புதிய குழந்தையின் வரவை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு
“எனக்கு நான்கு வயதில் ஒரு அழகான மகள் இருக்கிறாள். அவள் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறேன். எனது அதிக நேரத்தை அவளுடனேயே கழிக்கிறேன். அவளும் என்மீது மிக அன்பாகவே இருக்கிறாள். எந்தளவுக்கெனில் நான் வேறு பிள்ளையுடன் பேசினாலோ தூக்கி முத்தமிட்டாலோ பொறாமை கொள்கிறாள். அந்தப் பிள்ளையின் தாயுடன் பேசினாலோ கையை நீட்டி எனது முகத்தை அவள் பக்கம் திருப்பிக் கொள்கிறாள்.
இப்போது நான் கற்பமாக புதிய குழந்தையின் வரவை எதிர் பார்த்திருக்கிறேன். அக்குழந்தை எனது கவனத்தையும் நேரத்தையும் அதிகம் பெறும்போது அதற்கு, ஏதாவது தீங்கு செய்து விடுவாளோ அல்லது அவனது உணர்வுகளை காயப்படுத்தி விடுவாளோ என அஞ்சுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து கூறுங்கள்.”
ஒரு புதிய குழந்தையின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தக் கூடியது. அதேநேரத்தில் சில பிரச்சினைகளையும் கொண்டு வரும். குடும்பம் புதிய பிள்ளைக்கு தீங்கு நேராத வகையில் அவற்றை எதிர்கொள்ள தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு புதிய குழந்தையின் வரவால் அதிகம் தாக்கங்களுக்கு உட்படுவது குடும்பத்தில் உள்ள சிறுபிள்ளைகளே.
ஒரு புதிய வரவால் சூழ்நிலைகள் மாறுகின்றன. அக்குழந்தை முக்கிய இடத்தை பெறுகிறது. விரும்பியோ அல்லது விரும்பாமலோ பார்வைகள் அதனை நோக்கியே திரும்புகின்றன.
எனவே குடும்பத்தில் ஏலவே உள்ள பிள்ளைகளிடம் உளவியல் நடத்தை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
* கற்ப காலத்திலேயே உங்கள் மகளிடம் “அவளுக்கு புதிய ஒரு சகோதரன் வர இருக்கிறான். அவனை விரும்ப வேண்டும் அவனுடன் விளையாட வேண்டும்” என்பதை நாசூக்காக விளக்குங்கள்.
* தாயின் வயிறு பெருப்பதை அவள் அவதானிக்கும்போது சொல்லுங்கள்: “இது உனது சகோதரன். நீயும் இப்படித்தான் கருவில் இருந்தாய்.” வயிற்றை குழந்தை அணைக்கவும் முத்த மிடவும் அனுமதியுங்கள். இது அன்பையும் தனது சகோதரனை காண வேண்டுமென்ற ஆவலையும் பிள்ளையிடம் ஏற்படுத்தும்.
* முதல் பிள்ளை தூங்குவதற்கான தனியான ஓரிடத்தை பிள்ளை பிறப்பதற்கு முன்பே தயார் செய்து பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம் தனது இடம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது என பிள்ளை திடீரென உணர்ந்து பொறாமை கொள்வதை தவிர்க்கலாம்.
* பிள்ளைப் பேற்றுக்காக, வைத்தியசாலைக்கு செல்லும்போது, தனது தாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிய சகோதரனுடன் தான் திரும்பி வருவார் என பிள்ளைக்கு விளக்குவதுடன் மகிழ்ச்சியான சூழலை உணர்த்துவதற்காக புதிய விளையாட்டுப் பொருள் ஒன்றினை வாங்கிக் கொடுக்கலாம்.
* தனது சகோதரரின் வருகையுடன் விளையாட்டு பொம்மையில் அதனை ஈடுபாடு கொள்ள செய்யலாம். ஆனால் தனது சகோதரனே விளையாட்டுப் பொருளை கொண்டு வந்ததாக பொய் கூற வேண்டாம். அப்பொருள் அவளுக்கு சொந்தமானது என்பதையே உறுதிப்படுத்துங்கள்.
