குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? (3)
அடுத்து இந்த “முஹ்க்கமாத்” வசனங்களை அறிந்துகொள்ள, அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமா? என்று சிறிது பார்த்துவிட்டு, முத்தஷாபிஹாத்” வசனங்களைப் பற்றி ஆராய்வோம்
மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நூல் என்ற அடிப்படையில் இவர்கள் சொல்லும் அத்தனைக் காரணங்களும் முற்றிலும் உண்மையே.
ஒரு அறிஞன் ஒரு நூலை உருவாக்குகிறான் என்றால், அதை முழுமையாக நிறைவு செய்து, முழுமையான நிலையில் மக்களிடம் ஒப்படைக்கிறான். அந்த நூலிலுள்ள அனைத்து விஷயங்களும் அந்த அறிஞனாலேயே செயல்படுத்திக் காட்டப்படும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது.
அப்படி ஒருக்கால் விளக்கினாலும் அந்த அறிஞனது சிந்தனைத் திறனிலேயே கோளாறு இருக்கவும் வாய்ப்புண்டு. அவனே அவன் எழுதியதற்குத் தவறான விளக்கம் கொடுக்கவும் வாய்ப்புண்டு. அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை வைத்தே விளங்க வேண்டியிருக்கிறது.
அப்பொழுது அவர்களுக்குரிய மொழியறிவு ஆற்றல், திறமை இவற்றை அடிப்படையாக வைத்தே ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறார்கள். ஒரு வார்த்தைக்கு பல பொருள் வரும் இடங்களில் மாறுபட்ட கருத்துக்களை எடுக்கவும் இடம் ஏற்படுகின்றது.
சுருங்கச் சொல்லின் மனிதனால் உருவாக்கப்பட்ட நூல்களைக் கொண்டு கருத்து மோதல்கள் தீர எப்படி வாய்ப்புகள் இருக்கின்றனவோ, அதேபோல் புதிய கருத்து மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதை விட்டும் மனிதனால் உருவாக்கப்படும் எந்த நூலும் விதிவிலக்குப் பெறமுடியாது. இதைத்தான் அல்லாஹ் தெளிவாக இவ்வாறு சுட்டிக்காட்டுகிறான்.
“இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (குர்ஆன் 4:82)
ஆனால் இப்போது நாம் செய்யும் பெரிய தவறு, ஹிமாலயத் தவறு மனிதனால் உருவாக்கப்பட்ட நூல்களை எந்தக் கண்ணோட்டத்தோடு நாம் அணுகுகிறோமோ. அதே கண்ணோட்டத்தோடு, குர்ஆனையும் நாம் அணுகுவதேயாகும். குர்ஆன் மனிதன் எழுதிய ஒரு நூல் அல்ல, அதனால் தான் எடுத்த எடுப்பிலேயே அல்லாஹ் அல்குர்ஆனில் இது இறைவன் அருளிய நெறிநூல், இதில் சந்தேகமே இல்லை(2:2) என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறான்.
இறைவனால் கொடுக்கப்பட்ட நெறி நூலிற்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட நூலுக்கும், மலைக்கும் மடுவுக்கும், இல்லை அதை விட பாராதூரமான வித்தியாசம் உண்டு. மனித நூல் கருத்து மோதலை உண்டாக்கவும் கூடும். நெறிநூல் கருத்து மோதலை தீர்க்குமேயல்லாது,. ஒருபோதும் கருத்து மோதலை உண்டாக்காது. கருத்து மோதலை தீர்ப்பதற்காகவே நெறிநூலை இறக்கியதாக அல்லாஹ் உறுதி கூறுகிறான்.
“அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் விகற்பங்களை தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய நெறிநூலையும் இறக்கி வைத்தான். (2:213)
”(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ்விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ, அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இந்நெறிநூலை இறக்கினோம்.” (16:64)
இவ்வளவு தெளிவாக அல்லாஹ் சொன்னதற்குப் பிறகு, தங்களின் இலக்கண, இலக்கிய திறமைகளைக் கொண்டு முஹ்க்கமாத் வசனங்களில், இப்படியும் பொருள் எடுக்கலாம்; அப்படியும் பொருள் எடுக்கலாம் என்று கூறி கருத்து மோதல்களை உண்டாக்குகிறவர்கள் குர்ஆனை நெறிநூல் என்று ஒப்புக் கொள்ளவில்லையோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது. நெறிநூல்களைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் இவர்கள் நிலைதடு மாறுகிறார்களா?
