இருமனம் இணையும் திருமணமும் ஆண் பெண் வித்தியாசமும்
இப்னு ரஷீத்
ஆணையும் பெண்ணையும் சமப்படுத்துகின்ற ஒரு முயற்சி பெண்ணிலைவாதம் என்ற பெயரில் இன்று பரவலாக இடம்பெற்று வருகின்றது,
ஆனால் எம்மைப் படைத்த இறைவன் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் என்பதை அல்குர்ஆனில் மிகத் தெளிவாக சொல்லி விட்டான், ஆணை நேரடியாக மண்ணால் படைத்த அல்லாஹுத் தஆலா பெண்ணை அந்த ஆணிலிருந்துதான் படைத்தான்.
இது ஆண் சிறந்தவனா? பெண் சிறந்தவளா? என்பதற்கான விவாதமல்ல. மாற்றமாக படைக்கப்பட்ட விதத்திலிருந்தே வித்தியாசப்படும் இந்த ஆணையும் பெண்ணையும் ஒரே மாதிரி நோக்க வேண்டும் என்பது மனித இயல்புக்கெதிரான சவாலாகும்.
ஆனால் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஆணும் பெண்ணும் சமன் என்று கூறியவர்கள் எல்லாம் பெண்ணின் மானத்தைக் கப்பலேற்றும் வேலையைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை என்பதுதான்!
அது மட்டுமல்ல இவர்கள் சொல்வது போல் உண்மையில் ஆணும் பெண்ணும் சமனாக இருந்தால் ஒலிம்பிக்கில் ஆண்களையும் பெண்களையும் ஒரே போட்டியில் ஒன்றாகக் கலந்து கொள்ள வைக்கலாம் தானே! கிரிக்கட் போட்டிகளையும் உதைபந்தாட்டப் போட்டிகளையும் ஆண்களும் பெண்களும் கலந்து வைக்கலாம் தானே!! ஏன் இவர்கள் அப்படியெல்லாம் செய்வதில்லை? அப்படி யாராவது செய்தால் கூட அதனை அநீதி என்று கூப்பாடு போடுவார்கள்.
ஆனால் இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் போட்டி போடுகின்றவர்களாகப் பார்க்கவில்லை, மாற்றமாக மாற்றமாக முழுமைப்படுத்துகின்றவர்களாகத் தான் பார்க்கின்றது, இருவரையும் இஸ்லாம் ஓரிடத்தில் சமப்படுத்துகின்றது, அதுதான் தக்வாவாகும். அந்த இடத்தில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை யார் அதிகம் தக்வா உள்ளவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்வின் பார்வையில் சிறந்தவராவார்.
ஆனால் உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக, அறிவு ரீதியாக, உணர்வுகள் ரீதியாக, ஹோர்மோன்கள் ரீதியாக என அனைத்து வகையிலும் ஆண்களும் பெண்களும் வித்தியாசப்படுகின்றார்கள், ஏன் இந்த வித்தியாசம், வித்தியாசமான இந்த இரண்டு இயல்புகளும் ஒன்றுசேரும் போதுதான் மனிதவாழ்க்கை முழுமை பெறுகின்றது. அதை விடுத்து விட்டு பெண்களும் ஆண்களைப் போன்று இருக்க வேண்டும், ஆண்கள் செய்கின்றவற்றை பெண்களும் செய்ய வேண்டும் என்ற அநீதியான கோஷம் எழுந்ததன் விளைவுதான் இன்று வீட்டிலும் நாட்டிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.
உலகளாவிய ரீதியில் பொதுவாகவும் மேற்கில் குறிப்பாகவும் குடும்ப வாழ்க்கை சீரழிந்து போயிருப்பதற்கான அடிப்படைக் காரணம் பெண்கள் ஆண்களின் வேலையை செய்யப் போனதுதான். இதனை நான் சொல்லவில்லை, பெண்ணிலைவாதத்தின் தூண்களில் ஒன்றாக இருந்த LAURA DOYLE என்ற பெண்மணி சொல்கின்றார், இரண்டு மூன்று திருமணங்கள் முடித்தும் அவரது திருமண வாழ்க்கை தொடர்ந்தும் தோல்வியிலேயே முடிவுற்றிருக்கின்றது, அதன் பின்னர் தான் அவர் அதற்கான காரணத்தை சிந்திக்கின்றார்…
அப்போது அவருக்கு ஓர் உண்மை புலப்படுகின்றது, ‘நான் ஒரு பெண்ணாக இல்லை, அது தான் காரணம்’ என்பதை அவர் கண்டறிகின்றார். அதன் பின்னர் மீண்டும் இன்னொரு திருமணம் முடித்து இன்று வரை தனது கணவனுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடாத்தி வருகின்றார். தனது அனுபவத்தை “THE SURRENDERED WIFE” என்ற ஒரு புத்தகத்தில் அவரே எழுதுகின்றார். (இந்த புத்தகத்தை யாரும் AMAZON.COM இல் வாங்கலாம்)
இதுதான் யதார்த்தம், இந்த யதார்த்தத்தை இன்று யாரெல்லாம் இந்த பிழையான, மனித இயல்புக்கு ஒத்துவராத சிந்தனைக்கு காரணமாக இருந்தார்களோ அவர்களே ஒப்புக் கொள்கின்றார்கள், ஆனால் கவலை யாதெனில் இந்த முஸ்லிம் சமூகத்துக்குள் காலாவதியாகிப் போன இந்த சிந்தனையின் சீடப்பிள்ளைகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான்.
யாராவது திருமணம் முடித்து திருமண வாழ்வில் வெற்றி பெற வேண்டுமாயின் அவர்கள் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் என்ற உண்மையை விளங்கி அந்த வித்தியாசங்களைப் படித்து அதனை தமது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாத போது திருமணங்கள் நடக்கும் ஆனால் இருமனங்களும் ஒரு நாளும் ஒத்துவாழ மாட்டாது.
BY: இப்னு ரஷீத்.