இன்றைய நாட்களில் ஒரு அமைப்பிற்கோ, கட்சிக்கோ, மதத்திற்கோ தலைவர் ஒருவர் உருவானால் அவர் எப்படியெல்லாம் புகழப்படுகின்றார், அவர் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் மக்கள் செலுத்தும் மரியாதைகள், நாகரீகமான இந்த காலத்தில்தானா நடக்கின்றது என்ற எண்ணம் நமக்கே உருவாகின்றது.
ஒரு ஏரியா தலைவர் என்றால் நூற்றுக்கு மேற்பட்ட கார்களில் பவனி, ஒரு மதத்தலைவர் என்றால் பல்லக்கில் ஊர்வலம், எடைக்கு எடை நாணயம், அவர் இறந்த பின்போ அவரையே தெய்வமாகக் கருதி செய்யப்படும் வழிபாடுகள்… இப்படி மனிதனுக்கே உள்ள பகுத்தறிவை சிறிதும் கண்டுகொள்ளாத கற்கால பழக்கங்கள் இன்றும் இருந்து வருகின்றன.
இன்றே இப்படி என்றால், 1430 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்…
அன்றைய அரேபிய மண்ணில் ஒரு கொலைக்கு ஆயிரம் வருட பகை கொண்டாடும் ஜாதிகள், பெண்ணை இழிவாகக் கருதிய சமுதாயம், நாளொரு கடவுளை வணங்கும் பக்தர்கள், ஜோசியத்தில் மூழ்கிய மக்கள், தண்ணீருக்கு பதிலாக மது குடிக்கும் குடிமகன்கள், சூதாட்டங்கள், வட்டி, சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் மலிந்து காணப்பட்ட அந்த நாளில்தான் மக்கா என்ற நகரில் அப்துல்லாஹ், ஆமினா என்ற தம்பதியருக்கு மகனாக முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறக்கின்றார்.
பிறக்கும் முன்பே தந்தையை இழந்த அவர் தனது ஆறாவது வயதில் தாயையும் இழந்து அநாதையாகிறார். பின்பு உறவினர்களால் எடுத்து வளர்க்கப்படுகிறார்.
அவரது நாற்பதாவது வயதில் ஆதாம், ஆப்ரஹாம், தாவீது, சாலமன், மோஸஸ், ஏசு (அவர்கள் அனைவர்மீதும் இறைசாந்தி நிலவட்டும்.) ஆகியோரின் வரிசையில் இறைவனின் தீர்க்கதரிசனத்தைப் பெற்று, இறைத்தூதர் ஆகிறார். அவருக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் மூலம் உலகில் இஸ்லாமியப் புரட்சி தொடர்கிறது.
மனித சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த சாதிகளை ஒழிக்கிறார். இன, மொழி, நிற வேற்றுமைகளைக் களைகிறார். தன்னைப் பின்பற்றும் மக்களை தன் உற்ற தோழர்களாக கருதி, தான் சொல்லும் சொல்லை உடனுக்குடன் அப்படியே ஏற்று நிறைவேற்றும் மக்களாக மாற்றுகிறார். சாராயம் வாங்குவது, குடிப்பது, விற்பது, ஊற்றிக் கொடுப்பது என அனைத்தையும் தடை செய்கிறார்…
வெறும் போகப் பொருளாகப் பாவிக்கப்பட்ட பெண்களுக்கு ஆன்மா உண்டா என்று அறிஞர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் ஆராய்ச்சி செய்யப்பட்டுவந்த அந்தக் காலத்தில், பெண்களுக்கும் ஆண்களுக்கு இருப்பதைப் போல உரிமைகள் உண்டு என்று இறைவன் அவர் மூலம் நமக்களித்த வேதத்தைக் கொண்டு அறிவித்தார். தன்னலம் மறந்து தான் ஈன்றெடுக்கவிருக்கும் குழந்தையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அது பிறந்து, வளர்ந்து, சொந்தக் காரில் நிற்கும் வரை தன் தலையில் சுமக்கும் தாயை மதிக்காதவனுக்கு சுவர்க்கம் இல்லை என்று கூறினார்.
இவற்றின் மூலம் எண்ணற்ற படைப்பினங்களை எல்லாம் கடவுள்களாக வணங்கிக்கொண்டிருந்த அன்றைய மக்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையால் கவரப்பட்டார்கள். அதனால் சடங்கு சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு நீங்கியது. பொருளாதார வசதி பெற்றவர்கள் ஏழை மக்களுக்கு ஏழைவரி (ஜகாத்) என்ற பெயரில் தங்கள் சம்பாத்தியத்திரிருந்து ஒரு சிறு பகுதியைக் கொடுக்கத் துவங்கினர்.
வட்டி என்ற கொடுமையில் சிக்கித்தவித்து, வாழ வக்கற்றுப் போன மக்களுக்கு திருக்குர்ஆன் மூலம் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, வட்டி வாங்குவது, கொடுப்பது, அதற்கு கணக்கு எழுதுவது, சாட்சி சொல்வது ஆகிய இவையனைத்தும் இறைவனிடம் கடும் தண்டனைக்குரியது என்று உணர்த்தி அன்றைய அரபு சமுதாயத்தின் ஆணிவேராக இருந்த வட்டியை அடியோடு ஒழித்துக் காட்டினார்.
