உயிலும் உடலும் (மரண சாசனம்)
“(மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (சஹீஹ் புகாரி. பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2738)
இந்த நபிமொழிக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா போன்ற நாடுகளில் எத்தனை முஸ்லிம் மக்கள் உயில் எழுதி வைத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. பெரும்பாலானவர்களுக்கு காசு, பணம், துட்டு, சல்லி, டப்பு, money என்று வெவ்வேறு பெயர்களில் ஓடத்தான் நேரம் சரியாக இருக்கிறதே தவிர, ஏது இதற்கு பொழுது? தவிர, சேர்ப்பவற்றை காலா காலத்திற்கும் நமக்கு நாமே ஆண்டு அனுபவிக்கப் போகிறோம்; நூறு என்றில்லா விட்டாலும் தொண்ணூறைத் தாண்டுவோம் போன்ற அபத்த எண்ணங்கள் மனத்தை ஆக்கிரமித்துள்ளன.
ஆனால், மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மத்தியல் ஓரளவுக்கு உயில் பற்றிய கவலை உள்ளது. அவர்களுள் பலர் எழுதியும் வைத்துக் கொள்கின்றனர். அதற்குக் காரணம் உள்ளது.
உயில் எழுதி வைக்காத நிலையில் அமெரிக்க முஸ்லிமொருவர் மரணமடைந்து விடும்போது அவருடைய வாரிசுதாரர்கள் ‘அல்லாஹ்வுக்குப் பயந்து நாமெல்லாம் அவன் சொன்னபடி பங்கு பிரித்துக் கொள்வோம்’ என்று ஒத்துக் கொண்டால் தான் ஆச்சு. இல்லையெனில் சிக்கல். கோர்ட்டு, கச்சேரி என்று முட்டி மோதும்போது அல்லாஹ்வின் நியதிக்கு மாறாய் அந்நாட்டு சட்டப்படிதான் அவர்களுக்கு பங்கு அமைகிறது. மனைவி, மக்கள் போன்ற நேரடி வாரிசுதாரர்கள் இல்லாத பட்சத்தில் மேலதிக சிக்கல்.
‘இறந்த பிறகுதானே இவையெல்லாம். நமக்கென்ன பிரச்சினை? வாழ்பவர்கள் என்னமாச்சும் அடிச்சுக்கட்டும்’ என்று நல்ல மனசு நினைத்தால் நமக்கு முக்கியமான பிரச்சினை ஒன்று உண்டு. உடலடக்கம்!
அமெரிக்காவின் முஸ்லிம் குடும்பங்களில் சில பிரச்சினைகள் உள்ளன. பிற நாடுகளிலும் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவில் அதிகம். அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் முஸ்லிம் குடும்பங்களில் அதன் குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாத்தை மறந்தவர்களாய் மாறிப்போகும் அவலங்கள் சில நடைபெறுகின்றன. அது ஒன்று. முஸ்லிம் ஆண் கிறித்தவ அல்லது யூதப் பெண்மணியை திருமணம் புரிந்து வாழ்வது மற்றொன்று. அல்லது இஸ்லாத்தை ஏற்ற அமெரிக்கர், அவரது உறவினர்கள் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் வாழ்ந்து மடிவது. இன்னபிற வகைகளும் உண்டு. இவர்களை இறுதியில் வந்தடையும் பிரச்சினை இவர்களது உடலடக்கம்.
எந்த முறைப்படி இறந்தவரை அடக்கம் செய்வது என்று பிரச்சினை தோன்றி, இஸ்லாமிய முறைப்படி செயல்படுத்த முஸ்லிம் நண்பர்களும் பள்ளிவாசலைச் சேர்ந்தவர்களும் விழைந்தாலும் இறந்தவரின் வாரிசு யாராவது முரண்டு பிடித்தால் மிகவும் சங்கடம்.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, அமெரிக்காவிலுள்ள இஸ்லாமிய தொண்டு அமைப்புகள் சில இஸ்லாமிய முறைப்படி பாகப்பிரிவினை செய்யும்வகையில் மாதிரி உயில் தயாரித்து வைத்துள்ளனர். சொத்து பிரிப்பதைத் தாண்டி அதில் சில முக்கிய விஷயங்கள் உள்ளன. பூர்த்தி செய்து பத்திரப்படுத்தி, வக்கீல் அல்லது முக்கியமானவர்களுக்கு உயில் விஷயத்தைத் தெரிவித்துவிட்டால், நல்லபடியாக ஆறடி மண் நமக்கு.
அத்தகைய மாதிரி உயில்களில் பொதுவாய் இடம்பெறும் முக்கிய நிபந்தனை –
Finally, I ask all my relatives, friends and all others — whether they choose to believe as I believed or not — to honor my Constitutional Rights to these beliefs. I ask them to honor this document that I have made, and not to try to obstruct it or change it in any way. Rather, let them see that I am buried as I have asked to be buried and let my properties be divided as I wanted them to be divided.
ARTICLE I: FUNERAL AND BURIAL RITES
I ordain and direct that no autopsy or embalming be done on my body unless required by law, that without unjustified delay my body be washed, wrapped with cloth free of any ornaments and other articles, prayed for, then buried, which all should be done by Muslims in complete accordance with Islamic tenets.
a) I hereby nominate and appoint __________________________________
Residing at: _________________________________________________
to execute these and other necessary provisions for my Islamic funeral and burial.
http: //www.islamtomorrow.com/downloads/last_will_form.pdf
இதன் பொருள் சுருக்கமானது யாதெனில், சட்டத் தேவை இல்லாத பட்சத்தில் எனது உடலை பிரேத ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாது; பதனிட்டுப் பாதுகாக்கக் கூடாது; கழுவி, அம்மண உடலைத் துணியால் மட்டுமே சுற்றி, தொழுது, நல்லடக்கம் செய்து விடுங்கள்.
இதை எழுத வந்ததன் நோக்கம் – அமெரிக்கா என்றில்லாமல், உலகில் பெருவாரியாய் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாழ்ந்தாலும் உயில் முக்கியம். அதில் இந்த நிபந்தனை அதி முக்கியம்!
-நூருத்தீன்
source: http://www.satyamargam.com/life/2188-last-will-and-body-in-islam.html