விதியும் மூன்று பந்துகளும்
குழந்தைகளே! இன்றைய ஈமானிய அமர்வை தெளபீகுல் ஹகீமின் கதையோடு தொடங்கப் போகின்றேன். தெளஃபீக் எகிப்து நாட்டவர். அவர் ஒரு எழுத்தாளர். நிறைய கதைகளை எழுதியுள்ளார். நான் கூறப் போகும் கதை விதியைப் பற்றியது. கழா கத்ர் என்றும் சொல்வர்.
விதியை நான் திறமையான விளையாட்டு வீரனாக கருதுகின்றேன். அவன் ஒரு பொது மைதானத்தில் நிற்கின்றான். அவன் காற்றில் கையை அசைக்கின்றான். அவன் மூன்று பந்துகளை வீசி விளையாடுகின்றான். அவனைச் சுற்றி மக்கள் நிற்கின்றனர். அவர்கள் பல வயதினர். பல இனத்தவர். அவர்கள் எல்லோரும் தமது கழுத்தை உயர்த்தி வாயைப் பிளந்து கொண்டு அந்த வீரனின் கைகளில் சுழன்றாடும் மூன்று பந்துகளையும் பார்க்கின்றனர்.
முதல் பந்தின் மீது பணம் என்று எழுதப்பட்டுள்ளது.
இரண்டாவது பந்தின் மீது ஆரோக்கியம் என்று எழுதப்பட்டுள்ளது.
மூன்றாவது பந்தின் மீது நிம்மதி என எழுதப்பட்டுள்ளது.
விதி மக்களைப் பார்த்து சத்த்மிட்டுக் கத்தியது. மனிதர்களே! நான் செய்வதைப் போல உங்களால் செய்து காட்ட முடியுமா?
மக்கள் கூட்டத்தில் இருந்து ஒரு மனிதன் வந்தான். “என்னிடம் பந்துகளைத் தாருங்கள் நான் செய்து காட்டுகிறேன்” என்றான். விதி பந்துகளை அவனிடம் ஒப்படைத்தது. அவன் பந்துகளை வீசி விளையாட ஆரம்பித்தான். மூன்று பந்துகளையும் மேல் நோக்கி வீசினான். பணம் என்ற பந்தும் ஆரோக்கியம் என்ற பந்தும் அவன் கைகளில் இருந்தன. நிம்மதி என்ற பந்து கீழே விழுந்து விட்டது.
விதி ஆஹா ஹாஸ என்று சிரித்தது. பார்த்திருந்தவர்களும் சிரித்தார்கள். அங்கே கூட்டத்தில் இருந்து சவால் விட்டுக் கொண்டு மற்றொரு மனிதன் வந்தான் . விதி அவனிடமும் பந்துகளைக் கொடுத்தது. அவனும் வீசி எறிந்து விளையாடினான். பணம் என்ற பந்து அவன் கைகளுக்கு அகப்படாமல் விழுந்து விட்டது. அரோக்கியம், நிம்மதி என்ற இரண்டு பந்துகள் மாத்திரம் அவன் கைகளுக்கு வந்தன.
இப்படி மூன்றாவது, நான்காவது, ஐந்தாவதுஸ என கூட்டத்தில் இருந்து ஒவ்வொருவரும் வந்து விளையாடினர். மூன்று பந்துகளையும் யாராலும் ஒரே நேரத்தில் பிடிக்க முடியவில்லை.
விதி சத்தம் போட்டுச் சொன்னது:
“மனிதர்களே! போதும்! போதும்! நிறுத்துங்கள். இதற்குப் பிறகும் விளையாடாதீர்கள்.
விளையாட உங்களுக்கு ஆசையாகத்தான் இருக்கும். ஆனால் முடியாது.
பேராசை உங்கள் கண்களை மறைத்து விட்டது.
மனிதக் கைகளால் இரண்டு பந்துகளுக்கு மேல் விளையாட முடியாது”.
(அகீலா என்ற பெயரில் பிஸ்மி சிறுவர் சஞ்சிகையில் வெளிவந்தது)
source: http://idrees.lk/?p=558