மோடிக்காக தூதரின் வாயசைவுக்கு டப்பிங் கொடுக்கும் ஊடகங்கள்!
நரியை பரியாக்கும் கதையாக மோடிக்கு பி.ஆர்.ஓ வேலை செய்ய பத்திரிகைகள் துடித்துக் கொண்டிருப்பதால், செய்தியை திரித்து வெளியிடுகின்றன.
அக்டோபர் 3-ம் தேதி “குஜராத்தை புறக்கணிக்க முடியாது: இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர்” என்ற தலைப்பில் தினமணியிலும், ‘Can’t ignore Gujarat, says British High Commissioner’ என்று ‘The Hindu’ பத்திரிகையிலும், “குஜராத் மாநிலத்தையும், மோடியையும் புறக்கணிக்க முடியாது: பிரிட்டன் தூதர்” என்று தினமலர் பத்திரிகையிலும் செய்தி ஒரே மாதிரியாக வெளியாகி உள்ளது.
குஜராத்தில் 2002-ல் நடந்த முசுலீம்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு பிறகு மோடிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கான அனுமதியை தர தொடர்ந்து மறுத்து வருகின்றன.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், காசுமீர் பற்றியெல்லாம் அவ்வப்போது சவடால் அடிக்கும் மோடி இது பற்றி கடந்த பத்தாண்டுகளாக வாயே திறக்கவில்லை.
இந்நிலையில் 2012 அக்டோபரில் மோடியை பிரிட்டிஷ் ஹை கமிசனர் ஜேம்ஸ் பெவன் சந்தித்தார். அச்சந்திப்பு முடிந்தவுடன் “மோடி மீதான பிரிட்டனின் பார்வை மாறிவிட்டதா” என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “இல்லை” என்றுதான் அவர் பதிலளித்திருந்தார்.
தற்போது மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்ட நிலையில் “மோடி குறித்த பிரிட்டன் நிலையில் ஏதேனும் மாற்றம் உண்டா ?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கடந்த ஆண்டு மோடியை சந்தித்தபோது கூறியதையே இப்போதும் கூறுகிறேன். மோடியை சந்திப்பதே அவரது முந்தைய செயல்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகி விடாது” என்று தெளிவாகக் கூறி விட்டார்.
அப்படியானால் “மோடியை சந்திப்பதே அவரை அங்கீகரிப்பதாகி விடாது: பிரிட்டன் தூதர்” என்றுதான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் நரியை பரியாக்கும் கதையாக மோடிக்கு பி.ஆர்.ஓ வேலை செய்ய பத்திரிகைகள் துடித்துக் கொண்டிருப்பதால், “குஜராத்தையும், மோடியையும் புறக்கணிக்க முடியாது” என பிரிட்டன் தூதர் சொல்லியதாக செய்தியை திரித்து வெளியிடுகின்றன. இப்படி கூஜா தூக்கும் வேலையில் தமிழ், ஆங்கிலம், நடுநிலை, தேசியம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் பத்திரிகைகள் அனைத்தும் ‘மோடி மேனியா’வால் பாதிக்கப்பட்டுள்ளன.
“எங்களால் புறக்கணிக்க முடியாத அளவுக்கு குஜராத் ஒரு முக்கியமான மாநிலம். அதன் முதல்வராக உள்ள மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே இந்தியாவுடன் உறவைப் பேண விரும்பினால் குஜராத்தை எங்களால் புறக்கணிக்க முடியாது” என்றும் பிரிட்டிஷ் ஹை கமிசனர் ஜேம்ஸ் பெவன் கூறியுள்ளார்.
இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தையும் புறக்கணித்து விட்டு எப்படி ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒரு நாடு உறவு பாராட்ட முடியும். என்பதைத்தான் ஜேம்ஸ் பெவன் இங்கே குறிப்பிட்டுள்ளார். இது குஜராத்தை போலவே பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் தானே. எனினும் பத்திரிகைகள் மோடிக்காக இதனை ஒரு தனிச்சிறப்பான விசயமாக தலைப்பிட்டு புளங்காகிதம் அடைகின்றன. மக்களிடையே மோடி பற்றிய இமேஜை இப்படி ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்த முயல்கின்றன.
