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
1. பொருளதாரம்
முதலாவதாக, பொருளாதாரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தங்களின் கிடுக்குப் பிடியில் கொண்டு வருவதற்காக இவர்கள் என்ன செய்கின்றார்கள்? எந்தெந்த விதங்களில் வேடந் தரித்து வருகின்றார்கள்/ இந்தச் செப்பிடு வித்தையை இவர்கள் செய்வதெப்படி? இதற்காக இவர்கள் போடுகின்ற ஆட்டங்கள் என்னென்ன?
முதலில் உதவித் தொகைகளைத் தருகின்றோம் என்று தொடங்குவார்கள். பாலங்கள் கட்டுவோம், அணைக்கட்டு கட்டித் தருகின்றோம், விமானத்தளம் அமைத்துத் தருகின்றோம் என பல வடிவங்களில் ஆசை காட்டுவார்கள். குறைந்த வட்டியில் கடன் தருகின்றோம் அல்லது சேவைக் கட்டணத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று தாமாக முன் வந்து கடன் கொடுத்து கடன் பொறியில் மூன்றாம் உலக நாடுகளைச் சிக்க வைப்பார்கள். பிறகு அதிக வட்டியில் குறுகிய காலக் கடன் என வலையை இறுக்கிக் கட்டுவார்கள்.
இவையெலலாமே கமுக்கமாக நடந்தேறும்.வெளிப்படையான நிர்வாகம்,ஜனநாயகம்,விடுதலை,சுதந்திரம் என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்பவர்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடும் எதிர்கால வளத்தோடும் தொடர்புடைய இந்த விவகாரங்களை குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் நடத்துவதை விரும்ப மாட்டார்கள்.
ஏற்றுமதி- இறக்குமதி வல்லுநர்கள்,வெளிநாட்டு ஆலோசகர்கள்,உள்நாட்டு அரசு அதிகாரிகள் என எல்லாரும் சேர்ந்து கைகோர்த்துக் கொண்டுச் செயல்படுவார்கள். நாட்டின் இறையாண்மை, மக்கள் நலன்,எதிர்காலம் குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் கவலையின்றி இவர்கள் எல்லாரும் புகுந்து விளையாடுவார்கள்.
அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் என்கிற வடிவில் அற்பமான உலக லாபங்களுக்காக நாட்டு நலன்களையும் எதிர்காலத்தையும் வெளிநாட்டு பண முதலைகளுக்கு அடகு வைக்கத் துணிந்து விடுகின்ற, மனச்சாட்சியற்ற கைக்கூலிகள் இவர்களுக்கு எல்லா நாடுகளிலும் கிடைத்து விடுவது தான் வேதனையான முரண்பாடு ஆகும்.
இவ்வறாக, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு சிறுக சிறுக மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியில், குறிப்பாக அமெரிக்காவின் கிடுக்குப் பிடியில் முழுமையாகச் சிக்கிவிடும். உடைத்தெறிய முடியாத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அடிமைகளின் நிலைக்கு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆளாகிவிடும்.
அடுத்த கட்டமாக அந்த ஏழை நாட்டின் கரன்ஸி நாணயம் மீது கை வைக்கப்படும்.
நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிடு; இல்லையேனில் புதிய கடன் பொருளாதார ஒப்பந்தங்கள் கிடையாது என எச்சரிக்கை விடப்படும். நாணயத்தின் மதிப்பைத் திரும்பத் திரும்பக் குறைக்கும் போது உலக அரங்கில் அந்த நாணயத்துக்கு மதிப்பில்லாமல் போகும்.அதற்கு நேர்மாறாக, அதனோடு ஒப்பிடும்போது அமெரிக்க டாலர், பவுண்டு,ஸ்டெர்லிங், ஃபிராங், யென் போன்றவற்றின் மதிப்பு எகிறிக் கொண்டே போகும்.
உலக வங்கி,ஐ.எம்.எஃப் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் ஆடிய ஆட்டத்தால் இன்று உலக அரங்கில் அமெரிக்க டாலர் கொடி கட்டிப் பறக்கின்றது. அதனோடு எந்தவொரு மூன்றாம் உலக நாட்டின் நாணயத்தையும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதன் ஆதிக்கம் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.சர்வதேச அரங்கில் எந்தவொரு நாட்டின் கரன்ஸியின் மதிப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் செல்வாக்கும் கணிக்கப்படும். கரன்ஸி வீழ்ந்தால் அந்த நாட்டின் செல்வாக்கும் சரிந்து விடும்.
2. வெளிநாட்டு வணிகம்
இரண்டாவதாக வெளிநாட்டு வணிகத்தை எடுத்துக் கொள்ளுவோம்.எந்த நாட்டுடன் எப்படிப்பட்ட வணிகத்தை வளர்த்துக் கொள்வது? உள்நாட்டு வணிக நலன்கள் பாதிப்படையாத வகையில் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்துக்கான கொள்கையை வகுப்பதெப்படி? போன்றவற்றைக் குறித்தெல்லாம் சுயமாக நிர்மணம் செய்கின்ற உரிமை ஒரு நாட்டுக்கு உண்டு.
ஒரு நாட்டுக்கு இருக்கின்ற இந்த சுய நிர்ணய உரிமையைப் பறிக்கின்ற நோக்கத்துடன் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளால் அமைக்கப்பட்ட நிறுவனம் தான் உலக வர்த்தக அமைப்பு (WTO)
வெளிநாட்டு வணிகத்தில் ஒரு நாட்டுக்கு இருக்கின்ற சுதந்திரத்தையும் உரிமையையும் முற்றாகப் பறிக்கின்ற வலுவான ஆயுதமாக இது இருக்கின்றது. இதனோடு சுதந்திர சந்தை, சந்தை பொருளதாரம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் மூலகமாகவும் வெளிநாட்டு வணிகத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருக்கின்ற சுதந்திரமும் உரிமையும் திட்டமிட்ட முறையில் பறிக்கப்படுகின்றது. இதன் சமீபத்திய எடுத்துக்காட்டாக ஈரான் -இந்திய எண்ணெய்க்குழாய் அமைக்கின்ற திட்டம் முடக்கப்பட்டதைச் சொல்லலாம். இவற்றுக்குப் பின்னால் அமெரிக்க, யூத சூழ்ச்சிகளும் சதித் திட்டங்களும் இயங்குகின்றன என்பது வெளிப்படை.
சுதந்திர சந்தை, சந்தை பொருளாதாரம்,ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வணிகவசதி, சில குறிபிட்ட நாடுகளை மட்டும் அதிகமாக சலுகை காட்டப்பட வேண்டிய நேசநாடுகளை(Most Favoured Countries) அறிவிக்குமாறு அமெரிக்கா செய்கின்ற நிர்பந்தம்- இவையெல்லாமே எதற்காக என நினைத்தீர்கள்?
யாருக்குத் துணை நிற்கின்ற ஏற்பாடுகள் இவை என நினைத்தீர்கள்?
இவற்றால் மூன்றாம் உலக நாடுகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. அதற்கு மாறாக மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களும் காலூன்றுவதற்குத் தான் இவையனைத்தும் துணை நிற்கின்றன.இதுதான் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.
இன்னும் வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு இவை பற்றியும் உலகமயமாக்கல் தொடர்பில் எழுத வேண்டியிருப்பதால். தொடரும்
ஆதாரங்கள்: நூல் உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
source: http://valaiyukam.blogspot.in/2012/04/blog-post_17.html