குமர்கள் குப்பைகளா?
ஆலிம் கவிஞர் தேங்கை ஷரஃபுத்தீன் மிஸ்பாஹி
குமர்கள் எல்லோரும் குப்பைகளா?
கூளங்களா?
படைத்தவனே! எம்மிறைவா!
பாவையர்கள் ஆடவரின்
‘பயிர்நிலம்’ என்றல்லவா
பகர்ந்திட்டாய் உன்மறையில்;
விவசாயிகள் தாமே விளைநிலங்களை
விலைக்கு வாங்கிடுவர்.
திருமணச் சந்தையில்…
விளைநிலங்கள் அல்லவா விவசாயிகளை
விலைக்கு வாங்கும் விபரீதம் நடக்கிறது!’
பெண்ணைப் பெற்றவர்கள்,
பூந்தோட்டக் காவலர்கள்:- இந்தக்
காவலர்கள் கண்படாமல்
தேன்பருகும் வண்டுகளோ
திரவியத்தைக் கொடுக்கிறது! – ஆனால்
‘வண்டுகளை வரவேற்று,
வாசத்தேன் பருகு’! என்றால்
‘வாரித்தா பணம்’! என்று
வாய்கூசா துரைக்கிறது!
ஓரிரவில் முறைகேடாய்
உல்லாசம் துய்ப்பதற்கு
வாரிக்கொடுக்கின்ற வகைகெட்ட
ஆடவனே!
‘உயிர்வாழும் நாளெல்லாம்
உனக்கின்பம் வழங்குகின்ற
வனிதையிடம் தட்சணையை
வாங்குவது முறையாமோ?
காசுபணம் பெற்றுவிட்டு
கட்டிலில் படுப்பவளை
மாசுபடும் விலைமகளை
மனம்வெறுக்கும் தோழர்களே!
பழிபாவக் கைக்கூலி
பணம் வாங்கிப் படுப்பவனை
இழிவான விலைமகனே!
என்றுரைத்தால் தவறாமோ?
கள்ள மார்க்கெட்டில்
கொள்ளைவிலை போனாலும்,
வெள்ளை மார்க்கெட்டில்
விலைபோகாமல் தேங்கும்
வினோதப் பொருட்களோ
நம்மினப் பெண்கள்?
அள்ளிக் கொண்டு செல்ல
பொருளையும் கொடுத்துவிட்டு
கூலியும் கொடுப்பதற்கு – கைக்
கூலியும் கொடுப்பதற்கு
குமர்கள் எல்லோரும்
குப்பைகளா? கூளங்களா?
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுமென்பது
பழமொழியாம்!
திருமணங்கள் ரொக்கத்தில்
நிச்சயிக்கப் படுவதென்ன
புதுமொழியா?
வரதட்சணை – இது
விழிபோன்ற பெண்ணிடத்தில்
வெட்கமின்றி ஆடவர்கள்
வழிப்பறியில் ஈடுபடும்
வன்கொடும் பகற்கொள்ளை!
மானத்தைக் கப்பலேற்றி
மங்கையிடம் கைநீட்டி
ஈனத்தனமாக
இரக்கின்ற மடிப்பிச்சை!
கைக்கூலி மணமகனே!
ஏக்கர்களாய் நிலம்பெற்று,
இலட்சங்களாய் பணம்பெற்று,
கட்டிய மனைவியிடம்
‘கண்ணே! மணியே’! – என
கட்டிலில் கொஞ்சாதே!
‘மண்’ணே! ‘மணி’ (Money) யே! – என
மாற்றிக் கொஞ்சிடுவாய்
“வீணையடி நீயெனக்கு
மேவும்விரல் நானுனக்கு!”
என்றானே தீந்தமிழில்
எழுச்சிக்கவி பாரதி! – இந்த
வீணைகள் இந்நாளில்
விறகாக அல்லவா
கரிந்து போகின்றன கைக்கூலி
அடுப்புகளில்!
ஏழைவீட்டு ஜன்னல்கம்பி
ஏன் துருப்பிடிக்கிறது?
விம்மியழும் குமர்களின்
வெப்பக்காற்று பட்டதாலோ!
இல்லை –
இரும்பை விடக் கடினமான
இளைஞர்களின் நிலை கண்டு
ஏழைக் குமர்கள்
ஏங்குவதை எண்ணியெண்ணி
இரும்பும் இரக்கத்தால்
இளகித்தான் போனதோ!
பூவையரைப் பூக்களென்னும்
புதுமைக் கவிஞர்களே!
பூக்களும் கூட
மஹர் வழங்கித்தான் மணக்கிறதோ!
எனவே தான்
பூக்களின் சேர்க்கையினை
மகரந்தச் சேர்க்கையென
(‘மகர்’ அந்தச் சேர்க்கையென)
மறத்தமிழன் அழைத்தானோ?
மாப்பிள்ளை வேண்டுமா மாப்பிள்ளை?
ஒரு லட்சம், இரண்டு லட்சம்
ஐந்து லட்சம், பத்து லட்சம்
வேலைக்கேற்ற விலை!
படிப்புக்கேற்ற பணம்! – இது
கல்யாணச் சந்தையிலே
காது கிழிய ஒலிக்கின்ற
புரோக்கர் மாமாக்களின்
பூகம்ப ஓசைகள்!
துரும்பைத் தூணாக்கி
தூணைத் தூளாக்கி
இருவீட்டா ரிடத்தினிலே
இதமாகப் பேசுவதில்
இரட்டை எம்.ஏக்கள் (MAMA)
என்பதினால் தான்
மணத்தரகர்கள்
மாமாக்கள் ஆயினரோ!
கால்நடைச் சந்தையிலே
விற்பனைக்குத் தயாராகும்
காளைகள் – ஆடுகள்;
கல்யாணச் சந்தையிலோ
விற்பனைக்குத் தயாராகும்
காளையர்கள் – ஆடவர்கள்;
குன்றாமல் நிமிர்ந்திருக்கும்
குன்றங்களே! இளைஞர்களே!
கோணாத தீன்குலத்து
குதுபு மினாராக்களே!
நீங்கள் இன்று
‘பைசா’ நகர
சாய்ந்த கோபுரம்
ஆகலாமா? பெண்வீட்டார் ‘பைசா’
உன்பக்கம் ‘நகர’
சாய்ந்த கோபுரம் ஆகலாமா?
வெங்காயம் தக்காளி
விலைவாசி ஏறுதல்போல்
வெங்கொடுமை மாப்பிள்ளை
விலைகளின்று ஏறுதிங்கே!
விலைவாசிப் போராட்டம்
நடத்துகின்ற வீரர்களே!
இந்த – விலைபேசும் வி ஷத்திற்கு
வெடிவைக்கக் கூடாதா!
அன்னைத் திருநாட்டில்
ஆரியர்கள் ஏந்திவந்த
கன்னக் கோலான
கைக்கூலி கொடுமையிது
திராவிடரைத் தீண்டிவிட்டு
தீன்குலத்தை வதைக்கிறதே!
திராவகம்போல் பெண்ணினத்தைத்
தீக்கனலாய்ப் பொசுக்க வரும்
சமுகத் தீமையிதைச்
சாய்த்து விட வேண்டாமா,
குமுறியெழு! என்தோழா!
கொள்கைப் பிடிப்புடனே!