போர்க்குற்றவாளியாக இருப்பினும் ராஜபக்ஷேவுக்கும் கூட இது பொருந்தும் தானே. ராஜபக்ஷேவை தவிர்த்து விட்டு இலங்கையைப் பற்றி பேச முடியாது தானே. இதனால் தான் இலங்கையில் குற்றவாளியே குற்றத்தை விசாரிக்கும்படி ஐ.நா செயலர் பணித்துள்ளார். இப்படித்தான் பாசிஸ்டுகள் உலக அளவில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதம், “இந்தியாவில் பிரபல அரசியல் தலைவர்களை சந்திப்பது எங்கள் கடமை. நான் எந்த ஒரு தனி நபருடன் பேசவில்லை. குஜராத் மாநிலத்துடன் தான் பேசினேன். எனவே இதனை மோடிக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று பிரிட்டிஷ் ஹை கமிசனர் கூறியிருந்தார்.
பிரிட்டன் எம்.பி. பாரி கார்ட்னர், மோடிக்கு பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் பேச அழைப்பு விடுத்ததைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது தனிப்பட்ட எம்.பி ஒருவரின் தனிப்பட்ட உரிமை மட்டுமே என்றும், அது அரசின் அழைப்பு அல்ல என்றும் அப்போது விளக்கமளித்திருந்தார் ஜேம்ஸ் பெவன். குஜராத் படுகொலையின் போது 3 பிரிட்டிஷ் பிரஜைகள் இறந்து போயுள்ளனர். அது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அப்போது கோரியிருந்தார்.
தொழில் துவங்க வாய்ப்பாக இருப்பதால் பன்னாட்டு முதலாளிகளுக்கு குஜராத் தேவைப்படுகிறது. அதற்காக மோடியுடன் பேசுவதற்கு முன்வருகிறார்கள். ஆனால் அவரது பழைய மனித உரிமை மீறல்களை தாங்கள் கைவிடவில்லை என்பதை சந்தையின் தேவைக்கேற்ப பேசுவதில் நாடுகளின் தூதுவர்கள் தனிப்பயிற்சி பெற்றுதான் இங்கு வருகின்றனர் என்பதற்கு உதாரணம்தான் ஜேம்ஸ் பெவனின் கூற்றுக்கள்.
தற்போது “இந்திய ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனினும், நாங்கள் பார்வையாளர்களாகத்தான் இருக்க முடியுமே தவிர, விமர்சகர்களாக இருக்க முடியாது” என்று கூறியுள்ளார். தொழில் வாய்ப்புகளுக்காக சந்தித்து முடித்தவுடன், மோடியின் இனப்படுகொலையையும், குஜராத்தின் தொழில் வாய்ப்புகளையும் தராசின் இரு தட்டுகளில் வைத்து மதிப்பிடும் பிரிட்டிஷ் தூதர், ஒருவேளை மோடி பிரதமராகி விட்டால் என்ற வாய்ப்பை கணக்கிட்ட பின், அவரது மனித உரிமை மீறல் குறித்து பட்டும் படாமல் தனது கருத்தைச் சொல்கிறார்.
மோடிக்கு பிரிட்டனில் விசா மறுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விண்ணப்பித்தால் விசா வழங்கப்படுமா எனக் கேட்டதற்கு, “யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை” எனக் கூறி இதனை இன்னும் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜெம்ஸ் பெவன்.
மோடிக்கு இந்துமத வெறி அடையாளத்தை தாண்டிய ஒரு பொது அடையாளம் பிரதமர் வேட்பாளர் பாத்திரத்திற்கு தேவைப்படுகிறது. அதற்கு காந்தியவாதிகளிடம் போகிறார், தன்னை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் தலைவனாக பீகாரில் இடைநிலை சாதிகளிடம் ரகசியமாக முன்வைக்கிறார்.
இப்போது வெளிநாட்டு தூதுவர்களின் வாயில் பிரம்மரிஷி பட்டத்தை எதிர்பார்த்திருக்கிறார். சங் பரிவாரங்களும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக இப்போதாவது ஆட்சியை பிடிக்க தவறினால் கட்சி ஆட்டம் கண்டு விடும் என்பதால் மோடி நடத்தும் மோடி மஸ்தான் வேலைகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
மேலை நாடுகளோ சீனாவோடு பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து கொண்டே மனித உரிமை மீறல் என்று ஒரு லகானை வைத்திருப்பது போல மோடியின் மீதும் வைக்க விரும்புகின்றன. ஒருவேளை மோடியின் அன்பால் அதாவது பன்னாட்டு நிறுவனங்களுக்கான சலுகைகளால் அந்த லகான் மறையவும் வாய்ப்பிருக்கிறது.
இருப்பினும் ஒரு செய்தியை திரித்து மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை உற்பத்தி செய்வதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று.
source: http://www.vinavu.com/