“முபாஹலா”
[ மனிதனும் முயற்சிகள் செய்து இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம் என்னும் இறைவனுக்கு இணை வைக்கும் ஷிர்க் எனும் கொடிய செயலில் ஈடுபட வைக்கும் “அத்துவைதம்” எனும் பாவச்செயலை நியாயப்படுத்தும் ”சூஃபிகள், நபிமார்களுக்கு முஃஜிஸாத் இருந்தது போல் எங்களுக்கும் “கராமத்” எனும் அற்புத செயல்கள் உண்டு” என, சில கண்கட்டி வித்தைகளை செய்து காட்டி மக்களை மயக்கி தங்கள் பக்கம் ஈர்ப்பது போல், இந்த ‘முபாஹலா’ எனும் பூச்சாண்டியைக் காட்டி மக்களை மயக்கி தங்கள் பக்கம் ஈர்க்கும் கெட்ட எண்ணமுள்ள போலிகளே இந்த ‘முபாஹலா’ வழிகேட்டில் ஈடுபட முடியும்.
மற்றபடி, நபிமார்களுக்கு மேலதிகமாகக் கொடுக்கப்பட்டிருந்த முஃஜிஸாத், முபாஹலா அதிகாரங்கள் மற்றவர்களுக்கு இல்லை என்பதே உண்மையாகும். அதிலும் குறிப்பாக நேர்வழி நடக்கும் முஸ்லிம்களுக்கு இல்லவே இல்லை. அவர்களுக்கு சத்தியத்தை நிலைநாட்ட அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் தாராளமாகப் போதும். அதைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
“நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள், ஒன்று இறைவனின் நேர்வழிகாட்டல் நூல் அல்குர்ஆன், மற்றது என நடைமுறை” என்றும் “நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகிறவனைத் தவிர வேறு எவரும் அதில் வழி கெட்டுச் செல்லமாட்டார்” என்றும் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறி இருக்கிறார்கள்.
சத்தியத்தை – நேர்வழியை நிலை நாட்ட குர்ஆன், ஹதீஸ் மட்டுமே போதும். மேலதிகமாக கராமத்தோ, ‘முபாஹலா’வோ தேவையே இல்லை.]
”முபாஹலா”வை நியாயப்படுத்துகிறவர்கள் அல்குர்ஆன் 3:61 இறைவாக்கை ஆதாரமாகத் தருகின்றனர். அந்த இறைவாக்கு வருமாறு:
(நபியே!) இது பற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும், எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால், “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று கூடி) “பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று சாபமிட்டுக் கொள்வோம், என நீர் கூறும். (அல்குர்ஆன் 3:61)
இந்த வசனம் இறங்கிய வரலாற்றைப் பற்றி வரலாற்று நூல்களில் எழுதப்பட்டுள்ள விபரம் வருமாறு:
நஜ்ரானிலிருந்து சில பாதிரிகள் மதீனா வந்து மஸ்ஜிதுல் நபவியில் தங்கி, அவர்களது தவறான முக்கடவுள் கொள்கையை நிலைநாட்ட விவாதித்து வந்தனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட 3:55-60 வசனங்களைக் கொண்டு அழகிய முறையில் விவாதித்து உண்மையை எடுத்துரைத்தனர். இது சில நாட்கள் நீடித்தன. அக்கால கட்டத்தில் அப்பாதிரிகள் அவர்களின் முறைப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபட மஸ்ஜிதிலேயே அனுமதியும் கொடுத்தனர். இவ்வளவு இதமாகவும் நளினமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சத்தியத்தை எடுத்து வைத்தும், அந்த பாதிரிகள், இந்த இறுதி வழிகாட்டல் நூலின் தெளிவான நேரடியான வசனங்களை மறுத்து விதண்டாவாதம் செய்து, தங்களின் அசத்தியக் கொள்கையான முக்கடவுள் கொள்கையை வம்பாக நிலைநாட்டத் துடித்தனர்.
