மருத்துவமனைகளை
அம்பலப்படுத்துகிறார்
ஒரு மருத்துவர்
மருத்துவர்களுக்கும் பரிசோதனை நிலையங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கும் இடையேயான சட்டவிரோதமான உறவுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சிகிச்சையின் தரத்தின் அடிப்படையில் இல்லாமல் கையாளும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மருத்துவர்களை மதிப்பிடுவது இத்தகைய சட்ட விரோத சிகிச்சை நடைமுறைகளை ஊக்குவித்து இந்த உறவுக்கு வலு சேர்க்கிறது. கேரளாவில் எனது சொந்த அனுபவமும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் ஆரம்பத்தில் அமெரிக்காவிலும், பின்னர் பல ஆண்டுகள் கேரளாவிலும் மொத்தம் 40 ஆண்டுகளாக குழந்தை மருத்துவராக செயல்பட்டு வருகிறேன்.
கொச்சிக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தேன். அந்தப் பகுதியில் வசிக்கும் ஒப்பீட்டளவில் ஏழை வாடிக்கையாளர்களின் புற நோயாளி மற்றும் உள் நோயாளி தேவைகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் அங்கு இருந்தன. கவனமான மருந்தக சோதனைகள், வரம்புக்குட்பட்ட ஆய்வக சோதனைகள், குறைந்த பட்ச மருந்துகள், நியாயமான கட்டணத்தில் உள்நோயாளிகளை அனுமதிப்பது என்று நான் சேவை வழங்கி வந்தேன்.
இந்த நிலையில் மருத்துவமனையின் நிதிநிலையை ஆய்வு செய்ய எம்பிஏ படித்த ஒரு மேலாண்மை நிபுணர் வந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை, ஆய்வக பணிகள், எக்ஸ்-ரேக்கள், மருந்துகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை குறித்த தரவுகளை தனது கணினியில் திரட்டினார். மற்ற மருத்துவமனைகளில் இதே எண்ணிக்கையிலான நோயாளிகளை ஒப்பிடும் போது, நான் ஆய்வகம், எக்ஸ்ரே, மருந்தகம், மருத்துவமனை படுக்கை போன்றவற்றை குறைந்த அளவே பயன்படுத்துவதாக அவர் முடிவு செய்தார்.
அதாவது, எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; அதனால், என்னுடைய வணிக மாதிரி தவறானது; எல்லாவற்றையும் கணினி விரிதாள் தெளிவாகக் காட்டியது. மருத்துவமனையின் இயக்குனருடன் நான் இதைக் குறித்து பேசி முடிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மருத்துவத் துறையின் தார்மீக பொறுப்பு பற்றிய வாதங்கள், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தோற்றுப் போயின. அதற்குப் பிறகு நான் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கு அதிக காலம் பிடிக்கவில்லை.
எனது அடுத்த அனுபவம் அதே நகரத்தில் உள்ள இன்னும் பெரிய, இன்னும் புகழ்பெற்ற மருத்துவமனையில் நிகழ்ந்தது. நிர்வாகிகளுக்கு தெரிந்து அவர்களது சம்மதத்துடனோ அவர்களால் கண்டு கொள்ளாமலோ அங்கு நடப்பவற்றைப் பார்த்து நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். அற்பமான குழந்தை நோய்கள் கூட பல சோதனைகள், தேவையில்லாத சிகிச்சைகள், காரணமில்லாமல் மருத்துவமனை சேர்ப்புகள் தேவைப்படும் தீவிர பிரச்சனைகளாக வகைப்படுத்தப்பட்டன.
