கொடுங்கோலர்களிடம் சிக்கித் தவிக்கும் சிரிய மக்கள்
[ சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகக் குரல் கொடுத்துவரும் போராட்டக்காரர்களை ஒடுக்க அனைத்து வழிமுறைகளையும் கையாளுகிறது சிரியா அரசு.
இதுவரை சுமார் 80,000-க்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
புலம்பெயர்ந்தோர் சுமார் 15 லட்சம் பேர்.
அனைவரும் உள்நாட்டுப் போர் காரணமாக அண்டை நாடுகளுக்கு வெளியேறியிருக்கிறார்கள்.
லெபனான் நாட்டில் அதிகபட்சமாக 5 லட்சம் பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
துருக்கியில் 3.8 லட்சம் பேர், இராக்கில் 1.5 லட்சம் பேர்,
ஜோர்தானில் 4.5 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவ்வளவு கொடுமைகளை அங்குள்ள மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இங்கே ஐ.நா படைகளை அனுப்பி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிக்கு தடையாக இருப்பவை ரஷ்யாவும் சீனாவும்தான். இதற்கு அவர்கள் கூறும் காரணம் போராட்டக்காரர்களை அமெரிக்கா பின்னின்று ஆதரிக்கிறது என்பது.
ஒருபுறம் சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா நிற்கிறது. இன்னொரு புறம் அமெரிக்கா போராட்டக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த இரு அன்னிய சக்திகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறார்கள் சிரிய மக்கள்.]
மக்கள் மன்றம் தீர்மானிக்கட்டும்
சிரியாவில் ரசாயன குண்டுகள் வீசப்பட்டு சுமார் 1300 பேர் இறந்திருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள். சில நூறுபேர் இறந்துள்ளனர் என்பதை ஒப்புக்கொள்ளும் சிரியா அரசு, ரசாயன வெடிகுண்டு வீசப்படவில்லை என்று மறுக்கிறது.
மரணத்துக்குக் காரணம் விஷவாயுதானா என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் இறந்தவர்கள் உடலில் எந்தவித காயமும் இல்லை. பலர் மூச்சுத்திணறலால் இறந்துள்ளனர். இந்த மரணங்கள் விஷவாயுவால் நடந்திருக்கக்கூடிய சாத்தியங்களே அதிகம். இறந்தவர்களில் பலரும் சிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
மிக சக்திவாய்ந்த விஷம்கொண்ட ரசாயனமாக இருந்தால், உடனடியாக கண்எரிச்சல், மூக்கு எரிச்சல் இருந்திருக்கும். தலைசுற்றல் போன்றவை ஏற்பட்டு இறந்திருப்பார்கள். மிகக் குறைந்த சக்தி கொண்ட ரசாயன குண்டுகள்தான் வீசப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு.
சிரியா அரசு எல்லைமீறி நடந்துகொள்கிறது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார். ஐ.நா. மன்றம் தனது ஆய்வுக்குழுவை உடனே அனுப்ப வேண்டும் என்று உறுப்பு நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
கடந்த மார்ச் 19-ஆம் தேதி, டமஸ்கஸ் அருகே 26 பேர் இறந்தபோது, அவர்களது மரணம் ரசாயன வெடிகுண்டால் ஏற்பட்டதாக போராட்டக் குழுக்கள் கூறியதை விசாரணை செய்ய ஐ.நா. மன்றத்தின் குழுவினர் சிரியா வந்து இறங்கிய நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
போராட்டக்காரர்கள் தங்களுக்கு ஆதரவாக அறிக்கை அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த சம்பவத்தை வேண்டுமென்றே உருவாக்கியுள்ளனர் என்று சிரியா அரசு குற்றம்சாட்டுகிறது. ஐ.நா. மன்றக் குழு வரும் வேளையில், இத்தகைய குண்டை வீசுவோமா என்கிற கேள்வியை கேளாமல் கேட்கிறது சிரியா அரசு. அரசின் விளக்கத்தை முழுமையாக நம்பிவிட முடியவில்லை.
