எகிப்தில் இராணுவ சதிப் புரட்சியால் பதவி கவிழ்க்கப்பட்ட இஸ்லாமியவாதி ஜனாதிபதி முஹம்மத் முர்சி ஆதரவாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக அந்நாட்டிலுள்ள 55,000 முஸ்லிம் மதப் போதகர்கள் அல்லது இமாம்களுக்கு இராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு தடை விதிக்கவுள்ளது. ‘அவ்காப்’ என அழைக்கப்படும் எகிப்து மத விவகார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
கடந்த ஜுலை 3 ஆம் திகதி இராணுவ சதிப் புரட்சி மூலம் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில் எகிப்து நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் மத விவகார அமைச்சர் மொஹமட் மொக்தார் கொமா நேற்று முன்தினம் விடுத்த அறிவிப்பில், அனுமதிப்பத்திரம் இல்லாத மதப் போதகர்கள், அடிப்படைவாதிகள் மற்றும் எகிப்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள் என கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நவீன இஸ்லாமிய சிந்தனையைப் பரப்புவது மற்றும் எகிப்தை கடும்போக்கு சிந்தனையிலிருந்து காக்கும் வகையிலேயே இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனுமதிப்பத்திரம் இல்லாத சிறு பள்ளிவாசல்கள் அல்லது கட்டுப்பாடற்ற தொழுகையிடங்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளன.
‘வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை போதனைகளை சட்ட ரீதியாக்குவதே இந்த முடிவின் ஒரே நோக்கமாகும்’ என்று கொமா ராய்ட்டருக்கு தெரிவித்தார். எகிப்தில் ஜனநாயக முறையில் முதன் முறை தேர்வான முர்சி வெளியேற்றப்பட்டபின் 2000 க்கும் அதிகமான இஸ்லாமிய செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் வன்முறையை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு ஒருசிலர் மீது தீவிரவாதம் அல்லது கொலைக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இந்த காலப் பிரிவில் அரசியல் வன்முறைகளில் 1000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இதில் கெய்ரோவில் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்ட முகாமை கலைக்க இராணுவ நடவடிக்கை எடுத்ததிலேயே பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டனர். மறு புறத்தில் இராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்லாமியவாதிகளின் தாக்குல்களும் அண் மைக்காலத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பள்ளி வாசல்களை கட்டுப்படுத்தும் எகிப்து நிர்வாகத்தின் புதிய நடவடிக்கை நாட்டை மீண்டும் 2011 மக்கள் எழுச்சிக்கு முன்னரான சர்வாதிகார ஆட்சிக்கு கொண்டு செல்வதாக அஞ்சப்படுகிறது. இது 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த இராணுவ ஆட்சியாளர் கமால் அப்துல் நாசரின் கடுமையான கொள்கையுடன் ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.
‘அப்துல் நாஸர் 1950, 60 களில் மேற் கொண்டது போன்று பள்ளிவாசல்களை அரசியலில் இருந்து அகற்றுவது மற்றும் தேசியவாதத்தை பரப்புவதன் ஒரு கட்டமாகவே இந்த திட்டம் இருக்கிறது’ என்று வொஷிங்டனை மையமாகக் கொண்டு இயங்கும் மத்திய கிழக்கு மையத்தின் இஸ்லாமிய அரசியல் தொடர்பான நிபுணர் கலில் அல் அனானி குறிப்பிட்டார்.
அரசின் புதிய திட்டத்தின் படி அனைத்து பள்ளி வாசல்களும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது. கடந்த முபாரக் அரசில், உளவாளிகள் பள்ளிவாசல் போதனைகளில் கண்காணிப்பில் ஈடுபடுவதோடு இமாம்கள் அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ‘இப்போது நாம் எமது போதனைகளை பதிவு செய்து வைத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் எமக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் காட்ட முடியும்’ என்று கெய்ரோ நஸ்ர் நகரில் இருக்கும் மெக்கா பள்ளிவாசலின் இமாம் ஷெய்க் ஹுஸைன் அல் நஜ்ஜார் குறிப்பிட்டார்.
‘இது இமாம்களுக்கும் அவர்களது சமூக தேவைக்கான அறிவுக்கும் நிர்வாகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை’ என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் எகிப்து நிர்வாகத்தின் முடிவை சுன்னி முஸ்லிம்களின் மதிப்புக்குரிய ஸ்தாபனமான அல் அஸ்ஹர் நியாயப்படுத்தியுள்ளது. அல் அஸ்ஹர் பல்கலைக்கழகமே மதப் போதகர்களுக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குகிறது.
இந்நிலையில், ‘அனைத்து மதப் போதகர்களும் அல் அஸ்ஹரியாக இருந்தால் கடும்போக்கு அல்லது தீவிரவாதம் பள்ளிவாசலில் இருந்து விலகி எகிப்தில் ஐக்கிய இஸ்லாமிய சிந்தனை தோன்றும்’ என்று அல் அஸ்ஹரின் பொதுத் தொடர்பு முகாமையாளர் ஷெய்க் காலித் அப்தல் கானி குறிப்பிட்டார்.
source: meelpaarvai