இன்றைய அரபி மதரஸாக்கள்
ஓர் ஆய்வு (4)
மனமுரண்டாகச் செய்யும் தவறுக்கு மன்னிப்புண்டா?
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுச் செயல் பட்டால் அதில் குறை ஏற்பட்டாலும் அல்லாஹ் மன்னிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் அல்லாஹ்வின் கட்டளைக்கு, அதுவும் அதனை அறிந்த நிலையில் மாறு செய்கிறவனை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்? அறிந்த நிலையில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்த ஷைத்தானின் கதிதான் ஏற்படும். அல்லாஹ் காப்பானாக!
எந்த நிலையிலும் தக்லீது செய்யும் முகல்லிதாக இருக்க குர்ஆன், ஹதீஸில் அணுவளவும் ஆதாரம் இல்லாத நிலையில்தான், இந்த அரபி மதரஸாக்கள் தக்லீதை மிகக் கடுமையாக வலியுறுத்திப் போதித்து வருகின்றன.
உண்மையில் இந்த அரபி மதரஸாக்களுக்கு மக்களுக்கு மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டதே மிகச் சமீப காலத்தில்தான். ஆங்காங்கே தெருத் திண்ணைகளில் உட்கார்ந்து கொண்டு தங்களின் குருட்டுத் தனமான குப்பைக் கொள்கைகளை போதித்துக் கொண்டிருந்த இந்த முகல்லிது முல்லாக்களுக்கு மக்களிடையே இப்போதுதான் செல்வாக்கு ஏற்பட்டு வளர்ந்திருக்கிறார்கள். பல அரபி மதரஸாக்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
சூஃபிஸ இஸ்லாத்தை இவர்கள் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் தோற்றுவித்துப் போதித்து வந்தாலும் 900 வருடங்களுக்கு மேலாகத் தங்களின் தவறான கொள்கையை தெருத் திண்ணைகளிலும் மறைவிடங்களிலும் வைத்தே போதிக்கும் நிலை இருந்து வந்தது. கடந்த 100 வருடங்களுக்குள்தான் இப்படி அரபி மதரஸாக்களாக வளரும் வாய்ப்பு ஏற்பட்டது. நடிகர்களுக்கு நீண்ட நெடு நாட்களாக கூத்தாடிகள், திண்ணைத் தூங்கிகள் என்ற பெயரே நிலைத்திருந்தது. கடந்த 75 வருட கால கட்டத்தில் கூத்தாடிகள், மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் தலைவர்களாகி மக்களை ஆட்சி செய்யும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டது போல்தான், இந்த முகல்லிது முல்லாக்களும் வளர்ந்துள்ளார்கள்.
கடந்த 100 வருட காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை வைத்துக் கொண்டுதான் இந்த முல்லாக்கள் “நாங்கள் தான் நபியவர்களின் வாரிசுகள், மக்களின் தலைவர்கள், எங்கள் சொல்படிதான் மார்க்க விஷயத்தில் மக்கள் நடக்க வேண்டும்’ என தம்பட்டம் அடிக்கின்றனர். இவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களின் காலத்தில் இருந்த தாருந்நத்வாவினரின் கூற்றுகளை நினைவுபடுத்துகிறதா? இல்லையா? என்பதை இஸ்லாமிய சரித்திரம் நன்கு அறிந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும். இவர்களின் ஜ.உ. சபை அமைக்கப்பட்டு 80 ஆண்டுகள் கூட ஆக வில்லை என்பதே உண்மையாகும். (ததஜ ஜ.உ.ச. அமைக்கப்பட்டு வெறும் 25 ஆண்டுகளே!) இந்த நிலையில் தூய இஸ்லாத்தில் தனி உரிமை கொண்டாட அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
மடமைக்கும் எல்லை உண்டோ?