அல்லாஹ்(ஜல்) அல்குர்ஆனில் 6236 வசனங்களையும், ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் இறக்கி, இதிலுள்ளபடி பார்த்து, நடந்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டிருந்தாலாவது, இவர்களாக ஆராய்ந்து பார்த்து எடுப்பதில் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அந்த நிலையிலும் கருத்து மோதல்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக , அல்லாஹ்(ஜல்) 23 வருடங்களில் கொஞ்சம், கொஞ்சமாக தேவைப்படும் சந்தர்ப்பங்களில், தேவையான ஆயத்துக்களை இறக்கி நபி (ஸல்) அவர்களும், நபிதோழர்களும் அவற்றைச் செயல்படுத்திக் காட்டவும் செய்திருக்கிறான். இதை கீழ்க்காணும் இறை வசனங்கள் உறுத்திப்படுத்துகின்றன.
இன்னும் இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை? என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு நாம் உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக (கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி) மேலும் நாம் இதை ஒழுங்கான முறையில் அமைத்துள்ளோம். (25:32)
தெளிவான அத்தாட்சிகளையும், நெறிநூல்களையும், (அத்தூதர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். நபியே!) அவ்வாறே நீர் நெறிநூலையும் உம்பால் அருளினோம். மனிதர்களுக்காக (உம்பால்) அருளப்பட்ட இ(ந்நெறிநூ)லை அவர்கள் சிந்திக்கும் பொருட்டுத் தெளிவாக அவர்களுக்கு நீர் விளக்குவீராக. (16:44)
ஆக, தத்துவ ரீதியிலும் (Theoretically), நடைமுறை நீதியிலும் (Practically), தெளிவு படுத்தப்பட்டுவிட்ட முஹ்க்கமாத் வசனங்களில், இவர்கள் தங்கள் இலக்கண, இலக்கிய ஞானங்களைக் கொண்டு குழப்புகிறார்கள். புதிய புதிய கருத்துக்களைக் கொண்டு, தெளிவு படுத்தப்பட்டவற்றை, மீண்டும் தெளிவு படுத்த முனைபவர்களை நாம் என்னவென்பது? எனவே ஆயாத்தும் முஹ்க்கமாத்” என்ற குர்ஆனின் வசனங்களைப் பொறுத்தமட்டில் அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமே இல்லை என்று தெளிவாகச் சொல்லி விடலாம்.
அவர்களின் இந்த வாதம் உண்மையானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் தாருந்நத்வாவைச் சேர்ந்த அரபி இலக்கண, இலக்கிய பண்டிதர்களையே அல்லாஹ் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவர்களை புறக்கணித்துவிட்டு, எழுதப் படிக்கத் தெரியாத, இலக்கண, இலக்கிய பாண்டித்யம் இல்லாத சாதாரண மக்களையே தேர்ந்தெடுத்தான். இதிலிருந்து சுயகருத்துகளைப் புகுத்தும் இலக்கண, இலக்கிய ஞானமுள்ள பண்டிதர்களை விட சுயகருத்துக்களைப் புகுத்தாமல், உள்ளதை உள்ளபடி சொல்லக்கூடிய சாதாரண நிலை உடையவர்களே மார்க்க சேவைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்பது மிகத் தெளிவாகப் புரிகின்றது. இதனைத் தெளிவாக கீழ்வரும் வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டவும் செய்கிறான்.
”அவன் தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை படித்துகாட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை, அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.” (62:2)
அவர்கள் அரபி பேசக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற வாதமும், வீண் வாதமாகும்.எந்த மொழியைப் பேசக் கூடியவர்களாக இருந்தாலும், எழுதப்படிக்கத் தெரியாத நிலையில், பேச்சு வழக்கிலுள்ள கொச்சைப் பேச்சை பேசக்கூடியவர்களாகத்தான் இருப்பார்களே அல்லாமல், அவர்கள் இலக்கண, இலக்கிய பாண்டித்யம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். “மாரிஸ்புகைல்” போன்ற பெரும் அறிஞர்கள், “அரபிமொழி கற்றுக் கொண்டபின்தான் குர்ஆனை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது என்று சொல்கிறார்களே என்று சிலர் ஐயத்தைக் கிழப்பலாம். இந்த அவரது கூற்று விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட “முத்தஷாபிஹாத்” வசனங்களைப் பற்றிய விஷயமாகும் என்ற விபரங்களை முத்தஷாபிஹாத் வசனங்கள் பற்றி ஆய்வு செய்யும்போது விரிவாகப் பார்ப்போம்.
