டாக்டர் அப்துல்லாஹ்வின் மரணம் தரும் படிப்பினை!
மருத்துவ மனையில் டாக்டர் அப்துல்லாஹ்வின் இறுதித் தருணங்கள்!
ஞாயிறு அன்று காலையில் நண்பர் இப்ராஹீம் காசிம் அவர்கள் மும்பையில் இருந்து போன் செய்து செங்கிஸ் கான் பாய் நாம் நினைத்தது போல் நடந்து விட்டது. டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மரணத் தருவாயில் இருக்கிறார் என அவரது மகன் வளவனிடம் நான் பேசினேன் அவரது உடலை நம்மிடம் தர மாட்டார்களாம் இது பற்றி அனைத்து அமைப்புகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள். நான் உடனே மும்பையில் இருந்து இரவுக்குள் விமானத்தில் சென்னை வந்து விடுகிறேன் என்று கூறினார்.
சனியன்று இளையான்குடியில் நடை பெற்ற பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்பட திரையிட்டு நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னைக்கும் பேருந்தில் சமயத்தில் அவரும் நானும் டாக்டரின் உடல் நிலை குறித்தும் அவருடைய குடும்பத்தார் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவரும் ஆவண ரீதியாக தனது பெயரை மாற்றாத நிலையில் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரை இஸ்லாமிய அடிப்படையில் சிக்கல் வரலாம் என கவலைப்பட்டுக் கொண்டு வந்தோம். அது ஞாயிறு அன்று நடந்தே விட்டது.
நான் உடனடியாக வளவனின் நண்பரான தமுமுக வின் ஹாஜா கனி அவர்களுக்கு தகவலைத் தெரிவித்து விட்டு நீங்கள் அவரோடு பேசுங்கள் எனக் கூறிவிட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனிஃபா அவர்களிடம்’ ‘அண்ணே அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுப்பதில் இரு வேறு கருத்துக்கள் இருப்பதால் நாளை அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் நமது கருத்து கருத்து வேறுபாட்டை வைக்காமல் முன்னத்கவே கூட்டமைப்பு சார்பில் ஒரு முடிவு எடுத்து செயல்படுவது நல்லது ஆகையால் கூட்டமைப்பைக் கூட்டி முடிவு எடுங்கள் நாங்கள் இங்கு மருத்துவ மனையில் இருந்து நிலைமையை பார்க்கிறோம் எனக் கூறிவிட்டு பெரும்பாக்கம் குளோபல் மருத்துவ மனைக்கு விரைந்தோம்.
இரவு எட்டரைக்கு மருத்துவமனை சென்ற போது ஆளுர் ஷாநவாஸ் கொடுத்த தகவலின் அடைப்படையில் திருமாவளவன் அங்கு வந்திருந்தார். அவரோடு சேர்ந்து அப்துல்லாஹ் அவர்களைப் பார்த்த போது அவர் சக்ராத் எனும் இறுதி நிலையில் இருந்தார. இழுத்து வாங்கிய மூச்சு அவரின் மெலிந்த தேகத்தை தூக்கிப்போட்டது. வெளியில் வந்து திருமா அவர்கலோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த போது இறுதியாக இந்த ஆவணப் படத்துக்காக் பயணித்த விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்!
அப்போது நம்மோடு வந்த ஜாகிர், ஜக்கரியா, அமிருதீன் ஆகியோர் அவருக்கு இறுதி நேரத்தில் கலிமாவை சொல்லிக் கொடுத்ததாகவும் அதை திரும்ப சொல்லும் நிலையில் அவர் இல்லாவிட்டாலும் அதை உள்வாங்கியதை உணர்ந்து கொண்டதாக கூறினர். நானும் கலிமாவை கொடுத்த போது அதை உள்வாங்கியதை உணர்ந்தேன்.
