இளமை என்பது இளம் வயதினருக்கேயுரியது. ஆனால், இளமையைக் கடந்துவிட்ட சில முதியவர்கள் இன்னும் வாலிபப் பருவம் மிச்சமிருப்பது போல நடந்து கொள்வதுதான் விந்தையானது.
பொதுவாக பெண்கள்தாம் தங்கள் வயதை குறைவாகக் காட்ட முயற்சிப்பார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், ஐம்பதைத் தொட்டுவிட்ட ஆண்கள் கூட தங்களை இளமையாகக் காட்டிகொள்ள முயற்சிப்பதை நம்மால் காணமுடிகிறது.
முதுமையின் முதல் அடையாளமாகக் கருதப்படுவது தலைமுடியில் நரை தென்படுவதுதான்.
“ஆண்டு பலவாக நரையிலவாகுதல் யாங்காகியர் என வினவுதிராயின்’ என்று தொடங்கி சங்க காலப் புலவர் பிசிராந்தையார் தமக்கு முதுமையிலும் நரை விழாததன் காரணங்களைப் பட்டியலிடுகிறார்.
மன நிறைவு கொடுக்கிற சூழ்நிலைகளால்தான் தாம் நரையில்லாதிருப்பதாகக் கூறுகிறார் அவர்.
“டென்ஷன்’, “டென்ஷன்’ என்று அலையும் நம்மில் பலருக்கு தற்போது நரையில்லையென்றால்தான் ஆச்சரியம்.
முன்பெல்லாம் பெரிய பெரிய பொறுப்புகளை வகிப்பவர்களுக்கு மட்டுமே எப்போதாவது வரக் கூடிய “டென்ஷன்’ என்ற மனப்பதற்றம் இப்போது சிறு வகுப்புகளில் படிக்கின்ற குழந்தைகள் முதல் அனைவருக்கும் இயல்பான ஒன்றாகிவிட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு வீட்டிலிருந்து கிளம்பத் தயாராகும்போதே தொடங்கும் “டென்ஷன்’ வீடு திரும்பும் வரை கூடவே வருகிறது.
இதனால் இளம் வயதிலேயே நரையோடு இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டனர். இளம் பருவத்தினர் – குறிப்பாக திருமணத்தை எதிர்நோக்கி இருக்கின்ற காளையரும் கன்னியரும் – தங்கள் நரைமுடியை மறைக்க முயற்சிப்பதை புரிந்து கொள்ள முடிக்றது.
ஆனால், ஐம்பது வயதைக் கடந்தவர்கள் கூட தங்கள் தலையில் (ஆண்களாயிருந்தால் தங்கள் முகத்திலும்) நரை தெரியக் கூடாது என்று பாடுபடுவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
“அங்கிள்’, “ஆண்ட்டி’ என்று எந்த இளம் வயதினராவது அழைத்துவிடப் போகிறார்களே என்று இவர்கள் படுகின்ற கவலைதான், பல தலைமுடிநிறமி (டை) தயாரிப்பு நிறுவனங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்ல தலைமுடி, மீசை போன்றவற்றுக்கு டை பயன்படுத்தும் ஆண்கள், சில நேரங்களில் அதனை அளவுக்கு மீறிப் பூசிவிடுவதால் அவர்களது சாயம் வெளுத்துப்போவதும் உண்டு.
டை அடிக்காமல் வந்திருந்தால் இத்தகைய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இதே கதைதான், தலை வழுக்கையை மறைக்க முயல்பவர்களுக்கும் நடக்கிறது. இது நமக்கு இயற்கையாக வாய்த்தது என்பதை ஏற்றுக் கொண்டு, திருமணத்திற்குக் காத்திருக்கும் அன்பர்களைத் தவிர மற்றவர்கள் இதற்குப் பரிகாரம் தேடுவதையே ஒரு கவலையாக ஆக்கிக் கொள்ளாதிருத்தல் நலம். எப்படியாவது தங்களின் வழுக்கை போகவேண்டும் என்று முயற்சிப்பவர்களை “மொட்டை’யடிப்பதற்கென்றே பல விளம்பரங்கள் இன்று ஊடகங்களில் உலா வருகின்றன. அவை பரிந்துரைக்கும் மருந்துகளையும், எண்ணைகளையும் ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கி அதன் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும், அந்த வழுக்கையையே தங்கள் அறிவுமுதிர்ச்சிக்கு ஓர் அடையாளமாக எண்ணி அதனை அங்கீகரிப்பதே சிறந்தது.
இது மட்டுமா? குறைந்த அடர்த்தியுள்ள முடி, நரை, தோல் சுருக்கம் மற்றும் கண்களைச் சுற்றிய கரு வளையம் போன்றவற்றுக்காக மிகவும் கவலைப்படுகிறவர்கள் சிலர். பொதுவாக இளமையாகத் தோன்றுவதற்காக இவர்கள் படும் பாடு பெரும்பாடு.
இள வயது பெண்கள் தங்கள் இளமையைப் பராமரிப்பதற்கும், இளமை கழிந்த பெண்கள் அதற்கு முயற்சிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
நாற்பத்தைந்து, ஐம்பது வயதைத் தொட்டுவிட்ட பெண்கள் வேண்டுமானால் தங்கள் தோற்றப்பொலிவுக்காக மெனக்கெடலாம்.
ஆனால், இளம் மங்கையாகத் தோன்றிடச் செலவழிக்கும் பணமும் காலமும் வீண் என்பது மட்டுமல்ல உடல் நலத்திற்கும் கேடு என்பதே உண்மை.
அதிலும் சில பெண்கள் தங்கள் தலைமுடிக்கு “கலரிங்’ என்ற பெயரில் மருதாணி போன்ற ஒரு நிறத்தை ஏற்றிக்கொள்கிறார்கள்.
அபூர்வமாக சில ஆண்களையும் இப்படிப் பார்ப்பதுண்டு. அந்த நிறத்தைவிட இயற்கையான நரை முடியே பரவாயில்லை என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
வயதுக்கு ஒவ்வாத ஒப்பனை, உடை போன்றவற்றை தரித்துக்கொண்டு, பிறரிடமிருந்து நேரிடையாகப் பாராட்டையும், முதுகுக்குப் பின்புறமாக கேலிப்பேச்சையும் பரிசாகப் பெறும் இவர்களை எண்ணி நம்மால் பரிதாபம் மட்டுமே கொள்ள முடியும்.
வயது ஏற ஏற, இயற்கை அளிக்கும் கொடைகளான நரை, தோல் சுருக்கம் என்று நம் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை நமது வாழ்வின் போக்கிலேயே மிக இயல்பாக அங்கீகரிக்கவும், அவற்றின் காரணமாக, நம்மைவிட இளையோர் நமக்கு அளிக்கத் தயாரகும் மதிப்பு மரியாதைகளைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளவும் தயாராவோம்.
சீனியாரிட்டி (பணி வயது மூப்பு) என்பதை நமது அலுவலகச் சூழலில் ஏற்கத் துடிக்கும் நாம், நமது வாழ்க்கைச் சூழலிலும் அதனை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம். இயற்கையை ஏற்போம்! இன்பமாய் வாழ்வோம்!
–எஸ். ஸ்ரீதுரை
source: http://dinamani.com/