இந்த முகல்லிது முல்லாக்களிடம் இன்னொரு பொருளற்ற வினோத நிலையையும் பார்க்க முடிகிறது. அதாவது, இவர்களின் இந்த அரபி மதர ஸாக்களில் சில ஆண்டுகள் ஓசிச் சோறு சாப்பிட்டுக் கொண்டு தங்கியவர்கள் மட்டுமே ஆலிம்களாக இருக்க முடியும். அதல்லாமல், கல்லூரிகளில் படிப்புக்காகவும், சாப்பாடு மற்றும் தங்கும் வசதிகளுக்காகவும் ஃபீஸ் கட்டிப் படித்து அரபி மொழியில் பட்டம் பெற்று பாண்டித்யம் பெறுகிறார்களே, அப்படிப்பட்டவர்களை இந்த முகல்லிது முல்லாக்கள் ஆலிம்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அரபு நாட்டிற்கே போய் அங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கிக் கற்று அரபி மொழியில் தெளிவாக எழுதப் பேசக் கற்று குர்ஆன், ஹதீஸைத் தெளிவாகப் புரிகிறவர்கள் இவர்களிடத்தில் ஆலிம்களாக கருதப்பட மாட்டார்கள். அதைவிட வேடிக்கை இவர்களின் இந்த மதரஸாக்களில் சில வருடங்கள் தங்கி ஓசிச் சோறு சாப்பிட்ட நிலையில் மவ்லவி ஸனது கொடுக்கப்பட்டு ஆலிம்களாக இவர்களால் கருதப் பட்டவர்கள்-ஒப்புக் கொள்ளப்பட்டவர்கள் அதன்பின் அரபு அரபு நாடு சென்று அதற்கு மேல் 5 ஆண்டுகளோ 10 ஆண்டுகளோ செலவிட்டு அரபி மொழியில் திறமையாக எழுத பேசவும், குர்ஆன், ஹதீஸை அதிகமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டால் அவர்கள் இந்த முல்லாக்களிடத்தில் ஆலிம்களின் நிலையை இழந்து ஜாஹில்களாக ஆகி விடுகிறார்கள். இதனை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? சிந்தித்துப் பாருங்கள்.
அறிவற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்றே விதிகள் அமைத்து அப்படித் தேர்ந்தெடுத்த பின்பும் அவர்களிடம் மிச்சம் மீதியுள்ள சுய சிந்தனையையும் போக்கி அவர்களுக்கு மூளைச் சலவை செய்து அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் அத்துவைதத்தை -இறைவனும் அடியானும் இரண்டறக் கலக்கும் நிலையை ஒப்புக் கொள்ளச் செய்து, உஸ்தாதுகளை தெய்வாம்சம் பொருந் தியவர்களாக நம்பச் செய்து, மண்டியிடச் செய்து இவற்றிற்குச் சாதகமாக இவர்களால் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ள பிக்ஹு நூல்களை அவர்களின் மண்டைகளில் ஏற்றி மவ்லவிகளாக-ஆலிம்களாக(?) வெளியே அனுப்புகிறார்கள். அந்த மவ்லவிகளுக்கு அரபியைத் தெளிவாகப் பேசவோ, எழுதவோ தெரியாது. குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கும் ஆற்றலும் இல்லை.
ஏழு வருடங்கள் ஓதி முடித்த அரபி மொழிதான் இப்படித் தாளம் போட்டுத் தடுமாற வைக்கிறது என்று இல்லை. அவர்களின் தாய் மொழி தமிழ் அதைவிட மோசம் “”அலுகுகின்றார்கள்”, “”இரிக்கின்றார்கள்”, “”தமில்மொலி” என்று தமிழையே கொலை செய்யும் நிலையே காணப்படுகிறது, மதரஸா செல்லு முன்பு 3ம் வகுப்போ, தவறினால் 4ம் வகுப்போ மட்டுமே படித்திருப்பார்கள். பிரபல தவ்ஹீத் மவ்லவியே நான் 4ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன் என்று எமக்கு நோட்டீஸ் அனுப்பியது பலருக்குத் தெரிந்த இரகசியம். மதரஸாக்களில் அவர்களின் தாய்மொழி தமிழை முறையாகக் கற்றுக்கொள்ள எவ்விதப் பாடத்திட்டமும் இல்லை. உஸ்தாதுமார்களின் தமிழே தாளம் போடும்போது, மாணவர்களுக்கு தமிழை எப்படிக் கற்றுக் கொடுப்பார்கள். அந்த மவ்லவிகளில் ஒரு சிலர் விதிவிலக்காக சொந்த முயற்சியில் அரபி மொழியையும், தமிழ் மொழியையும் திறம்படக் கற்றுத் தேறினாலும், அவர்களை விட்டும் புரோகிதப் புத்தி ஒழிவதாக இல்லை. மற்ற மவ்லவிகளை விட இவர்களிடம் ஆணவமும், தலைக்கண மும் அதிகமாகவே காணப்படுகிறது. அபூ ஜஹீலிடம் காணப்பட்டது போல்.
