கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் அதையும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்கிறாரோ காதர் மொய்தீன்!
[ கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாகிப் அவர்கள் காலத்து முஸ்லிம் லீக் இவ்வாறு தான் இருந்ததா? அவர்களிடம் இருந்த அரசியல் சாணக்கியம், துணிவு ஏன் இப்போது இருப்பவர்களிடம் இல்லை? முழுக்க முழுக்க தி.மு.க.வின் சிறுபான்மை அணியாகவே செயல்படும் ஒரு கட்சியை எப்படி முஸ்லிம் சமூகத்திற்கான கட்சியாக அங்கீகரிக்க முடியும்? பழயதையே பேசி காலம் தள்ள முயலும் செயல் அப்பட்டமாக மக்களை ஏமாற்றும் செயலாகவே இருக்க முடியும்.
ஒருசில தினங்களுக்கு முன்னதாகத்தானே மோடிக்கு எதிராக சில தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்திட்டது தவறான செயல் என்று தன் சுய ரூபத்தை கருணாநிதி வெளிக்காட்டினார். அப்போது உடனடியாக கண்டிக்க வக்கற்றவர்கள் அவருக்கு இஃப்தார் விருந்து அளித்து உபசரிப்பது என்பதெல்லாம் எதைக்காட்டுகிறது? சமுதாயாக்கட்சி என்றும் “தாய்ச்சபை” என்றும் வாய்க்கிழிய நீட்டி முழங்குவதெல்லாம் அப்பட்டமாக முஸ்லிம் மக்களை ஏமாற்றும் செயல் என்பதில் துளியளவாவது எவருக்கேனும் சந்தேகம் உண்டா…?
இந்த அழகில் இறைவனை முழுமையாக நம்பி, அவன் ஏவியதைச் செய்து விலக்கியதை விலக்கி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியில் செல்கிறதாம் முஸ்லிம் லீக்…!!!
அல்லாஹ்வுக்கு மட்டுமே முற்றிலும் அடிபணிய வேண்டும் என்று நேர்வழி காட்டிச்சென்ற அண்ணலார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே, ஏக இறைமறுப்பாளரான கருணாநிதியின் ஒரு சிறு புன்னகைக்காக தவம் கிடக்கும் இவர்களைப்போன்ற முஸ்லிம் பெயர்தாங்கிகளான ”நாத்திகர்களின் அடிமைகள்” எங்கே!]
முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்வதற்கான கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு பிறப்பித்த சட்ட திருத்த ஆணையை அ.தி.மு.க. அரசு பின்பற்றவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆதம் மார்க்கெட் அருகிலுள்ள அல் மாலிக் திருமண மஹாலில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியின்போது இதனை தெரிவித்துள்ளார்..
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது:
…..தமிழகத்தில் நடந்து வருகின்ற இப்தார் நிகழ்ச்சிகளில் தி.மு.க. முன்னோடிகள் பங்கேற்று சிறப்பித்து வருகிறார்கள்.(!!!!!!!!)
……திராவிட நெறியில் உள்ள தத்துவங்கள் யாவற்றையும் இஸ்லாமிய நெறியிலும் இருப்பதைப் பார்க்கிறோம். திராவிட நெறியில் உள்ள உயர்ந்த தத்துவங்கள் யாவும் இஸ்லாமிய நெறியிலும் இருக்கின்றன என்பது உண்மைதான். திராவிட நெறியில் உள்ள தத்துவங்கள் வெறும் தத்துவங்களாகவே இருந்து வந்துள்ளன; இஸ்லாமிய நெறியில், அந்த தத்துவங்கள் யாவும் நடைமுறையாக வாழ்வியலாக மாற்றப்பட்டிருக்கிறது. இதுவே இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்.
மஸ்ஜிதுகளில் நடந்த நிகழ்வு மக்கள் மன்றத்தில்…
தத்துவ ரீதியாக ஒன்று படுகிற காரணத்தினால்தான் தி.மு.கழகத்துடனான அரசியல் உறவும் தோழமையும் என்றும் தொடரும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அணுகுமுறை அமைந்திருக்கிறது.
கலைஞர் அரசு கட்டிய சட்டமன்ற கட்டடம் மூடப் பட்டிருப்பது போல, அண்ணா நூலகம் முடக்கப்பட்டிருப்பது போல, தொல்காப்பிய பூங்கா புல் மண்டிக்கிடப்பது போல முஸ்லிம் திருமணப்பதிவு ஆணையம் மூலைக்குள் சென்று கிடக்கிறது.
முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை ஏன் என்றால், சிறுபான்மை முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துள்ள அரசாக இன்றைய அரசு இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும்.
……ஹஜ் குழுவுக்கு அதிகமாக நிதி கொடுத்துள்ளது. முஸ்லிம் மகளிர் சங்கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தது பற்றி முத லமைச்சர் அவர்கள் குறிப் பிட்டுள்ளார். எந்த ஒரு அரசானாலும் இத்தகைய நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது நடைமுறைதான். கலைஞர் அரசு இது போன்று நிதி ஒதுக்கியுள்ளது; அதையே, கொஞ்சம் அதிகமாக இன்றைய அரசு ஒதுக்கீடு செய்து அறிவித்திருக்கிறது. இது நல்ல காரியம்தான்; வரவேற்க வேண்டியதுதான். ஆனால் சிறுபான்மையினர் நலன் பாதுகாப்பது என்பது எதில் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். கலைஞர் ஆட்சிக் காலத்தில் திருமணங்களை கட்டாயப் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது, முஸ்லிம்களின் தனியார் சட்டப்படி முஸ்லிம் திருமணப் பதிவும் இருக்க வேண்டும் எனவும், அதற்கு தக்க வகையில் திருமணப் பதிவுச்சட்டமும் அமைய வேண்டும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் சமுதாய அமைப்புகளும் வற்புறுத்தின. அதன் விளைவாக முஸ்லிம்களின் திருமணப் பதிவுக்கென தனியே ஒரு படிவம் தயாரிக்கப்பட்டு அதை பூர்த்தி செய்து முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்வதற்கு சட்டத் திருத்தத்தை ஆணையாக அரசு வெளியிட்டது. அந்த ஆணை இந்த அரசில் பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை திருமணப் பதிவுகளில் முஸ்லிம்களுக்கென அரசு பிரசுர செய்வதற்கு பதிவாளர்கள் முன் வருவதில்லை. கேட்டால் அந்த ஆணை நடைமுறையில் இல்லை என்கிறார்கள்.
……இறைவனை முழுமையாக நம்பி, அவன் ஏவியதைச் செய்து விலக்கியதை விலக்கி அண்ணல் எம். பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியில் நாம் செல்லுகிற காலமெல்லாம் வெல்லுகிற காலமாகும்.
இத்தகைய நல்வழியில் செல்லும் நமக்கு நேற்றைவிட இன்று நல்லதாக இருக்கிறது; நிச்சயமாக நாளை இன்றை விட மிக மிக நல்லதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு போரசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
கேழ்வரகில் நெய் வடிக்றது என்று சொன்னால் அதையும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்கிறாரோ காதர் மொய்தீன் ?!
திருமணங்களை கட்டாயப் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்ததே கருணாநிதிதான். தோழமைக்கட்சி என்று மூச்சுக்கு மூச்சு முழங்கும் முஸ்லிம் லீக் அப்பொழுது நன்றாக குரட்டை விட்டு தூங்கி விட்டதோ என்னவோ… சட்டம் கொண்டு வந்த பிறகுதான் விழித்துக்கொண்டார்களாம்… தும்பை விட்டு வாலை பிடிக்கும் உண்மையை மூடி மறைக்கப்பார்க்கும் காதர் மொய்தீனை முஸ்லிம் சமுதாயம் மன்னிக்காது.
நரேந்திர மோடி கூட குஜராத்தில் கொண்டு வர தயங்கிய ஒரு சட்டத்தை, முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டே முஸ்லிம் லீக்கை துணைக்கு வைத்துக்கொண்டே கொஞ்சம் கூட விசுவாசமின்றி ஒட்டு மொத்த ”முஸ்லிம் ஜமாஅத்தார்”களின் கட்டுக்கோப்பையே முற்றிலுமாக சீர்குலைந்து போகச்செய்யக்கூடிய ஒரு காரியத்தை; அரசியல் சாசனம் முஸ்லிம்களுக்கென்று வழங்கிய அந்த முஸ்லிம் தனியார் சட்டத்தையே குழிதோண்டி புதைக்கும் ஒரு நயவஞ்சகச்செயலை செய்தவர்களை கொஞ்சம்கூட வெட்கமின்றி துதிபாடுவதையே தொழிலாக்கொண்டு முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றலாம் என்று கணக்கு போடுகிறார்கள்?! படைத்த ரப்புல் ஆலமீனுக் முன்னால் நிச்சயமாக ஒருநாள் இவர்கள் பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது என்பதை முஸ்லிம் லீக் தலைமைக்கு நினைவு படுத்துகிறோம்.