அல்குர்ஆனின் தெளிவான – நேரடியான ஆதாரங்கள் கிறிஸ்தவ பாதிரிகளிடம் எடுபடாமல் போகவே இறுதியாக வேறு வழி இன்றி, எல்லாம் வல்ல அல்லாஹ் 3:61 வசனத்தை இறக்கி, அந்த பாதிரிகளை அவர்களது குடும்பத்தோடு முபாஹலாவுக்கு வரும்படி அழைப்பு விடும்படி கட்டளையிட்டான்.
இவ்வாறு அழைப்பு விடுத்ததும் அந்தப் பாதிரிகளின் உள்ளத்தில் கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது இறைவனைப் பற்றிய அச்சம் இருந்த காரணத்தால், அந்த ‘முபாஹலா’ அழைப்பை ஏற்காமல், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டனர். அதன் பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முனாஃபிக்களாலும் முஷ்ரிக்களாலும், காஃபிர்களாலும், யூத, கிறிஸ்தவர்களாலும் எத்தனையோ அவதூறுகள் ஏற்பட்டன. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரையும் ‘முபாஹலா’வுக்கு அழைத்ததாக ஆதாரம் இல்லை.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மீது படு அவதூறு ஏற்பட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல நாட்கள் துடிதுடித்தபோதும், அவதூறு பரப்பியவர்களை ‘முபாஹலா’வுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோ அழைக்கவில்லை. நபிமார்களுக்கு ‘வஹீ’ மூலம் சத்தியத்தை – நேர்வழியை அறிவித்ததோடு, அதை நிலைநாட்ட சில சமயங்களில் ‘முஃஜிஸாத்’ என்ற அற்புத நிகழ்வுகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். ஆனால் இந்த முஃஜிஸாத்தை எந்த நபியும் தமது விருப்பத்திற்கு நிகழ்த்திக் காட்ட முடியாது. அல்லாஹ் அனுமதித்தால் மட்டுமே அவர்களால் முஃஜிஸாத் என்ற அற்புத நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்ட முடியும். அதே போல் இந்த ‘முபாஹலா’வும் அல்லாஹ்வின் அனுமதியின் பேரில் அழைக்க முடியுமே அல்லாமல், தங்கள் இஷ்டத்திற்கு யாரையும் ‘முபாஹலா’வுக்கு அழைக்கும் அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதை விளங்கமுடியும்.
மேலும் நபிமார்கள் வஹீயின் தொடர்புடன் இருந்ததால், அப்படி ஒரு ‘முபாஹலா’ நடந்திருந்தால், அதன் இறுதி முடிவும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டிருக்கும். எனவே வஹீயின் தொடர்பு இல்லாத நிலையில் ஒரு முஸ்லிம் மற்றவர்களை ‘முபாஹலா’வுக்கு அழைப்பது மார்க்கத்தைக் கேலிக் கூத்தாக்கும் ஒரு தீய செயலாகும்.
மனிதனும் முயற்சிகள் செய்து இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம் என்னும் இறைவனுக்கு இணை வைக்கும் ஷிர்க் எனும் கொடிய செயலில் ஈடுபட வைக்கும் “அத்துவைதம்” எனும் பாவச்செயலை நியாயப்படுத்தும் சூஃபிகள், நபிமார்களுக்கு முஃஜிஸாத் இருந்தது போல் எங்களுக்கும் “கராமத்” எனும் அற்புத செயல்கள் உண்டு என, சில கண்கட்டி வித்தைகளை செய்து காட்டி மக்களை மயக்கி தங்கள் பக்கம் ஈர்ப்பது போல், இந்த ‘முபாஹலா’ எனும் பூச்சாண்டியைக் காட்டி மக்களை மயக்கி தங்கள் பக்கம் ஈர்க்கும் கெட்ட எண்ணமுள்ள போலிகளே இந்த ‘முபாஹலா’ வழிகேட்டில் ஈடுபட முடியும்.