அவர்கள் மதரஸாவில் காலம் கழிக்கும் போது திட்டமிட்டு போதிக்கப்பட்ட ஆசிரியரை தெய்வாம்சம் பொருந்தியவராகக் கருதும் அறிவும், அறைகுறையாக அறிந்து கொண்ட பிக்ஹு சட்டங்களும் மட்டுமே தெரியும். அதனடிப்படையில் எனது கண்ணியத்திற்குரிய உஸ்தாது சொன்னது எனக்கு நூறு கிதாபுகளைப் பார்ப்பதை விட ஆதாரபூர்வமானது என்று உஸ்தாதுகளை குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் இவர்களை ஆலிம்களாக இந்த மதரஸாக்கள் ஒப்புக் கொள்ளும். ஆனால் அதன் பின் அவர்கள் அரபு நாட்டிற்குச் சென்று அங்கு முறையாக அரபி மொழியையும், குர்ஆனையும், ஹதீஸையும் கற்றுக் கொள்வதால் அவர்கள் இதுகாலம் வரை தாங்கள் இருந்து வந்த மடமை நிலை விளங்கி, குப்பைக் கிதாபுகளில் இருந்த மோகம் நீங்கி, சத்திய வழியாகிய குர்ஆனையும், ஹதீஸையும் நேரடியாக ஓரளவாவது விளங்கிச் செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். இந்த நிலை யில் இவர்களை ஆலிம்கள் என ஒப்புக் கொண்டால் இந்த முகல்லிது முல்லாக்களின் நிலை என்னாவது? அதனால்தான் இவர்களிடம் மவ்லவி ஆலிம் பட்டம் பெற்றபின் அரபு நாடு சென்று மேல் கல்வி கற்றுக் கொண்டால் அவர்கள் ஜாஹில்களாக மாறிவிடுகிறார்கள் என புதிய பாடம் சொல்லித் தருகின்றனர். இதைவிட பேதமையை வேறு யாரிடமும் பார்க்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.
இன்னொரு சீர்கேடு:
இந்த சமுதாயத்தில் இந்த அரபி மதரஸாக்களைக் கொண்டு இன்னொரு சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது என்பதை நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தகுதியற்றவர்களைத் தேர்ந்தெடுத்து பயனற்ற பாடம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதரஸாவுக்கு ஓதச் சென்றர்களில் சிலர் நாம் முன்பு குறிப்பிட்டுள்ள சில காரணங்களால் வெளியே வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் வாழ வேறு வழி வகை தெரியாத நிலையில் இருக்கிறார்கள். எனவே கூசாமல் மக்களிடம் அதுவும் பெரும்பாலும் மஸ்ஜிதுகளிலே யாசகம் கேட்டு பிழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்த மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து ஓத முடியவில்லை. இன்னின வகையில் சிரமங்கள் இருக்கின்றன. எனவே தயவு செய்து பொது மக்களே எனக்கு உதவுங்கள் என்று மஸ்ஜிதுகளில் பிச்சை எடுப்பதையும் பார்க்கத்தான் செய்கிறோம். மாற்று மதங்களில் தெய்வப்பணி செய்கிறவர்கள் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் என்றதொரு நியதி உண்டு. அதனை இவர்களும் கடை பிடித்து வருகிறார்கள்.
