Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இரத்த தானமும் உடல் தானமும்

Posted on September 18, 2013 by admin

இரத்த தானமும் உடல் தானமும்

  அ. முஹம்மது கான் பாகவி     

[ இறைக் கட்டளைக்கு முதலிடம் அளித்து, அதற்கு முரண்படாத அறிவியல் வளர்ச்சியையே நாம் ஏற்க வேண்டும்.]

அறிவியலின் அதீத முன்னேற்றத்தால், முற்காலத்தில் சாத்தியமில்லாமல் இருந்த கனவுகள் பல தற்காலத்தில் நனவுகளாகி உள்ளன. அவற்றில் மருத்துவத் துறையின் சாதனைகள் திகைக்கவைக்கின்றன. போன உயிரை மீட்க முடியவில்லையே தவிர, மற்றெல்லா ஊகங்களும் நிஜங்களாகி வருகின்றன.

அதே நேரத்தில், சாதனைகளே சிலவேளைகளில் சோதனைகளாகி மனித இனத்தைச் சீரழிக்கவும் செய்கின்றன. ‘புதிய கண்டுபிடிப்புகள்’ என்று சொல்லி, மனித நாகரிகம், பண்பாடு, சமய மரபுகள், சமூக்க் கோட்பாடுகள் ஆகிய அனைத்துத் தார்மிக நெறிகளும் கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடுகின்றன.

கடிவாளமில்லாத விலங்கு மட்டுமல்ல; கட்டுப்பாடில்லாத மனித ஆராய்ச்சியும் பேரழிவுதான். அணு ஆயுதங்கள், வேதிப்பொருட்கள், மின்னணுச் சாதனங்கள் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும். இவற்றால் மனித குலம் அனுபவிக்கும் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம்; மதுவைப்போல்.

மருத்துவ ஆராய்ச்சி –குறிப்பாக அலோபதி சிகிச்சை முறை- என்பது உடனுக்குடன் பலன் தந்தாலும் அதன் பக்க விளைவுகள் நீண்ட காலத்திற்குப் பெரிய பாதிப்பையே தரவல்லவை. ஊசி மருந்துகள், மாத்திரைகள், ‘டானிக்’குகள் போன்ற சிகிச்சைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை என்பது பலருக்கும் தெரியாது.

அவ்வாறே, கருக்கலைப்பு, க்ளோனிங், வாடகைத் தாய் போன்ற மருத்துவ ஆராய்ச்சிகளால் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் கேடுகள்தான் விளைகின்றன. அறுவை சிகிச்சை முறை கட்டிகளை அகற்றப் பயன்படுவதைப் போன்றே, உறுப்புகளை எடுத்து மற்றொருவருக்குப் பொருத்தவும் பயன்படுகிறது.

  இரத்த தானம்     

ஒரு நோயாளிக்கு இரத்தம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுவதுண்டு. அவரது இரத்தப் பிரிவு என்ன என்பதை அறிந்து, அதே பிரிவு இரத்தமுள்ள மற்றவரிடம் தானமாகவோ விலை கொடுத்தோ இரத்தம் பெற்று, நோயாளிக்குச் செலுத்தும் முறை மருத்துவ உலகில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.

இதற்காக இரத்த வங்கியின் தேவை, முதலாம் உலகப் போருக்குமுன் உணரப்பட்டது. இரத்தத்தைச் சேகரித்து, சேமித்து, பதப்படுத்தி வழங்குகிற நிறுவனமே இரத்த வங்கி (Blood Bank) ஆகும். இரத்த தானம் மூலம் சேகரிக்கப்படும் இரத்தங்களே பெரும்பாலும் இதில் சேமிக்கப்படுகின்றன.
ஒரு தாய் மற்றொருவரின் குழந்தைக்குப் பாலூட்டும் முறை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அதற்காக அத்தாய் கூலியும் பெறலாம் (அல்குர்ஆன், 65:6).

தாய்ப்பால் எப்போதும் சுரந்துகொண்டிருப்பதால், அடுத்தவர் குழந்தைக்குப் பாலூட்டுவதால் தாய்க்கோ சேய்க்கோ பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. தாய்ப்பாலுக்காக ஏங்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும் வாய்ப்பும் இதில் உள்ளது.

