இயலாமையை மறைப்பதற்கு இட ஒதுக்கீடு போராட்டங்கள்..!
CMN SALEEM
“இடஒதுக்கீடு” என்ற வார்த்தை – கருத்து நாட்டின் பிற சாதிய அமைப்புகள் போல இன்றைய முஸ்லிம் அமைப்புகளுக்கும் தங்களை உயிரோட்டமாக வைத்துக் கொள்வதற்கு பேருதவி செய்து வருகிறது.
அகில இந்திய அளவிலும் – தமிழக அளவிலும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும், 2007இல் வழங்கப்பட்ட 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும், அதை 5 முதல் 9 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் சமீப காலமாக முஸ்லிம் அமைப்புகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஆகியவற்றில் முதன்மை கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
“முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம்” என்ற உயர்ந்த இலட்சியத்தை இலக்காகக்கொண்டுதான் சமூக அமைப்புகள் உருவாக்கம் பெறுகின்றன.
ஆனால் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு, அரசுத்துறை சார்ந்த கல்வி மற்றும் வேலைவாப்ய்பில் இடஒதுக்கீடு என்ற சிறப்புச் சலுகையை பெறுவது ஒன்றே வழி என்ற மேலோட்டமான செயல்பாடுகளை பார்க்கின்றபோது சமூக அமைப்புகளிடம் சிந்தனை வறட்சி ஏற்பட்டுள்ளதோ ? அல்லது நிலையான முன்னேற்றத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்துவதற்கு கடினமானவை இடஒதுக்கீடு கோரிக்கை இலகுவானது என்ற சுயநலம் சார்ந்த சிந்தனையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
வாழ்வியல் ரீதியான அனைத்துப் பிரிவிற்கும் முஸ்லிம்கள் இஸ்லாமிய வழிகாட்டலை மட்டுமே பின்பற்ற வேண்டும். மாற்றாருடைய எந்தத் திட்டமும் முஸ்லிம்களின் நிலையை உயர்த்தி விடாது என்று இஸ்லாம் உறுதியாக தடுத்திருப்பதை இடஒதுக்கீடு மற்றும் இன்றைய தேர்தல் முறை போன்ற பல விசயங்களில் மிக வசதியாக நாம் மறந்துவிடுகிறோம்.
இதனால் வரலாற்றின் அடிப்படையில் நிலையான நீடித்த வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்திய முஸ்லிம் சமூகம் நகர்வதில் பல இடையூறுகள் ஏற்படுகின்றன.
இந்திய நாட்டின் பிற சமூகங்களின் பிரச்சினைகள், தேவைகள், நோக்கம் ஆகியவற்றிலிருந்து முஸ்லிம்களின் தேவைகளும் பிரச்சினைகளும் நோக்கமும் வேறுபட்டவை என்பதை முஸ்லிம் சமூக சிந்தனையாளர்கள் உறுதியாக நம்ப வேண்டும்.
இந்த நம்பிக்கையில் தெளிவற்ற நிலைதான் பிற மக்களுக்கான நலத்திட்டங்கள், சலுகைகள் எல்லாம் முஸ்லிம்களுக்கும் பொருந்தும், அது அவர்களுடைய வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் என்ற சிந்தனை பெருக காரணமாகிறது. அதனால் தான் அவர்களைப் போல எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும், வங்கிக் கடன் வேண்டும், கல்வி உதவித் தொகை வேண்டும், நலவாரியம் வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
1950க்குப் பிறகு இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக “இந்து” மயமாகி வருகிறது. 1980 முதல் அரசின் கொள்கை மற்றும் கல்வி முறையில் மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்தம் நிறைவாக புகுத்தப்பட்டுள்ளது. இந்துத்துவாவை நிலை நிறுத்துவதற்கு முதலாளித்துவம் பெரிதும் உதவி செய்கிறது.