நபிமார்களால் போதிக்கப்பட்ட தூய இஸ்லாத்தை மதமாக்கிப் புரோகிதர்கள் கடைபிடிக்கும் நடைமுறைகள், பெரும்பாலும் எல்லா மதங்களிலும் சின்னஞ்சிறு வித்தியாசங்களுடன் ஒத்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த முல்லாக்கள் யூத கிறிஸ்தவர்களை அப்படியே பின்பற்றுகின்றனர். அவர்கள் மேடைகளில் ஹதீஸ்கள் என்று முழங்கும் பெரும்பாலான கட்டுக்கதைகளும், கப்ஸாக்களும் பர்னபாஸ் பைபிளில் இருப்பதைக் காணலாம். திருடன் மற்றவர்களைத் திருடன், திருடன் என கூச்சலிட்டுக் கொண்டு தப்பிச் செல்வது போல், இந்த முல்லாக்கள் குர்ஆன், ஹதீஸை மட்டும் எடுத்துச் சொல்லும் நம்மை யூத, கிறிஸ்தவர்களின் நடை முறைகளை போதிக்கிறோம் என்றும், குழப்பவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் மேடைகள் தோறும் பிரச்சாரம் செய்வது திருடனின் பாணியிலேயாகும்.
உண்மையில் முகல்லிது முல்லாக்களே குழப்பவாதிகளாகவும், யூத கிறிஸ்தவ நடைமுறைகளை இஸ்லாத்தின் பெயரால் செயல்படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நடுநிலை மக்கள் நிதானமாகச் சிந்தித்தால் விளங்க முடியும்.
ஹிந்துக்களிடம் காணப்படும் குருகுலக் கல்வியும், வேதக் காரர்களிடம் காணப்படும் குருத்துவக் கல்வியும், இந்த முல்லாக்கள் இந்த மதரஸாக்களில் நடை முறைப்படுத்தும் மவ்லவி கல்வியும் ஆக இவை மூன்றும் ஒரே அடிப்படையிலானவையே. மக்கள் சத்தியத்தை உணர முடியாமல் மறைப்பதையும், வேறு யாரும் சத்தியத்தை உணர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல முன் வந்தாலும், அவர்கள் மீது அபாண்டமாக அவதூறுகள் கூறி மக்களை அந்தச் சத்தியவான்களிடமிருந்து பிரிப்பதையும் செம்மையாகச் செயல்படுத்தத் திட்டமிட்டு உருவாக்கப் பட்ட கல்வி முறையே இதுவாகும்.
மக்களை மதத்தின் பெயரால் ஏமாற்றி இந்தப் புரோகிதர்கள் மக்களிடையே தெய்வாம் சத்துடன் திகழவும், அற்ப உலக ஆதாயம் அடைந்து கொள்ளவும், வயிறு வளர்க்கவும் அமைத்துக் கொண்ட மிக இழிவான வழி முறையே இந்த மதரஸா கல்வித் திட்டமாகும்.
முடிவுரை:
நீங்கள் இது காலம் வரை பெரிதாக எண்ணிக் கொண்டிருந்த இன்றைய அரபி மதரஸாக்களின் உண்மை நிலையை அறிந்து கொண்டீர்கள். அவற்றில் தங்கி சில ஆண்டுகளுக்குப் பின் மவ்லவி-ஆலிம்(?) என்று ஸனது பெற்று வெளி வருபவர்களின் தரம் பற்றியும் அறிந்து கொண்டீர்கள். இப்படிப்பட்டவர்களை நம்பி இந்தச் சமுதாயத்தை அவர்களிடம் ஒப்படைத்ததால் தான் இஸ்லாமிய சமுதாயம் இந்த அளவு அதலபாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் இழிநிலை மாறி அது இழந்துவிட்ட மிக உன்னத நிலையை மீண்டும் எட்டிப் பிடிக்க வேண்டுமென்றால் இரண்டில் ஒன்று அவசியம் செய்யப்பட்டே ஆக வேண்டும். ஒன்று இந்தப் புரோகித முல்லாக்கள் சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உருவாக்கி வைத்துள்ள “பிக்ஹு’ என்ற பெயரால் இருக்கும் நூல்கள் அனைத்தையும் நெருப்பிலிட்டு பொசுக்கி விட்டு குர்ஆனையும், ஹதீஸையும் மட்டும் இந்த மதரஸாக்களில் போதிக்க முன் வர வேண்டும்.