இதுவரை நபி(ஸல்) அவர்களின் 23 வருட நபித்துவ காலத்திலேயே குர்ஆனின் “முஹக்கமாத்” வசனங்கள் தத்துவ ரீதியாகவும் (Theoretically), நடைமுறை ரீதியாகவும் (Practically), தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்தப்பட்டு விட்டன. முடிந்து போன விஷயத்தில் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம் என்று மனிதர்கள் புகுந்து தங்கள் மனித அபிப்பிராயங்களை மார்க்கத்தில் நுழைப்பது பெருங்குற்றமாகும். அந்த அடிப்படையில் தங்கள் அரபி ஞானத்தைக் கொண்டும், இலக்கண இலக்கிய திறமைகளைக் கொண்டும் மார்க்த்தில் பெருமை பேசக்கூடாது. மார்க்கத்தை உபதேசிக்கும் தகுதி தங்களுக்கு மட்டுமே உண்டு என்று மார்தட்டக்கூடாது. உண்மையில் அரபி மொழி இலக்கண இலக்கிய ஞானம் இவை காரணமாக மார்க்கத்தில் தங்கள் சுயகருத்துக்களைப் புகுத்தும் பண்டிதர்களை விட, சுய கருத்துக்களைப் புகுத்தாமல், உள்ளதை உள்ளபடி சொல்லும் சாதாரண மக்களே, மார்க்க சேவைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்பதைக் குர்ஆனின் 62:2 வசனம் தெளிவுபடுத்துகின்றது என்பதை விரிவாகப் பார்த்தோம்.
முல்லாக்களின் வாதம்
மார்க்க விஷயத்தில் அரபிமொழி இலக்கண, இலக்கிய தேர்வு பெற்ற பண்டிதர்களுக்கு யூகம் செய்து ஒன்றைச் சொல்ல அனுமதி இல்லை என்ற நமது கருத்தை மவ்லவிகள் மறுக்கிறார்கள். குர்ஆனின் 4:83 வசனத்தில், தகுதி பெற்றவர்கள் மார்க்கக் காரியங்களில் ஊகித்தறிந்து சொல்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறதே! என்று அந்த வசனத்தில் வரும் இஸ்தின்பாத்” என்ற வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு வாதாடுகிறார்கள்.
குர்ஆன் முழுவதையும் ஆய்ந்து நோக்கியும், 4:83ல் உள்ள இந்த “இஸ்தின்பாத்” என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு ஆதாரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த “இஸ்தின்பாத்” மார்க்க விஷயத்தில் அல்ல, பயம், பீதி, பாதுகாப்பு போன்ற உலகக் காரியங்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டுமே தகுதியுடையவர்கள் ஊகித்தறிந்து சொல்லும் அனுமதியை வழங்கியுள்ளது என்பதை அறியத் தவறி விடுகிறார்கள். அந்த வசனத்தை முழுமையாகத் தருகிறோம். நீங்களே பார்த்து நடுநிலையான ஒரு முடிவுக்கு வர அன்புடன் வேண்டுகிறோம்.
“மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால் உடனே அவர்கள் அதைப் பரப்பி விடுகிறார்கள். அவர்கள் அதை அல்லாஹ்வின் தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிமளிடமோ தெரிவித்தால், அவர்களில் அதை ஊகித்து அறியக் கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். (4:83)
இந்த வசனம் உலகில் ஏற்படும் நல்லவை அல்லது தீயவை சம்பந்தப்பட்ட விஷயத்தை ஊகிப்பது பற்றியே குறிக்கிறது. மறுமையில் நாம் அனுபவிக்கப்போகும் நன்மை தீமை பற்றிய விஷயத்தை ஊகித்து அறிவது அல்ல என்பதைத் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றது. உலகில் ஏற்படும் நல்லவை அல்லது தீயவை சம்பந்தமாக ஓர் அறிஞர் ஊகம் செய்து சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்று பகிரங்கமாக தெரிய வருவதற்கு முன்பே யூகம் செய்து சொல்லப்பட்டாலும், பின்னால் அந்த யூகம் சரியானது அல்லது தவறானது என்பதைத் திட்டவட்டமாக அனைவரும் அறிந்து கொள்கின்றனர். மரணத்திற்குப் பின் மறுமையில் அனுபவிக்கும் ஒன்றாக அது இல்லை. எனவே யூகம் செய்து சொன்னவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அந்த யூகம் தவறு என்று தெரிந்தவுடன், பெரிய மனிதர் சொன்னார் என்பதற்காக, அந்தத் தவறான யூகத்தைத் தொடர்ந்து செய்து யாரும் நஷ்டமடையத் தயாராக மாட்டார்கள்.