பாலைப் போன்றே மனிதனின் உடலில் இரத்தமும் ஊறிக்கொண்டே இருக்கிறது. எனவே, நோயாளிக்கு இரத்தம் வழங்குவதால் கொடையாளிக்குப் பாதிப்பும் இல்லை; நோயாளிக்குப் பயனும் கிடைக்கும். எனவே, இரத்த தானம் செய்வது மார்க்கச் சட்டப்படி செல்லும்.
ஆனால், அவசியத்தை முன்னிட்டே இரத்த தானம் செய்ய வேண்டும். அத்துடன இரத்த தானம் செய்வதால் கொடையாளிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதைச் சோதனை மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும். இரத்தம் கொடுத்துவிட்டுக் கூலி வாங்கக் கூடாது. “இரத்தம் விற்ற காசுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்”. (புகாரீ)

  இரு வகை உறுப்பு தானம்  

கண், சிறுநீரகம், இருதயம், ஈரல், கல்லீரல் போன்ற உறுப்புகளைத் தானமாகவோ விலைக்கோ வாங்கி, தேவையான நோயாளிக்குப் பொருத்தும் நடைமுறையும் பரவலாகக் காணப்படுகிறது.

உயிருடன் இருக்கும் ஒருவரின் உறுப்பை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது ஒரு வகை. இறந்துபோனவரின் உறுப்பை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது இன்னொரு வகை.

முதல் வகை உறுப்பு தானம் மார்க்கத்தில் செல்லாது என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். காரணம், வெட்டி எடுக்கப்படும் உறுப்பு உயிருள்ள அந்த மனிதருக்குத் தேவை. இரு கண்களில் எது வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று மற்றொன்றுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காகவே இறைவன் இரண்டாகப் படைத்துள்ளான். இரண்டில் ஒன்றை அடுத்தவருக்குக் கொடுத்த பிறகு, மீதியுள்ள ஒன்று இயங்க மறுத்துவிட்டால், கொடுத்தவர் என்ன செய்வார்? அவ்வாறே, எடுக்கப்பட்ட சிறுநீரகம் அடுத்தவருக்குப் பொருந்தாமல்போய்விட்டால் வீண்தானே!

தவிரவும், மனிதனின் உடல் உறுப்பு எதுவாயினும் அது மதிப்புக்குரியது; விலைமதிப்பற்றது. அதனை வெட்டி எடுத்தோ கோரப்படுத்தியோ அலங்கோலமாக்குவதற்கு அந்த மனிதனுக்கே உரிமை இல்லை. மனிதன் கண்ணியமானவன். அவனது கண்ணியத்தை எந்த வகையிலும் சீர்குலைப்பது தகாத செயலாகும்.

“நிச்சயமாக நாம் ஆதமின் மக்களை (மனிதர்களை) மேன்மைப்படுத்தியுள்ளோம்” (17:70) என்று இறைவன் தெரிவிக்கின்றான்.

அடுத்து இறந்தவரின் உடலுறுப்புகளைத் தானம் செய்வதை, இன்றைய இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் அனுமதிக்கின்றனர்.

இதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் பொதுவானது. இஸ்லாம் வலியுறுத்துகின்ற அதிகமான நன்மைகள் இதன்மூலம் ஏற்படும் என்பதுதான் அது. பொது நன்மைகள், பிறர் துயர் துடைத்தல், கேடுகளில் எளிதானது எதுவோ அதைத் தேர்ந்தெடுத்தல், நன்மைகளில் மேலானது எதுவோ அதைக் கவனத்தில் கொள்ளல் ஆகிய கோட்பாடுகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மண்ணில் மடிந்து வீணாகிப்போகும் உடலுறுப்பை, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு வழங்கினால் என்ன? இறந்தவரின் மரியாதையைவிட உயிர்வாழும் ஒருவரின் நன்மைக்கே முதலிடம் அளிக்க வேண்டும் –என்பது இந்த அறிஞர்களின் வாதமாகும். (ஃபத்தாவா அஷ்ஷபகத்தில் இஸ்லாமிய்யா)

  ஃபிக்ஹு அகாடமி  

அவ்வாறே, இந்தியாவிலுள்ள ஃபிக்ஹு அகாடமி வெளியிட்டுள்ள ஃபத்வா தொகுப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:

ஒருவரின் உறுப்பை வெட்டி எடுத்து அவருக்கே வேறு இடத்தில் பொருத்துவது செல்லும். (எடுத்துக்காட்டு: விரல்)

மனிதன் அல்லாத வேறு உயிரினங்களின் உறுப்புகள் பயன்படாதபோது, ஒருவரின் உயிரைக் காக்க மற்றொரு மனிதரின் உறுப்பை எடுத்துப் பொருத்துவது செல்லும்.

நெருக்கடியான நேரத்தில் ஒருவர் தன்னுடைய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றைத் தானம் செய்யலாம். ஆனால், இறந்தபின் உறுப்புகளைத் தானம் செய்வதாக வாக்களிக்கக் கூடாது.