ரசாயன குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று சிரியாவின் அமைச்சர் கூறியபோதிலும், தங்களிடம் ரசாயன வெடிகுண்டுகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். “இவை நாட்டுக்கு வெளியே பயன்படுத்துவதற்காகத்தான். நாட்டுக்குள்ளாக நமது மக்கள் மீது பயன்படுத்த அல்ல’ என்றும் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார். சிரியா அரசை எதிர்த்துப் போராடுவோரை சிரியாவின் மக்களாக அவர் கருதுகிறாரா இல்லையா என்று தெரிந்தால்தான் அவரது வார்த்தையில் ஒளிந்திருக்கும் உண்மையைப் படிக்க முடியும்.
எதுவாக இருந்தபோதிலும், அணுஆயுதத்தை எந்த அளவுக்கு எதிர்க்கின்றோமோ அதே அளவுக்கு ரசாயன வெடிகுண்டுகளையும் மனிதகுலம் எதிர்த்தாக வேண்டும். ரசாயன வெடிகுண்டுகளை ஏதோ கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசுவதைப் போல வீசி, போராடும் மக்களை மண்ணுக்கு இரையாக்குவது கூட்டு படுகொலைக்கு ஒப்பானது. இதனால் பாதிக்கப்பட்டு மரணமடைவோர் எதிர்ப்புக்குரல் எழுப்புவோர் மட்டுமல்ல, வேடிக்கை பார்க்கும் அப்பாவி மக்களும்தான்.
இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் போரிலும்கூட, மயங்கிவிழச்செய்யும் ரசாயனவாயுக் குண்டுகள் பயன்படுத்தியதால்தான், விடுதலைப் புலிகளின் போராட்டத்தை இலங்கை ராணுவத்தால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்ற கருத்து பரவலாக இருப்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகக் குரல் கொடுத்துவரும் போராட்டக்காரர்களை ஒடுக்க அனைத்து வழிமுறைகளையும் கையாளுகிறது சிரியா அரசு. இதுவரை சுமார் 80,000க்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். புலம்பெயர்ந்தோர் சுமார் 15 லட்சம் பேர். அனைவரும் உள்நாட்டுப் போர் காரணமாக அண்டை நாடுகளுக்கு வெளியேறியிருக்கிறார்கள். லெபனான் நாட்டில் அதிகபட்சமாக 5 லட்சம் பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். துருக்கியில் 3.8 லட்சம் பேர், இராக்கில் 1.5 லட்சம் பேர், ஜோர்தானில் 4.5 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவ்வளவு கொடுமைகளை அங்குள்ள மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே ஐ.நா படைகளை அனுப்பி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிக்கு தடையாக இருப்பவை ரஷ்யாவும் சீனாவும்தான். இதற்கு அவர்கள் கூறும் காரணம் போராட்டக்காரர்களை அமெரிக்கா பின்னின்று ஆதரிக்கிறது என்பது.
ஒருபுறம் சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா நிற்கிறது. இன்னொரு புறம் அமெரிக்கா போராட்டக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த இரு அன்னிய சக்திகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறார்கள் சிரிய மக்கள்.
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் கடந்த மூன்று ஆண்டுகளாகவும் அவரது தந்தை ஹபீஸ் அல் – அசாத் 30 ஆண்டுகளாகவும் சிரியாவை ஆட்சி செய்து வருகின்றனர். ஒரு குடும்பத்தின் கையில் தொடர்ந்து ஆட்சி இருப்பதால், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாற்காலி சுகம் கண்டுவிட்ட ஆட்சிபீடமோ அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள எத்தகைய கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கின்றன.
ரஷ்யாவும், அமெரிக்கா மற்றும் சில அரபு நாடுகளும் சிரியா விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி நின்றாலே போதும், அங்கே அமைதி தானே திரும்பும். தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் மன்றம் தீர்மானிக்கட்டும். அதற்கு ஐ.நா. துணை நிற்கட்டும். இந்தியா இந்த விவகாரத்தில் மௌனம் காக்காமல் சிரியா நாட்டு மக்களின் மனநிலையை சர்வதேச அரங்கில் பிரதிபலிக்கட்டும்.
– ஆசிரியர், தினமணி
source: http://dinamani.com/editorial/2013/08/23/மக்கள்-மன்றம்-தீர்மானிக்கட/article1747510.ece’