பழைமையைப் பற்றிப் பிடித்திருக்கும் மதராஸ் மண்!
சென்னையில் வாழும் மண்ணின் மைந்தர்கள் பேசக்கூடிய மொழியை, அம்மக்களை அற்பப்பார்வை பார்க்கும் நிலை மற்ற மக்களிடமிருக்கிறது. காரணம் அவர்கள் நாவிலிருந்து வெளிப்படும் சொற்கள் கொச்சைத்தனமானதாக இழிந்த மொழிதலாகக் கருதியதன் விளைவு.
அவர்கள் பேசுவதன் சாரம் நடை, உதடு வெளிப்படுத்தும் முறை அவ்வாறு தோன்ற வைத்திருக்கலாம். பேசும் மொழியென்னவோ தூயதொன்மைத் தமிழாகவிருக்கிறது. பழம் அகராதிகள் உறுதிப்படுத்துகின்றன. அச்சொற்களைக் காணவும்.
‘கசமாலம்’ இச்சொல் சென்னையில் வாழ்வோருக்குத் தெரியும். இதன் பொருள் புகை, தூபம், அசுசி, தூய்மையின்மை.
‘கபோதி’ – அறிவிலி, கண்ணிலி. ‘ஒத்துபா’ என்பர். ஒத்துதல் பொருள்; விலகுதல்.
‘குந்து’ – உட்கார். ‘பேமானி’ – வெட்கமற்றவன். ‘இசகுபிசகு’ – முறைகேடு. ‘தண்டல்கட்டனும்’ – வசூலிப்பவர்க்குத்தரனும்.
”போங்கு புடிச்சவன்- உள்ளத்தில் குறைவுள்ளவன். ‘பிக்காரி’ – வறுமையாளன். ‘அக்கடான்னு இருந்தேன்’ – அந்த இடத்திலிருந்தேன். ‘ஐயே’ – விளி, அழை, கூப்பிடு, சொல். ‘இன்னான்றே’ – வெறுப்பு, துன்பத்துடன் என்ன எனக் கேட்டல். ‘உதார் விடுறான்’. உதாரி – பேச்சுத் திறமையுள்ளவன். தராதரமில்லாத ஆளு – உயர்வு, தாழ்வு தெரியாதவர். ‘மெய்யாலுமா’ – உண்மையாகவா. ‘தண்டச்சோறா துண்ணுறேன்’ – பிச்சைச் சோறு, யாசித்துப் பெற்ற சோறா உண்கிறேன். அக்கில்லவை – கக்கத்தில் வை. ‘அக்கப்போர்’ – கலகம், வம்புப் பேச்சு. ‘நோவு’ – நோய். ‘இன்னா கூத்துக் காட்டுறே’ – நாடகம் ஆடுகிறாயா? என்று வெறுப்புடன் கேட்பது பொருள்.
‘பிச்சாத்து தர்றே’ – எஞ்சியிருப்பதை தருகிறாய். ‘குத்துமதிப்பு’ – சுமார். ‘இவரு பெரிய குடும்பி’ – இவர் பெரிய குடும்பத் தலைவர், சமுசாரி. ‘குடக்கூலி’ – குடி கூலி, வாடகை. ‘குமையுறே’ – மயங்குறே.
அவர்கள் உபயோகப்படுத்தக்கூடிய இன்னும் பல சொற்கள் தமிழ்த் தொன்மைச் சொற்களாகவிருக்கின்றன. மற்ற மக்கள் பயன்படுத்தாத மரபுச் சொற்களை வம்சா வழியாக பல தலைமுறைகளாகப் மதரஸாஸ் மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர், தொடர்கின்றனர். இதன் மூலம் தமிழினத்தின் வேர்களில், ஒரு பகுதியினர் மதரஸா மக்கள் உணர முடியும்.
-சதாம்,
முஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2013
source: http://jahangeer.in/