மற்றபடி, நபிமார்களுக்கு மேலதிகமாகக் கொடுக்கப்பட்டிருந்த முஃஜிஸாத், முபாஹலா அதிகாரங்கள் மற்றவர்களுக்கு இல்லை என்பதே உண்மையாகும். அதிலும் குறிப்பாக நேர்வழி நடக்கும் முஸ்லிம்களுக்கு இல்லவே இல்லை. அவர்களுக்கு சத்தியத்தை நிலைநாட்ட அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் தாராளமாகப் போதும். அதைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
“நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள், ஒன்று இறைவனின் நேர்வழிகாட்டல் நூல் அல்குர்ஆன், மற்றது என நடைமுறை” என்றும் “நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகிறவனைத் தவிர வேறு எவரும் அதில் வழி கெட்டுச் செல்லமாட்டார்” என்றும் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறி இருக்கிறார்கள்.
மார்க்க விவகாரம் எதுவாக இருந்தாலும், அதன் உண்மை நிலையை குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கொண்டு நிலைநாட்டி விட முடியும். குர்ஆன், ஹதீஸ் நேரடியாகச் சொல்லும் கருத்துக்கு முரண்பட்ட எவருடைய சுய விளக்கமும் தேவையே இல்லை.
எனவே மார்க்கத்தை-சத்தியத்தை-நேர்வழியை நிலைநாட்ட ‘முபாஹலா’ தேவையே இல்லை; ‘முபாஹலா’வை நாடிச் செல்கிறவன் வழி கேட்டைத் தேடிச் செல்கிறான் என்பதே உண்மையாகும்.
இறுதித் தூதரையும், அவருக்கு அருளப்பட்ட இறுதி வழிகாட்டல் நூலையும் ஏற்றுக்கொள்ள மறுத்த பாதிரிகளை நோக்கித்தான் ‘முபாஹலா’வுக்கு அழைப்பு விடும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். அப்படியானால் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் மறுப்பவர்கள்தான் ‘முபாஹலா’வின் தயவை நாடிச் செல்ல முடியும். இறுதித் தூதரையும், அல்குர்ஆனையும் மனப்பூர்வமாக ஏற்றிருப்பவர்கள், ஒருபோதும் ‘முபாஹலா’வின் துணையை நாடிச் செல்லமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக வழிகேட்டில்தான் இருக்க முடியும்.
ஆக மார்க்கத்தை – சத்தியத்தை – நேர்வழியை நிலை நாட்ட குர்ஆன், ஹதீஸ் மட்டுமே போதும். மேலதிகமாக கராமத்தோ, ‘முபாஹலா’வோ தேவையே இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்திருப்பீர்கள். அதிலும் குறிப்பாக இறுதித் தூதரையும், அல்குர்ஆனையும் ஒப்புக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக ‘முபாஹலா’ தேவையே இல்லை என்பதே குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் இரவும் பகலைப் போல் தெரியும் உண்மையாகும்-சத்தியமாகும். அதற்கு மாறாக ‘முபாஹலா’வில் ஈடுபடுகிறவர்கள் மக்களிடையே வழிகேட்டையே வளர்க்கிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
மார்க்கத்தை-சத்தியத்தை-நேர்வழியை நிலைநாட்ட ‘முபாஹலா’ அவசியமே இல்லை என்பதை உறுதியாக விளங்கிக் கொண்டீர்கள். அடுத்து இவ்வுலக விவகாரங்களில் முடிவு செய்ய ‘முபாஹலா’ கூடுமா? என்பதை விரிவாகப் பார்ப்போம். உலகியல் காரியங்களில் எந்த விஷயமாக இருந்தாலும் ஆதாரங்களைக் கொண்டும், சாட்சிகளைக் கொண்டும், குற்றத்தை நிரூபித்து சத்தியத்தை நிலைநாட்டி விட முடியும். கொலைக்குற்றம், திருட்டுக்குற்றம், விபச்சாரக் குற்றம் போன்ற கொடூரக் குற்றங்களைக் கூட சாட்சிகள் கொண்டு நிரூபித்துவிட முடியும். ஒருவன் கொலை செய்துவிட்டு கொலை செய்யவேயில்லை என மறுக்கிறான். அவன் கொலை செய்ததைக் கண்ணால் பார்த்த இருவர் நீதி மன்றத்தில் சாட்சி சொன்னால் போதும்; குற்றவாளி ஆயிரம் சத்தியம் செய்து தான் கொலை செய்யவில்லை என்று கதறினாலும், நீதிமன்றம் அவன் குற்றவாளி என்றே தீர்ப்பளிக்கும். ஆக கொலைக் குற்றத்திற்கு, திருட்டுக் குற்றத்திற்கு இரண்டு நேரடி சாட்சிகள் இருந்தால் போதும்; குற்றம் நிரூபிக்கப்பட்டு விடும். குற்றவாளி தப்ப முடியாது.
