ஒரு பிரசவ வலியும் புதிய பிறப்பும்…
Abdul Haleem
ஒவ்வொரு பிரசவத்துக்கு முன்னாலும் ஒரு ஜீவமரணப் போராட்டம் இருக்கின்றது, அது வெறுமனே லேபர் ரூமுக்குள் நடக்கும் பிரசவங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட விதியல்ல, உலகில் புதிய சிந்தனைகள் பிறந்த சந்தர்ப்பங்களிளெல்லாம் அதனை சுமந்தவர்கள் அந்தப் பிரசவ வேதனையை உணர்ந்துதான் இருக்கின்றனர்.
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முன்னறிவிப்பின் படி நுபுவ்வத்தும் நுபுவ்வத்தின் அடிப்படையிலான ஃகிலாபத்தும் இலகுவாக அகற்றி விட முடியாத மன்னராட்சியும் மக்களை அடிமைப்படுத்தும் கர்வம் பிடித்த இராணுவ ஆட்சிகளும் முஸ்லிம் உலகைக் கடந்து சென்று விட்டன, அல்லது அந்த இராணுவ ஆட்சி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றது. அமைதியாக எரிந்து கொண்டிருக்கும் மெழுகுதிரி அணைவதற்கு முன்னால் பிரகாசமான சுவாலையுடன் சிறிது நேரம் எரியும். அப்போது அந்த வெளிச்சத்தில் கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற விட்டில்களும் சுவாலையுடன் சங்கமமாகி அழிந்து விடும். அது போலத்தான் இன்றைய நிலையின் உதாரணம்.
மெழுகுதிரி அணையப் பார்க்கின்றது விட்டில்கள் அதனால் ஏற்பட்ட வெளிச்சத்தால் கவரப்பட்டு அழிவை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டன.
ஆனால் இன்னுமொரு பக்கத்தில் புதிய பிரசவத்துக்காக இந்த உம்மத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. பிரசவத்தின் வலியை பிரசவிக்கும் பெண்ணாலும் ஏனைய பெண்களாலும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், மற்றவர்கள் என்னதான் முயன்றாலும் அதன் வலியை உணரவும் முடியாது, அதற்காக வருத்தப்படவும் முடியாது.
அதே போன்றுதான் ஒரு கொள்கைக்காக அதன் சிந்தனைக்காக ஒரு கூட்டம் வலியை அனுபவிக்கின்ற போது அதனை நேரடியாக அனுபவிப்பவர்களையும் அந்த சிந்தனைக்காக கொள்கைக்காக வாழ்கின்றவர்களையும் தவிர வேறு யாராலும் அந்த வலியை உணர முடியாது.
ஆனால் குழந்தை பிறந்த பின்னர் அனைவரும் மகிழ்ச்சியடைவது போல அந்த வலியின் இறுதியில் இந்த உம்மத்துக்கான விடிவின் வாசல் திறக்கும் போது நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும் என்பது போல இந்த வலியை கஷ்டத்தை நையாண்டி செய்தவர்கள் வலியில் துடிக்கும் போது கைவிட்டுவிட்டு ஓடியவர்கள், இது பொய் வலி, ஏமாற்று வலி என்றெல்லாம் எள்ளி நகையாடியவர்கள் என அனைவரும் அந்த வாசலால் நுழையத்தான் போகின்றார்கள்.
ஆம், இறுதித் தூதர் அந்த ஹதீஸின் இறுதியில் கூறிய நுபுவ்வத்தின் ஒளியில் அமைந்த அந்த ஆட்சி பிறப்பதற்கான இறுதிக்கட்ட பிரசவ வலியை முழு முஸ்லிம் உம்மத் என்ற உடம்பும் அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றுகின்றது, அந்த வலியை நபியவர்கள் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் கூறியது போன்று அந்த உடம்பின் ஒவ்வொரு அங்கமும் விழித்திருந்து காய்ச்சல் காய்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த உடம்பை விட்டும் தம்மைக் கத்தரித்து வேறாக்கிக் கொண்ட சில சதைத் துண்டங்கள் ஆங்காங்கே கிடந்து நாறிக் கொண்டிருக்கின்றன.
எமக்கு முன்னால் வெறும் இரண்டு தெரிவுகள் மாத்திரமே இருக்கின்றன.
01. அந்த வலியில் பங்குதாரராகி அதனைத் தாண்டி வரும் பயணத்துக்கு பங்களிப்புச் செய்தல்.
02. வெறும் பார்வையானாகவும் கருத்துச் சொல்பவனாகவும் மட்டும் இருந்து பங்களிப்புக்கான நன்மையை இழந்து விடுதல்.
அல்லாஹுத் தஆலா அனைவரையும் நல்லதைத் தெரிவு செய்யும் குழுவில் ஆக்கியருள்வானாக!
ஆமீன் யாரப்பல் ஆலமீன்.