வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி விண்வெளியை ஆராய்ந்து பல உண்மைகளை கண்டு பிடித்தார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இவருக்கு முன்னால் 1609ல் விஞ்ஞானி கலீலியோ பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் அந்த அளவு விண்வெளித்துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் அந்த காலத்தில் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாததே காரணம். நமது பால்வழி மண்டலம் வெறும் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த விசாலமான பெருவெளி என்ற வரையில்தான் கலீலியோவால் கண்டு பிடிக்க முடிந்தது. அதற்கு மேல் முனனேற முடியவில்லை.
விஞ்ஞானி ஹெர்ஷல் 1783 வாக்கில் தொலைநோக்கியில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி குறிப்பிடப்படும்படியான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஒருநாள் அவர் ஆகாயத்தின் வட திசைக் கோளத்தில் தமது ஆய்வை மேற்கொண்டிருந்த போது அவரது பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது. ‘அதோ ஆகாயத்தில் ஒரு ஓட்டை. வெளி உலகிற்கு ஒரு ஜன்னல்’ எனக் கூக்குரலிட்டார். அடக்க முடியாத ஆச்சரியத்தால் தனது சகோதரியை அழைத்து வந்து தான் கண்ட காட்சியை அவருக்கும் காட்டினார்.
இதே போல் இவரது மகன் ஜான் என்பவரும் இதைப் போன்று ஆகாயத்தில் கருநிறக் கோடுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு அறிவுடைய விஞ்ஞானியின் கண்டு பிடிப்பிலும் கோளாறு ஏற்பட்டதையே இது காட்டுகிறது. தான் பார்த்தது விண்வெளியின் ஓட்டை என்ற நம்பிக்கையிலேயே ஹெர்ஷல் இறந்து விடுகிறார்.
அவர் பார்த்தது விண்வெளியில் ஏற்பட்ட ஓட்டைதானா? கண்டிப்பாக இல்லை. சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மேலும் அதி நவீன தொலை நோக்கிகள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. இதன் மூலம் ஹெர்ஷலின் கண்டு பிடிப்பு தவறு என்ற முடிவுக்கு அறிவியலார் வருகின்றனர். இதைப் பற்றி “New Hand Book Of Heaven” என்ற புத்தகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
“for many years these irregular areas in the heavens were thought to be holes in the sky in which there were no stars but we know that the dark regions are silhouttes of unilluminated nebulas that hide the stars behind.” Page 93-94
(பல வருடங்களாக ஆகாயத்திலுள்ள இந்த ஒழுங்கற்ற பெரும் பிரதேசங்கள் நட்சத்திரங்களே இல்லாத ஓட்டைகளாக கருதப்பட்டன. ஆனால் அந்த இருண்ட பகுதிகள் நட்சத்திரங்களைப் பின் பக்கம் மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு வித நெபுலாக்களின் நிழல் உருவங்களே)
பல விஞ்ஞானிகள் வான்வெளியானது பல ஓட்டைகளும் விரிசல்களும் கொண்ட ஒரு சூன்யமான பகுதி என்றே நினைத்து வந்தனர்.ஆகாயத்தில் ஏராளமான இருண்ட நெபுலாக்கள் இருப்பதால் அவை யாவும் ஆகாயத்தில் உள்ள குழிகளும் விரிசல்களும் என்றே பல நூற்றாண்டுகளாக அறிஞர்கள் நம்பி வந்தனர். ஆனால் இந்த விண்வெளியானது எந்த பள்ளங்களோ ஓட்டைகளோ இல்லாது கண கச்சிதமாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர்.
இனி குர்ஆனின் வசனத்துக்கு வருவோம்……
‘அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளானனின் படைப்பில் எவ்வித ஏற்ற இறக்கங்களையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இருமுறை பார்வையைச் செலுத்துவீராக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மை திரும்பி வந்தடையும்.’ (குர்ஆன் 67:3,4)
பிற்காலங்களில் வானத்தில் ஓட்டை இருப்பதாக சிலர் சொல்லக் கூடும். அந்த ஆய்வுகள் பிற் காலங்களில் கண்டு பிடிக்கப்பட்டு உண்மை உலகுக்கு வெளிக் காட்டப்படும் என்ற உண்மையை சொல்வது போல் அமைந்துள்ளது இந்த வசனம். இந்த வசனத்தில் கூறப்பட்டது போலவே விஞ்ஞானி ஹெர்ஷல் தனது ஆய்வில் வானத்தில் ஓட்டை இருப்பதாக நினைத்து எழுதி வைத்து விட்டு இறந்தும் விடுகிறார். ஆனால் அதன் பிறகு வந்த விஞ்ஞானிகள் ஹெர்ஷல் தவறாக விளங்கி விட்டார். வானத்தில் எந்த ஓட்டையும் இல்லாது அருமையாக கட்டப்பட்டுள்ளது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றனர்.
அதோடு கடவுளை மறுக்கும் நாத்திகர்களுக்கும் இந்த வசனம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது. முன்பு ஒன்றாக இருந்த கோள்கள் பெரு வெடிப்பு நிகழ்ந்து தனித்தனியாக பிரிந்து விண்வெளியில் சூரியனை மையமாக வைத்து சுழல்வதாக அறிவியல் கூறுகிறது. அவ்வாறு விண்வெளியில் சுழலும் இந்த கோள்களும் அதை தாங்கி நிற்கும் விண்வெளியும் எந்த மேடு பள்ளங்களும் இல்லாமல் ஒரே சீராக எவ்வாறு அமைய முடியும்?
இவை எல்லாமே தானாகவே தங்களுக்குள் பேசிக் கொண்டு அவைகளின் பாதையில் அமர்ந்து கொண்டனவா என்ற கேள்விக்கும் விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியவில்லை. இவ்வளவு நேர்த்தியாக இவ்வளவு வழவழப்பாக இந்த பேரண்டத்தை அமைத்தது யாராக இருக்க முடியும் என்று ஹாக்கிங் தனது பல புத்தகங்களில் ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்புகிறார்.
‘வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.’
‘தக்க காரணத்துடன் தவிர அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்’ (குர்ஆன் 44: 38,39)
source: http://suvanappiriyan.blogspot.in/