பேசிக் கொண்டிருந்ததை உற்றுக் கவனித்த திருமாவளவன் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டார். உங்களில் இறக்கும் தருவாயில் இருப்பவருக்கு கலிமா எனும் ஏகத்துவ உறுதி மொழியை சொல்லிக் கொடுங்கள் என்பது நபிகளாரின் வாக்கு. அதைத் தான் சொல்லிக் கொடுத்தார்கள் எனக் கூறிய அது என்ன வார்த்தை என திருமாவளவன் கேட்க இறைவன் ஒருவனே இறுதித் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என மொழிவதே கலிமா எனக் கூறிய கவனமாக கேட்ட திருமாவிடம், ஏன் எனில் ‘முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்’ எனும் இறை வசனத்தை அவரின் நண்பர் நினைவூட்டியதால் இஸ்லாத்தை ஏற்றவர் அவர். அவருக்கு இறுதி நேரத்தில் அதை நினைவூட்டுவது இஸ்லாத்தின் ஒரு நடைமுறை என்ற போது அதை மீண்டும் சொல்லுங்கள் என திருமா கேட்ட போது முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்’ முஸ்லிம் என்பது ஒரு இனத்தின் பெயரல்ல இறைவனுக்க கட்டுப்பட்டவர்கள் எனும் பொருள் என விளக்கிய பொது அனைத்தையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டார் திருமாவளவன்! அல்லாஹ அவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும்.
இதற்குள் மும்பையில் இருந்து இப்ராகிம் காசிம் வந்து சேர்ந்து விட்டார்! தடா ரஹீம் உள்ளிட்ட சகோதரர்களும் வந்து சேர்ந்தனர். அவர் இறுதியாக அப்துல்லாஹ்வின் நிலைமையைக் கண்டு அவரும் கலிமா சொல்லிக் கொடுக்க அவரது குடும்பத்தார் 45 வருடங்களாக தன நேரத்தை சமுதாயத்திற்கு செலவிட்டார். இறுதி நேரத்தை எங்கள் குடும்பத்தாருடன் இருக்க விரும்புகிறோம். தயவு செய்து வெளியில் இருங்கள் எனக் கேட்டுக் கொண்டதை அடுத்து அனைவரும் வெளியில் வந்து காத்திருந்தோம்.
அரை மணி நேரத்திற்குப் பின் மருத்துவருடன் வளவன் வெளியில் வந்து 1.23 க்கு அவர் உயிர் பிரிந்ததாகவும் வாழ்நாளில் பெரும்பகுதி கற்பித்தலில் கழிந்த தனது உடல் வாழ்வுக்க்ப்பின்னரும் கல்விக்காக பயன்பட வேண்டும்’ எனும் அவரின் இறுதி விருப்பத்திற்கு இணங்க அவரது உடல் மருத்துவ ஆய்விற்கு கொடுக்கப்பட குடும்பத்தார் முடிவு செய்துள்ளோம் இதற்கு இஸ்லாமிய சமுதாயம் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இன்ஷா அல்லாஹ உங்களின் இந்தக் கோரிக்கையை கூட்டமைப்பு தலைவர்களுக்கு தெரிவிக்கிறோம்! எனக் கூறி விட்டு அப்போலோ ஹனிபா அவர்களுக்கு தெரிவித்து விட்டு ஆளுர் ஷானவாஸ் அவர்களிடம் ஊடகங்களுக்கு செய்தி தெரிவிக்க சொல்லி விட்டு கனத்த இதயங்களுடன் இரவு 2.30 மணியளவில் கலைந்தோம்.
அவரோடு இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா எனும் வராற்று சிறப்பு மிக்க அந்த ஆவணப்படத்தில் பணியாற்றியது, அதன் திரையீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த மே மாதம் துபாயில் பயணித்தது, ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் 10 நாட்கள் விடிய விடிய பேசிக் கொண்டிருந்த அந்த நாட்கள் அவரின் மொத்த வாழ்க்கையையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட அந்த இரவுகள், என் கண்ணில் நிழலாடி நீரை வரவழைத்தது.
அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த கூலியை வழங்கட்டும்!
டாக்டர் அப்துல்லாஹ்வின் மரணம் தரும் படிப்பினை!
வாழும் வரைக் கற்றுக் கொடுப்பவராக இருந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் இறப்பில் கூட இஸ்லாமிய சமுதாயத்திற்கு சில படிப்பினைகளை விட்டு சென்றுள்ளார்.
அதில் முதலாவது இஸ்லாத்திற்கு வரும் சகோதர சகோதரிகளின் வருகையைக் கொண்டாடும் நாம் வந்த பின் செய்ய வேண்டிய கடமைகளில் பொடுபோக்காக இருக்கிறோம். முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள் எனும் இறை வசனத்தின் படி வந்தவர்களை முஸ்லிம்களாக மரணிக்க செய்யும் கடமையும் நமக்குள்ளது.