மனிதர்களிடையே சிறப்பான பல அம்சங்களைப் பெற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யூகமே, தவறு என்று தெரிந்த பின் நபித்தோழர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சென்றடைந்தவுடன் அங்கு அன்சாரிகள் செய்து கொண்டிருந்த அயல் மகரந்தச் சேர்க்கையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூகம் செய்து வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். அன்சாரிகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யூகத்தை ஏற்று அந்தச் செயலை விட்டு விட்டார்கள். ஆனால் அந்த வருட அறுவடையிலேயே அந்த யூகம் தவறு என்பதை கண்கூடாகக் கண்டு கொண்டார்கள். தவறு என்று தெரிந்த பின் நபி(ஸல்) அவர்கள் யூகம் செய்து சொன்ன விஷ்யமாயிற்றே என்று தொடர்ந்து செய்ய அவர்கள் தயாராக இல்லை. நபி(ஸல்) அவர்களிடம் வந்து முறையிடுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்,
“மார்க்க விஷயத்தில் நான் ஒன்றை உத்திரவிடும்போது, அதை ஏற்று நடங்கள். என் அபிப்பிராயத்தில் நான் ஒன்றைச் சொல்வேனேயானால் நானும் மனிதனே!” (முஸ்லிம்) என்று கூறி, மனித யூகத்திற்கு, அது தன்னுடைய யூகமாக இருந்தாலும், மார்க்கத்தில் இடமில்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்கள். இங்கு மனித யூகம் நஷ்டத்தை தருகின்றது என்று கண்டு கொண்டவுடன் நபி(ஸல்) அவர்களின் யூகமே கைவிடப்படுகின்றது என்பதை நாம் பார்க்கும்போது, வேறு யாருடைய யூகத்தையும் அது தவறு என்று தெரிந்து கொண்டு யாரும் எடுத்து நடக்கப் போவதில்லை என்பது நமக்குத் தெளிவாகவே தெரிகின்றது. எனவே உலகக் காரியங்களில் யார் யூகம் செய்து சொன்னாலும் அதைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை. அது மார்க்கமும் இல்லை.
ஆனால் நமது கவலை எல்லாம் 4:83 குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டி மார்க்கக் காரியங்களில் யூகம் செய்து சொல்வது மக்களை எவ்வளவு தூரம் வழிகேட்டில் இட்டுச் செல்கின்றது. அப்படி பகிரங்கமான வழிகேட்டில் இருந்தாலும், அவற்றின் நஷ்டத்தை இந்த உலகில் காணாது, நாளை மறுமையில் காணும் நிலை இருப்பதால் மக்கள் அப்படிப்பட்ட மூடக் காரியங்களை பக்தியோடு காலங்காலமாகச் செய்து வரும் துர்பாக்கிய நிலை உருவாகி விடுகின்றதே என்பதேயாகும்.
உதாரணமாக தலைவர்களின், பெரியவர்களின் யூக அடிப்படையில் பெரும்பான்மையோர் மிகவும் பக்தியோடு செய்து வரும் பாத்திஹாக்கள், மவ்லிதுகள், புரு(டா)தா, ஸலவாத்துநாரியா, இறந்தவர்களின் பெயரால் நடைபெறும் கத்தம், அவுலியாக்களின் சமாதிகளில் நடைபெறும் சடங்குகள், அவுலியாக்களின், நபிமார்களின் பொருட்டால் கேட்கப்படும் பிரார்த்தனைகள், தக்லீது(மத்ஹபுகள்), தரீக்காக்கள் (தஸவ்வுஃப்), பிரிவுகளை உண்டாக்கும் இயக்கங்கள் இவை அனைத்தும் தெளிவாக குர்ஆனுக்கும், ஸஹீஹான ஹதீதுகளுக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றன.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நேரடி வாரிசுகளான, தங்களை முஸ்லிம்கள் என்று நம்பிக் கொண்டிருந்த குறைஷிகளைக் காஃபிர்கள் என்று அல்லாஹ் தீர்ப்பு வழங்கி இருக்கிறதற்குரிய தெளிவான காரணத்தை குர்ஆன் 18:102-ம் வசனத்திலிருந்து 18:106ம் வசனம் வரை தெளிவுபடுத்துகின்றது. அந்த குறைஷிகள் இறந்து போன நபிமார்களையும், அவுலியாக்களையும் தங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும், இறைவனை நெருங்கச் செய்யும் இரட்சகர்களாக, பாதுகாவலர்களாகக் கருதிக் கொண்டு அவர்களை சிலை வடிவிலும், கபுரு வடிவிலும் வைத்துச் சடங்குகள் செய்ததே அவர்கள் காஃபிரானதற்குரிய காரணமாகும். (பார்க்க 10:18, 39:3)
இவ்வளவு தெளிவாக இறைவனின் அடியார்களைப் பற்றி (நபிமார்கள், அவுலியாக்கள்) குர்ஆன் கூறிக் கொண்டிருக்க முஸ்லிம்கள் இன்று இறந்தவர்களின் பெயராலும், அவுலியாக்களின் பெயராலும் சடங்குகள் செய்து கொண்டிருப்பதின் காரணம், அவர்கள் இமாம்களாக, பெரியவர்களாக தலைவர்களாக எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மனித யூகங்களை மார்க்கமாக்கியதேயாகும். ஆக இவர்கள் செய்யும் இந்தச் செயல்கள் அனைத்தும் இவர்களை நரகத்தில் கொண்டு சேர்க்கக்கூடியனவாக இருந்தும், அவற்றின் கெடுதிகளைக் கண்கூடாகக் காண முடியாமல் இருப்பதாலும், நாளை மறுமையிலேயே அவற்றின் கொடிய விளைவுகளை நரகில் காண வேண்டிய நிலை இருப்பதாலுமே இவற்றை பக்தியோடு காலங்காலமாகச் செய்து வருகின்றனர்.