* உங்கள் மூத்த மகளுடன் விளையாடுவதற்கும் பேசுவதற்கும் தூக்கி முத்தமிடவும் எந்த சூழ்நிலையிலும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
* உங்கள் மகன் குழந்தை பால் குடிப்பதை காணும்போது சிறு குழந்தைகள் இப்படித்தான் உணவு உண்பார்கள். நீங்களும் இப்படித்தான் பால் குடித்தீர்கள், இப்போது பெரிய ஆளாகி விட்டீர்கள், பெரியவர்கள் போல் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் புரிய வையுங்கள்.
* குழந்தைக்கு உடைகள் மாற்றும்போது மூத்த மகளின் உதவியை நாடுங்கள். உடைகளை தெரிந்து தர சொல்லுங்கள். குழந்தை புன்னகைக்கும்போது அவளைப் பார்த்து புன்னகைப்பதாகக் கூறுங்கள். எப்போதும் அவளது சிறிய சகோதரன் அவளை விரும்புவதாக சொல்லுங்கள்.
* செல்லமாக விளையாடும் போது சமமாக நடந்து கொள்ளுங்கள். எந்த விடயத்திலும் நீங்களோ உங்கள் உறவினரோ இருவரையும் ஒப்பிட்டுப் பேச அனுமதிக்க வேண்டாம்.
* ஞாபகத்தில் வையுங்கள்: உங்கள் பிள்ளையை அன்புடன் வளருங்கள். சூழ இருப்பவர்களையும் நேசிக்கக் கற்றுக் கொடுங்கள். பிள்ளைகளிடையே நீதமாகவும் சமத்துவமாகவும் நடந்து கொள்வது முக்கியமானது. “உங்கள் குழந்தைகளிடையே நீதமாக நடந்து கொள்வதை அல்லாஹ் விரும்புகிறான். அது முத்தமிடு வதிலும் கூட.” (அல்ஹதீஸ்)
* இறுதியாக சில வார்த்தைகள்: இந்தப் பணிகளுக்கிடையே உனது கணவனை மறந்து விடாதே! சில கணவன்மார் தனது மனைவி பிள்ளைகள் மீது காட்டும் கரிசனையைப் பார்த்து பொறாமை கொள்கிறார்கள். எனவே, கணவனின் கடமைகள், தேவைகளை நிறைவு செய்வதும் உனது பொறுப்பே. அவன்தான் மகிழ்ச்சியான குடும்பத்தைப் பராமரிப்பவன். ஆகவே, அவனே அனைவருக்கும் உனக்கும் மேலானவன் என்பதை உணரச் செய்யுங்கள். பிள்ளைகள் பற்றிய முறைப்பாடுகளை அதிகமாக அவனிடம் கொண்டு சொல்லாதீர்கள்.
* இரவில் விழித்திருத்தல். நீண்ட நேர அழுகை போன்ற கஷ்டங்கள் தாய்மைக்கு செலுத்த வேண்டிய விலைகள், ஒவ்வொரு தாயும் இந்த சூழ்நிலைகளை கடந்தே செல்ல வேண்டும் என்பதை மறந்து விட வேண்டாம். “தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உள்ளது” என்ற தாய்மையின் தகுதியை பெற இவற்றை நாம் சகித்தேயாக வேண்டும்.
கணவான்மார்களுக்கு சில வார்த்தைகள்:
மனைவி களைப்படைந்திருக் கும்போது சில பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி பாலூட்டுதல் போன்ற கடமைகளில் ஈடுபட்டிருக்கும்போது முதல் குழந்தையை விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். அதனை தூக்கி வைத்துக் கொள்ளுஙகள். மனைவிக்கு அனுசரணையாக செயற்படுங்கள். வாழ்க்கை என்பது பொறுப்புகளையும் கடமைகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலமே மகிழ்ச்சியானதாக மாறும்.
இணையத்தில்:
இஸ்ஸத் தம்ராதிஸ்
தமிழில்: அபூ அகீபா
source: http://www.meelparvai.net/