படித்தால் மட்டும் போதுமா?
இந்தியா இன்று வரலாறு காணாத மனித வள நிர்வாக சிக்கலில் உள்ளது
என் பயிற்சிப் பட்டறையில் மாணவர்களிடம் கேட்டேன்:” உங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஓட்டுனர்கள் வருகிறார்கள். ஒருவருக்கு கார் ஓட்டத்தெரியும். ஆனால் உரிமம் இல்லை. இன்னொருவருக்கு உரிமம் உண்டு; ஆனால் ஓட்டத்தெரியாது. யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?”
என்ன பதில் சொல்லி யிருப்பார்கள் என உங்களுக்கேத் தெரியும். இந்த புரிதல் வேலை தேடும் போது நம் மக்களுக்கு காணாமல் போய்விடுகிறது.
“என்ஜினீயரிங் படிச்ச என் மகனுக்கு 6000 ரூபாய்க்கு ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குது …அதே நேரம் 12,000 ரூபாய் கொடுத்தும் என் காருக்கு ஒரு டிரைவர் கிடைக்க மாட்டேங்குது… என்ன உலகம் சார்?” என்று அங்கலாய்த்தார் நண்பர்.
அவரே தொடர்ந்தார் : “எதுவும் கிடைக்கலேன்னு எம்.பி.ஏ சேரச் சொல்லிட்டேன்!”
எதுவும் கிடைக்காத பையன் எம்.பி.ஏ படித்து என்ன நிர்வாகம் செய்யப்போகிறார் என்று யோசித்தேன். இந்தியா இன்று வரலாறு காணாத மனித வள நிர்வாக சிக்கலில் உள்ளது.
ஒருபுறம், வேலை இல்லாத் திண்டாட்டம். மறுபுறம், தொழில்களுக்குத் தேவையான திறன்கள் இல்லாமல் கடும் பாதிப்பு.கல்வி உலகிற்கும் தொழில் உலகிற்கும் ஏழாம் பொருத்தம். இதில் துரித உணவு போல உடனடி தேவைக்கு மட்டும் கல்லூரிக்கு வரும் ஹெச்.ஆர்.தேர்வாளர்கள்!
மானாவாரியாக பொறியியல் கல்லூரிகள் திறந்து விட்டதில் பல கல்வி தந்தைகள் கல்லா கட்டியதுதான் மிச்சம். தகுதியில்லாத மாணவர்களைச் சேர்த்து, அவர்களை கொத்தடிமைகளைப் போல நடத்தி தன்னம்பிக்கையைத் தகர்த்து ஒரு மலட்டு சமுதாயத்தை உருவாக்கி வருகிறோம்.
ஆசிரியர்களின் நிலைமை இதை விட சோகம். மற்ற எந்த வேலையும் கிடைக்காத பொறியியல் படித்த மாணவன் இடைக்கால பிழைப்பிற்கு ஆசிரியராகிறான். ஆசிரியப்பணி ஒரு அறப்பணி. எந்த அறமும், ஆளுமையும், ஈடுபாடும் இல்லாமல் பணிக்கு வரும் ஆசிரியர் மாணவனைப் போலவே உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறான் .
மாணவர்களுக்கான “முன் மாதிரி” யாகத் திகழவோ, அவர்களின் கற்பனைக்குத் தீனி போடவோ, வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ சற்றும் தகுதியற்றவராக இவர்கள் இருக்கிறார்கள்.
கொடுத்த பாடத்தை நடத்தி, பாஸ் பண்ண என்னவெல்லாம் பண்ண முடியுமோ அதை செய்வதற்கு மட்டும் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்பதும் உண்மை.மாணவர்கள் தேர்வில் தோற்றால் ஆசிரியருக்கு வேலை போகும் இங்கு. அதனால் தேர்வு பயம் அதிகம் இவர்களுக்குத் தான்!