அதற்கு இவர்கள் சம்மதிக்கா விட்டால் பொதுமக்கள் தாராளமாக வழங்கி வரும் நன்கொடைகள், ஜகாத், குர்பானித் தோல், மற்றும் தானதர்மங்கள் அனைத்தையும் நிறுத்துவது கொண்டு இந்த முல்லாக்களை வழிக்குக் கொண்டு வர வேண்டும். இதுவும் சாத்தியமில்லா விட்டால் இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் இந்த மதரஸாக்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் “தாருந்நத்வா’ அழித் தொழிக்கப்பட்டது போல் அழித்தொழிக்கப்படுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. இதனை முஸ்லிம் சமுதாயம் உணர்ந்து செயல்படும் காலம் வெகு தூரத்திலில்லை.
இன்னொரு தகவலைத் தந்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம். சுமார் 35 அல்லது 36 ஆண்டுகளுக்கு முன்னால் வடநாட்டில் சில நல்லெண்ணம் கொண்டவர்களைக் கொண்டு ஒரு முயற்சி நடை பெற்றது. இந்த மதரஸாக்களில் கடைபிடிக்கப்படும் பாடத் திட்டங்களிலுள்ள குறைகளைப் போக்கிச் சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முகல்லிது முல்லாக்கள் அதனை மிகக் கடுமையாக எதிர்த்து காரியம் நிறைவேறாமல் ஆக்கி விட்டனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் அதைவிட ஆத்திரத்தை உண்டு பண்ணுவதாக இருக்கிறது.
“நமது முன்னோர்களால் எழுதப்பட்ட இப்போதுள்ள கிதாபுகளை வைத்து பாடம் நடத்துவதில் தான் பரக்கத் இருக்கிறது. அந்த கிதாபுகளை அகற்றிவிட்டால் “பரக்கத்’ போய் விடும் என குருட்டு வாதம் செய்துள்ளனர். இப்றாஹீம்(அலை) அவர்களால் போதிக்கப்பட்ட சத்திய இஸ்லாம் மார்க்கத்தில் குறைஷ்களால் இடைக் காலத்தில் புகுத்தப்பட்ட சடங்குகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் களைந்து சத்திய இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்ட பாடுபட்டபோது குறைஷ் கள் (குறிப்பாக அபூலஹப்) முன்னோர்கள் மீதுள்ள குருட்டு பக்தியால் என்ன வாதத்தை எடுத்து வைத்தனரோ அதே வாதத்தையே இந்த முகல்லிது முல்லாக்களும் எடுத்து வைக்கின்றனர்.
————————-
பிற்சேர்க்கை:
இந்த ஆக்கம் 1990-ல் எழுதப்பட்டதாகும். இதில் தக்லீதையும், தஸவ்வுஃபையும் ஆதரிக்கும் முகல்லிது மவ்லவிகளால் நடத்தப்படும் மதரஸாக்களின் அலங்கோலங்களையும், அசிங்கங்களையும் விலா வாரியாக விளக்கியுள்ளோம். ஆனால் அவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டத் தங்களை “தவ்ஹீது மவ்லவிகள்’ என்று பீற்றிக் கொண்டு இவர்கள் நடத்தும் மதரஸாக்களின் அலங்கோலங்களையும், அசிங்கங்களையும் அம்பலப் படுத்தாவிட்டால், நாம் நேர்மையானவராக இருக்க முடியாது. பொதுவாக மவ்லவி புரோகிதர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவதோடு அவர்கள் சுய ஆதாயம் அடைவதே அவர்களின் குறிக்கோள். ஒரு புரோகித குழுவின் பின்னால் செல்லும் மக்களை மதிமயக்கி தங்கள் பின்னால் இழுக்க ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு தந்திரத்தை கைக்கொள்ளும்.
