M.தமிமுன் அன்சாரி
மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு நாடெங்கிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது!
பலர் மகிழ்ச்சியடைகிறார்கள்! பலர் கவலைப்படுகிறார்கள்! பலர் பதறுகிறார்கள்! நாடெங்கிலும் வெவ்வேறு விதமான உணர்வுகள் பிரதிபலிக்கிறது என்பது உண்மை!
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு! வெறித்தனம் கொண்டவர்களை இந்தியர்கள் அங்கீகரிப்பதில்லை!
அரசியல் தெளிவுள்ளவர்கள் நிதானமாகவே இருக்கிறார்கள். காரணம் பாஜக நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றப் போவதில்லை! 200 இடங்களை நெருங்குவதே ஒரு பெரும் போராட்டமாக இருக்கும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்!
அந்த 200 இடங்களை ஒருவேளை நெருங்கினாலும், அத்வானி ஆதரவு எம்.பி.க்கள் கலகம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. ம.பி.யின் பாஜக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான், அத்வானியின் ஆதரவாளர். அவர்தான் அதிகமாக எம்.பி.க்களை பாஜகவுக்கு வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது பிராந்தியக் கட்சிகளில் மராட்டியத்தில் சிவசேனாவை மட்டுமே பாஜக நம்பியுள்ளது.
மோடி பிரதமர் வேட்பாளர் என்றதும் ஜெயலலிதாவே சற்று அச்சத்தில்தான் இருக்கிறார். அதனால்தான் ‘சோ’ அவரை அவசரமாக சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.
‘மோடி’க்கு ஆதரவாக சில ஊடகங்கள்தான் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. ‘நன்றி’ விசுவாசம் அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது போல? (பணம் பத்தும் செய்யும்).
ஒரு விளக்கு அணைவதற்கு முன்பு வேகமாக எரியும்! அதன் ஒளி வடிவம் ஆகும்! பிறகு அணைந்து விடும்! மோ(ச)டி வித்தைகளின் இறுதி நிலை அப்படித்தான் ஆகும் என்பதை விரைவில் நடக்கவிருக்கும் 5 வடமாநில தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!
அதே நேரம் காங்கிரஸ் கட்சி தனது தூக்கத்தைக் கலைத்து வெளிவர வேண்டும்! 81 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது, நாட்டின் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களுக்கு 5 மடங்கு நட்டஈடு வழங்குவது, சாலையோர வியாபாரிகளின் வாழ்வுரிமையைக் காத்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வழங்கியது, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தது போன்ற நல்ல சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல பிரச்சாரக் குழுக்களை அமைத்து செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது!
குறிப்பாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவும், பிரியங்கா காந்தியை பிரச்சாரக்குழு தலைவராகவும் முன்னிறுத்தினால் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புற மக்களும் காங்கிரஸை நோக்கி திரள்வார்கள்!
மோடிக்கு நகர்ப்புற மக்களுக்கு மத்தியில்தான் பரபரப்பு இருக்கிறது. ஆனால் நேரு குடும்பத்திற்குத்தான் கிராமப்புறங்களிலும் செல்வாக்கு இருக்கிறது.
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்திலும், ஈழத்தமிழர்களுக்கான துரோகம் விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டால் அதன் வெற்றி பிரகாசமாகும்!
இன்னும் காலமிருக்கிறது! மோ(ச)டியை முனை மழுங்கச் செய்யும் மாநில கட்சிகளுடனான உறவை அக்கட்சி வலுப்படுத்திக் கொள்வதும் நலம் பயக்கும்!
அதேசமயம், சிறுபான்மையினரும், நலிந்த பிரிவு மக்களும் மோ(ச)டியைக் கண்டு பதறத் தேவையில்லை.
இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் உணர்வோடும், சகோதரத்துவத்தோடும் நம்மோடுதான் உள்ளார்கள்!
மோ(ச)டி அலை வீசவில்லை! வீசுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது!
ராஜபக்ஷே சந்திக்கும் அதே நெருக்கடிகளை மோ(ச)டியும் சந்திக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!
அவரை முன்னிறுத்துவது அரசியல் பேரழிவு என அத்வானியே கூறியுள்ளார்! அது யாருடைய அரசியல் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
எனவே சமூக ஊடகங்களில் பணியாற்றும் மத நல்லிணக்க மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் குஜராத்தின் கிராமப்புற நிலை குறித்தும், அங்கு மோடியின் தவறான நிர்வாகக் குறைகள் குறித்து புள்ளி விபரங்களைக் கணக்கெடுத்து, ஒப்பீட்டளவில் மோடி, பீஹாரின் நிதிஷ்குமாரின் சாதனைகளை விட பின்தங்கியுள்ள உண்மைகளை அம்பலப்படுத்திட வேண்டும்!
மாறாக, தனிநபர் விமர்சனம் மூலம் மோடிக்கு அனுதாபத்தையோ, விளம்பரத்தையோ ஏற்படுத்திக் கொடுத்திடக் கூடாது!
– சகோ.M.தமிமுன் அன்சாரி,
மாநில பொது செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி