நன்மை பயக்கும் நபிமொழி – 84
o ‘நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது.
இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும்.
எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்;
காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்’
என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 39)
o “யார் சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச்செய்வான்.
யார் (இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான்.
யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்.
பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதுவும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை”
என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6470)
o ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது; ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்,
கடமையான தொழுகைகளை நான் தொழுது,
ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று,
(மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் விலக்கப்பட்ட வற்றை விலக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்து,
இவற்றைவிட வேறெதையும் அதிகமாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா?” என்று கேட்டார்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஆம்” என்றார்கள்.
அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்” என்று கூறினார். (நூல்: முஸ்லிம் 18)
o இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ ‘இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால்’ அல்லது ‘அந்திப் பொழுதாம்விட்டால்’ உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடிவையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புகாரி : 5623)
o “ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே (அதைச் செயல்படுத்தா விட்டாலும்) அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் பதிவு செய்கிறான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6491)