ஆனால் விபச்சாரக் குற்றத்திற்கு நான்கு சாட்சிகள் வேண்டும்; அவ்வளவுதான். நான்கு சாட்சிகள் சம்பவத்தை நேரடியாகப் பார்த்ததாகச் சாட்சி சொன்னால் போதும்; இஸ்லாமிய ஆட்சியில் அப்பெண்ணுக்கு தண்டணை வழங்கப்பட்டு விடும். நான்கு சாட்சிகள் இல்லை. ஆனால் பெண்ணின் கணவன் மட்டும் அக்கோரக்காட்சியை தன் கண்களால் கண்டுவிட்டான். அவனால் தன் மனைவிக்குத் தண்டனையைப் பெற்றுத்தர முடியுமா? முடியாது.
இந்த நிலையில் அக்கணவன் நெறிகெட்ட அப்பெண்ணுடன் தொடர்ந்து கணவன்-மனைவி என்ற நிலையில் வாழ அவன் மனம் இடம் கொடுக்குமா? மனம் இடம் தராது. அவன் தனது வாழ்வில் நிம்மதி பெற மார்க்கம் அவனுக்கு அளித்திருக்கும் வாய்ப்பே ‘முபாஹலா’ போன்ற “லிஆன்” என்ற ஆயுதம். அதாவது “நான் என் மனைவி இன்னொரு ஆணுடன் விபச்சாரம் செய்ததை என் கண்களால் கண்டேன். இது உண்மை. இது பொய்யாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என்மீது ஏற்படுமாக” என்று அவன் தனக்கே சாபமிட்டுக் கொள்ள வேண்டும். அதை மறுப்பதாக இருந்தால் அப்பெண் ” என் கணவர் என்மீது பழி சுமத்துகிறார். நான் அவர் கூறும் விபச்சாரத்தில் ஈடுபடவில்லை. இது உண்மை. இது பொய்யாக இருக்குமானால் அல்லாஹ்வின் சாபம் என்மீது ஏற்படுமாக” என்று அவள் தனக்கே சாபமிட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பிரிந்து விட வேண்டும்.
ஆக, இப்படி மன அமைதிக்காக கூடி வாழும் கணவன் மனைவிக்கிடையில், மனைவி மீது விபச்சாரக்குற்றம் ஏற்பட்டு, அதை நிரூபிக்க நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் மட்டுமே, தனக்குத்தானே சாபம் இட்டுக் கொள்ளும் ‘லிஆன்’ என்ற முபாஹலா போன்றதற்கு அனுமதி உண்டு. வேறு எந்த நிகழ்வுக்கும் முபாஹலாவுக்கு அனுமதியே இல்லை என்பதே உறுதியாகத் தெரிகிறது. அதுவும், நான்கு சாட்கிகள் இருக்கும் நிலையில் லிஆனுக்கே அனுமதி இல்லை எனும்போது பல சாட்சிகள் இருக்கும்போது முபாஹலாவுக்கு அனுமதி எங்கே இருக்கிறது?
சத்தியத்தை நிலைநாட்டவே மார்க்கத்தில் குர்ஆன், ஹதீஸ் வழியில் முஸ்லிம்களுக்கு ‘முபாஹலா’வுக்கு அனுமதி இல்லை. ஆக எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும், மார்க்கமாயிலும், உலகியல் ஆயினும், ஓர் உண்மை முஸ்லிம் முபாஹலாவுக்கு அழைக்கவும் மாட்டார். பிறரின் முபாஹலா அழைப்பை ஏற்கவும் மாட்டார். நேர்வழிவிட்டு கோணல்வழிகளில் செல்பவர்களே முபாஹலா பூச்சாண்டி காட்டி மக்களை மயக்கி தன்பக்கம் ஈர்க்க முனைவார்கள் என்பதே உண்மையாகும்.
source :http://annajaath.com/?p=2297