அப்துல்லாஹ் அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் நடந்த கூட்டமைப்பின் நேற்றைய மசுராவில் ஒரு இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்’ இஸ்லாமிய அடைப்படையில் இறுதிக் கடமை செய்யாது நாளைக்கு என்னையும் இப்படித்தான் என் குடும்ப விருப்பபடி அடக்க விட்டு விடுவீர்களாக ? எனக் கண்ணீருடன் கேட்ட எளிய கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
இனிமேல் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இஸ்லாத்தை ஏற்க வரும் போடும் அபிடவுட் உடன் எனது இறுதி சடங்கு இஸ்லாமிய அடைப்படையில் இருக்க வேண்டும் என்பதையும் உறுதி மொழியாக வாங்கி சம்பந்தப்பட்ட அமைப்புகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு பிரச்சனை உள்ளது உடனடியாக கூட்டமைப்பைக் கூட்டி முடிவெடுங்கள் எனக் கூறியும் எந்த சமுதாயத் தலைவரும் அவர் உயிருடன் இருக்கும் நிலையில் உடனடியாக மருத்துமனைக்கு வந்து சம்பந்தப் பட்டவர்களை சந்தித்து பேசவில்லை.
ஆனால் சம்பந்தமே இல்லாத திருமாவளவன் ஆளுர் ஷானவாசின் கோரிக்கைக்கு இணங்க மருத்துவமனைக்கு வந்து வளவனிடம் இறுதிச் சடங்கு விஷயத்தில் இஸ்லாமியர்களோடு ஒத்துழையுங்கள் என கோரிக்கை வைக்கிறார்.! நம்மிடத்தில் உலமாக்கள் என்ன சொல்கிறார்கள்? இதில் முரண்பாடு இல்லாமல் இரு தரப்பாருக்கும் ஏற்ற ஒரு நிலையை எடுக்க என்ன வழி என ஆலோசனை கேட்கிறார்.
டாக்டரின் குடும்பத்தாருடன் ஆலோசனை செய்கிறார்.அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அணைக்கிறார்.
மருத்துவர்களிடத்தில் பேசுகிறார்! மருத்துவமனை செலவுக்கு மறுக்க மறுக்க பணத்தை எடுத்து குடும்பத்தாரின் கைகளில் திணிக்கிறார்! இரண்டு மணி நேரம் நிலையாக நின்று அந்தக் குடும்பத்தரின் மனங்களை மட்டுமல்ல அங்கே இருக்கும் முஸ்லிம்களின் மனங்களையும் வெல்கிறார்.
ஆனால் இதை எல்லாம் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்திருக்க செயல்படுத்த வேண்டிய தலைவர்கள் ஒருவரும் வராதது வேதனை! மரணத் தருவாயில் இருக்கிறார் இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என நாம் அனைவருக்கும் அறிவித்தும் இறந்து பல மணி நேரங்களுக்குப் பிறகும் எந்தத் தலைவர்களும் மருத்துவ மனை வரவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி !ஒரு வேளை தலைவர்கள் வந்திருந்தால், திருமா செய்த மனித நேயத்தை வெளிப்படுத்தி இருந்தால் அவர்களின் இதயங்களில் மாற்றம் வந்திருக்கலாம். அல்லாஹ்வே அறிந்தவன்.
மேலும் அழைப்புப் பணியை அல்லாஹ் நம் மீது சுமத்தி இருக்க அதை மறந்து விட்டு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு மத்தியில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காலம் முதல் இறக்கும் வரை எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் பம்பரமாக சுற்றி உலகெங்கும் அழைப்புப் பணியை மேற்கொண்டு இயலவில்லை எனும் நிலயில் இருக்க விரும்பாமல் இறைவனடி சேர்ந்த விதத்திலும் நமக்கு படிப்பினை உள்ளது.
இன்ஷா அல்லாஹ் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தில் இருந்து படிப்பினை பெரும் மக்களாக அல்லாஹ நம்மை ஆக்கி வைப்பானாக!
-செங்கிஸ் கான்.