ந்த உலகில் இப்படிப்பட்ட அனாச்சாரங்களை முன்சென்ற பெரியார்கள், தலைவர்கள் இவர்களின் மீது குருட்டு நம்பிக்கை வைத்து மிகவும் பக்தியோடு செய்து வருகிறார்கள். நாளை இவர்கள் நரக நெருப்பில் போட்டு பொசுக்கப்படும்போது, நரக வேதனையை நேரடியாகப் பார்க்கும் போது என்ன சொல்லிக் கதறுவார்கள் என்பதையும் அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக எடுத்துச் சொல்கிறான்.
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “”ஆ கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே! அல்லாஹ்வுடைய தூதருக்கு வழிப்பட்டிருக்க வேண்டுமே!”
“எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் (ஸாதாத்துக்களுக்கும்) எங்கள் பெரியவர்களுக்கும் (அகாபிரீன்களுக்கும்) வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள். எங்கள் ரப்பே! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் ததருவாயாக; அவர்களைப் பெரும் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக;”” என்று கதறுவார்கள்”. (33:66,67,68)
இவ்வளவு தெளிவாக அல்லாஹ் குர்ஆனில் கூறி இருப்பதைப் புறக்கணித்துவிட்டுத் தங்களின் ஸாதாத்துகள், அகாபிரீன்கள் பெயரில் பெரும் நம்பிக்கை வைத்து, அவர்களின் மனித யூகங்களைக் கொண்டு உண்டாக்கப்பட்டுள்ள கத்தம், பாத்திஹா, மவ்லிது, புருதா, ஸலவாத்து நாரியா, சமாதிச் சடங்குகள், தர்கா சடங்குகள், தக்லீது(மத்ஹபுகள்), தரீக்காக்கள் (தஸவ்வுஃப்) இயக்கங்கள் போன்ற காரியங்களில் மூழ்கி இருப்போர் சற்று நிதானமாகவே சிந்திப்பார்களாக.
இங்கு இந்த உலகில் சிந்தித்து விளங்கி அவற்றைவிட்டு தவ்பா செய்யத் தவறினால், நாளை கண்டிப்பாக நரகில் போய் அல்லாஹ் சொல்வது போல் கதறத்தான் போகிறார்கள். நிச்சயமாக எந்த நபியும், எந்த வலியும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் கொடுக்க நாம் துஆ செய்கிறோம். இந்த விஷயங்கள் கசப்பாக இருந்தாலும் எடுத்துச் சொல்வது, அவர்களின் ஹிதாயத்திற்காக துஆ செய்வது எங்கள் மீது கடமையாக இருக்கிறது.
4:83 வசனத்தின்படி மார்க்கப் பண்டிதர்கள் மார்க்க விஷயங்களில் யூகம் செய்து அறிவித்தவை.இந்தச் சமுதாயத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது என்பதைச் சற்று நிதானமாகவே சிந்தியுங்கள். மார்க்க விஷயங்களில் எந்த இமாமுக்கும், எந்த அல்லாமாவுக்கும் யூகம் செய்ய அனுமதி இல்லை என்பதை தெளிவாக உணருங்கள். தக்லீதையம், தஸவ்வுஃபையும், இயக்கங்களையும் விட்டு தெளபா செய்து, அவை மூன்றைக் கொண்டும் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டுள்ள எல்லா சடங்கு, சம்பிரதாயங்களையும் விட்டு விடுபடுங்கள். அடுத்து முத்தஷாபிஹாத் வசனங்களைப் பற்றிப் பார்ப்போம்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.