ஒருசில தினங்களுக்கு முன்னதாகத்தானே மோடிக்கு எதிராக சில தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்திட்டது தவறான செயல் என்று தன் சுய ரூபத்தை கருணாநிதி வெளிக்காட்டினார். அப்போது உடனடியாக கண்டிக்க வக்கற்றவர்கள் அவருக்கு இஃப்தார் விருந்து அளித்து உபசரிப்பது என்பதெல்லாம் எதைக்காட்டுகிறது? சமுதாயாக்கட்சி என்றும் “தாய்ச்சபை” என்றும் வாய்க்கிழிய நீட்டி முழங்குவதெல்லாம் அப்பட்டமாக முஸ்லிம் மக்களை ஏமாற்றும் செயல் என்பதில் துளியளவாவது எவருக்கேனும் சந்தேகம் உண்டா…?
இதில் மிகவும் வருந்தத்தக்கச் செயல் எதுவெனில் மார்க்கத்தை மக்களிடம் சரியான முறையில் போதிக்க வேண்டிய சில முதுபெரும் ஆலிம் பெருமக்களும் கூட அவ்வப்போது ஏதோ மந்திரித்து விட்டதுபோல “முஸ்லிம்கள் எல்லோரும் “தாய்ச்சபையாம் முஸ்லிம் லீக்கை வலுப்படுத்த வேண்டும்” என்று சொற்பொழிவுகளில் நீட்டி முழங்குவதும், தாங்கள் நடத்துகின்ற பத்திரிகை வாயிலாக அதற்கு ஆதரவு தேடுவதும் அவர்கள் எந்த அளவுக்கு நாட்டு நடப்பை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதைத்தான் வெட்ட வெளிச்சமாக்குகிறது.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின் போது கொஞ்சமும் தயக்கமின்றி ஏராளமான முஸ்லிம்களை பி;ஜே;பி. யை மனம் குளிரச்செய்வதற்காக கைது செய்த கருணாநிதியை தட்டிக்கேட்க துணிவற்றவர்கள் தானே இவர்கள். சரி அது போகட்டும், கைதானவர்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் பல ஆண்டுகளுக்குப் பின் விடுவித்ததே! அப்பொழுதாவது கருணாநிதியின் தவறை சுட்டிக்காட்டும் துணிவு இவர்களிடம் இருந்ததா? இந்த அழகில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியில் நடைபோடுகிறார்களாம்….! யாரை ஏமாற்றுகிறார்கள்…? அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தார்களையா?
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாகிப் அவர்கள் காலத்து முஸ்லிம் லீக் இவ்வாறு தான் இருந்ததா? அவர்களிடம் இருந்த அரசியல் சாணக்கியம், துணிவு ஏன் இப்போது இருப்பவர்களிடம் இல்லை? முழுக்க முழுக்க தி.மு.க.வின் சிறுபான்மை அணியாகவே செயல்படும் ஒரு கட்சியை எப்படி முஸ்லிம் சமூகத்திற்கான கட்சியாக அங்கீகரிக்க முடியும்? பழயதையே பேசி காலம் தள்ள முயலும் செயல் அப்பட்டமாக மக்களை ஏமாற்றும் செயலாகவே இருக்க முடியும்.
இந்த அழகில் இறைவனை முழுமையாக நம்பி, அவன் ஏவியதைச் செய்து விலக்கியதை விலக்கி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியில் செல்கிறதாம் முஸ்லிம் லீக்…!!!
அல்லாஹ்வுக்கு மட்டுமே முற்றிலும் அடிபணிய வேண்டும் என்று நேர்வழி காட்டிச்சென்ற அண்ணலார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே, ஏக இறைமறுப்பாளரான கருணாநிதியின் ஒரு சிறு புன்னகைக்காக தவம் கிடக்கும் இவர்களைப்போன்ற முஸ்லிம் பெயர்தாங்கிகளான ”நாத்திகர்களின் அடிமைகள்” எங்கே!
முஸ்லிம் லீக் தி.மு.க.வின் பினாமி கட்சியாக மாறி பலகாலமாகிவிட்டது என்பதை பாமரன் கூட விளங்குவானே…! இதற்குமேலுமா முஸ்லிம்களை கருணாநிதியைப்போல் வாய் ஜாலம் மூலம் ஏமாற்றலாம் என்று கருதுகிறீர்கள்…?! நோ சான்ஸ்!
-எம்.ஏ.முஹம்மது அலீ