வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா?
‘எங்கள் இறைவன் அல்லாஹ்வே! என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்கா விட்டால் மடங்களும, ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.’ (குர்ஆன் 22:40)
பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவ தற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது.
ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க மாட்டார்கள். இது இயல்பான ஒன்று தான். இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும் போது எதிர் மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் தான் முக்கியமாகத் தாக்கப்படுகின்றன. உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவுப் பூர்வமாகச் சிந்திக்காததன் விளைவாகத் தான் இந்த நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு மதத்தினரும் தமது வழிபாட்டுத் தலங்களை, தமது சொத்துக் களை விடப் பெரிதாக மதிப்பதால் தங்களின் வழிபாட்டுத் தலம் தாக்கப்படும் போது அது போன்ற எதிர்த் தாக்குதலில் இறங்குவார்கள். எனவே, பிற மத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதல் உண்மையில் நம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதலாக அமைந்து விடுகிறது.
“உங்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் பள்ளி வாசல் உட்பட அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் தகர்க்கப்பட்டு விடும்” என்ற அறிவுப்பூர்வமான வழிகாட்டுதலை இவ்வசனம் நமக்கு வழங்குகிறது.
கோவில்களோ சர்ச்சுகளோ முஸ்லிம்களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாத போதும் அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவு படுத்துகிறது.
இஸ்லாம் என்றாலே அமைதி என்றுதான் பொருள் வரும். ஸலாம் என்ற மூலச் சொல்லில் இருந்து பிரிந்ததுதான் இஸ்லாம் என்ற வார்த்தை. அமைதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த மார்க்கத்தின் பெயரால் இன்று முஸ்லிம்களாலும், இஸ்லாத்தை வெறுப்பவர்களாலும் பல குற்ற செயல்கள் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன.
மத நல்லிணக்கம், மாற்று மதத்தவர்களையும் மதிக்கும் அழகிய பண்புகளைப்பற்றி அல்குர்ஆனின் போதனைகள் அமைந்திருக்க காணலாம். இறுதித்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் மதினாவில் பல இன மக்களுக்கிடையில் நல்லுறவு, நல்லிணக்கத்தோடு வாழ்ந்து எல்லோரும் அமைதியோடும், சுபிட்சமாகவும் வாழ்ந்திட மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய சரித்திரச்சான்றுகள் யாவை என்பதை சில நிகழ்வுகளின் மூலம் பார்ப்போம்.
அல்குர்ஆன் 28வது அத்தியாயம் 8வது வசனத்தில்
“முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.”
என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.
குர்ஆனில் இறைவன் “பிர்று ” என்ற வார்த்தையை பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யுங்கள் என்பதற்கே பயன்படுத்துகிறான். அந்த வார்த்தையைத் தான் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள் என்ற கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தியுள்ளான். எனவே இவ்வசனத்தின் மூலம் மத நல்லிணக்கமும், மாற்று மதத்தவர்களை மதிப்பதும் அவசியம் என்பதை இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
இதே கருத்தைதான் கீழ்வரும் வசனங்களின் கருத்துக்களும் உறுதிப்படுத்துகிறது.
‘ஏக இறைவனை மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு’ என முஹம்மதே கூறுவீராக!
குர்ஆன் 109:1,2,3,4,5,6
இஸ்லாமிய உலகின் முதல் கலீபா (ஜனாதிபதி) அபூபக்கர் அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த போர் ஒன்றில் முதியவர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்ததை பார்த்த கலீபா அவர்கள் அதை வன்மையாக கண்டித்து போர்க்களத்தில் முதியவர்களையும், பெண்களையும், சிறார்களையும், தாக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா ? இஸ்லாம் தடை செய்த இப்பாதக செயலை செய்தவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் நம்மையும் விரோதிகள் இவ்வாறு கொலை செய்யவில்லையா? என்று அச்செயலை நியாயப்படுத்த முனைந்தார்கள். இதை செவிமடுத்த கலீபா அவர்களின் முகம் கடும் சினத்தால் சிவந்தது. பின்பு தன் தோழர்களை நோக்கி “பாரசீகர்களையும், ரோமர்களையுமா நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? இறை வேதமும் இறைத் தூதரின் வாக்கும் நமக்கு போதாதா?” என்றார்கள் .
இந் நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாமியர்கள் எச்சூழ்நிலையிலும் வரம்பு மீறுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது புலப்படுகிறது.
எனவே மதப்பற்று இருக்கலாம் மதவெறி இருக்கக்கூடாது. இனப்பற்று இருக்கலாம் இனவெறி இருக்கக்கூடாது என்பதே ஆழ்ந்த ஆழமான கருத்து. இதையே பின் வரும் நபிமொழியில் தெளிவுபடுத்தப்படுகிறது.
ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் ”தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.- (நூல்: அஹ்மத்)
ஒரு யூதரின் சடலத்தை சிலர் தூக்கிச் செல்லும் போது நபிகள் நாயகம் மரியாதை நிமித்தமாக எழுந்திருக்கிறார்கள். இதைப் பார்த்த நபித் தோழர்கள் ‘அது யூதரின் சடலமாயிற்றே? அதற்கா மரியாதை?’ என்று கேட்க ‘அவரும் ஆதமுடைய மகன்தானே!’ என பதிலுரைத்ததைப் பார்க்கிறோம்.
நபிகள் நாயகம் அவர்கள் இறந்து போவதற்கு முன்பு தனது போர் கவச ஆடைகளை சில தானியங்களுக்காக ஒரு யூதரிடம் அடமானம் வைத்ததை பார்க்கிறோம். அந்த நேரத்தில் பல நாடுகளுக்கு சக்கரவரர்த்தியாக இருந்த நிலை. அந்த நிலையிலும் மாற்று மதத்தவர்கள் ஒரு சக்கரவர்த்திக்கே அடமானத்துக்கு பொருள் தரும் அளவு வசதியாக இருந்துள்ளனர். முஸ்லிம், கிறித்தவர், யூதர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சம உரிமையோடு இருந்துள்ளதைப் பார்க்கிறோம்.
ஆகவே மத வெறிக்கோ இனவெறிக்கோ இஸ்லாத்தில் இடமில்லை என்பதை நபியவர்கள் பல சந்தர்பங்களில் வலியுறுத்தியுள்ளார்கள். நீங்கள் பூமியில் உள்ளவர்களை நேசியுங்கள், இரக்கம் காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்களை நேசிப்பான், இரக்கம் காட்டுவான் என்ற கருத்தை வெளிப்படுத்தி முழு மனித சமூதாயமும் ஒரே சமுதாயமே என்பதை வலியுறுத்தினார்கள்.
அவ்வாறே பிற மதத்தைச் சார்ந்ததலைவர்களையும், அவர்களின் கருத்துக்களையும் மதிக்கும் அருமை நபியின் பண்புகளை மக்கா வெற்றியின் போது காண முடிந்தது.
அதாவது மக்காவின் மண்ணின் மைந்தர்களாகிய முஹாஜிரீன்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் புகுந்தார்கள் என்ற காரணத்தினால் சொந்த தாய்நாடு மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தன் அன்பான குடும்பம், சொந்த பந்தங்களை துறந்து அகதிகளாக மதினாவில் தஞ்சம் புகுந்தார்கள். ஆனால் எட்டு ஆண்டுகளிலேயே மிகப்பெரும் படைபலம், ஆல்பலத்துடன் மக்காவிற்குள் நுழைந்த முஹாஜிரீன்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனதிலே நினைத்து இன்று பழிவாங்கும் நாள் என்று தங்களுக்கு மத்தியில் கூறிக்கொண்டார்கள். இதை செவிமடுத்த அபூசுப்யான் பீதி அடைந்தவராக மாநபியிடம் ஓடி வந்து பாதுகாப்பு கேட்கிறார். அது நாள் வரை தனக்கும், தன் தோழர்களுக்கும் இழைத்த கொடுமைகளை மன்னித்து நபிகள் நாயகம் அவர்கள் இப்படி அறிவிக்கிறார்கள்.”இன்றைய நாள் மன்னித்து இரக்கத்தோடு நடந்து கொள்ளும் நாள் என்று: இன்னும் அபூசுப்யான் வீட்டில் அபயம் தேடி நுழைந்தவர் பாதுகாப்பு பெற்றவர் என்றும் அறிவித்தார்கள்.
இன்றளவும் இஸ்லாமிய கோட்பாட்டில் வாழும் முஸ்லீம்கள் மாற்று மததுக்கோ, அதை சார்ந்தவர்களுக்கோ எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் சில விஷமிகள், மனித குலத்தின் மகா எதிரிகள் மத நல்லிணக்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி அச்செயலுடன் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் இணைத்து உலக அமைதியின்மைக்கு முஸ்லீம்களே காரணம் என்ற நச்சுக் கருத்துக்களை பரப்புகின்றனர். ஆனால் முஸ்லீம்கள் இறை வேதம், இறைத்தூதரின் வாக்கின் அடிப்படையில் அழகிய பண்புகளை வெளிப்படுத்தி இவர்களின் சொற்போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் இன்ஷாஅல்லாஹ்.
source: http://suvanappiriyan.blogspot.in/