உனக்குள்ள பிறவிக் குணம் உன்னை அடையாளம் காட்டும்!
*ஒருவருடைய வாழ்நாள். கல்வி. செய்யும் வேலை. வசதி. மரணிக்கும் தேதி கருவிலேயே நிச்சயிக்கப்படுகிறது-.
*இறைபக்தியில்லா நபர்,
அறிவில்லா குரு.
அன்பு இல்லா மனைவி.
அக்கறையற்ற உறவினர்கள்
நிராகரிக்கப்படவேண்டியவர்கள்.
*அரசன், பொதுமகள், எமதர்மன், நெருப்பு, திருடன், குழந்தைகள், யாசகர்கள் அடுத்தோர் துன்பங்களை உணரமாட்டார்கள். இவர்கள் வரிசையில் எட்டாவதாகவிருப்பவர் வட்டித் தொழில் செய்பவர்.
*பெருந்தன்மை. நன்னடத்தை. இன்சொல் பேசுதல். குணங்களை பழக்கத்தினால் அடைய முடியாது. அது பிறவியிலேயே அமைவதாகும்.
*ஒரு மனிதன் தன்னுடைய செயல்களினால் பெரிய மனிதன் ஆகிறான். அவன் அமரும் பதவியால் அல்ல.
*தன்னைத்தானே தற்புகழ்ச்சி செய்பவன் புகழ்மங்கும்.
*மனிதன் நற்குணங்களே இரத்தினம். தங்கத்தில் பதிக்கப்பட்டு மின்னும் இரத்தினம் பல அவனிடமிருந்தாலும், நல்ல குணங்களே அவனை மின்னச் செய்யும்.
*கீழான குணமுடைய மனிதன் பணத்தை விரும்புகின்றான். நடுத்தர மனிதன் பணத்தையும், மரியாதையையும் விரும்புகிறான். மேன்மை குணமுடைய மனிதன் மரியாதையை மட்டும் விரும்புகிறான்.
*வெட்டுதல், உரசுதல், சூடாக்குதல், தகடாகத் தட்டுதல் முறைகளால் தங்கம் பரிசோதிக்கப்படுகிறது. அது போல மனிதன் அவனது செயல், சொல், குணத்தால் வெளிப்படுகிறான்.
*சந்தனம் துண்டு துண்டாக ஆனாலும் அதன் மணம் மாறாது, கரும்பு சக்கையாகப் பிழியப்பட்டாலும் இனிப்பு போகாது. யானை வளர்ந்தாலும் குறும்பு மாறாது. அது போன்று மேன்மக்கள் குணம் வறுமை வந்தாலும் மாறாது.
*ஆழ்ந்த துயரத்திலும், கடுமையான பஞ்சத்திலும், எதிரிகள் துன்புறுத்தும் பொழுதும், அரசாங்கத்தின் முன்பும், சுடுகாட்டிலும் தவிர்க்காமல், கூடவே அவனுடன் இணைபிரியாமல் எவன் இருக்கின்றானோ அவனே உண்மையான சுற்றம்.
குறிப்பு : சந்திர குப்த மௌரியர் ஆட்சியில் அமைச்சராகவிருந்தவர் சாணக்கியர். அவர் எழுதியது “கௌடில்ய அர்த்தசாஸ்த்திரம்”. 17 அத்தியாயங்கள் 341 ஸ்லோகங்கள் என்றொரு பதிவு. 400க்கும் மேற்பட்ட ஸ்லோகங்கள் என்றொரு பதிவு. மத்திய அரசினர் பட்ஜெட் தாக்கலின்போது கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தை நான்கு முறை மேற் காட்டியுள்ளனர். புதிய வரிவிதிப்புகளைத் திட்டமிடும் முன் கௌடில்யர் அர்த்த சாஸ்த்திரத்திலுள்ள வரி, நிதி நிர்வாகக் கொள்கை வழிகாட்டுதல்களைக் கொண்டுதான் முடிவு செய்தோம் என்று 1984-85 பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி பேசியிருக்கிறார். 1999-2000 தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் கௌடில்யரை மேற் கோள்காள் காட்டியிருக்கிறார். அர்த்த சாஸ்திரத்திலுள்ள சில வசனங்களே மேலே தரப்பட்டுள்ளவை.
-சதாம், முஸ்லிம் முரசு ஜூலை 2013
source: http://jahangeer.in/