இந்துத்துவாவும்,முதலாளித்துவமும் பின்னிப் பிணைந்த இந்தியாவின் அரசு – கல்வி – சமூக பின்புலத்தில் பிற்படுத்தப்பட்ட இந்து சமூகங்கள் ஒவ்வொன்றும் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் சலுகையாக “ஒதுக்கீட்டை”ப் பெறுவது ஒன்றே வழி என்று தீர்மானித்து செயல்படுகின்றன.கல்வியிலும் – வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்பது “பொருளாதார வளர்ச்சியே சமூக வளர்ச்சி” என்பதை மையமாகக் கொண்ட கருத்து.
இடஒதுக்கீடு மூலம் அதிகாரத்திலும் பங்கு பெறலாம் என்பது ஜிகினா பூசிய போலியான வார்த்தை.
முஸ்லிம் சமூக முன்னேற்றம் என்பது பொருளாதாரத்தை மட்டுமே மையமாக கொண்டது அல்ல. இது அவர்களின் மார்க்கப் பேணுதல், வழிபாட்டு உரிமை மற்றும் சமூகப் பாதுகாப்பு என்பதோடு தொடர்புடைய கருத்தாகும். பிற சமூகங்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிலிருந்து முஸ்லிம்களின் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் முற்றிலும் மாறுபட்டவை. அது உலகம் முழுவதும் ஒரே மாதிரியான கருத்தாகும். நாட்டுக்கு நாடு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டது கிடையாது.
கடந்த காலங்களில் தமிழக முஸ்லிம் சமூகம் இடஒதுக்கீடு கோரிக்கையை மிக வலிமையாக முன் வைத்து பல போராட்டங்களை நடத்திகல்வியிலும் வேலையிலும் 3.5 விழுக்காட்டினைப் பெற்றது என்றால் அன்றைய சமூகச் சூழல் அதை அவசியமாக்கி இருந்தது.
பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட முஸ்லிம் வெறுப்பின் காரணமாக பிரிட்டீஸ் ஆட்சியில் அன்றைக்கு நடைமுறையில் இருந்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மறுத்த போது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அரசியல் நிர்ணயச் சபையில் சட்டரீதியாக இடஒதுக்கீட்டைத் தொடர வேண்டும் என்று போராடினார்.
பின்னால் குடியரசு இந்தியாவில் உருவான பல அமைப்புகளும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடர்ந்து மத்திய மாநில அரசுகளிடம் முறையிட்டு வந்தன. 1992 டிசம்பர்-6இல் இறையில்லம் இடிக்கப்பட்ட பிறகுதான் இந்திய முஸ்லிம் சமூகம் விழித்தெழுந்தது. இந்துத்துவச் சிந்தனை பரவலாகி வரும் இந்திய சமூகச் சூழலை ஓரளவிற்கு விளங்கிக் கொள்ளத் துவங்கியது.
பள்ளிவாசல் இடிப்பைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் வழிபாடு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு நிச்சயமற்றத் தன்மை உருவானதன் காரணமாக த.மு.மு.க போன்ற வீரியமான அமைப்புகள் உருவாகி குடிமக்கள் அனைவருக்கும் ஜனநாயகத்தில் உரிய பங்கு வேண்டும் என்பதற்காக “முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு” என்ற உரிமைக்குரலை மிக வலிமையாக முன் வைத்தன.
சாதிய படித்தளங்களை வலியுறுத்தும் இந்து சமூக அமைப்பிற்கு பொருந்தும் “இடஒதுக்கீடு” வழிமுறை மறுமையை வலியுறுத்தும் முஸ்லிம்களின் வாழ்வை மேம்படுத்துமா? அவர்களின் பொருளீட்டும் வழி முறையை அது வளப்படுத்துமா? இடஒதுக்கீடு எத்தனை ஆண்டுகளுக்கு பலன்தரும்? என்பதையெல்லாம் முன்னோக்கி பின்னோக்கி அலசி ஆராய்வதற்கு அன்றைக்கு த.மு.மு.க உள்ளிட்ட எந்த அமைப்பிற்கும் அவகாசம் இருக்கவில்லை. அவ்வளவு நெருக்கடி.