தர்கா மவ்லவிகளின் பின்னால் செல்லும் மக்களை தங்கள் பின்னால் இழுக்க தப்லீஃக், தேவ்பந் மவ்லவிகள் தர்கா சடங்குகளைச் சாடுவார்கள். மத்ஹபு மவ்லவிகள் பின்னால் செல்லும் மக்களை தங்கள் பின்னால் இழுக்க தவ்ஹீத் மவ்லவிகள் மத்ஹபுகளைச் சாடுவார்கள். இப்டி ஒவ்வொரு புரோகித மவ்லவி வர்க்கமும், மற்ற புரோகித மவ்லவிகள் பின்னால் செல்லும் மக்களை தங்கள் பின்னால் இழுக்க அதற்கேற்றவாறு நடிப்பார்கள். ஆக புரோகித மவ்லவிகள் அனைத்துத் தரப்பாரும் தங்கள், தங்கள் பக்கம் மக்களை இழுத்துத் தங் களை தக்லீது செய்ய வைக்க முற்படுவார்களே அல்லாமல், தக்லீதை விட்டு விலகி சுயமாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தன்னம்பிக்கையுடன், சுய சிந்தனையுடன் குர்ஆன், ஹதீஸை நெருங்க விடமாட்டார்கள். குர்ஆன் ஹதீஸை அரபு தெரிந்தவர்கள்தான் விளங்க முடியும் என்பார்கள். முன்னோர்கள் விளங்கியபடிதான் நாம் விளங்க வேண்டும் என்பார்கள். ஸலஃபி மவ்லவி புரோகிதர்கள் நபிதோழர்கள் விளங்கியபடிதான் விளங்க வேண்டும் என்பார்கள்.
மற்றபடி எந்தப் புரோகித மவ்லவி வர்க்கமும் அல்குர்ஆன் 7:3 மற்றும் 33:36, 66,67,68 கட்டளைப் படி ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுயமாக குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல்பட வேண்டும் என்று மக்களுக்கு உபதேசிக்க முன் வரமாட்டார்கள்.
மக்கள் புரோகித மவ்லவிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே அவர்கள் அனைவரின் குறிக்கோள். எனவே அனைத்துத் தரப்பு மவ்லவி புரோகிதர்களின் கல்வித் திட்டமும் புரோகித அடிப்படையில் இருக்குமே அல்லாது புரோகிதம் கலக்காமல் இருக்கவே இருக்காது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் தவ்ஹீது மவ்லவிகளால் நடத்தப்படும் மதரஸாக்களும் புரோகித அடிப்படையில் அமைந்த கல்வித் திட்டத்தையே கொண்டுள்ளன. அந்த மதரஸாக்களிலிருந்து வெளிவரும் மவ்லவிகள் கூலிக்குப் பள்ளிகளில் இமாமத் செய்கிறவர்களாகவோ, கூலிக்குப் பிரச்சாரம் செய்கிறவர்களாகவோ, கூலிக்கு அவர்களின் மதரஸாக்களில் பணி புரிகிறவர்களாகவோ இருக்கிறார்களே அல்லாமல் சுயமாக உழைத்து சம்பாதித்து வாழ்க்கை நடத்துவதோடு மறுமைக்காக தீன் பணி செய்கிறவர்களாக இல்லை.
வட்டித் தொழில் செய்கிறவர்கள் வட்டியை வேறு பெயரால் அழைப்பது போல், இவர்கள் குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு முரணாக மார்க்கப் பணிக்கு வாங்கும் கூலியை வேறு, வேறு பெயர்களால் நியாயப்படுத்துகிறார்கள். இதுதான் வித்தியாசம்.