ஓய்வில்லாப் பிரச்சாரத்தின் விளைவுகளால் சுயநலம் பாதிக்கப்பட்ட சிலர், இவர் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தபோதிலும், சமுதாயத்துக்கு செய்திகள் சென்றடைய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு, அத்தாக்குதல்களை இன்முகத்துடன் சகித்துக்கொண்டார். பிறந்து வளர்ந்த மக்கா நகரத்திரிருந்து துரத்தப்பட்டு, மதீனா என்ற நகருக்கு அவர் சென்றபோது, அங்குள்ள மக்களால் அரவணைக்கப்படுகிறார். அங்குள்ள மக்களைக்கொண்டு ஓர் அழகிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறார்.
இன்று நம் நாட்டில் ஒரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினரைப் பார்ப்பதற்கே பல அப்பாய்ண்ட் மென்டுகள் வாங்க வேண்டிய நிலையில், உலகின் ஒரு பெரும் பரப்பைக் கொண்ட சாம்ராஜ்ஜியத்தின் அதிபரை நாட்டின் சாதாரணக் குடிமகன் ஒருவன் கூட நினைத்த நேரத்தில், எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பார்க்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.
அன்றைய மாபெரும் அரசுகளான ரோமாபரியும், பாரசீகமும் இவரது காலடியின் கீழ் வந்தது. முழு அரபுலகிற்கும் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார். அப்பேர்பட்ட மாமன்னரின் அரண்மனை எப்படி இருந்தது தெரியுமா? பெரிய மாளிகை அல்ல! சிறிய வீடு அல்ல! ஐந்துக்கு ஐந்து அடி பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய அறைதான்! படுத்திருந்ததோ ஒரு சிறு கயிற்றுக் கட்டில். அதில் படுத்துப் படுத்து, அதன் சுவடுகள் அவரது மேனியில் எப்போதும் காணப்படும்.
செய்யப்படும் குற்றங்களுக்காக உடனுக்குடன் தண்டனைகள் வழங்கப்பட்ட காரணத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களுக்குக் நியாயம் கிடைத்ததை எண்ணிப் பெருமிதப்பட்டு மன நிம்மதி அடைந்தனர். அவர் காட்டித் தந்த இறைச் சட்டங்களால் குற்றங்கள் மிகவும் குறைந்துவிட்ட நிலை. இன்று இஸ்லாமிய சட்டங்களில் ஒரு சிறு பகுதியை மட்டுமே செயல்படுத்திவரும் சவூதி அரேபியா நாட்டில் மற்ற அனைத்து உலக நாடுகளையும் விட குற்றங்கள் குறைவு என்று இன்றைய ஆய்வுகள் கூறுவது இதற்கு மாபெரும் சான்று.
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிப்போம் என்றார் பாரதி. அது கானல் நீராகத்தான் இன்றுவரை உள்ளது. ஆனால், இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்நாளிலேயே அதை நிறைவேற்றிக் காட்டினார். அண்டை வீட்டாரை நேசிக்காதவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்று முழங்கினார். பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க நீ மட்டும் ருசியாகச் சாப்பிடாதே…! என்றார். பக்கத்து வீட்டாருக்காக நீங்கள் சமைக்கும் நீர் ஆகாரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்…! என்று வரியுறுத்தினார்.
ஒரு பெண், நள்ளிரவில் தன்னந்தனியாக நகை அணிந்துகொண்டு வெளியில் சென்றுவிட்டு பத்திரமாக என்று வீடு திரும்புகிறாளோ அன்றுதான் நம் நாட்டுக்கு உண்மைச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார் நம் தேசத்தந்தை காந்தியடிகள். அப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் இதுவரை கிடைக்கவும் இல்லை. இனி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், நபிகள் நாயகம் முஹம்மது அவர்களோ தன் வாழ்நாளிலேயே இதையும் சாதித்துக் காட்டினார். இன்றும் சில அரேபிய நாடுகளில் தொழுகை நேரம் வந்துவிட்டால் விலை மதிப்புமிக்க கடைகள் அனைத்தையும் திறந்த நிலையிலேயே போட்டுவிட்டு பள்ளிவாசல் நோக்கிச் செல்வதைப் பார்க்கிறோம். அங்கெல்லாம் எந்தத் திருட்டும் நடைபெறுவதில்லை.
இன்று பல்வேறு நாடுகளிலும் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். எண்ணற்ற சித்ரவதைகளைச் சந்திக்கின்றனர். ஏன்? உயிர் கூட பறிக்கப்படுகிறது. ஆனால், அன்று நபிகள் நாயகத்தின் தலைமையில் உருவான சமுதாயம் பல்வேறு இழப்புகளுக்கு ஆளான பிறகும் போருக்குத் துணியவில்லை. துன்பங்கள் அளவுக்கதிகமான காரணத்தால் போர் திணிக்கப் பட்டபோது கூட போரில் வெற்றி பெற்று கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பிறகும், அந்தக் கைதிகளைத் தண்டிக்காமல், தம்மைச் சார்ந்த மக்களுக்கு கல்வி கற்பித்துக் கொடுத்துவிட்டு விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அழகான நடைமுறையை ஏற்படுத்தி உலகிற்கே போர் நெறியைக் கற்றுக் கொடுத்தார்.
