ஒட்டகைப்போர் – நெஞ்சை நெருடும் நிஜங்கள்
இஸ்லாமிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பக்கம் ஒட்டகைப்போர்.. “ஜபல் யுத்தம்” என்று வர்ணிக்கப்படும் ஒட்டகைப்போர் யாருக்கிடையே நடந்தது என்பது முஸ்லிம்களால் நம்ப முடியாத ஆச்சரியம்.
இஸ்லாமியப் பேரரசின் கலீஃபா அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் உலக முஸ்லிம்களின் தாய், கண்மணி ரசூலுல்லாஹ் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் இடையே நடந்த போர்தான் ஒட்டகைப்போர்.
அன்று –
நிறைமாத கர்ப்பிணிப் பெண் கஃபாவை வலம் வந்து கொண்டிருந்தார். தனக்குப் பிறக்கும் குழந்தை இறை அருளைப் பெற வேண்டும்… அதனால் தான் பெறப்போகும் குழந்தை காபாவில் பிறக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அவர் ஆசைப்படியே அழகான ஆண் குழந்தை காபாவிலேயேப் பிறந்தது. அந்தத் தாய் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவில்லை… ஆனால் பிறந்த குழந்தை அழவுமில்லை.. கண்விழிக்கவுமில்லை. கூடி நின்ற குடும்பத்தாருக்கு அது விந்தையாகவும் வேதனையாகவும் இருந்தது.
அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவுக்கு வந்தார்கள். தங்கள் திருக்கரங்களில் குழந்தையை வாங்கிக் கொண்டார்கள். உடனே குழந்தை கண் விழித்தது… அண்ணலார் முகத்தைப் பார்த்து சிரித்தது. தங்கள் மடிமீது குழந்தையை வைத்துக் கொண்ட பெருமானார் ஒரு பேரீத்தங்கனியை மென்று தங்கள் அமுதமான உமிழ் நீரோடு கலந்து குழந்தையின் நாக்கில் தொட்டு வைத்தார்கள். குழந்தை பெருமானாரின் இதழ் நீரை இன்பத்தோடு சுவைத்து…. இறைத்தூதர் வழங்கிய ஞானங்களை உள்வாங்கிக் கொண்ட மகிழ்ச்சியில் திளைத்தது.
அந்தக் குழந்தைதான் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். \இறை இல்லத்தில் பிறந்த குழந்தை இறைத் தூதர் இல்லத்தில் வளர்ந்தது!
இஸ்லாமியப் பேரரசை கட்டியெழுப்பிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் 63 ம் வயதில் வபாத்தானார்கள். அதன் பிறகு அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோருக்குப் பிறகு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவானார்கள். அவர்கள் காலத்தில் முஸ்லிம்களிடையே குழப்பம் ஏற்பட்டு சதிகாரர்களால் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மதீனா குழப்பத்தில் விழுந்தது. தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல் பண்ணும் நிலை ஏற்பட்டது. இஸ்லாமியப் பேரரசுக்கு உடனே ஒரு தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டதால் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கலீபா பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி சஹாபாக்கள் பலரும் கேட்டுக் கொண்டார்கள்.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்தார்கள். ஆனால் மக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறவே அலீ ரளியல்லாஹு அன்ஹு கலீபா பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அப்போதும் கிட்டத்தட்ட 20 நபித்தோழர்கள் அலீ அவர்களுக்கு “பைய்யத்” செய்ய மறுத்து விட்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு மற்றும் சுபைர் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இரு நபித் தோழர்கள் . இவர்கள் இருவரும் ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்டார்கள். ஆனால் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதவி கொடுக்க மறுத்து விட்டார்கள். அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் குழப்பங்கள் நீடிக்கவே செய்தன. கவர்னர்கள் மாற்றப்பட்டார்கள் கூபாவும் பஸ்ராவும் புதிய ஆளுநர்களை ஏற்றுக் கொண்டன . சிரியாவில் ஆளுநராக இருந்த முஆவியா ரளியல்லாஹு அன்ஹு மட்டும் அலீயை கலீஃபாவாக ஏற்றுக் கொள்ள மறுத்து அலீயோடு மோத ஆரம்பித்தார் .
அப்போது மக்காவிலிருந்த அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை தல்ஹாவும் சுபைரும் சந்தித்து அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிரான கருத்துக்களை சொன்னார்கள். உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கொலைக்கு பழி வாங்க வேண்டும் என்று தூண்டி விட்டார்கள். அவர்களின் பேச்சைக் கேட்டு ஒரு பெரும் படையுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பஸ்ராவுக்கு புறப்பட்டு வந்தார்கள். நியாயத்தை சொல்ல யாருமில்லாத அந்தப் படையில் கூபாவின் முன்னாள் ஆளுநர் சயீத் என்பவர் மட்டும், “உஸ்மானின் கொலைக்கு பழி வாங்க வேண்டுமென்றால் தல்ஹாவையும் சுபைரையும் கொல்லுங்கள். அவர்கள்தான் உஸ்மான் மீது தாக்குதல் நடந்தபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்” என்றார். அவர் பேச்சு எடுபடவில்லை.
அவர்களின் படை ஹவ்வாபின் என்ற இடத்திற்கு வந்தபோது நாய்கள் குரைத்தன. உடனே ஆயிஷா நாயகியார் “இது எந்த இடம்?” எனக் கேட்டார்கள். “ஹவ்வாபின்” என்று சொன்னதும், “உங்களில் எவரைப் பார்த்து ஹவ்வாபின் நாய்கள் குரைக்கும் என்பதை நான் அறிவேன். .அந்த சூழ்நிலையில் இருப்பவர் உண்மைக்கு புறம்பான அநீதியான வழியில் செல்பவர்” என்று ரசூலுல்லாஹ் அவர்கள் கூறிய முன்னெச்சரிக்கை அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே திரும்பி விட ஆணையிட்டார்கள். ஆனால் அவரை அழைத்து வந்தவர்கள், “இது ஹவ்வாபின் அல்ல” என்று பொய் கூறி அவர்களை கட்டாயமாக பஸ்ரா நோக்கி அழைத்து வந்தார்கள்.
கலீஃபா அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆளுநர் உதுமான் பின் ஹனீபின் படையை எதிர்த்து ஆயிஷா நாயகியாரின் படை போரிட்டது. ஜாரியா பின் குதாமா என்பவர், “மூமின்களின் தாயே.. உங்களோடு போர் புரியத் தயங்காதவன் உங்களை கொல்வதற்கு மட்டும் தயங்குவானா? முஸ்லிம்களோடு தாங்கள் போர் புரிய வந்திருப்பது கொடுமை” என்றார். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அதை பொருட் படுத்தவில்லை. அவர் தல்ஹாவையும் சுபைரையும் பார்த்து, “உங்கள் மனைவியரை போருக்கு அழைத்து வந்திருக்கிறீர்களா ?” என்று கேட்டார். “இல்லை” என்றார்கள். “ஐயோ பரிதாபம் .. உங்கள் மனைவியரை பத்திரமாக வீட்டில் வைத்து விட்டு, தாயை இழுத்து வந்து ஈட்டிகளுக்கு முன்னால் நிறுத்தி இருக்கிறீர்களே…. இதுதானா முஸ்லிம்களின் தாய்க்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையின் லட்சணம் ?” என்று கேட்டார். தல்காவும் சுபைரும் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அலீ அவர்களின் மீதான வெறுப்பு அவர்களின் கண்ணை மறைத்தது.
போரில் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆளுநர் தோற்கடிக்கப்பட்டார். அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் படை வீரர்களில் உஸ்மான் கொலையில் இவர்களுக்கெல்லாம் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டு ஏராளமானவர்களை தேடித் தேடிக் கொன்றார்கள். முஆவியாவின் மன்னராட்சி ஆசைக்கு அறிந்தோ அறியாமலோ ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா துணை போனார்கள்.
இதன் பிறகு கலீஃபா அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் நேரடிப்போர் நடை பெற்றது அதுதான் ஒட்டகைப்போர்.