இதனால் வாசிக்கும் பழக்கமோ, யோசிக்கும் பழக்கமோ இல்லாமல் கல்லூரியை விட்டு வெளி வருகிறார்கள் பெரும்பா ன்மையான மாணவர்கள். இவர்களின் முதல் உரைகல் அனுபவம் வேலை தேடும் அனுபவமே. படிக்காத தச்ச ருக்கும், ஓட்டுன ருக்கும், வண்ணப்பூச்சாளருக்கும் உள்ள நம்பிக்கையும், திடமும் படித்த பட்டதாரிகளிடம் இல்லை.
தொழிலாளர்களுக்கான தொழில் பயிற்சி மையங்கள் இங்கு மிகக் குறைவு. பொறியா ளர்களுக்கான கல்லூரிகள் அதிகம். இதனால் ஐ.டி.ஐ முடித்த பிள்ளைகளுக்கு உடனடியாக வேலை. பொறியியல் கல்லூரிகளில் படித்தோருக்கு பதில் ஒருவருக்கு தான் வேலை இங்கு. தேவை பற்றி எந்த யோசனையும் இல்லாமல் கல்வி வியாபாரம் செய்த களேபரம் தான் இந்த நிலைக்குக் காரணம்.
தவிர இங்கு வெள்ளை சட்டை வேலை என்பது தான் எல்லாருடைய கனவு!
“என் பையனை / பெண்ணை எப்படியாவது ஒரு என்ஜீனியர் ஆக்கி பாக்கணும். அவன் பெரிய ஐ.டி. கம்பனியில வேலை பாக்கணும்” என்று நினைக்கிற சாமானியர்கள் இருக்கும் வரை இந்நிலை நீடிக்கும்.
சரி, என்ன தான் தீர்வு?
பள்ளிகளில் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்க ளையும் இணைத்து கூட்டு ஆலோசனை அவசியம் !
வருங்கால தேவைகள் என்ன, எந்த வேலைகள் அடுத்த 5 ஆண்டுகளில் அதிகம் பெருகும் என்பதை மனித வள நிபுணர்களை அழைத்து கல்வி நிறுவனங்களும் அரசும் கலந்து பேசி , அதன் அடிப்படையில் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.
படிப்பு மட்டும் போதாது என்று உணர்ந்து திறன்களுக்கான பயிற்சிகளையும் பகுதி நேர பணி அனுபவங்களையும் மாணவர்கள் தேடிப் போக வேண்டும்.
எந்தெந்த வேலைகளுக்கு ஆட்கள் தேவை? கட்டுமான தொழிலுக்கு, எல்லாத்துறை விற்பனைக்கும், வாடிக்கையாளர் சேவைக்கும், கணினி பராமரிப்பு, துப்புரவுத்தொழிலுக்கு, ஆசிரிய ப்பணி, ஊடகத்துறை, மருத்துவ உதவிப்பணி, உளவியல் ஆலோசனை,விருந்தோம்பல் துறைகள்…எல்லா இடங்களிலும் ஆட்கள் தேவை! திறன்கள் உள்ளவர்கள் தங்கள் சம்பளத்தை தாங்களே நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கல்வித்தகுதியைப் பார்த்து வேலை தந்த காலம் போய், திறன்களைப பார்த்து வேலை கொடுக்கும் காலம் வந்துவிட்டது!
ஆட்களுக்கு வேலை தேவை. வேலைக்குத் தேவைப்படும் திறன்கள் கொண்ட ஆட்கள் இல்லை. இணைபிரியாத தண்டவாளங்கள் போலவே இந்த விகிதம் இருக்கிறது.
முதல் பத்தியில் நான் கேட்ட கேள்வியை மீண்டும் படியுங்கள்.
உங்கள் பதிலில் தான் இந்தியாவின் மனித வள மேம்பாட்டிற்கான விடை உள்ளது !
– டாக்டர். ஆர். கார்த்திகேயன்
source: http://tamil.thehindu.com/