முஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா?
ஐயம் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன்.
என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை.
என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை.
ஆனால், என் தேடலையும் என்னையும் என் மனைவி புரிந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் என் மனைவியுடன் நான் இல்லறம் தொடரலாமா? அல்லது அவர்களை ஒதுக்கிவிட்டு வேறு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவா? – சகோதரர் ரஹ்மத்துல்லாஹ்.
தெளிவு : வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்.
அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்;
(நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 002:221)
இறை நம்பிக்கை கொண்ட ஆணும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் பெண்ணும் மண ஒப்பந்தத்தில் இணைய முடியாது. அதுபோல் இறை நம்பிக்கை கொண்ட பெண்ணும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் ஆணும் மண ஒப்பந்தத்தில் இணைய முடியாது. அதாவது, ஒரு முஸ்லிம் ஆணும், பிறமதத்தைச் சேர்ந்த பெண்ணும் அல்லது ஒரு முஸ்லிம் பெண்ணும், பிறமதத்தைச் சேர்ந்த ஆணும் திருமணம் முடிப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. மாறாக அவ்வாறு மதமாறி திருமணம் செய்வதை முஸ்லிமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடைசெய்திருக்கிறது.
இஸ்லாம் திருமணத்தை மண ஒப்பந்தமாக அங்கீகரித்திருக்கிறது. எனினும் பிறமதத்தினரின் திருமணங்கள், மணமக்களிடையே ஒப்பந்தமாகவோ, அல்லது சம்பிரதயமாகவோ நடந்திருந்தாலும் அதை அப்படியே இஸ்லாம் ஏற்றுக்கொள்கின்றது.
உதாரணத்திற்கு, வெவ்வேறு மதங்களிலிருந்து கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இஸ்லாத்தைத் தழுவினால் அத் தம்பதியரின் முந்தைய திருமணம் செல்லும். இஸ்லாம் மார்க்கத்திலும் அவர்கள் கணவன் மனைவியாக நீடிக்கலாம். இஸ்லாத்தை ஏற்றதால் திருமணத்தைப் புதுப்பிக்க வேண்டியதில்லை.
ஆனால், கணவன் இஸ்லாத்தை ஏற்று, மனைவி இஸ்லாத்தை ஏற்கவில்லை அல்லது மனைவி இஸ்லாத்தை ஏற்று கணவன் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்றாலும் அவர்களின் திருமணம் ரத்தாகிவிடும். அதன் பிறகு இருவரும் கணவன் மனைவியாக வாழ்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை!
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கையாளரான பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக உங்களிடம் வந்தால் அவர்களை நீங்கள் சோதித்துப் பாருங்கள்.
அவர்களது ஈமானை அல்லாஹ்வே நன்கறிந்தவன். நம்பிக்கையாளர்களான பெண்கள் என நீங்கள் அறிந்து கொண்டால், நிராகரிப்பாளர்களிடம் அவர்களை திருப்பி அனுப்பி விடாதீர்கள்.
இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களும் அல்லர்.
(இப்பெண்களுக்காக நிராகரிப்பாளர்களான) அவர்கள் செலவழித்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.
இவர்களுக்குரிய மணக்கொடைளை இவர்களுக்கு நீங்கள் வழங்கிவிட்டால், இவர்களை நீங்கள் மணம் முடித்துக் கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை.
இன்னும், நிராகரிப்பாளர்களான பெண்களின் (முன்னர் நடந்த) திருமண பந்தங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்காதீர்கள்.
(அவர்களுக்காக) நீங்கள் செலவிட்டதைக் கேளுங்கள். (முஃமினான பெண்களக்கு) அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இது அல்லாஹ்வின் தீர்ப்பாகும். அவன் உங்களுக்கிடையே தீர்ப்பளிக்கின்றான்.
அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 60:10)
மேற்கண்ட வசனத் தொடர், நம்பிக்கை கொண்ட பெண் நிராகரிப்பாளருக்கு அனுமதிக்கப்பட்டவர் அல்லர் என அல்லாஹ் கூறுகின்றான். இதிலிருந்து, நம்பிக்கைக் கொண்ட ஆண், நிராகரிப்பாளரான பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டவர் அல்லர் என்பதையும் விளங்கலாம்.
அறியாமை காலத்தில் பத்துப் பெண்களை மணமுடித்திருந்த ஃகைலான் பின் ஸலமாஅஸ்ஸகஃபீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். அவருடன் சேர்ந்து பத்து மனைவியரும் இஸ்லாத்தை ஏற்றனர். அப்போது அப்பெண்களில் நால்வரை மட்டும் தேர்வுசெய்து (கொண்டு மற்றவர்களை விட்டு விலகிக்) கொள்ள வேண்டும் என்று அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 1047)
சகோதரர் ரஹ்மத்துல்லாஹ், நீங்கள் இஸ்லாத்தை ஏற்று, உங்கள் மனைவி இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதால் உங்களிடையே திருமண உறவு முறிந்து விட்டது. இனி இருவரும் கணவன் மனைவி பந்தத்தில் நீடிக்க முடியாது. எனவே இருவரிடைய தாம்பத்திய உறவு கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“ஒரு முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளருக்கும் (காஃபிருக்கும்) இடையில் உள்ள வித்தியாசமே தொழுகை தான்!” என்பது வலுவான நபிமொழியாகும். இந்த ஹதீஸின் அடிப்படையில், தொழாத ஒருவரைத் திருமணம் செய்வது கூட ஏற்புடையதல்ல என மார்க்க அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது.
உங்கள் குழந்தைகளின் தாயார் இஸ்லாத்தை ஏற்க மறுத்தால், நீங்கள் முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம்!
(இறைவன் மிக்க அறிந்தவன்)
source: http://satyamargam.com/islam/others/2197-interfaith-marriage-in-islam.html