மற்றவர்கள் கருத்து

வேறுபல அறிஞர்கள், இறந்தவரின் உறுப்புகளைத் தானம் செய்வது கூடாது என்கின்றனர். உயிருடன் இருக்கும்போதும் இறந்தபிறகும் உடலுறுப்பு தானம் என்பது செல்லாது என்பதே இவர்களின் கருத்தாகும். ஷைகு இப்னு பாஸ், ஷைகு இப்னு உஸைமீன், ஷைகு அபூஹைஸமா முதலானோர் இந்த முடிவையே தெரிவித்துள்ளனர்.

உடல் மனிதனிடம் அளிக்கப்பட்டுள்ள அமானிதமாகும். எனவே, அதை அகற்றுவதற்கோ அகற்றுமாறு ‘வஸிய்யத்’ செய்வதற்கோ அவனுக்கு உரிமை கிடையாது. ‘வஸிய்யத்’ செய்தாலும் அதை நிறைவேற்றுவது கூடாது. இறந்தவரின வாரிசுகளுக்கும் அந்த உரிமை இல்லை.

“இறந்தவரின் எலும்பை உடைப்பதானது, உயிருள்ளவரின் எலும்பை உடைப்பதைப் போன்றதே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்). அதாவது இரண்டும் குற்றமே.

மேலும், அடக்கத் தலத்தின் (கப்று)மேல் அமர்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள். (அபூதாவூத்)

ஒரு மனிதர் காலணி அணிந்துகொண்டு கப்றுகள்மேல் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான்! உமது காலணியைக் கழற்றுவீராக!” என்று சொன்னார்கள். உடனே அவர் தம் காலணிகளைக் கழற்றி எறிந்துவிட்டார். (அபூதாவூத்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றொரு ஹதீஸில் குறிப்பிட்டார்கள்: உங்களில் ஒருவர், நெருப்புக் கங்கின்மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து சருமம்வரை சென்றடைவதானது, அடக்கத் தலத்தின் மீது அவர் அமர்வதைவிட அவருக்குச் சிறந்ததாகும். (முஸ்லிம்)

இறந்துபோனவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கப்றுமீது அமர்வதே இத்துணை பெரும் குற்றம் என்றால், சடலத்தைச் சிதைப்பது எவ்வாறு தகும்?

  உடல் தானம்   

இறந்துபோன ஒருவரது முழு உடலையும் தானம் செய்வது, அவரே ‘வஸிய்யத்’ செய்திருந்தாலும் கூடாது. மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக இவ்வாறு உடலைத் தானம் செய்யும் பழக்கம் உள்ளது.

ஒரு முஸ்லிமின் உயிர் பிரிந்தவுடன், அவரது சடலத்தை நீராட்டி, கஃபனிட்டு, இறுதித் தொழுகை (ஜனாஸா) நடத்தி, முறையாக மண்ணில் நல்லடக்கம் செய்ய வேண்டும். அதாவது குழி வெட்டி, அதனுள் மய்யித்தை வைத்து, மண்ணைத் தள்ளி மூடிவிட வேண்டும். இதுவே மார்க்கம் சொல்லியிருக்கும் வழிமுறையாகும்.

இதை விடுத்து, சடலத்தைப் பதனிட்டு நீண்ட காலம் வைத்துக்கொண்டிருப்பதோ, கிழித்து ஆய்வுக்குப் பயன்படுத்துவதோ இஸ்லாமிய நடைமுறை ஆகாது.

ஆக, நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன என்பதற்காக, மார்க்கத்தின் நெறிமுறைகளையும் நபிவழியையும் மாற்றிக்கொள்ள முடியாது. அந்தச் சிகிச்சை முறை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகவோ, நபிவழிக்கு முரண்பட்டதாகவோ இல்லாமல் இருக்கும் வரைதான் முஸ்லிம்கள் பயன்படுத்தலாம்.

ஆண் பெண்ணாக மாறுவது, பெண் ஆணாக மாறுவது, யாரோ ஒருவனின் விந்தணுவை எடுத்து வாடகைத் தாய்க்குச் செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற நவீன முறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக மார்க்கத்தைப் புறக்கணித்துவிட்டு, அறிவியல் எதைச் சொன்னாலும் அதைச் செய்வதென்பதை ஏற்க முடியாது.

இறைக் கட்டளைக்கு முதலிடம் அளித்து, அதற்கு முரண்படாத அறிவியல் வளர்ச்சியையே நாம் ஏற்க வேண்டும்.

source: http://khanbaqavi.blogspot.in/

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb