சவூதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்
அபாய எல்லைக்குள் நுழைகின்றன
லதீஃப் ஃபாரூக்
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட எண்ணெய் வளம் நிரம்பிய வளைகுடா நாடுகள், எகிப்திய ஜனநாயக அரசாங்கத்தைக் கவிழ்த்த இராணுவப் புரட்சிக்குத் தமது எண்ணெய் வருமானத்தை அள்ளி இறைத்திருக்கின்றன. இதன் மூலம் இஸ்ரேலிற்கு பிரயோசனம் தருகின்ற விதத்தில், மற்றொரு கொலைக்களமாக எகிப்தை மாற்றுவதற்கு இவை வழி செய்துள்ளன.
புகழ் பூத்த அரபு வசந்தம் மூலம், ஆறு தசாப்த இராணுவ சர்வதிகார ஆட்சிக்கு முடிவு கண்ட பிறகு உருவான மூர்ஸி தலைமையிலான ஜனநாயக அரசாங்கத்தை, இராணுவம் பதவி கவிழ்த்திருக்கிறது. இராணுவப் புரட்சி நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் சவூதி மன்னர் அப்துல்லாஹ், எகிப்திய பாதுகாப்பமைச்சரும், இராணுவத் தளபதியுமான அப்துல் பதாஹ் அல்- ஸிஸிக்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து நடக்கின்ற நிகழ்வுகள், எகிப்தில் குழப்ப நிலையையும், இரத்தக் களரியையும் உருவாக்குவதற்கான துருப்புச் சீட்டாக எகிப்திய இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளதையே தெளிவுபடுத்துகின்றது.
இராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால பொம்மை ஜனாதிபதி அத்லி மன்ஸூருக்கு, இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலராகத் தன்னை வர்ணித்துக் கொள்கின்ற சவூதி மன்னர் அப்துல்லாஹ் அனுப்பியுள்ள வாழ்த்துக் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
“எகிப்திய வரலாற்றின் முக்கியமான இக்கட்டத்தில், அதன் தலைமைத்துவத்தைத் தாங்கள் ஏற்றிருக்கிறீர்கள் என்ற வகையில், என் பெயரிலும், சவூதி அரேபிய மக்கள் சார்பிலும், தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வாழ்த்துவதன் மூலம், தங்கள் தோள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவு செய்து, எமது எகிப்திய சொந்தங்களின் எதிர்ப்பார்ப்புக்களை எய்தும் வகையில் செயற்படுவதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
இதே நேரம், ஜெனரல் அப்துல் பத்தாஹினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இராணுவப் படையினருடனும் நாம் உறுதியாகக் கைகுழுக்கிக் கொள்கின்றோம். இவர்கள் இம்முக்கியமான தருணத்தில், எகிப்தை இருண்ட குகையில் இருந்து பாதுகாத்திருக்கிறார்கள். எகிப்துக்கு ஏற்பட இருந்த அபாயத்தின் பரிமாணத்தையும், அது ஏற்படுத்த இருந்த விளைவுகளையும் இறைவன் மாத்திரமே அறிவான். சகல தரப்பினரது உரிமைகளையும் அரசியல் செயன்முறையின் ஊடாகப் பாதுகாப்பதற்கான ஞானமும், மாற்றமும் இம்மனிதர்கள் மூலமாகவே உருவானது”.
சவூதியில் சர்வதிகார ஆட்சியை நடாத்திக் கொண்டு, சவூதி மக்கள் சார்பாக பேசுவதாக சவூதி மன்னர் கூறிக்கொள்வதே ஏற்றுக்கொள்ள இயலாதது. முஸ்லிம் நாடொன்றில் குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதற்காக, இஸ்லாம் விரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு, அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக அவர் கூறியிருப்பதும் கேலிக் கூத்தானதுதான்.
இராணுவப் புரட்சி இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள், எகிப்திய இராணுவத் தளபதி, அப்துல் பத்தாஹ் அல்- ஸிஸி, மூர்ஸி தலைமையிலான சட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாநாயக அரசை, இராணுவ சதி மூலம் கவிழ்ப்பதற்குரிய நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கிய சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுக்கும், ஐக்கிய அரபு இராச்சிய அதிபர் கலீபா பின் ஸைத் நஹ்யானிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இதில் மிகவும் வருத்தம் தருகின்ற விடயம் யாதெனில், இஸ்லாம் மற்றும் ஜனநாயகத்திற்கெதிரான சதி, இரண்டு புனிதத் தளங்களின் காவலர் என்று சொல்லிக் கொள்கின்ற ஒருவரினால், நிதி வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமைதான்.
இது தொடர்பில், DEBKA என்ற வாராந்தப் பத்திரிகை கடந்த 04.07. 2013 வியாழக்கிழமை அன்று பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “சவூதி மற்றும் டுபாய் என்பவற்றின் புலனாய்வு மற்றும் நிதி ரீதியான உதவிகள் இல்லாமல், எகிப்திய இராணுப்புரட்சி சாத்தியமாகி இருக்காது. சவூதியும், ஐக்கிய அரபு இராச்சியமும் பணத்தை எகிப்திய இராணுவ ஜெனரல்களின் கால்களில் குவித்தனர். லிபியா, சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அரபு வசந்தத்தை இவை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் போன பிறகு, அரபு வசந்தம் குறித்து இவ்வாறுதான் இவை முதன் முதலில் கதைத்திருக்கின்றன”.
கெய்ரோவில் வெற்றிகரமான இராணுவப் புரட்சியை மெற்கொண்டதன் மூலம், 2011 இல் தனது நண்பர் ஹுஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டமைக்காக தற்போத் சவூதி மன்னர் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். சவூதி அரேபியாவும், வளைகுடா நாடுகளும், தமது அமெரிக்க, பிரித்தானிய மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களைத் திருப்தி செய்வதற்காக இஸ்லாத்தை ஒடுக்கவும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக செயற்பட்டும் வருகின்றன.
ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சகோதரத்துவ அரசாங்கம் இராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டமை, நீண்டகால ரீதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது.
கிட்டிய எதிர்காலத்தில் தெற்கெல்லையில் இருந்து வருகின்ற, இராணுவ ரீதியான அபாயங்களை தற்போதைக்கு இஸ்ரேல் சந்திக்காது என்று சொல்லலாம். சகோதரத்துவ அமைப்பின் அதிகாரத்தின் மூலம் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றிருந்த ஹமாஸ் அமைப்பு, தற்போது சீரியஸான பின்னடைவுகளை சந்தித்துள்ளது.
எவ்வாறாயினும், நீண்ட காலத்தில் இதனோடு சம்பந்தப்பட்ட அமெரிக்க, இஸ்ரேல், சவூதி, மற்றும் வளைகுடா நாடுகள் பல்வேறு அபாயகரமான விளைவுகளையே சந்திக்கப் போகின்றன.
சவூதி மற்றும் வளைகுடா நாடுகள் தமது செல்வச் செருக்கில் மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட்டு வருகின்றன. இறையருளின் மூலம் கிடைத்த தமது எண்ணெய் வளங்களை இத்தகைய நாசகரமான நடவடிக்கைகளுக்கே அவை உபயோகிக்கின்றன. வறுமையில் வாடி, வதங்கிய தமது கடந்த காலத்தை அவை மறந்து விட்டன. அறுபது ஆண்டு கால சர்வதிகாரத்திற்குப் பிறகு மிக அண்மையில்தான், எகிப்தியர்கள் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தார்கள். தற்போது மீண்டும் ஓர் இராணுவ ஆட்சிக்குள் தம்மைத் தள்ளிவிட்ட இச்சக்திகளை எகிப்து மக்கள் மன்னிப்பார்களா என்பது சந்தேகமே!
சவூதியும், வளைகுடா நாடுகளும் இதன் மூலம் தமக்கு அபாயகரமானதொரு அத்தியாத்தை திறந்து கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அறை நூற்றாண்டுக்கு முன், அரபுலகில் மசகு எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை. அரபிகள் கல்வியறிவின்றி, ஏழ்மையிலும், மிகவும் பின் தங்கிய நிலையிலும் உலகின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சுத்தமான குடிநீரோ, பாதைகளோ, பாடசாலைகளோ, வீதிகளோ, ஏனைய அத்தியவசியப் பண்டங்களோ அவர்களுக்கு போதியளவில் கிடைக்கவில்லை.
இயற்கையாக, இறையருளால் கிடைத்த எண்ணெய் வளத்தின் மூலமே அரபுலகு இன்றிருக்கின்ற வளர்ச்சியை எய்தியது. இதற்காக அவர்கள் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இத்தகைய அருள்களை வழங்கிய இறைவனை இன்று அவர்கள் மறந்து செயற்படுவதாகவே தோன்றுகிறது.
சவூதி அரேபியா இன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் அடிவருடி நாடாகத் திகழ்கிறது. அமெரிக்க- ஐரோப்பிய- இஸ்ரேலிய சக்திகளின் முஸ்லிம் உலகின் மீதான ஆக்கிரமிப்புக்களுக்கும், மில்லியன் கணக்கானவர்கள் கொலை செய்யப்படுவதற்கும் சவூதி அரேபியா சோரம் போய் இருக்கிறது.
எகிப்தின் தற்போதைய நிகழ்வுகளால் பிரயோசனம் அடையப் போகின்ற பிரதான சக்தி இஸ்ரேல்தான். டோம் ஹெய்டன் குறிப்பிட்டது போன்று, தற்போதைய நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளை அபாயம் சூழந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள இவை, தமது வரையறைகளைத் தாண்டியமைக்கான விலையை விரைவில் கொடுக்கத்தான் போகின்றன.