பள்ளிவாசல் இடிப்பு, கலவரம், தடா சட்டம், பழனிபாபா கொலை, கோவை சம்பவம், அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையின் அட்டூழியம், பத்திரிகைகளின் காழ்ப்புணர்சி, அரசு நிர்வாகத்தின் அலட்சியம், ஆட்சியாளர்களின் ஆணவம் ஆகிய அனைத்தும் சேர்ந்து முஸ்லிம் சமூகத்தை வாழ்வியல் ரீதியாக அவர்களின் குரல் வளையை இறுக்கியது.
நியாயமாக நடப்பார்கள் என்று நம்பிய அரசு நிர்வாகம் சார்பு நிலை எடுத்ததால், அநீதம் இழைக்கப்பட்ட முஸ்லிம்கள் தரப்பில் அரசியல் அரங்கில் குரல் கொடுக்க ஆள் இல்லாததால் அரசுப் பணியில், காவல்துறையில், உளவுத்துறையில் “எங்களுக்கு என்று சிறப்பு இடம் ஒதுக்க வேண்டும்” என்ற இடஒதுக்கீடு கோரிக்கை முஸ்லிம் சமூக அமைப்புகளின் தேர்தல் கோரிக்கையாக ஒத்தக்குரலில் முன்வைக்கப்பட்டது.
10ஆண்டு கால வீரியமான போராட்டத்தின் விளைவாக 2007இல் பிற்படுத்தப்பட்டோருக்கான 30சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக 3.5சதவீதம் போராடிய முஸ்லிம்களுக்கும், 3.5சதவீதம் போராடாத, இடஒதுக்கீடு குறித்து வாய் திறக்காத கிருத்துவர்களுக்கும் தி.மு.க அரசால் வழங்கப்பட்டது.உடனடியாக சங்பரிவார் அமைப்புகள் “மதச்சார்பற்ற….? நாட்டில் மதரீதியாக இடஒதுக்கீடு வழங்கியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கின. அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கேட்காமலேயே அரசு கொடுத்த 3.5சதவீத இடஒதுக்கீட்டை எங்களின் “சமூக வளர்ச்சியைச் சுருக்கிவிடும்” என்று கூறி கிருத்துவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.
முஸ்லிம்களுக்கு 3.5சதம் என்று ஒதுக்கீடு செய்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரையிலும் இடஒதுக்கீட்டால் ஏற்பட்ட சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து இடஒதுக்கீட்டை மாத்திரம் தூக்கிப்பிடிக்காமல் மாறிவரும் சூழலுக்கேற்ப சமூகத்தின் கல்வி – வேலைவாய்ப்பு – பொருளாதார முன்னேற்றத்திற்கான நிலையான நீடித்த திட்டங்களில் கிருத்தவர்களைப் போல விவேகமான முடிவுடன் வேகமாக செயல்பட வேண்டிய முஸ்லிம் அமைப்புகள் 3.5 சதத்தை 5 சதமாக உயர்த்த வேண்டும் என்றும் அதை 10 சதம் வரை உயர்த்த வேண்டும் என்றும் மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அறியாமையிலா அல்லது நுனிப்புல் மேயும் செயலா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
இஸ்லாமியச் சித்தாந்தத்தின் அடிப்படையில் “இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக முன்னேற்றம்” என்று சிந்திக்கும் பக்குவமான சமூக தலைமைக்கு தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதைத்தான் இது காட்டுகிறது. இந்த வருத்தம் இஸ்லாமிய சமூகவியலைப் படித்துள்ள முஸ்லிம் அல்லாத அறிவுஜீவிகளிடமும் நிலவுகிறது.
3.5 சத இடஒதுக்கீடு சலுகையால் பரவலாக பலன் ஏற்பட்டுள்ளது என்பதற்காக அன்றைய சூழல் காரணமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இயலாமை காரணமாக எதிர்காலத்திற்கும் நிரந்தரமாக்கச் சொல்லிப் போராடுவது சமூகத் தலைமையின் வரலாற்றுப் பிழையாகிப் போகும்.
-CMN SALEEM