சா”தீ”யும், மதமும், காதலும்
ஓர் இஸ்லாமியப் பார்வை
தமிழ்நாட்டில் திராவிட அரசியலும், அதன் பாதிப்பும், பல நல்லதையும் பல கெட்டதையும் நமக்குக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதைப் பற்றி விரிவாக நம்மில் பலருக்குத் தெரியும். ஒரிஜினல் மார்க்சீய தோழர்களும், ஒரிஜினல் திராவிடத் தமிழ்ப் பற்றாளர்களும் உலக வாழ்க்கை யில் நல்லவர்களாக இருப்பதும் ஓரளவுக்கு உண்மைதான்.
துரதிர்ஷ்டமாக இவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருப்பார்கள். இப்படிப் பட்டத் தமிழகச் சூழலில் இவர்கள் எல்லாம் அறிவு ஜீவிகளாக இருந்தும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் நடத்த வேண்டிய நிர்பந்தத்தால் பல தவறுகளைச் செய்கிறார்கள். அவற்றில் பிரதானமானது எல்லா அரசியல்வாதிகளும், ஜாதிச் சங்கங்களை, பிரிவுகளை வளர்க்க ஆசைப்படுகிறார்கள்.
ஜாதி, மத சங்கங்கள் இருந்தால் தானே அரசியலில் ஓட்டு அறுவடை செய்ய முடியும். இது அரசியல் கணக்கு என்று சொல்லுவார்கள். அதே சமயம் ஜாதி சமய மற்ற, மதச் சார்பற்ற நாட்டைப் படைப்போம் என முழங்குவார்கள். இதன் தொடர்ச்சியாக சாதீய வேறுபாட்டை ஒழிக்கக் காதல் திருமணம் செய்யுங்கள் என்ற கோஷமும், வாதமும் இப்பொழுது பலமாக முன் வைக்கப்படுகிறது.
அன்பார்ந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு மிகச் சுருக்கமாக எமது கருத்தை வைக்க விரும்புகிறோம்.
ஜாதி அரசியல் நடக்கும் சூழலில் “”காதல்” எனும் அழகான விஷயம் நசுக்கப்படுகிறது. விருப்பமற்ற திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு இஸ்லாம் சட்டமாக வைத்துள்ளது. மனம் ஒப்பாத மணத்தை இஸ்லாம் தடை செய்கிறது. அதே சமயம் ஆணும் பெண்ணும் தனித்திருப்பதைத் தடை செய்கிறது. பாலியல் ரீதியான புறக் கவர்ச்சியை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதாவது தமிழ்த் திரைப்படங்களில் விரட்டி விரட்டிப் பெண்ணைத் தேடி ஓடும் ஆணின் உணர்வை காதல் என்று சொல்லிச் சொல்லி நம் எல்லோருடைய உள்ளங்களையும் வீணாக்கி வைத்திருக்கின்றார்கள்.
காதல் என்பது ஆண் பெண் இருவருக்குமான தேவையான, விஷயம். இதனை ஓர் இபாதத்-வணக்கம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சினிமா, டிவி கலாசாரச் சூழலில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு இஸ்லாம் கூறும் “”காதல் பாடம்” என்ன வென்று தெரியாது. அதாவது ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எப்படி எப்படித் தத்தமது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அழகான வாழ்வியலை சொல்லித் தருகிறது.
திருமணம், மறுமணம், விதவைத் திருமணம், விவாகரத்து இப்படி எல்லாம் மனிதனின் தேவைகளையும், அழகாகச் சொல்லித் தரும் வாழ்வியல் தான் இஸ்லாம். இங்கே ஜாதி மதம் எல்லாம் கிடையாது. கடவுளை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் என்ற இரு பிரிவை மட்டுமே இஸ்லாம் சொல்லித் தருகிறது. இஸ்லாத்தை ஏற்றுள்ள நாங்கள் சிறு பான்மை சமுதாயமும் அல்ல, பெரும்பான்மை சமுதாயமும் அல்ல. எல்லா மக்களுக்கும் வழிகாட்ட வேண்டிய நடுநிலைச் சமுதாயம்.
பல முஸ்லிம் அன்பர்கள் கூடப் பிழையாக விளங்கியுள்ளதால் மேற்சொன்ன இந்தக் கருத்துக்கள் உங்களை வந்தடையாமல் இருக்கலாம். வாழ்க்கையை அழகாக்கி, மகிழ்வாக்கி வாழ்வதுதான் மிக முக்கியம். இதற்காகக் காதலை எப்படிக் கையாள்வது என்பதை உன் மனம் போக்கில் செய் என்று சொல்லாமல் அதைக் கூட பாடம் சொல்லி தரும் வாழ்வியலை இஸ்லாம் மனித குலத்திற்கே போதிக்கிறது.
இரு பாலின் உடல் தேவைக்கு (sex) மிக முக்கியமானது காதலாகும். அது நேர்மையாகவும், ஒத்தக் கருத்துடையதாகவும், இருக்கச் சொல்வது இஸ்லாமிய வாழ்வியலாகும். sex என்பதை Leagal sex மற்றும் Illegal sex என்ற இரண்டு கூறுகளாக இஸ்லாம் பிரித்துக் காட்டுகிறது.
Illegal sex தவறு, பாவம், தண்டனைக்குரியது ஆகும். Legal Sex இபாதத் எனும் நன்மையாகும். இந்த Legal Sex நடைபெறக் காதல் முக்கியம். அதற்கு ஒருமித்தக் கருத்தும், பரஸ்பர நம்பிக்கையும், ஒத்த இறை நம்பிக்கையும் முக்கியம்.
இந்தியாவில், ஓட்டு வாங்கி அரசியல் நடத்தினால் தான் பொது வாழ்க்கையில் மரியாதை கிடைக்கும். ஓட்டு வாங்கத் தெரியாவிட்டால் அரசியல் பண்ண முடியாது. இதற்குச் சங்கங்கள், அமைப்புகள் தேவைப்படுகின்றன. இந்தக் கட்சிகளையும் பிழையான தேர்தல் வரலாறுகளையும் பார்க்கும் முஸ்லிம்களும் சங்கங்கள், அமைப்புகள், கட்சிகள் ஆரம்பித்து காலத்தை ஓட்டுகிறார்கள். எல்லோருக்கும் பணிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.
இஸ்லாம் என்பது சாதி, மதமற்ற வாழ்வியல் ஆகும். மனித குலத்திற்குச் சொந்தமானது. RSS காரராக இருந்தாலும் தலித் சகோதரராக இருந்தாலும், வன்னியர், தேவர், பிராமணர் யாராக இருந்தாலும் எல்லோரையும் சரிசமமாக, கரிசனமாகப் பார்க்கச் சொல்லித் தரும் வாழ்வியலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். மதகுருமார்கள் போதிக்கும் முஸ்லிம் மதத்தைக் கண்மூடிப் பின்பற்றாமல் இஸ்லாத்தை இறைவன் சொல்லியுள்ளபடி விளங்கி நடக்க முன்வாருங்கள்!
– பஷீர் அகமது, புதுக்கோட்டை
2013 ஜனவரி – அந்நஜாத்
source: http://annajaath.com/?p=6242#more-6242