மெலிதான வைரஸ் காய்ச்சலும் சிறிது மூட்டு வலியும் வந்த குழந்தைகளுக்கு எந்த விதமான நெறிமுறைகளும் இல்லாமல், சோதனை மூலம் உறுதி செய்து கொள்ளாமல் கடுமையான எலும்புக் காய்ச்சல் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. சாதாரணமான வைரஸ் காய்ச்சலும் இருமலும் வந்த குழந்தைகளுக்கு எந்த விதமான ஆதாரங்களும் இன்றி காச நோய் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. பல மாதங்களுக்கு, பல ஆண்டுகளுக்குக் கூட தேவையற்ற, தீங்கு விளைக்கக் கூடிய எக்ஸ்-ரேக்களுக்கு அந்த குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். அவ்வப்போது இருமல் வரும் பல குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதாக முடிவு செய்யப்பட்டு தேவையில்லாத மருந்துகள் கொடுக்கப்பட்டன.
இந்தக் குழந்தைகளுக்கு கடுமையான நோய் எதுவும் இல்லை என்றும் அவர்கள் மருத்துவமனைக்கு இனிமேல் வர வேண்டிய தேவை இல்லை என்றும் பெற்றோர்களை ஏற்றுக் கொள்ள வைப்பதே பெரும்பாடாக இருந்தது.
உண்மையிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களை முறை கேடாக கையாண்டது ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தேவையற்ற சிகிச்சைகள் வழங்குவதை விட மோசமான ஒன்று. குழந்தைகளுக்கான மிதமான மற்றும் தீவிரமான ஆஸ்துமாவிற்கு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிகிச்சை ஸ்டீராய்டுகளை மூக்கு வழியாக சுவாசிப்பதுதான். ஆனால், அத்தகைய பல குழந்தைகள், “கடுமையான ஆஸ்துமா” தாக்குதல்களுக்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அறிந்து நான் வியப்படைந்தேன். நான் ஸ்டீராய்ட் சுவாசிப்பை பரிந்துரைத்த பிறகு பெரும்பாலான குழந்தைகளின் நிலைமை மேம்பட்டு ஆஸ்துமா தாக்குதல்கள் குறைந்தன. அதன் விளைவாக வெளி நோயாளிகளாக வருபவர்கள் குறைந்து, உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.
இத்தோடு இந்த மருத்துவமனையிலும் எனது நாள் குறிக்கப்பட்டு விட்டது.
குறைவான சோதனைகள், மருந்துகள் என்று குழந்தைகள் முன்பை விட ஆரோக்கியமாக வாழ்ந்தாலும், மருத்துவமனைக்கு வருமானம் குறைந்ததால் நிர்வாகம் அதிருப்தி அடைந்தது. கூடுதல் வருமானத்திற்கான தேவை, எனது தார்மீக பொறுப்பு பற்றிய அக்கறையை மீண்டும் ஒரு முறை முறியடித்தது. நான், இந்த மருத்துவமனையை விட்டு வெளியேறவும் அதிக காலம் பிடிக்கவில்லை.
மருத்துவர்களின் திறமையை, அவர்கள் வழங்கும் சேவையின் தரத்தை வைத்து இல்லாமல் அவர்கள் பார்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடுவது அவர்களது தார்மீக கடமையை அச்சுறுத்துலுக்கு உள்ளாக்குகிறது. எந்த வழியிலாவது லாபத்தை அதிகரிப்பது என்ற அணுகுமுறையின் இன்னொரு வெளிப்பாடு இது. பெருநிறுவன மருத்துவமனைகளில் மட்டுமின்றி, தர்மம்தான் தமது முக்கிய நோக்கம் என்று அறிவித்து செயல்படும் அறக்கட்டளை மருத்துவமனைகள் என்று சொல்லப்படுபவற்றிலும் இதே நிலைமைதான்.
– மருத்துவர் அலெக்ஸ் மாத்யூஸ், அமெரிக்க குழந்தை மருத்துவ வாரியத்தின் பட்டயப் படிப்பு படித்தவர்.
நன்றி : தி இந்து, ஓபன் பேஜ்
source: http://www.vinavu.com/2013/08/19/a-doctor-exposes-unholy-hospital-practices/