இன்று நமக்கெல்லாம் கல்வியை வழங்கியது ஐரோப்பா. ஆனால் அந்த ஐரோப்பாவிற்கே கல்வியை வழங்கியது இஸ்லாம். அந்த அளவுக்கு அவரது சமுதாயத்தை கல்வியின்பால் தூண்டினார் நபிகள் நாயகம் அவர்கள்.
இன்று உலகில் பல தலைவர்களின் வாழ்க்கையில் ஒரு பக்கம்தான் நமக்குக் காட்டப்படுகிறது. அவர்களின் மறு பக்கத்தைத் திறந்தாலோ அவரது இமேஜ் அதல பாதாளத்திற்குச் சென்றுவிடும். ஆனால் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையோ பதிவு செய்யப்பட்ட திறந்த புத்தகமாக இன்றும் உள்ளது. அவரது அந்தரங்க விஷயங்கள் கூட மக்களுக்கு முன்மாதிரியாக்கப் பட்டுள்ளது. அவரது வீட்டாரில் ஒருவர் கூட அவரைப் பற்றிப் புகார் கூறியதில்லை. அவரிடம் வேலை பார்த்த ஒரு மாற்று சமய சிறுவன் கூட, என்னை முஹம்மது அவர்கள் ஒருபோதும் சுடுசொல் கூட சொன்னதில்லை என்றான்.
ஓர் இறைவனை வணங்கும் பள்ளிவாசல் ஒன்றில் முஸ்ரிமல்லாத சகோதரர் ஒருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது அதைக் கவனித்த நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைக் தடுக்கவும், கண்டிக்கவும் முனைத்தனர். அப்போது அவர்களைத் தடுத்த முஹம்மது அவர்கள் அந்த நபரை முழுமையாக சிறுநீர் கழிக்க விட்டுவிட்டு, தன் கையாலேயே அதற்குத் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து, கண்ணியமாகவும், மனம் நெகிழும் முறையிலும் அந்த நபருக்கு அறிவுரை வழங்கினார்கள். அதைக் கேட்ட அந்த நபரும் கண்கலங்கி, செய்த தவறுக்காக வருந்தி, ஒழுக்க வாழ்வு வேண்டி அந்த இடத்திலேயே நபிகள் நாயகம் முஹம்மத் அவர்களைப் பின்பற்றி வாழ முடிவெடுத்தார். இப்படிப்பட்ட சரித்திரங்களையெல்லாம் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் மட்டுமே காணமுடியும்.
இவ்வளவு ஏன்? நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடும் எதிரியாகப் பார்த்தவர்கள் கூட அவருடைய ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை மட்டும்தான் எதிர்த்தார்களே தவிர, அதைச் சொன்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம்பிக்கையாளர், உண்மையாளர், தன்னலமற்றவர் என்றெல்லாம் சொன்னதை நாம் சரித்திரத்தில் தெளிவாகக் காணமுடியும்.
இன்று தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர், தாங்கள் பதவியிரிருக்கும்போதும், பதவியிரிருந்து ஓய்வு பெறும்போதும் தங்களுக்கென்று பல சொகுசுகளைக் கேட்டுப் பெற்று அனுபவித்துவரும் காட்சிகளை நாம் கண்கூடாகக் கண்டே வருகிறோம். அந்தத் தலைவர்கள் மறைந்த பிறகும் கூட, அவரது குடும்பத்தினர் பென்ஷன், உதவித்தொகை என்ற பெயர்களில் மக்கள் பணத்தைப் பெற்றுக்கொள்வதை நம்மால் காணமுடிகிறது. ஆனால் முஹம்மது அவர்கள், தான் உயிருடன் இருக்கும் காலத்திலேயே தானும், தனது குடும்பமும் அரசாங்கப் பொது நிதியிரிருந்து ஒரு துரும்பையும் தொடக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
இந்த விபரம் தெரியாத அவரது பச்சிளம் பேரக்குழந்தை ஒன்று அரசுக் கருவூலத்திரிருந்த பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டு விடுகிறது. அதைக் கண்ட நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தக் குழந்தையைத் துப்பச் செய்து அதற்கு அறிவுறுத்துகிறார். அதுபோல, தான் இறந்த பிறகும் தன் குடும்பத்தார் அரசுக் கருவூலத்திரிருந்து எதையும் அனுபவிக்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்துவிட்டார். அதனடிப்படையில் அவரது குடும்பத்தாரும் வாழ்ந்து காட்டினர். இவையெல்லாம் சரித்திரம்!
source: http://www.ottrumai.net/TArticles/55-TheGreatestLeader.htm