முகல்லிது மவ்லவிகள் நடத்தும் மதரஸாக்களில் இமாம்களின் பெயரால் கற்பனை செய்யப்பட்ட “பிக்ஹ்’ சட்டங்கள் போதிக்கப்படுகின்றன. குர்ஆன், ஹதீஸை விளங்குவதில் முன்னோர்களை விட இமாம்களை விட, ஏன்? நபிதோழர்களை விட நாங்கள் திறமைசாலிகள் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் தவ்ஹீத் மவ்லவிகள்; அப்படித் திறமை யாக விளங்கும் இந்த தவ்ஹீத் மவ்லவிகளிடம் மார்க்கச் சட்டங்கள் காலத்திற்குக் காலம் மாறுதலடையும். ஆரம்பத்தில் வாக்களிப்பது “ஹராம்-ஷிர்க் என ஃபத்வா கொடுத்தார்கள். பின்னர் வாக்களிப்பது கடமை என்றார்கள். முன்னர் 19 ஜனஸாக்களில் நடந்து சென்றா வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். பின்னர் அந்த 19 ஜனஸாக்களின் மீது நடந்து சென்றே வாக்களியுங்கள் என்றார்கள். அன்று பெண் ஆட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது நாட்டுக்குக் கேடு; நாடு உருப் படாது என்றார்கள். பின்னர் பெண்ணை ஆட்சியில் அமர்த்துவது மார்க்கக் கடமை. அதற்காக உயிரைக் கொடுத்துப் பிரசாரம் செய்வது கடமை என்றார்கள். அன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது ஈமானை இழக்கச் செய்யும். தேர்தல் பிரசாரம் செய்வது ஹராம் என்றார்கள். இன்று பிரசாரம் செய்வது கடமை என்கிறார்கள். அன்று “இஸ்லாம்’ அல்லாத இயக்கம் எங்களுக்கு இல்லை என்றார்கள். இன்று எண்ணற்ற இயக்கங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அன்று நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை என்றார்கள். இன்று புரோகிதர்களை மதரஸாக்களில் உருவாக்கி சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோல் எண்ணற்ற விஷயங்களில் எத்தனையோ அந்தர் பல்டி அடித்திருக்கிறார்கள்.
தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்களின் அகராதியில் மார்க்கச் சட்டங்கள் அதாவது “பிக்ஹ்’ காலத்திற்குக் காலம் அவர்கள் வசதிக்கேற்ப மாறும். அந்த வகையில் முகல்லிது புரோகிதர்கள் பரவாயில்லை என்றே சொல்லலாம். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எந்த மாறுதலும் இல்லாமல் அவர்களின் முன்னோர்கள் கற்பனை செய்ததை அப்படியே அணுவளவும் பிசகாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மார்க்கச் சட்டங்கள்-பிக்ஹ் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக இருந்தாலும் அவர்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். மாற்றத்தைப் பார்க்க முடியாது. சு.ஜ. மவ்லவிகள் இஜ்மா, கியாஸ் என மக்களை ஏமாற்றுகிறார்கள். ததஜ மவ்லவிகள் லாஜிக், பாலிசி என மக்களை ஏமாற்றுகிறார்கள்.
மேலும் முகல்லிது மவ்லவிகள் நடத்தும் மதரஸாக்களில் எப்படி ஓசிச் சோறு போட்டு புரோகிதர்களை பெருக்குகிறார்களோ அதேபோல்தான் தவ்ஹீது மவ்லவிகள் நடத்தும் மதரஸாக்களிலும் ஓசிச் சோறு போட்டு புரோகிதர்களைப் பெருக்குகிறார்கள். முகல்லிது மவ்லவிகள் நடத்தும் மதரஸாக்களில் காணப்படும் ஒழுங்கீனங்கள், ஒழுக்கக் கேடுகள், ஓரிணப் புணர்ச்சி இவை அனைத்தும் தவ்ஹீது மவ்லவி புரோகிதர்கள் நடத்தும் மதரஸாக் களிலும் நிறைந்தே காணப்படுகிறது. தாங்களும் புரோகிதர்கள்தான் என்பதை நிலைநாட்டுகிறார்கள். எப்படி கழுதை விட்டையில் முன்விட்டை பின்விட்டை என்ற வேறுபாடு இல்லையோ அதே போல் இந்தப் புரோகித மவ்லவிகளிலும் வேறுபாடு இல்லை. முஸ்லிம் சமுதாயம் குறிப்பாக வாலிபர்கள் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டால் மட்டுமே சமுதாயம் உருப்பட்டு முன்னுக்கு வரும். அது இழந்து விட்ட பெருமையை மீண்டும் பெறும். அல்லாஹ் அருள்புரிவானாக!
source: http://annajaath.com/?p=6317#more-6317