பள்ளிவாசல்களில் பள்ளிக்கூடம் அமைப்போம்!
செங்கிஸ் கான்
கல்வியில் பின் தங்கியருக்கும் இந்த சமுகத்தை முன்னேற்ற மத்திய மாநில அரசுகள் அமைத்த கமிட்டிகளும், சமுதாய அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்!
ஆனால் அல்லாஹ் ‘எந்த ஒரு சமுதாயமும் தங்களின் நிலையை தாங்களே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை’ என தன் அருள் மறையாம் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்.
வேத வரிகளுக்கு விளக்கமாக வாழ்ந்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் உருவாக்கிய மஸ்ஜிதுன் நபவி எனும் இறை இல்லத்தை கல்விக் கூடமாக ஆக்கி அதில் ஏராளமான தோழர்கள் கல்வி பயின்ற வரலாறுகளும், கைதிகளாய் அங்கு கட்டப்பட்டிருந்த எதிரிகளிடம் கூட, ஈட்டுத் தொகைக்காக எங்களில் கல்வி அறிவு இல்லாதவருக்கு கற்றுக் கொடுத்து விட்டு நீங்கள் விடுதலையாகலாம் என கூறிய வரலாறும் நாம் அறிந்த வரலாறுகளாகும்!
அப்படிக் கல்விக் கூடமாக, அரசு களஞ்சியமாக, காவல் சிறையாக, நீதி மன்றமாக, போர்ப் பாசறையாக, வீர விளையாட்டுக் கூடமாக, தலைமை செயலகமாக பயன்பட்ட பள்ளி வாசல்கள் இன்றைக்கு 5 நேரத் தொழுகைக்கு 30 நிமிடம் வீதம் 2.30 மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் பூட்டிக் கிடக்கிறது! அல்லது புறம் பேசுவோரின் தளமாகப் பயன் படுகிறது! இதை மாற்றி அமைத்து அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியக் கல்வியுடன் கூடிய ஆங்கில வழிக் கல்விக் கூடங்களை உருவாக்கினால் இன்ஷா அல்லாஹ் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.
நல்ல கல்விக்காக நகரங்களை நோக்கி நகரும் நம் சமுதாயத்தை தக்க வைத்து மஹல்லா ஜமாத்துகளின் அரவணைப்பில் மக்கள் வரலாம். மாற்றுக் கலாசார பள்ளிகளில் படித்து இஸ்லாமிய கலாச்சாரத்தை மறந்து உலகாதயத்திர்காக வாழும் நிலைய மாற்றி ஒழுக்கத்துடன் கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கலாம்.
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களை துவக்குவதற்கான அரசு விதிமுறைகள் மிக எளிதாக இருப்பதால் பள்ளிவாசல் எனும் கட்டமைப்பு பள்ளிக்கான கட்டமைப்புக்காக பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி உருவாக்கலாம்.
நம் பிள்ளைகள் எல்.கே.ஜி. முதல் எம்.ஏ. வரை ஜுமுஆ தொழ முடியாத இன்றைய சூழலை மாற்றி 5 வேளையும், தொழக் கூடியவர்களாக ஆக்குவதோடு, கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டிய பள்ளிவாசலில் ஒரிருவர் தொழக் கூடிய நிலையை மாற்றி பிள்ளைகளால் பள்ளிவாசலை நிறைக்கலாம்.
விபத்துகள் நிறைந்த உலகில் அருகாமை பள்ளிவாசலில் நம் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதால், போக்குவரத்து செலவும், நேரமும் பெற்றோர்களுக்கு குறையும். கல்வி வியாபாரமாகி விட்ட இன்றைய சூழலில் பள்ளிவாசல் நடத்தும் இப்பள்ளிகளில் வியாபார நோக்கின்றி தகுதிக்கேற்ப கட்டணத்தை வாங்கலாம்.
இறைவன் நாடினால் இலவசமாக கூட நடத்தலாம். ஆங்கிலத்துடன் அரபியை ஒரு பாடமாக நடத்தும் இந்தப் பள்ளியால் பிள்ளைகள் மார்க்க அறிவுடன் கூடிய குர் ஆன் ஹதிஸ் அடிப்படையில் உருவாகி மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் மாணவர்களாக உருவாகலாம்.
எடுத்த உடன் அனைத்து வகுப்புகளையும் துவங்க வேண்டியதில்லை! எல்.கே.ஜி. யு.கே.ஜி, முதலாம் வகுப்பு இவற்றுடன் துவங்கினால் அடுத்தடுத்த வருடங்களில் உயர்த்திக் கொண்டே செல்லலாம். ஒரு தொழுகை ஹாலைத் தவிர இதர பகுதிகளில் சின்ன சின்ன தடுப்புகளைக் ஏற்படுத்தி இதை செய்ய முடியும். அதே நேரத்தில் ஏதேனும் சிரமம் இருக்குமானால் லுஹர் அசர் வக்துகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே அந்த சிரமம் அதை இதனால் கிடைக்கும் அனேக நன்மைகளுக்காக பொறுத்துக் கொள்ளலாம்.
ஆக எவரிடத்தும் கை ஏந்தாமல் நமது பள்ளிவாசல்களை பயன் படுத்தியே நம் சமுகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தலாம். இதற்கென அனைத்து வழிகாட்டுதல்களையும் அரசு அனுமதிக்கான வழிமுறைகளையும் சொல்லித்தர கல்வியாளர்கள் காத்திருக்கிறார்கள்! ஆகையால் அன்பார்ந்த சகோதர்களே அருகாமையில் இருக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடத்தில் இது பற்றி எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!
இன்ஷா அல்லாஹ இந்த சமுதாயத்தில் கல்லாமையை இல்லாமல் ஆக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவான்.
-செங்கிஸ் கான்.